நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2021

Double Review of a Book in The Hindu- First time.

 இப்போதெல்லாம்

வைத்திருந்ததைத் தேடுவதற்கேஅதிக நேரம் ஆகிறது.


அதிலொன்று இது.


முன்பொரு முறை நண்பர் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் ( Sivakumar Rangasamy ) அவர்களுக்கு ஒரு பின்னூட்டத்தில் இத்தகவலைக்  குறிப்பிட்டேன். ஆனால் அச்சமயம் இந்த நாளிதழ் நறுக்கு நகல் கையிலகப்படவில்லை.


பின்னர் (2015ல்) பதிவிட்டது கிடைத்தது.

  

தற்போது Mark Zuckerberg நினைவுபடுத்தி மீண்டும்...

*


1986ல் 

சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்தபோது,


LAW FOUNDATION TAMILNADU

எனும் சிந்தனைக் களம் நண்பர்களுடன் இணைந்து ஏற்படுத்தினோம்.


அதன் ஒரு நிகழ்வாக-

ALL INDIA LAW SEMINAR ஏற்பாடு.


மாநாட்டில் முதன்மை உரை:

மனித உரிமைக் காவலர்

நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ணையர்.


தனிமையில் சந்திக்க வாய்த்தபோது, 

"சட்டம் படிக்க நீ முனைந்தது மகிழ்ச்சி.இருப்பினும் ஒரு அதிலொரு துறையைத் தேர்ந்து ஆழக் கற்றுக்கொள்" என வழிகாட்டடினார்.


குறிகேட்பது போல,

அவரிடமே "எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கலாம்" என

அப்போதைய அறியாமையில் கேட்டேன்.


என்னை நோக்கி, 


"இந்த நிகழ்ச்சிக்கு நீ

என்னை அழைக்க மூன்று கடிதங்கள் எழுதியுள்ளாய்.

on enjoying the tune and tenor of your epistles, I am sure that you would be able to contribute to Human Rights and go for that discipline" என்று அன்புடன் ஆற்றுப்படுத்தினார்.


அதன்பின் பத்தாண்டுகள்அர்ச்சுனக் குறிபார்ப்பாக…


என் பார்வை மனித உரிமைக்களத்தில் மட்டுமே.


என்முதல் நூலுக்கு அவர் அணிந்துரை பெறமுயன்றேன்;

வாய்க்கவில்லை.


அதன்பின்

இரண்டாவது ஆங்கில நூலுக்கும்

இயலவில்லை.


புத்தகத்தைப் படித்துவிட்டு அவரே

THE HINDU நாளிதழுக்கு REVIEW எழுத விரும்பினார்.


 ஆனால் அதற்குள் அவ்விதழில் இந்த நூல் குறித்த ஒரு REVIEW வந்துவிட்டது.


இருப்பினும், ஆற்றுப்படுத்தப் பாயும் பேரன்புப் பிரவாகமாக அவரே

THE HINDU அலுவலகத்தைத்

தொடர்புகொண்டு ,

" இந்நூலுக்கு

முன் வந்த REVIEW போதாது. எனது REVIEW வைத் தருகிறேன்" என அனுப்பி வெளியான REVIEW இங்கே. 


வெகுநாள் கழித்து NAAC பணியில் கேரள மாநிலம் சென்றபோது அவரது இல்லம் சென்று அவரைச் சந்தித்தேன்.


அப்போது,

THE HINDU வரலாற்றில் ஒரே  நூலுக்கு இரண்டுமுறை REVIEW எப்படி வந்தது என்ற முன் சொல்லப்பட்ட நிகழ்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.


 சந்திப்பின் போது அவரது தகவல் அளித்த வற்றாத  மகிழ்வும்,

அப்பெருந்தகையின் பேரன்பும் மறக்கவும் கூடுமோ?


இன்று என் படிப்பறை ஒழுங்கு படுத்தும் பணியில் 

இப்பொக்கிஷம் கண்ணில் பட்டதே ...

இங்கே பகிர்வுக்கு


*

(Originally posted in FB on Oct 22, 2015)

வெள்ளி, 23 ஜூலை, 2021

Date of Birth என்பது பிறந்த நாளல்ல

 (முன்பெப்போதோ இவ்விசயம் பதிவிட்டதைக் காணோம்.

ஆகவே இது.)


Date of Birth என்றால் 

பிறந்த நாளல்ல.


வேறென்ன? எனக் கேட்கிறீர்களா?


எங்களுக்கெல்லாம் (டிஸ்டிரிக்ட் போர்டு துவக்கப்பள்ளி , திருப்பூவனம்)

(மேற்கு) -  


ஐம்பது அறுபதுகளில் படித்தவர்களுக்கெல்லாம்


அப்படித்தான்!


எங்கள் பள்ளியின் தலைமையாசிரியாக இருந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.


எங்களது தொடக்கப் பள்ளி 

பெருந் தலைவர் காமராஜ் அவர்கள் 

பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளைக் திறந்த வரலாற்றின் ஒரு விளைவாகப் புதிதாகத் தோன்றியது.


சந்தைக்கருகில் இருந்ததால் "சந்தைப்பள்ளிக்கூடம்" என்றே அறியப்பட்டது.


 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ள பள்ளி அது. 


ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்.


திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்களூர்ப் பெருமாள் கோவில் அருகே (தொடங்கிப் பெரியகோவில் வரை நீளும்) அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.


எப்போதும் வீட்டிலிருந்து

 நேராகப் பள்ளிக்கு அவர் வந்திருக்கமாட்டாரென்றே கருதுகிறேன்.


பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே கிளம்பி


எங்கள் பகுதிக்குள் (பழையூர்) வந்துவிடுவார்.


முதலில்

எங்கள் பகுதியின் பின்புறத்திலுள்ள

தாழ்த்தப்பட்ட

(வர்கள் எனச் சொல்லப்பட்டுவரும்) மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வார்.


தெருவில் விளையாடும் சிறுவர்களையெல்லாம் ( இருபாலரும்)

 பெற்றோர்களிடம் சொல்லிக் குளிக்க வைத்துத் தயார்படுத்தி- தானே சிலரைத் குளிக்க வைத்து-  

 Pied Piper பின்னால் 

( just for example, கூட்டமாக வரும் எலிகள் போல்) குழந்தைகள்

பத்து இருபது பேராவது பின்தொடர வந்து, 


எங்கள் பகுதிக்குள் நுழைவார். 


இங்கும் அதேபோலச் சிறுவர்களை ஆயத்தப் படுத்தித் திரட்டுவார்.


ஒரு இளம்படை காச்மூச் எனக் கத்திக்கொண்டு தொடரத் 

திரு பாலகிருஷ்ணன் சார் தெருவிஜயம் முடிந்து உள்நுழையவும் கிணிங்கிணி எனப் எங்கள் பள்ளி மணி அடிக்கும்.


இது தினப் பிரவேசம்.


இதுபோகப் பெற்றோர்கள் சிலர் தாமே குழந்தைகளை அழைத்துவந்து (அதெல்லாம் சும்மா. தரதரவென இழுத்து வந்து, வரும் வழியில் முதுகில் நாலு போட்டு) பள்ளியில் விடுவதும் வாடிக்கை.


இதையெல்லாம் விடச் 

சந்தை நாட்களில் சந்தைக்கு வரும் பெற்றோர் சர்வ சுதந்திரமாக வகுப்பில் 

தம் பிள்ளைகளை "இங்க உக்காந்து இரு, சந்தைக்குப் போய்ட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்" என அப்போதே ஒரு creche மாதிரி பாவித்து டீச்சர் ஒப்புதலுக்காக ஒரு புன்னகையை மட்டும் அவசரமாக உதறிவிட்டு  சரேலென்று சந்தைக்குச் சென்று விடுவார்கள்.


