ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை:

அறிவார்ந்த விவாதங்களும் அறிந்த விளக்கங்களும் -1


இராஜ முத்திருளாண்டி


[மு.கு: இந்தியச் செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை (தினமணி.காம் 26 ஆகஸ்ட் 2026) கட்டுரைக்குப் புகழ்சூழ் தமிழ் அறிஞர்கள், ஆழ்ந்தாய்ந்த தமிழாய்வாளர்கள், ஆய்வுநெறிப் பேராசிரியர்கள், அறிவார்ந்த நட்பினர், என் உளங்கொண்ட உலகறிந்த எழுத்தாளர்  எனத் தகுநிலை கொண்ட பலதரப்புகளிலிந்து செறிவான விவாதக் கருத்துகள் விளைந்து சேர்ந்துள்ளன. அவர்களது ஆழ்ந்து தேர்ந்த கருத்துக்களுக்கு நன்றிபரப்பி, மறுப்புரைகளாக அல்லாமல், கட்டுரையாளர் அறிந்துள்ள விளக்கங்களாகப் பொதுப்பந்தியில் பரிமாற முற்படுவதால், தனிப்பட வளக்கருத்துகள் வழங்கியோர் பெயர்களைக் குறிப்பிடுவது - அவர்கள்மீது கட்டுரையாளர் வளர்த்து நிறைத்துவரும் உயர்மதிப்பு  கருதித் தவிர்க்கப்பட்டுள்ளது.]

கோவை வேளாண்பல்கலைக்கழகப் பூச்சியியல் அறிஞர், தமிழ்தோய்ந்த, பெயர் வெளிப்பட விழையாத  தமது நண்பரின் கருத்தாகப் பகிர்ந்தது இது:

‘’ஆசிரியர் வைக்கின்ற சான்றுகள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மொழியிலாளர்கள் வைக்கின்றவை ஆகும். 95 விழுக்காடு திராவிட, இந்தோ-ஆரிய இலக்கிய மரபுகள் முற்றிலும் மாறுபட்டவை என அறியும் நான் அவைகளுக்கிடையேயான ஒரு சில ஒற்றுமைகளையும் கண்டிருக்கிறேன்.

சற்று கடினமான தாளகதி கொண்ட ஆசிரியப்பாவில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்ச் செய்யுட்கள் எளிய தாளகதி கொண்ட வெண்பா போன்றவற்றிற்கு மாறியதன் காரணம் வட மொழியின் தாக்கமே. ⁠பதினெண் கீழ்க்கணக்கில் வருகின்ற பெருவாரியான நீதி நூல்கள் வெண்பாவில் இயற்றப்பட்டன. வெண்பா முழுக்க முழுக்க அனுஸ்துப் என்ற வட மொழி சந்தத்தை அடிப்படையாக கொண்டது. ⁠

பிற்கால இலக்கியங்களான கம்ப ராமாயணம் போன்றவற்றின் விருத்தப்பாவும் வடமொழி சந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை. ⁠

ஐவகை நிலங்களின் கடவுளர்களில் வருணன், இந்திரன் மேலும் ஐயமுண்டு. தொல்காப்பியம் மருதநில கடவுளை ‘வேந்தன்’ என்று குறிப்பிட்டாலும் அது ஆரியம் கூறும் இந்திரன் தானா என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை உண்டு. ⁠

தேவநேயப்பாவாணர், அரசேந்திரன், அருளியார் போன்றோர் இந்தோ ஐரோப்பிய சொற்களின் மூலங்கள் திராவிடத்தில் இருப்பதை சான்றுகளோடு விளக்கி உள்ளனர். .....விரிவாகப் பேச வேண்டிய பொருள் இது.’’ 

இக்கருத்து வழங்கலுக்கு  விளக்கமாக  இது.

