தம்பி இருந்தானே அடகுபோகா நாணயத்துடன் என்ற எண்ணத்தில் இன்றைய unpawned என்ற சொல்லாடல் பிறந்தது.
*
கதை போல இருக்கும் ஒரு நிகழ்வு.
நினைவிலிருந்து தருகிறேன்.
தம்பி பதிவுத்துறை இணைத்தலைமைப் பொறுப்பில் இருந்தபோது அவனது நேர்மையான, சட்டப்படியான நடவடிக்கையால் ஒருவருக்கு ஏழுகோடி ரூபாய் இழப்பு ( stamp duty) தவிர்க்கப்பட்டது. அது அவருக்கு லாபமாகவும் ஆனது.
இதற்குமுன் அவரது கோப்பினை தாமதப்படுத்திய அலுவலர் இரண்டு கோடி பேரம் பேசினாராம்.
ஏதோ சூழலில் முன்பிருந்தவர் மாற்றப்பட்டு தம்பி கவனிக்கும் அலுவல்பொருளானது அக்கோப்பு.
கோப்புக்குரியவர் இரண்டு மூன்றுமுறை நேரில் சந்திக்க முயன்றுள்ளார்.
தம்பி சந்திக்கவில்லை.
உரிய வகையில் யாரும் திருத்தம் செய்யமுடியாத ஆதாரங்களை எடுத்துக்காட்டி கோப்பினைத்தானே டைப்செய்து முடித்து வைத்தான்.
அலுவல் முடிந்து அவன் பேருந்துக்குக் காத்திருப்பதை ( வீட்டுக்கு அலுவலக வாகனத்தில் அவன் செல்லும் வழக்கமில்லை.) அந்த பெரும்செல்வந்தர் காரில் செல்லும்போது கவனித்திருக்கிறார்.
தனது கோப்பில் சாதகமாகக் கையெழுத்திட இவருக்கு ஒரு புதுக் கார் வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணியிருப்பார் போலும்.
அன்றைக்கு அவரது கோப்பு முடித்து வைக்கப்பட்டது அவருக்குத் தெரியாது.
அடுத்தநாள் காலையில் ஒரு புதுக் கார் பல லட்சம் விலையுள்ளது - பதிவுக்குத் தயார் நிலையில் - தங்கியிருந்த வீட்டின் வாசலில் வந்து வந்து நிறுத்தப்பட்டிருந்தது.
செல்வந்தரும் அருகே.
அலுவலகம் செல்வதற்காக வெளியில் வந்த தம்பியைப் பணிந்து
" தயவு செய்து இந்தச் சின்ன gift ஐ ஏற்றுக்கொள்ளுங்கள். தங்களுக்கு முன்பிருந்தவர் இரண்டு கோடி பேரம் பேசி பைலைப் பெண்டிங் போட்டிருந்தார். அதனைக் compare செய்தால் இது மிகச் சிறிய அன்பளிப்புதான்.
நீங்களாக எதுவும் கேட்கவில்லை. நானாகத் தருவதுதான் இது.
ஆகவே தவறாக எண்ணாமல் ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று மன்றாடியுள்ளார்.
தம்பி ( என்னை மாதிரி கோபங்காட்ட மாட்டான்.) சிறுபுன்னகை மட்டுமே அவன் கோபத்திலும் வெளிப்படும்.
" ஐயா,நீங்கள் என் நாணயத்தை இந்தக் காருக்கு அடகு வைக்கச் சொல்கிறீர்கள். எனது பணிக்கு அரசு சம்பளம் தருகிறது. அது எனக்குப் போதும். எனது வேலையச் செய்யப் பணமோ பரிசோ கொடுக்க நீங்கள் எவ்வளவு பெரிய ஆளானாலும் என்னைப் பொறுத்தவரை அருகதை இல்லாதவர் என்றுதான் சொல்வேன்." என்று சொல்லிவிட்டு
" உரியவாறு உங்கள் கோப்பின் மீது எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்த தகவல் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். இதுமாதிரி என்னை இனி அணுகாதீர்கள்"
என்றானாம்.
இந்தத் தகவல் முழுதும் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் தொடர்பாளராக இருந்த எனது நண்பர் ஒருவர் மூலம் பின்னாட்களில் எனக்குத் தெரியவந்தது.
தம்பியிடம் கேட்டபோது
"உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சான்னே?"
என எப்போதும்போல ஒரு புன்னகையால் அவ்விசயத்தைத் தள்ளிவிட்டான்.
No comments:
Post a Comment