அவ்வாறு தற்காலிகமாக இலவச இணைப்பாக விட்டுச் செல்லப்படும் சிலர்

பெற்றோர் வந்து கூப்பிடும் போது ' வர மாட்டேன் போ' என அடம் பிடிக்கும் காட்சிகளும் அரங்கேறும். 


அடுத்து என்ன?

முதுகில் ஒரு அடி அல்லது காதைப்பிடித்துத் திருகி ஆசிரியர் இருப்பைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கொத்தாகக் தூக்கிச் செல்வார்கள்.


சரி...வாங்க...

பள்ளியைப் பார்க்க.


ஐந்து வகுப்புகளுக்கு 

மூன்று ஆசிரியர்கள்.


தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன் சார்.


ஒன்று இரண்டு வகுப்புகளுக்கு

அன்பே உருக்கொண்ட அம்மா 

மேரி டீச்சர்.


மூன்றாவது வகுப்புக்கும்

நான்காவது வகுப்புக்கும் டீச்சரின் கணவர் 

திரு பாலையா சார்.

(கெடுபிடி, பிரம்படி)


ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியர் 

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடிப் பொறுப்பு.( Union Territory)


வகுப்பு என்பதெல்லாம் அறைகளால்/ சுவர்களால் பிரிக்கப்படுவது என்று நினைக்கும் பலர் 

நிச்சயமாக

ஏமாந்து போவீர்கள்.


ஒரு பெரிய ஹால்(.!)- ஓடு வேய்ந்தது.

ஹால் என்பதே பெரிய வார்த்தை தான். இருக்கட்டும் எங்கள் பள்ளி அல்லவா?


தலைமையாசிரியர் ஒரு முனையில். 


அடுத்து 1,2,4, கடைசியில் 3வது வகுப்புகள்.


எவ்விதத் தடையோ, பிரிவுச்சுவர்களோ இல்லாத பெருஞ்சமத்துவம் அது.


1 வது வகுப்புக்கும் 

2 வது வகுப்புக்கும் நடுவில் 

ஒரு சேர் மட்டும் போட்டு மேரி அம்மா டீச்சர் அமர்ந்திருப்பார்.


அடுத்த 4 ,3 வகுப்புகளிடையே 

டேபிள் சேர் போட்டு திரு பாலையா சார் இருப்பார்.


தலைமையாசிரியருக்கு இடது பக்கத்தில் சுவரோரம் ஒரு மரபீரோ நிற்கும். ஆவண அறை அது.


எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து திரு பாலையா சார் தான் அட்டெண்டெஸ் எடுப்பார்.


பெயர்கூப்பிட்டதும் மின்னலாய் எழுந்து வலதுகை தூக்கி ஒரு சல்யூட் அடித்து " ஆஜர்" சொல்லுவோம் 


முடிந்த அளவு உரத்த குரலில். தெருவெல்லாம் "ஆஜர்" கேட்கும்.


ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் "பிரசண்ட் சார்" 


ஆறாம் வகுப்பில் ABCD யெல்லாம் படிக்கனுமே.

அதற்கு ஆயத்தமாய் இந்த 'பிரசண்ட் சார்!'


சரி, விஷயத்துக்கு வருவோம்.


(இப்பத்தான் விசயத்துக்கே வருகிறோமா என முறைக்கிறீர்களா?) 

வாங்க.


தெருவில் திரிபவர்களையெல்லாம் பள்ளிக்கு அள்ளிக்கொண்டு வருவதால் 'பெர்த் சர்டிபிகேட்' எல்லாம் கேட்டு யாரையும் தொல்லைப் படுத்துவதில்லை பாலகிருஷ்ணன் சார்.


ஒரு எண்டரன்ஸ் டெஸ்ட் வைக்கப்படும் மேரி அம்மா டீச்சரால்.


பின்பக்கமாகக் கையைக்கொண்டு வந்து மூக்கைத் தொடவேண்டும்.

தொட்டுவிட்டால் அட்மிஷன்.


என்ன?

பேர் கூப்பிடுவார்கள்.

அவ்வாறு பின்பக்கமாக கைவைத்து மூக்கைத் தொடாதவர்களையும் வெளியேற்றுவதேயில்லே மேரி டீச்சர்.


அவர்கள்  'உப்புக்குச் சப்பாணி'யாக முதல் வகுப்பில் உட்காரவைக்கப் படுவார்கள்‌.


அவர்களைப்பாலையா சார் பேர் கூப்பிடமாட்டார்.

' ஆஜர்' சொல்ல முடியாது.


ஆனால்

மேரியம்மா டீச்சர் அவர்களையும் குஷிப்படுத்தத் தானே எழுந்து பெயர் சொல்லி ஆஜர் சொல்லச் சொல்லுவார்.


அட்மிஷன் எப்படி?


திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தேசபக்தர்.

கதர்தான் அணிவது. கணுக்கால் தெரிய வேட்டி. கைமறைய முழுக்கைச் சட்டை. கண்டிப்பும் கனிவும் உடுத்திய ஆறடிச் சிவப்பழகர்.

நீங்காது நீறு முப்பட்டையாய் நெற்றியில்.


'சேர்க்கலாம்' என்று முடிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிறந்தநாள் அவரே நிர்ணயித்து விடுவார்.


சுதந்திரதினம் ( ஆகஸ்ட் 15);


குடியரசு தினம் ( ஜனவரி 26);


காந்திஜி பிறந்தநாள் ( அக் 2);


பள்ளிகள் பல திறந்த காமராஜர் பிறந்தநாள் ( சூலை 15)


இந்த நான்குக்குள் ஏதாவது ஒருநாள்

சேர்க்கையின்போது ஐந்தாண்டுகள் நிறைவடையுமாறு பின்னோக்கி வருடம்  கணக்கிட்டுப் பதிவாக்கிவிடுவார்.


பின் சில சமயங்களில் யாராவது பெற்றோர் வந்து தம் "பையன் பிறந்த தேதி மாதம் வருடம் மாறியுள்ளதே" எனக்கேட்டால்


"எல்லாம் நல்ல நாள்தான் பதிந்திருக்கிறேன்.நல்லா வருவான் போங்கள்" என்பார்.


அவ்வளவுதான்.

பிறந்தநாள் விசயம் முற்றுப் பெற்றுவிடும்.


அப்படித்தான் செப்டம்பரில் பிறந்த எனக்கு

காமராஜர் பிறந்தநாள் (சூலை 15) பதிவாகியது.

அதுவே பணிமுழுதும் தொடர்ந்தது.


ஒரே ஒரு சிக்கல்.


நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதால்,


ஐந்தாண்டுக் கணக்கிற்காக அப்படியே ஒரு ஆண்டு பின்னோக்கி வைத்துவிட்டார் பாலகிருஷ்ணன் சார்.


இது என்ன பெரிய சிக்கல்?


பலருக்கு இதுமாதிரிதானே நடந்துள்ளது என்கிறீர்களா?


திரு பாலகிருஷ்ணன் சார் எனக்குப் பதிவிட்ட பிறந்தநாள்/ ஆண்டில்

என் பெற்றோருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லையே.

நல்ல காலம் பொறக்குது

 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.


தளிர் இளைஞன்.

 பொத்தலால்களாலான கருப்புக் கோட்;


அழுக்கே நிறமான தலைப்பாகை.