திருக்குறள் போன்ற குறள் வெண்பாக்கள் இரண்டு அடிகளைக் கொண்டு, மொத்தம் 7 சீர்களுடன் (சொற்கள்) சுருக்கமாக அமைந்திருக்கும். வடமொழி அனுஸ்தூப் சுலோகங்களும் - பெரும்பாலும் மந்திரங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவைகருதி - இரண்டு வரிகளாக எழுதப்பட்டு வெகுசுருக்கமாகக் கூறுவனவாக இருக்கும். இந்த புறவடிவத்தை (சுருக்கத்தை) கண்டு, வெண்பா, அனுஸ்தூப் வழியே வந்தது என்ற தவறான மயக்கம் சிலர் கொள்வதுண்டு. வெண்பாவுக்கும் அனுஷ்டுப்பிற்கும் முடிச்சுப் போடுவது என்பது வண்ணத்தை மட்டும் கருதி ஆப்பிளையும் பிளம்ஸையும் ஒன்றாகக் கூறுசேர்ப்பதற்கு ஒப்பாகும்.

தெளிவுபட அறிய உரியது யாதெனில், ‘வெண்பா’ வடமொழியின் 'அனுஸ்தூப்' (Anustubh) யாப்பு வடிவத்திலிருந்து தோன்றியது அல்ல. தமிழ் வெண்பாவும் வடமொழி அனுஸ்தூப்பும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் தனித்துவமான யாப்பு (Prosody) இலக்கண விதிகளின்படி உருவானவை. இரண்டின் (வெண்பா- அனுஸ்தூப்) உள் கட்டமைப்பு, ஒலி விதிகள் முதலியனவும் முற்றிலும் வேறானவை. 

"வெண்பா முழுக்க முழுக்க அனுஸ்துப் என்ற வடமொழி சந்தத்தை அடிப்படையாகக் கொண்டது" என்ற வாதம் தொல்காப்பியம் வழியாக எடுப்பிலேயே மறுக்கப்பட உரிய கருத்தாகும். தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் வெண்பாவுக் கான இலக்கணங்கள் மிகத்தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன. வெண்பா என்பது தமிழின் அடிப்படைப் பாவகைகளுள் (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா) ஒன்றாகும். 

வெண்பாவின் சீர், தளை, அடி போன்ற கட்டமைப்பு விதிகள் முழுக்க முழுக்கத் தமிழ் மொழிக்குரிய மாத்திரை மற்றும் ஒலி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ["வெண்பா வுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் இன்பா நேரடிக்கு ஒருங்குநிலை இலவே" (தொல். செய்யுளியல் - 22)] தமிழ் வெண்பா, செப்பலோசை பெற்று ["செப்பல் என்பது வெண்பா வாகும்" (தொல். செய்யுளியல் - 82)] ;  இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை ["வெண்பா வடிவம் ஏனை யடியே இரண்டிறந் தொழுகும் எனைத் துவு மென்ப" (தொல். செய்யுளியல் - 57)] இறுக்கக் கட்டுப்பாடுகளுடன் பாடப்படும் பா வகை ஆகும். 

தமிழில் வெண்பா நேர், நிரை என்ற அசை அலகுகளையும், அவற்றின் சேர்க்கையான தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், காய்ச்சீர் போன்ற சீர்களையும் அடிப்படையாகக் கொண்டது. அனுஸ்தூப் என்பது லகு (குறில் - Laghu), குரு (நெடில் - Guru) என்ற எழுத்து மாத்திரை அலகுகளையும், எட்டு எழுத்துகள் கொண்ட 'கணங்களையும்' அடிப்படையாகக் கொண்டது. வெண்பாவிற்கு தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) மிக முக்கியமானது. முந்தைய சீரின் ஈற்றசையும் அடுத்த சீரின் முதலசையும் எப்படி ஒன்ற வேண்டும் என்ற கடுங் கட்டுப்பாடு இதற்கு உண்டு. அனுஸ்தூப் என்பது ஒரு சுலோகத்தில் நான்கு பாதங்களை (வரிகளை)க் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாதத்திலும் சரியாக எட்டு எழுத்துகள் (Syllables) இருக்க வேண்டும் (மொத்தம் 32 எழுத்துகள்). இதில் தமிழில் உள்ள தளை போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது. 

மேலும்,பாடலுட்பொதியும் அவசிய நயங்கள், எதுகை, மோனை போன்றவை வடமொழியில் இல்லை. தமிழ் ‘செப்பலோசை’ (இருவர் உரையாடுவது போன்ற சீரான ஓசை), இசை மற்றும் உச்சரிப்பு அழுத்தங்களை (சந்தம்) அடிப்படையாகக் கொண்டது. 

