எனக்கு
ஆறுநாட்களே இளையன்.
இருப்பினும்
நான் ஏதோ ஆறாண்டுகளுக்கு மேல் மூத்தோனென்பது போன்ற அன்புடன் மரியாதை விரவ
'அண்ணே' என்றே ஆதிமுதல் இன்றவனது அந்திவரை வெகு மரியாதையாய் அன்புதோய அழைப்பவன்.
பணி ஓய்வு பெற்றுப் பத்தாண்டுகள் ஓடிவிட்டது.
ஆரம்பம் முதலே, அவன் என்னிடம் பேசிய சொற்களை எண்ணிவிடலாம்.
ஆனால் , உளம் முழுதும் அன்பு நிறைத்தோன்;
தீதென யார்க்கும் எக்காலமும் செய்யாத இனியன்;
குடும்பத்தில்,
உறவில்,
இவன் தொடர்ந்து கடமைகள் சுமந்தே மெலிந்தான்;
பயன்பெற்றவர்களது
பாராமுகத்திற்கும்
புன்னகையையே பரிசளிக்கும் எளியன்;
பதிவுத்துறையில் ஒரு புனிதன்.
பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி.பணியில் நிறைவுற்றான்.
"ஊதியந்தவிர
ஒருகாசு
ஒருநாளும் எவரிடமிருந்தும் பெறாதவன்,
பெற எண்ணாதவன், இத்துறையில் இவரைத் தவிர எவரையும் காட்டமுடியாது "
என இவனுடன் பணியாற்றியவர்களே சொல்லப் பெருமிதம் கொண்டிருப்பேன்.
"ஐயாவின் உடை மட்டுமல்ல அவரது உள்ளமும் அப்பழுக்கற்ற வெள்ளைதான்" என அவனது பணிவாகன ஓட்டுநர் கதறிக் கொண்டிருந்தார்.
பணிவாகனம் ஒருநாளும் ஐயா வீடுவராதாம்.
"அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே ஐயா வண்டியில் அமர்வார்" என்றும் அவ்வோட்டுநர் அரற்றிக்கொண்டிருந்தார்.
இன்றவனை
எரியூட்டி மீள வந்துள்ளோம்.
( பதிவுத்துறைக் கூடுதல் தலைமை அலுவலராக Addl I. G. கறையேதுமின்றிப் பணி நிறைவு செய்திருந்த தம்பி வே.முருகேசன் நேற்று இரவு மறைவு. இன்று எரியூட்டல்.
நினைவுகள்
மாளுமோ?)
March 17, 2020
No comments:
Post a Comment