காவியே சாயம்போன கைலி (அ) வேட்டி.


கையில் குடுகுடுப்பை; 


கனவேகமாக "நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது"

அவன் வாயிருந்து ஓடுது.


இருபுறமும் சேர்ந்து

பதினான்கு வீடுகளேயுள்ள குறுக்குத் தெரு எமது.


நாய்களின் குரைப்பை மீறிக் கீச்சாய்

 'நல்ல காலம் பொறக்குது' கேட்கிறது.


நாங்கள் நாய் வளர்ப்பதில்லை;


எதிர்வீட்டு 'வெள்ளை'

எம் வாசலில் யார் நின்றாலும் 

கத்திக் காட்டிவிடும். 


வேகப் பரவலாய் அவன்நடை...


அட!


கால்களிற் செருப்புமில்லை.


எந்தக் கதவும் திறந்தபாடில்லை.


எப்படி வரும்?


நல்ல காலம்,

 அவனுக்கு?


சரசரவென இறங்கினேன்.


முதன் முதலாக வேலைக்குப் போகத் தைத்த கோட்.

சேராது யாருக்கும் வீட்டில்.

இருப்பினும் கிடக்குது பலகாலம் பீரோவில்.

40 ஆண்டுமீறிய

நினைவுப் பொக்கிஷம்!


தெருக்கோடிவரை சென்று வெறுங்கையோடு திரும்பியது

'நல்லகாலம்.'


' தம்பி, இந்தா' என்றேன்

கேட்டின் பின் நின்று.


நம்ப மறுத்து நின்றான்;

கை கண்டான்.


உணர்ச்சி வசமோங்க 'நல்லகாலம் பொறக்குது, ' 'நல்லகாலம் பொறக்குது' எனக் கிளிப்பிள்ளையாய்க் கீச்சிட்டான்.


'ஆமாம் 'என்றேன்.

வாங்கிக்கொண்டான்.


எதிர்வீட்டு வெள்ளை குரைத்துக் குவிக்கிறது...


வெகுநேரம் அவன் தெருவிலகிப்

போவதையே பார்த்துக்கொண்டு பூட்டியகேட்டின் பின் நின்றேன்.


நல்லகாலம்,

வெள்ளை உடனுறை

நாய்கள் குறைப்பு நின்றது.


- பூவனத்தான்


சூலை 23, 2019

*

 அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் எழுதப்படுவதற்கும் தமிழில் கையெழுத்திடுவதற்கும் 


தற்போதைய அரசு ஆணைகள் வழங்கி இருப்பது குறித்து நெடுநாள் நட்பினர்,

 

மூத்த (ஆனால் காட்சிக்கு இளைஞர்) பத்திரிகையாளர்

Thiruvengimalai Saravanan அவர்கள் பதிவிட்டிருந்தார்.

இப்பின்னூட்டம் அங்கு நட்டது... இங்கும்.

இது 1971ல்.


ஆங்கிலத்தில்  அப்போது என் பெயர் R Mutthirulandi என்றிருந்தாலும்,

மிக முன் காலத்திலிருந்தே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே எனது கையெழுத்து.


அரசுக் கல்லூரிப் பணியில் 1971 திருவண்ணாமலை அரசுக்கல்லூரியில் முதல் மாத ஊதியம் பெற-


முன்சொன்னவாறு- தமிழில் கையெழுத்திட்டேன்.


பதறிப்போய் அலுவலகக் கண்காணிப்பாளர் ஊதியப் பதிவேட்டை முதல்வருக்கு ( வேதியியல் பேரா.டி.கே.மீனாட்சி சுந்தரம் அவர்கள்) எடுத்துச் சென்று காட்டிவிட்டு வந்தார்.


" உங்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லி முதல்வர் சொல்லியுள்ளார். அவரைப் போய்ப் பாருங்கள்" என்றார்.


நான் முதல்வரை அவரது அறைக்குச் சென்று பார்த்தேன்.


 "நீ  ( அவர் அப்படித்தான்) எப்படி இங்கிலீஷில் இருப்பது மாதிரி கையெழுத்திடாமல் 

வேறு மாதிரி கையெழுத்திட்டாய். உனக்குச் சம்பளம் வழங்க முடியாது" என்றார்.


பணியில் சேர்ந்த முதல் மாதமாக இருந்தாலும் அப்போதே


 'நாமார்க்கும் குடியல்லோம்,

நமனையஞ்சோம்' 

என்பது தான் நம் நிலைப்பாடு.


"சார், நான் ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்தும் போட்டுவிட்டேன்.

சம்பளம் மறுப்பதெனில் தனியே எனக்கு அதற்கு எழுத்துப்பூர்வ ஆணை வழங்குங்கள். அது இல்லாமல் எனது சம்பளத்தை நிறுத்தி முடியாது " என்றேன்.


" starving" என்று இயக்குநருக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்" என்றேன்.


இதை அவர் எதிர்பார்க்கவில்லை.


"நீ தமிழில் கையெழுத்திட்டிருப்பதை அடித்து விட்டு இங்கிலீஷில் போட்டுட்டு வா. சம்பளம் தரச் சொல்கிறேன்" என்றார்.


மீண்டும் நான் 

" சார், நான் இந்தக் கல்லூரியில் பணியில் சேரும் போதே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே கையெழுத்துப் போட்டுள்ளேன். ஆகவே, அந்த இராச முத்திருளாண்டிக்கு நீங்கள் சம்பளம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்" 

என்று வாதிட்டேன்.


உடனே மிக அழுத்தமாக அலுவலகத்திற்குப் பெல் அடித்தார்.


அப்போதைய பணியாள் ( பெயர் நினைவில்லை)


 " இன்னா சார் ?" என்றபடி வந்தார். ( அவரும் அப்படித்தான்.

முதல்வருக்கு மட்டும் தான் 'இன்னா சார்'.எங்களுக்கெல்லாம் 'இன்னாப்பா தான்!')


"யோவ் இந்தாளு joining reportஐ சூப்பரண்ட்டை எடுத்துட்டு வரச்சொல்லு" 

என்று கத்தினார். 


சிறிது கழித்து 

எனது பணிசேர் அறிக்கையுடன் கண்காணிப்பாளர் வந்து முதல்வரிடம் 

அத் தாளை நீட்டினார்.


முதல்வர் முகத்தில் ஈயாடவில்லை.

என்னை மேலுங்கீழும் பார்த்தார்.


"வேலைல சேரும்போதே வினை" எனத் திருவண்ணாமலையில் அன்று சபித்தார். ( பணிசேர் அறிக்கையில் ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் கையெழுத்திட்டிருந்ததுதான் காரணம்! 

பணியிற் சேர்ந்த நாளில் 

ஐந்தாறு பேர், நானும்- 10(a)1 சேர்ந்ததால் அன்று கவனிக்கவில்லை போலும் கல்லூரி முதல்வர்)


மெல்லிய, சிவந்த அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க

( அதுதானே சொல்லனும்) கண்காணிப்பாளரிடம்

" யோவ், இவன் சம்பளத்தைக் கொடுத்துத் தொலையா" என்று வாழ்த்தினார்.


முதல் மாதம் சம்பளம்  (475+25-5) பெற்ற கதை முற்றும்.


( ம்க்ஹூம்... எங்க முற்றும்? ...

அப்புறம் பல முட்டும் தொடர்ந்தே!)

வியாழன், 8 அக்டோபர், 2020

 துவையல் தொகை.