"புலவர்க்கு வெண்பா புலி" என்ற பழமொழிக்கு ஏற்ப, ‘தளை’ தட்டாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பாடப்படும் வடிவமைப்பு - வெண்பா- தமிழர்களின் மொழி ஆளுமைக்குச் சான்று. வெண்பா ஒரு தமிழ் ‘சுதேசி’க் கவிதை வடிவமேயன்றி வடமொழியின் இறக்குமதி அல்ல. எனவே, தமிழ் வெண்பா என்பது எவ்வித வடமொழித் தாக்கமும் இன்றி- தமிழின் சொந்த ஒலி நய அமைப்பில் உருவான - தனித்துவமான,மரபுசார்  இலக்கிய வடிவமென அறிந்துகொள்ளலாம்.

கலிபோர்னியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் "தமிழின் யாப்பு முறையானது இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.அது திராவிட மொழிகளுக்கே உரித்தான தனித்துவமான தாளக்கட்டமைப்பைக் கொண்டது" என ஆணித்தரமாக நிறுவியுள்ளதையும்.[George L. Hart, The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts, Berkeley, California, 1975, pp. 214-216.]  இவ்விடத்தே மனங்கொள்ள வேண்டும்

ஆசிரியப்பாவில் இருந்து நீதிநூல்கள் (பதினெண் கீழ்க்கணக்கு) வெண்பாவிற்கு மாறியதற்கு வடமொழி காரணம் அல்ல. தமிழ், ‘’வழக்கொழிந்து சிதையாத சீரிளமைத்திறன்’’ கொண்டது.; காலந்தோறும் தன் கரைகளைச் சீர்படுத்திக்கொண்டே தொடர்ந்து பாயும் தீராநதியணையது. அகத்தையும் புறத்தையும் அழகுறப்பகுத்துப் பாடிய சங்கப் பாடல்கள்,  உணர்வுகளை வெளிப்படுத்தும் நெகிழ்வான பா மரபைச் சேர்ந்தவை. எனவே, வாகான, கட்டற்ற, ஓசை நயம் கொண்ட ஆசிரியப்பா (அகவலோசை) அங்கு  கைக்கொள்ளப்பட்டது.

சங்கம் மருவிய காலத்தில் (களப்பிரர் காலம்) சமூகத்தில் நீதியறிவுரைகளைச் சொல்ல வேண்டிய அவசியமானது. அறக் கருத்துகளை மக்கள் எளிதாக மனத்திலிறுத்த வேண்டும். அதற்கு மந்திரம் போலக் கச்சிதச் சுருக்க, ஓசையமைப்பு மாறா ஒரு வடிவம் தேவைப்பட்டது. அதற்கு, வெண்பா (செப்பலோசை) மிகச் சரியாகப் பொருந்தி வந்ததால் சமண, பௌத்த முனிவர்கள் அதனைத் தேர்ந்துகொண்டனர். இது சமூக-இலக்கியப் பரிணாம வளர்ச்சிப் படிநிலையே தவிர, வேற்று மொழித் தாக்க விளைவல்ல.

கம்பராமாயண விருத்தப்பாக்களின் வேர் வடக்கிலிருந்தா?

'விருத்தம்' (Vritta) என்ற சொல்லே வடமொழிச் சொல்தான். பக்தி இலக்கியக் காலத்திலும், காப்பியக் காலத்திலும் (சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்) வடமொழிச் சந்தங்களின் பரவல் தமிழை நனைத்தது. ஆனால், தமிழ் அதைக் கண்மூடித்தனமாக அப்படியே உறிஞ்சியுட்கொள்ளவில்லை. வடமொழிச் சந்தங்கள் வந்தாலும் அதனைத் தமிழ் யாப்பிலக்கணத்தின் அசை, சீர், தளை, எதுகை, மோனை விதிகளுடுத்தி  - 'தமிழ்ப்படுத்தியே' - கம்பர் போன்றோர் கவிநெய்தனர். (எ.கா: அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்). அதனால்தான் கம்பனின் சந்தங்கள், சமஸ்கிருத ஸ்லோகங்களைப் போல காதில்மட்டும் ஒலிக்காமல், தனித்துவமான தமிழோசையுடன் இனிக்கின்றன இதயம்வரை.