----------------

( அம்மா கையரைத்த துவையல் ருசித்தவர்கள் 'பாக்கியசாலிகள்' என நண்பர்  ஒருவர் கூறினார்.  நானும் ஒரு பாக்கியசாலி என்பதால் இத் 'துவையல் தொகை')

*

பருப்புத் துவையலெனில், 
வறுத்து ஆறவைக்கும் போது
தாங்கும் சூட்டிலேயே,

தேங்காய்த் துவையலெனில்
தேங்காய் துருவியதுமே,

பொட்டுக்கடலையெனில்
அரை தட்டில் கடலை போட்டவுடன்,

பாதி எம் வாயரைக்கும்!
மீதியே அம்மிக்கு.

புளித்துவையலென்று ஒன்றுண்டு;
நாமதன் குடியல்லோம்.
(எங்கப்பத்தாவின் சிறப்பு விருப்பம் அது.)

பள்ளி சென்று கற்கவில்லை என்றாலும்,
பிள்ளைகள் வாய்க் கழிவுபோக 
எவ்வளவு தேவைப்படும் என்று 
எங்கம்மாவிற்கு எப்போதும் தெரிந்திருக்கும்.

கால்நீட்டியமர்ந்து
கல்லை உடைப்பதுபோலத்
தட்டி,
நையாண்டி மேள இழுப்பாய்த்
தடவி, 
கல்லுள் துவையலைத் திணித்து விடும் 
முயற்சி போல் 
இறுக்க அழுத்தி,
இழுத்து,
தொட்டிலாட்டும் லயத்தில்,
தொடர்ந்து,
கைவலிக்கக்

கருணை தெளித்துக் 

கச்சிதப் பக்குவமாய்

அரைத்துக் கொண்டிருக்கையிலே,

வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருக்கும் 
எங்கப்பத்தா 
எழுந்து வந்து

தீத்தொடுவதுபோல
ஒரு விரலால் குழவியில் தடவி,
"இன்னும் இரண்டிழுப்பு 
இழுத்திருக்க வேண்டு"மென்பார்.
"ரெம்ப மையாயில்லாமல்
நெரு நெருன்னு 
இருக்க நிறுத்து"
எனப் 
பையச் சொல்வார்,
பொக்கை வாயால்.

'இக்கும்' என ஓரிழுப்பு

எங்கம்மா இழுத்து...
குழவி நிறுத்திச் 
லாவகமாய்ச் சுற்றி
வழித்து,

அம்மியிலிருப்பதெல்லாம் அங்கேயே 
திரட்டி, உருட்டிக்
கிண்ணம்  நிறைத்துவைப்பார்.

எம் தட்டில் வருமுன்,

எட்டி, எட்டி, விரல் நீட்டி
எடுத்துண்போம்
அவ் வமுதை.

அக்காலம் அற்றது.

அம்மா இல்லை;
அம்மியுமில்லை;
ஆளுமில்லை.
அரைக்கும் அன்பில்

ஆக,

அன்னை அன்பரைத்த

அமுதத் துவையலில்லை.

அன்னையொடுபோன
அறுசுவையுடன்-
அமுதத் துவையலும் 
போயே போச்சு.

கெட்டிச் சட்னியே 
இப்பத் துவையாலாச்சு.

என்ன சொல்ல? இக்கொடுமை.

.
தொலைந்தது துவையல்.
தொலைத்தும் வாழ்கிறோம்.

துவையல் நினைந்து...

அரைத்தரைத்தே
அம்மி தேய்த்த அம்மாவை நினைத்து...

* 2019

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

 இற்செறிப்புக் காலத்துக்கு முந்திய

ஒரு நாளில் (அக் 2019)


 இளவல், முனைவர் வாசுதேவன் ( தமிழ்த்துறைத் தலைவர், பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி) எனக்கு வாட்டர் மேன், பாரிஸ் 

( ஒரிஜினல்) பேனா அன்பளித்தார்.

  (அடிக்கடி இவ்வாறு  நண்பர்களுக்கு நல்லன அளித்து அன்பு காட்டுவார். அப்பட்டியலில் நானும்.)

சட்டைப்பையில் வைக்கவே கம்பீரமாக இருக்கிறது.

பேனா கொண்டு எழுதுவதே அரிதாகிவிட்டது.

 இப்போதெல்லாம் கையெழுத்துப் போடத்தான் பேனா. 

( அதற்கும் அதிக வாய்ப்புகளில்லை தற்போது.)

வங்கிக்கு எடுத்துப் போனால் வாட்டர்மேனை இரவல் கொடுக்கத் தயக்கம் வருகிறது.

இரண்டு பேனாக்களை ஓரிருமுறை எடுத்துச்சென்றேன்.

நாம் எப்போது வருவோம் எனக் காத்திருந்தது போல் 

" சார் கொஞ்சம்..." என ( அதற்குமேல் பேசினால் வங்கியில் வட்டி போட்டுவிடுவார்கள் எனக் கருதி...) எழுதுவதுபோல் கையைப் பாவனை செய்து 

நம் சட்டைப் பாக்கெட்டில் கண்ணைப்போட்டு 'கேட்பு' நடைபெறும்.

இரண்டு பேனா எடுத்துச்சென்ற புத்திசாலித்தனமான நாளது.

வாட்டர்மேனைக் கவனமாய்ப் பார்த்துத் தவிர்த்துப் பால்பாய்ண்ட் பேனாவை வள்ளல்போல வழங்கினேன். ( திருப்பித்தராவிட்டாலும் ஒப்புதலே எனும் பாவனையில்)

வங்கிமேலாளரிடம் பேச வேண்டியிருந்தது. அவரது அறைக்கதவைத்  திறக்குமுன், அருகில் வந்த மற்றொருவர் (அம்மணி) 

" சார் கொஞ்சம் பேனாக் கொடுத்துட்டுப் போங்க" என வங்கியிலுள்ள அனைவருக்கும் கேட்கும் ஸ்தாயியில்--

 நான் ஏதோ அவரிடம் பேனா வாங்கிவிட்டுக் கொடுக்காமல் மறந்து செல்வது போல 

அனைவரும் எனைப் பார்க்க...

'எடுக்கவோ?கொடுக்கவோ?' என நான் தடுமாற,

ஆபத்பாந்தவனாய் முதலில் என்னிடம் பேனா வாங்கியவர் 

தேடிவந்து 

" சார், தேங்ஸ்" என்று பேனாவைத் திருப்பித்தர,

அப்பாடா பிழைத்தேன்.

அந்தப் பேனாவையே அம்மையாருக்குத் தந்துவிட்டு ( விட்டு) மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.

அங்கொருவர் படிவத்தில் கையெழுத்திடும் பால்பாய்ண்ட் பேனாவை அசுர வேகத்தில் உதறிக் கொண்டிருந்தார்.

உள்நுழைந்த என் சட்டைப்பாக்கெட்டைக் கழுகுப்பார்வையாய் அவர் பார்க்கும்போதே புரிந்துவிட்டது.

வாட்டர்மேனுக்குக் காத்திருக்கிறது வேற்றுக்கை என்று.

நல்லவேளை.

வங்கி மேலாளர் ( என் மகளின் பள்ளித் தோழி)

 "இந்தாங்க சார்" என அவரது பேனாக்குவியலில் இருந்து 

கையுதறிக் கொண்டிருந்தவர் கேட்காமலே ஒரு  பேனாவை எடுத்து நீட்ட..

வாட்டர்மேன் கைமாறுதல் நிகழ்வு ஒருவாறாகத் தள்ளிப்போயிற்று.

கையுதறியின் 

வேலை முடியட்டும் எனச் சைகையாலே மேலாளருக்குச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன்.

சுற்றி என்ன நடக்கிறது எனத் திரும்பிப் பார்த்தால்,

மேலாளர் அறையில் நுழை தருணத்தில் என்னிடம் 

(அந்த இரண்டாவது) பேனா வாங்கிய அம்மணி 

படிவம் ஏதோ பூர்த்திசெய்ய பேனாவும் தாளுமாக ஒரு சிலரை அணுகிக் கொண்டிருக்கும் காட்சி கண்ணாடி வழியே.

சரி...வெளியே சென்று அந்த அம்மைக்கு உதவி வரலாமா என நினைக்கும்போது,

பேனாவுக்காக வந்துவிட்டேனோ என அற்பமாகப் பார்ப்பாரோ என்று ஐயமும் எழுந்தது.

எழுந்து சென்று உதவவில்லை. 

நாம் வெளியே செல்லும்போதும் 

அதே நிலை தொடர்ந்தால்  உதவலாம் எனச் சமாதானமாகி  அமர்ந்து விட்டேன்.

அச்சமயத்தில்

வாட்ஸப்பில் எனது மாணவர் வெங்கடேசன் பகிர்ந்த (கீழுள்ள) சுஜாதாவின் 'இங்க் பேனா' வந்தது.

ஆகா என்ன பொருத்தம்?!

இதோ 

எனது பேனாப்புலம்பலுடன்...

சுஜாதாவின் " இங்க் பேனா"வும்.


*


இங்க் பேனா

 - சுஜாதா


ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது - 

அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? 

 12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில்  தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்

படுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும். 

வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம்  தொலைத்துவிட்டோம். 

---

நான் ரசித்தது பிறர் ரசிக்க.

 அண்மையில் 

 + 2 தேர்வுகளில் சிறப்பான நிலையடைந்த

தேவானை, குறிசொல்லும் குழுவாகச் தொடர்ந்து வாழ்ந்து வரும் பழங்குடி மக்களிடையே காணப்படும் புகைப்படம் ஒன்றில் சென்ற ஆண்டு நான் கண்ட ' நல்லகாலம்' ஒரு ஓரமாய் நிற்பது போல் ஒரு எண்ணம்.

(ஆதலால் இது மீண்டது)

*


மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

தளிர் இளைஞன்.

 பொத்தலால்களாலான கருப்புக் கோட்;

அழுக்கே நிறமான தலைப்பாகை.

காவியே சாயம்போன கைலி (அ) வேட்டி.

கையில் குடுகுடுப்பை; 


கனவேகமாக 

"நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது"

அவன் வாயிருந்து ஓடுது.

இருபுறமும் சேர்ந்து

பதினான்கு வீடுகளேயுள்ள குறுக்குத் தெரு எமது.

நாய்களின் குரைப்பை மீறிக் கீச்சாய்

 'நல்ல காலம் பொறக்குது' கேட்கிறது.

நாங்கள் நாய் வளர்ப்பதில்லை;

எதிர்வீட்டு 'வெள்ளை'

எம் வாசலில் யார் நின்றாலும் 

கத்திக் காட்டிவிடும். 

வேகப் பரவலாய் அவன்நடை...

அட!

கால்களிற் செருப்புமில்லை.

எந்தக் கதவும் திறந்தபாடில்லை.

எப்படி வரும்?

நல்ல காலம்,

 அவனுக்கு?

சரசரவென இறங்கினேன்.

முதன் முதலாக வேலைக்குப் போகத் தைத்த கோட்.

சேராது யாருக்கும் வீட்டில்.

இருப்பினும் கிடக்குது பலகாலம் பீரோவில்.

40 ஆண்டுமீறிய

நினைவுப் பொக்கிஷம்!


தெருக்கோடிவரை சென்று வெறுங்கையோடு திரும்பியது

'நல்லகாலம்.'

' தம்பி, இந்தா' என்றேன்

கேட்டின் பின்

நம்ப மறுத்து நின்றான்;

கை கண்டான்.

உணர்ச்சி வசமோங்க 

'நல்லகாலம் பொறக்குது, ' 'நல்லகாலம் பொறக்குது' 

எனக் கிளிப்பிள்ளையாய்க் கீச்சிட்டான்.

'ஆமாம் 'என்றேன்.

வாங்கிக்கொண்டான்.

எதிர்வீட்டு வெள்ளை குரைத்துக் குவிக்கிறது...


வெகுநேரம் அவன் தெருவிலகிப்

போவதையே பார்த்துக்கொண்டு பூட்டியகேட்டின் பின் நின்றேன்.

நல்லகாலம்,

வெள்ளை உடனுறை

நாய்கள் குறைப்பு நின்றது.


- பூவனத்தான்

சூலை 23, 2019

 ஒரு விவாதம்.


நான், என் தரப்பின் நியாயத்தை நிறுவிக் கொண்டிருக்கிறேன்.

எரிச்சல் புகைந்து விட்டது போலும் எனக்கு மேலலுவராகப் பணிக்கப்பட்டிருந்த அதிகாரத்துக்கு.(ஐ.ஏ.எஸ்)

"நான் யார்னு தெரியுமா? You are after all an Assistant Professor....." 

எனஎன்னைப்பார்த்து அந்த அதிகாரம்  கேட்டது.

சுருக்கென உயிர் பறிக்கும்

சொல்வேல் பாய்ந்துவிடுமோ என்தரப்பிலிருந்து

 ஏதும் 

இராசாபாசம் நிகழ்ந்து விடக்கூடாதே  

எனப் பதறி,

உடனிருந்த அமைச்சர் என்னை அதிகாரத்திடம் சுட்டிக்காட்டி

"அவர் யாரென உங்களுக்குத் தெரியுமா?"

எனச் சமாதானத் தீயணைப்புச் செய்தபோது

எழுந்த நினைவு....

( அதன் பின்னர் நிகழ்ந்தவைகள் பொது வெளிக்குரியவை அல்ல. 

ஆனால் அந்த அதிகாரம் 

அதற்குப் பின் 

என்னைக் காண நேரும் போதெல்லாம் கண்களை வேறுபுறம் திருப்பிக் கொண்டு  'காணாத பாவனையோடு' விரைவதைக் கண்டு நகைத்திருக்கிறேன்.)

*

( மிகப் பிற்பாடு எழுத்தில்.)



நான் யார் தெரியுமா?


நானென்பதே நானல்ல!

நான் என நான் நினைத்துக் கொண்டிருப்பதும் 

நானல்ல;

நான் என 

நீங்கள் காண்பதோ-

நினைத்துக் கொண்டிருப்பதோ 

எதுவும் நானல்ல;


நானென்பது நானேயறியாமுன்

நானென எனை 

என்னவாய்க் காண்கிறீர்கள்?

கருதுகிறீர்கள்?


என்னைப்பற்றி

எனக்கே தெரியுமுன்-

என்னைப்பற்றி

எதைவைத்து 

'இது இவனென' என்னைக் கொள்கிறீர்கள்?


யாருக்குத் தெரியும்?

நான் யார்?

நான் யார்?

அது சரி

உங்களை உங்களுக்குத் தெரியுமா?

தெரிந்தபின் 

வருக... ...தவறாமல்;


வந்து,

'நான்' யாரென உறுதியாய்ச் சொல்லுங்களே...

காத்திருக்கிறேன்....

அதுவரை

'நான்' யாரெனத்

தெரிந்து கொள்ள ஆவலுடன்-


நான் யாரெனத் தெரிந்து கொள்ள

முயன்று கொண்டே...

இறுதிவரை.

வருவீர்கள்தானே?


_ பூவனத்தான்

(Posted in Facebook on 21-7-2020)

 தம்பி இருந்தானே அடகுபோகா நாணயத்துடன் என்ற எண்ணத்தில் இன்றைய unpawned என்ற சொல்லாடல் பிறந்தது.

*

கதை போல இருக்கும் ஒரு நிகழ்வு.

 நினைவிலிருந்து தருகிறேன்.

தம்பி பதிவுத்துறை  இணைத்தலைமைப் பொறுப்பில் இருந்தபோது அவனது நேர்மையான, சட்டப்படியான நடவடிக்கையால் ஒருவருக்கு ஏழுகோடி ரூபாய் இழப்பு ( stamp duty)  தவிர்க்கப்பட்டது. அது அவருக்கு லாபமாகவும் ஆனது.

இதற்குமுன் அவரது கோப்பினை தாமதப்படுத்திய அலுவலர் இரண்டு கோடி பேரம் பேசினாராம்.

ஏதோ சூழலில் முன்பிருந்தவர் மாற்றப்பட்டு தம்பி கவனிக்கும் அலுவல்பொருளானது அக்கோப்பு.

கோப்புக்குரியவர் இரண்டு மூன்றுமுறை நேரில் சந்திக்க முயன்றுள்ளார். 

தம்பி சந்திக்கவில்லை.

உரிய வகையில் யாரும் திருத்தம் செய்யமுடியாத ஆதாரங்களை எடுத்துக்காட்டி கோப்பினைத்தானே டைப்செய்து முடித்து வைத்தான்.

அலுவல் முடிந்து அவன் பேருந்துக்குக் காத்திருப்பதை ( வீட்டுக்கு அலுவலக வாகனத்தில் அவன் செல்லும் வழக்கமில்லை.) அந்த பெரும்செல்வந்தர் காரில் செல்லும்போது கவனித்திருக்கிறார்.

தனது கோப்பில் சாதகமாகக் கையெழுத்திட இவருக்கு ஒரு புதுக் கார் வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணியிருப்பார் போலும்.

அன்றைக்கு அவரது கோப்பு முடித்து வைக்கப்பட்டது அவருக்குத் தெரியாது.

அடுத்தநாள் காலையில் ஒரு புதுக் கார் பல லட்சம் விலையுள்ளது - பதிவுக்குத் தயார் நிலையில் - தங்கியிருந்த வீட்டின் வாசலில் வந்து வந்து நிறுத்தப்பட்டிருந்தது.

செல்வந்தரும் அருகே.

அலுவலகம் செல்வதற்காக வெளியில் வந்த தம்பியைப் பணிந்து 

" தயவு செய்து இந்தச் சின்ன gift ஐ ஏற்றுக்கொள்ளுங்கள். தங்களுக்கு முன்பிருந்தவர் இரண்டு கோடி பேரம் பேசி பைலைப் பெண்டிங் போட்டிருந்தார்.  அதனைக் compare செய்தால் இது மிகச் சிறிய அன்பளிப்புதான். 

நீங்களாக எதுவும் கேட்கவில்லை. நானாகத் தருவதுதான் இது.

ஆகவே தவறாக எண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று மன்றாடியுள்ளார்.

தம்பி ( என்னை மாதிரி கோபங்காட்ட மாட்டான்.) சிறுபுன்னகை மட்டுமே அவன் கோபத்திலும் வெளிப்படும்.

" ஐயா,நீங்கள் என் நாணயத்தை இந்தக் காருக்கு அடகு வைக்கச் சொல்கிறீர்கள்.  எனது பணிக்கு அரசு சம்பளம் தருகிறது. அது எனக்குப் போதும். எனது வேலையச் செய்யப் பணமோ பரிசோ கொடுக்க  நீங்கள் எவ்வளவு பெரிய ஆளானாலும் என்னைப் பொறுத்தவரை அருகதை இல்லாதவர் என்றுதான் சொல்வேன்." என்று சொல்லிவிட்டு

 " உரியவாறு உங்கள் கோப்பின் மீது எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்த தகவல் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். இதுமாதிரி என்னை இனி அணுகாதீர்கள்" 

என்றானாம்.

இந்தத் தகவல் முழுதும் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் தொடர்பாளராக இருந்த எனது நண்பர் ஒருவர் மூலம் பின்னாட்களில் எனக்குத் தெரியவந்தது.

தம்பியிடம் கேட்டபோது

 "உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சான்னே?" 

என எப்போதும்போல ஒரு புன்னகையால் அவ்விசயத்தைத் தள்ளிவிட்டான்.

 எனக்கு 

ஆறுநாட்களே இளையன்.


இருப்பினும் 

நான் ஏதோ ஆறாண்டுகளுக்கு மேல்  மூத்தோனென்பது போன்ற அன்புடன் மரியாதை விரவ

'அண்ணே' என்றே ஆதிமுதல் இன்றவனது அந்திவரை வெகு மரியாதையாய் அன்புதோய அழைப்பவன்.

பணி ஓய்வு பெற்றுப் பத்தாண்டுகள் ஓடிவிட்டது.

ஆரம்பம் முதலே, அவன் என்னிடம் பேசிய    சொற்களை எண்ணிவிடலாம்.

ஆனால் , உளம் முழுதும் அன்பு நிறைத்தோன்;

தீதென யார்க்கும் எக்காலமும் செய்யாத இனியன்;

குடும்பத்தில், 

உறவில்,

இவன் தொடர்ந்து கடமைகள் சுமந்தே மெலிந்தான்;

பயன்பெற்றவர்களது

பாராமுகத்திற்கும்

புன்னகையையே பரிசளிக்கும் எளியன்;


பதிவுத்துறையில் ஒரு புனிதன்.

பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி.பணியில் நிறைவுற்றான்.

"ஊதியந்தவிர 

ஒருகாசு

ஒருநாளும் எவரிடமிருந்தும் பெறாதவன்,

பெற எண்ணாதவன், இத்துறையில் இவரைத் தவிர எவரையும் காட்டமுடியாது "

என இவனுடன் பணியாற்றியவர்களே சொல்லப் பெருமிதம் கொண்டிருப்பேன்.

"ஐயாவின் உடை மட்டுமல்ல அவரது உள்ளமும் அப்பழுக்கற்ற வெள்ளைதான்" என அவனது பணிவாகன ஓட்டுநர் கதறிக் கொண்டிருந்தார். 

பணிவாகனம் ஒருநாளும் ஐயா வீடுவராதாம்.

 "அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே ஐயா வண்டியில் அமர்வார்" என்றும் அவ்வோட்டுநர் அரற்றிக்கொண்டிருந்தார்.

இன்றவனை 

எரியூட்டி மீள வந்துள்ளோம்.

( பதிவுத்துறைக் கூடுதல் தலைமை அலுவலராக  Addl I. G. கறையேதுமின்றிப் பணி நிறைவு செய்திருந்த தம்பி  வே.முருகேசன் நேற்று இரவு மறைவு. இன்று எரியூட்டல்.

நினைவுகள்

மாளுமோ?)

March 17, 2020

 ஏழின் சிறப்புகள் எண்ணற்றவை- யாம்

கழுகின் எழுகுணம்*

கைக்கொள்ள அழைக்கிறோம்.

12/6/19

------------------------------

-தலைமை, சுதந்திரம்; (பறவைகளின் அரசன்)

_ அதிகூர்மைப் பார்வை; ( கழுகுப் பார்வை)

-  தன்னைச் செதுக்கிக் புதுக்கிக் கொள்ளுதல்;

( இது எப்படி எனத் தேடிக் காண்க, வியப்பீர்)

- சவாலெதிற் கொள்ளல்;

( புயலை எதிர்த்து விரும்பிச் சிறகு விரிக்கும்)

- உயரவே இடைவிடா உந்துதல்;

( உயர்ந்தே பறக்கும்: கூடும் உயரத்தில் தான்; இறந்ததை உண்ணாது.)

- வழிநடத்தல்/ பயிற்சியளித்தல்;

( குஞ்சுகளுக்குக் கழுகு பறக்க அளிக்கும் பயிற்சி, நாம் பின்பற்ற..)

_ எப்போதும் இலக்கு நோக்கல்.

(எவ்வளவு உயரப் பறப்பினும், இலக்கை நோக்கி கழுகு இறங்கும் அழகு காண மகிழ்வு)

பிறகென்ன?

சிறகு விரிப்பீர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

 Date of Birth என்றால் 

பிறந்த நாளல்ல.


வேறென்ன எனக் கேட்கிறீர்களா?

எங்களுக்கெல்லாம் (  டிஸ்டிரிக்ட் போர்டு துவக்கப்பள்ளி , திருப்பூவனம் -மேற்கு) -  ஐம்பது அறுபதுகளில் படித்தவர்களுக்கெல்லாம் - அப்படித்தான்!


எங்கள் பள்ளியின் தலைமையாசிரியாக இருந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.

எங்களது தொடக்கப் பள்ளி பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளைக் திறந்த வரலாற்றின் ஒரு விளைவாகப் புதிதாகத் தோன்றியது.

சந்தைக்கருகில் இருந்ததால் "சந்தைப்பள்ளிக்கூடம்" என்றே அறியப்பட்டது.

 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ள பள்ளி அது. ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்.

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்களூர்ப் பெருமாள் கோவில் அருகே (தொடங்கிப் பெரியகோவில் வரை நீளும்) அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.

எப்போதும் வீட்டிலிருந்து  நேராகப் பள்ளிக்கு அவர் வந்திருக்குமாட்டாரென்றே கருதுகிறேன்.

பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே கிளம்பி

எங்கள் பகுதிக்குள் ( பழையூர்) வந்துவிடுவார்.

முதலில், எங்கள் பகுதியின் பின்புறத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வார்.

தெருவில் விளையாடும் சிறுவர்களையெல்லாம் ( இருபாலரும்)

 பெற்றோர்களிடம் சொல்லிக் குளிக்க வைத்து த் தயார்படுத்தி  Pied Piper பின்னால் கூட்டமாக வரும்  குழந்தைகள் போல (Just for example) பத்து இருபது பேராவது பின்தொடர வந்து, 


எங்கள் பகுதிக்குள் நுழைவார். 

இங்கும் அதேபோலச் சிறுவர்களை ஆயத்தப் படுத்தித் திரட்டுவார்.

ஒரு இளம்படை காச்மூச் எனக் கத்திக்கொண்டு தொடரத் 

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் உள்நுழையவும் பள்ளி மணி அடிக்கும்.

இது தினப் பிரவேசம்.

இதுபோகப் பெற்றோர்கள் சிலர் தாமே குழந்தைகளை அழைத்துவந்து ( அதெல்லாம் சும்மா. தரதரவென இழுத்து வந்து, வரும் வழியில் முதுகில் நாலு போட்டு) பள்ளியில் விடுவதும் வாடிக்கை.

ஐந்து வகுப்புகளுக்கு மூன்று ஆசிரியர்கள்.

தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன்.

ஒன்று இரண்டு வகுப்புகளுக்கு அன்பொழுகும் அம்மா மேரி டீச்சர்.

மூன்றாவது வகுப்புக்கும் நான்காவது வகுப்புக்கும் டீச்சரின் கணவர் திரு பாலையா அவர்கள் ( கெடுபிடி, பிரம்படி)


ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடிப் பொறுப்பு.

வகுப்பு என்பதெல்லாம் அறைகளால்/ சுவர்களால் பிரிக்கப்படுவது என்று நினைக்கும் பலர் ஏமாந்து போவீர்கள்.

ஒரு பெரிய ஹால்(.!)

பெரிய வார்த்தைதான் இது. இருக்கட்டும்.

தலைமையாசிரியர் ஒரு முனையில். 

அடுத்து 1,2,4, கடைசியில் 3வது வகுப்புகள்.

 எவ்விதத் தடையோ, பிரிவுச்சுவர்களோ இல்லாத பெருஞ்சமத்துவம்.

1 வது வகுப்புக்கும் 2 வது வகுப்புக்கும் நடுவில் ஒரு சேர் மட்டும் போட்டு மேரி அம்மா டீச்சர் அமர்ந்திருப்பார்.

அடுத்த 4 ,3 வகுப்புகளிடையே டேபிள் சேர் போட்டு திரு பாலையா சார் இருப்பார்கள்.

தலைமையாசிரியருக்கு இடது பக்கத்தில் சுவரோரம் ஒரு மரபீரோ நிற்கும். ஆவண அறை அது.

எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து திரு பாலையா சார் தான் அட்டெண்டெஸ் எடுப்பார்.

பெயர்கூப்பிட்டதும் மின்னலாய் எழுந்து வலதுகைதூக்கி ஒரு சல்யூட் அடித்து " ஆஜர்" சொல்லுவோம் . முடிந்த அளவு உரத்த குரலில். தெருவெல்லாம் "ஆஜர்" கேட்கும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் "பிரசண்ட் சார்" ஆறாம் வகுப்பில் ABCD யெல்லாம் படிக்கனுமே. அதற்கு ஆயத்தமாய் இந்த 'பிரசண்ட் சார்.'

சரி, விஷயத்துக்கு வருவோம்.

(இப்பத்தான் விசயத்துக்கே வருகிறோமா என முறைக்கிறீர்களா?) வாங்க.

தெருவில் திரிபவர்களையெல்லாம் பள்ளிக்கு அள்ளிக்கொண்டு வருவதால் 'பெர்த் சர்டிபிகேட்' எல்லாம் கேட்டு யாரையும் தொல்லைப் படுத்துவதில்லை பாலகிருஷ்ணன் சார்.

ஒரு 'எண்டரன்ஸ் டெஸ்ட்' வைக்கப்படும் மேரி அம்மா டீச்சரால்.


பின்பக்கமாகக் கையைக்கொண்டு வந்து மூக்கைத் தொடவேண்டும்.

தொட்டுவிட்டால் அட்மிஷன்.

 என்ன?

 பேர் கூப்பிடுவார்கள்.

அவ்வாறு பின்பக்கமாக கைவைத்து மூக்கைத் தொடாதவர்களை வெளியேற்றுவதேயில்லே.

அவர்கள்  'உப்புக்குச் சப்பாணி'யாக முதல் வகுப்பில் உட்காரவைக்கப் படுவார்கள்‌.

 பாலையா சார் பேர் கூப்பிடமாட்டார்.' ஆஜர்' சொல்ல முடியாது.

மேரியம்மா டீச்சர் அவர்களையும் குஷிப்படுத்தத் தானே எழுந்து பெயர் சொல்லி ஆஜர் சொல்லச் சொல்லுவார்.

அட்மிஷன் எப்படி?

திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தேசபக்தர்.

கதர்தான் உடுத்துவது. கணுக்கால் தெரிய வேட்டி. கைமறைய முழுக்கைச் சட்டை. கண்டிப்பும் கனிவும் போர்த்திய ஆறடிச் சிவப்பழகர்.

சேர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிறந்தநாள் அவரே நிர்ணயித்து விடுவார்.

சுதந்திரதினம் ( ஆகஸ்ட் 15);

குடியரசு தினம் ( ஜனவரி 26);

காந்திஜி பிறந்தநாள் ( அக் 2);

பள்ளிகள் பல திறந்த காமராஜர் பிறந்தநாள் ( சூலை 15)

இந்த நான்குக்குள் ஏதாவது ஒருநாள். சேர்க்கையின்போது ஐந்தாண்டுகள் நிறைவடையுமாறு பின்னோக்கி வருடம்  கணக்கிட்டுப் பதிவாக்கிவிடுவார்.

பின் சில சமயங்களில் யாராவது பெற்றோர் வந்து தம் "பையன் பிறந்த தேதி மாதம் வருடம் மாறியுள்ளதே" எனக்கேட்டால்

"நல்லநாள்தான் பதிந்திருக்கிறேன்.நல்லா வருவான் போங்கள்" என்பார்.

அவ்வளவுதான்.

பிறந்தநாள் விசயம் முற்றுப் பெற்றுவிடும்.

அப்படித்தான் 

செப்டம்பரில் பிறந்த எனக்கு, காமராஜர் பிறந்தநாள் (சூலை 15) பதிவாகியது. அதுவே பணிமுழுதும் தொடர்ந்தது.

ஒரே ஒரு சிக்கல்.

நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதால், ஐந்தாண்டுக் கணக்கிற்காக அப்படியே ஒரு ஆண்டு பின்னோக்கி வைத்துவிட்டார் பாலகிருஷ்ணன் சார்.

இது என்ன பெரிய சிக்கல்?

பலருக்கு இதுமாதிரிதான் நடந்துள்ளது என்கிறீர்களா?

திரு பாலகிருஷ்ணன் சார் எனக்குப் பதிவிட்ட பிறந்தநாள்/ ஆண்டில்

என் பெற்றோருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லையே!

*

திங்கள், 7 செப்டம்பர், 2020

 விடுதலைநாள் நிகழ்வில் 

பொதுக்கொடியேற்றப் பள்ளி செல்லுமுன்,


பற்றுடன்

தாமே தயாரித்த

சொந்தக் கொடியேற்றி

வணக்கம் செய்யுமிவர்




இரட்டைமகிழ்வாய் எமக்குக் கிடைத்துள்ள பேரன்கள் 

பிரஜன், பிரவாகன். (ஆகஸ்ட் 15/2019)

சனி, 5 செப்டம்பர், 2020

முதல் சென்னைப் பயணம்


Anna Funeral Procession 1969 | Shocking facts, Photo, Indian history

1969 பிப்ரவரி 3.

51 ஆண்டுகள் கடந்துள்ளன.

பேரறிஞர் அண்ணாவை இறுதியாய்க் காண்பதற்கே முதலாவது சென்னைப் பயணம்.

எனது முதல் பயணம் சென்னைக்கு ஆறாச் சோகம் நிறைந்த மனதுடன்.

அந்நாள் அவ்வகையிலும் என்றும் நினைவிலிருக்கும்.

உடன் வந்த பலரும் ரயிலில் இடமில்லாமல் ரயில் கூரையில் பயணித்துக் கொள்ளிடம் பாலத்தில் சடசடவென அடிபட்டு மறைந்த சோகமும்-

அவர்களது உடல்களைச் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கிடத்தியபோது ,யார்யார் எனப் பார்க்கக்கூட இறங்க முடியாது இரயில்பெட்டியில் நெரிசலில் சிக்கிக் கிடந்த அவஸ்தையும்-

ரயில் இரக்கமின்றி தொடர்ந்து பயணித்ததும் -

இவ்வகை இணைந்த நிகழ்வுகளும் அண்ணா மறைந்த சோகத்துடன்நீங்காது நினைவில் இருந்து, மாறாது இறுதிவரை.

சோகங்களின் கனந்தாங்கி...நினைக்கிறோம்.

பின்நாட்களில் தலைவர் கலைஞரின் பி.ஆர்.ஓ.ஆன என் வகுப்புத்தோழன் மருதவிநாயகம் தலைமையில் தான்அந்தச் சோகப்பயணம்.

வீட்டில் கூடச் சொல்லாமல் மதுரையிலிருந்து மறக்கமுடியாத அந்த இரயில்பயணம். 

நான் அப்போது மதுரை மாவட்ட மாணவர் திமு.க. செயலாளர்.

அண்ணாவின் அருகில் சென்று அஞ்சலி செய்தபின் கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டு என்னைக் கைபிடித்துத் தொடர்ந்து வந்த மருது மற்றும்  நண்பர்களையும், வழியையும் தவறவிட்டேன்.

இராசாசி அரங்கில் இருந்து கூட்ட நெரிசலே என்னை வெளியே, என் முயற்சி ஏதும் இல்லாமலே தள்ளிக்கொண்டு வந்துவிட்டது.

திக்குத் தெரியவில்லை.

ஆனாலும் ஓரிடத்தில் அசையாமல் இருந்துவிடுவது என முடிவுசெய்து-பின்னாட்களில்,அரசினர்தோட்டம் அருகில் - 

தற்போதைய அண்ணா சிலைக்கருகே - வாலாஜா சாலைத் தொடக்கத்தில் இருந்த கீதா ( உடுப்பி) கபே அருகேயுள்ள சந்தில் வேறெங்கும் செல்லாமல்,

உணவேதும் எங்குமே கிடைக்காமல் ஒருகல் மீது மணிக்கணக்காக உட்கார்ந்திருந்ததும், ஒருவழியாக அன்று மதியத்திற்கு மேல் மருதவிநாயகம் என்னை எவ்வாறோ கண்டுபிடித்துச் சேர்ந்ததும், 

அந்தச் சோகநாளின் மறக்க இயலா முத்திரைகள்.பின்நாட்களில்

இராசாசி ஹால் அருகிலேயே  "தமிழரசு "ப் பணியில் மருது இருந்தபோது நானும் மாநிலக்கல்லூரிப் பணியில், எம்.எல்.ஏ விடுதியிலேயே -

1969-ல் காணாமற்போன அதே பகுதியிலேயே தங்கியதும்,அந்நாளில் ரயிலில் பயணித்து உயிர்நீத்த பலர் உடல் கிடைத்தப் பட்டிருந்த சிதம்பரம் ரயில் நிலையமே அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்வில் 

தினமும் செல்லும் இடமானதும்-வாழ்க்கைப் பயண அத்தியாயங்களாகின.

தமிழரசு அலுவலகத்திற்கு மருதுவைச் சந்திக்கப் போகும்போதெல்லாம்,

"இங்கிருந்து எங்கெல்லாம் அன்று உனைத்தேடினேன்" எனப் பலமுறை மருது சொல்லிக் காட்டுவதுண்டு.

இதனைப் பலமுறை கேட்டிருந்த  கவிஞர் திரு தமிழ்ப்பித்தன் அவர்கள் (தமிழரசு உதவி ஆசிரியர்)

அலுவலக வாயிலில் என்னைக் கண்டவுடன், " மருது, காணாமல்போன உன் நண்பர் வந்திருக்கிறார் பார்" என்றே தமிழரசு அலுவலகம் உள்ளே இருந்தால் மருதுக்குச் சேதி சொல்லுவார்.

1969, பிப்ரவரி 3 மறக்கவே இயலாது, 

அண்ணாவின் நினைவுடன்...

உடன் பயணித்து உயிர்துறந்த பலரின் நினைவும்...

அன்றிலிருந்து இன்றும் பயணத்தில் உடனிருக்கும் நட்பினரையும் ஈரமுடன் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.