திணைக் கோட்பாடும் தெய்வங்களும்

ஐவகை நிலங்களுக்குமான வாழ்வியல், உணர்வுகள் மற்றும் தெய்வங்களை வகுத்தளித்த 'திணைக் கோட்பாடு' உலக இலக்கியங்கள் எதிலும் இல்லாத திராவிடச் சிந்தனையாகும். தொல்காப்பியம் நிலத் தெய்வங்களைப் பின்வருமாறு கூறுகிறது:

"மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்..."

          -(தொல். அகத்திணையியல் 5)

மருத நிலக் கடவுளான 'வேந்தன்', வேத கால 'இந்திரன்' தானா என்ற கேள்விக்கு நுட்பமான வரலாற்றுப் பார்வை தேவை. வேதகால இந்திரன் போருக்கும், மழைக்கும், இடிக்குமான கடவுள்; இந்திரன்  சோம பானம் அருந்தி ஆரியர்களைப் போரில் வழிநடத்துபவராக ரிக் வேதம் சித்திரிக்கிறது. ஆனால், தமிழின் 'வேந்தன்' என்பவன், வேளாண்மை செழித்த மருத நிலத்தின் தலைவன் (King/Chief). மருத நிலத்தில் ஆற்று நீரைச் சேமித்து வேளாண்மை செய்ய, நீதிவழங்க ஒரு வலுவான தலைமை தேவைப்பட்டது. அந்த நிலத் தலைவனையே அவர்கள் வேந்தனாக வழிபட்டனர். அதனால்தான் ‘வேந்தன்’, ‘இறை’யானான். (குறள் 388)   பிற்காலத்தில் நிகழ்ந்த பண்பாட்டுக் கலப்பில் (Syncretism), வேந்தனும் மழைக்கடவுளான இந்திரனும் ஒன்றாகக் கருதப்பட்டனர்.

அதேபோல, நெய்தல் நிலக் கடவுளான 'வருணன்', சங்கத் தமிழில் அலைகடலின் தெய்வம். வேதங்களில் வருணன் ஆகாயத்திற்கும், பிரபஞ்ச ஒழுங்கிற்குமான தார்மீகக் கடவுள். ஆனால். தேவநேயப் பாவாணர் போன்ற மொழியறிஞர்கள், 'வார்' (நீர்) என்ற திராவிட வேர்ச்சொல்லில் இருந்தே வாருணன் -> வருணன் என்ற சொல் உருவானதாகக் குறிப்பிடுவதைக் கவனங்கொள்ள வேண்டும். பெயர்கள் பிற்காலத்தில் ஒன்றாகியிருக்கலாம்; ஆனால் "குறிப்பிட்ட நிலத்திற்கும், அங்கு வாழும் மக்களின் தொழிலுக்கும் ஏற்ற தெய்வம்" என்ற கோட்பாடு தூய தமிழ்ச் சிந்தனையாகும்.

வேர்ச்சொல் ஆய்வுகளும் திராவிடத்தின் கொடையும்

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு 'நன்கு செப்பனிடப்பட்டது' என்று பொருள் கூறப்படுகிறது. அது பல்வேறு பிராந்திய மொழிகளிலிருந்து சொற்களைப் பெற்றுத் தன்னை வளப்படுத்திக் கொண்டது. தேவநேயப் பாவாணர் தன்னுடைய 'வடமொழி வரலாறு' மற்றும் 'ஒப்பியன் மொழிநூல்' ஆகிய நூல்களில், இந்தோ-ஆரிய மொழிகளுக்குள் சென்ற திராவிட வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். "வடமொழியிலுள்ள திராவிடச் சொற்களையெல்லாம் நீக்கிவிட்டால், அம் மொழிக்கு உடலுமிருக்காது; உயிருமிருக்காது" என்று பாவாணர் உரத்துக் கூறியிருப்பது செவிநிறைக்கும்.

டாக்டர் கால்டுவெல், தமிழை திராவிட மொழிக் குடும்பத்தின் மிகமூத்த உறுப்பினராகக் கருதியதோடு,” குடும்பத்தின் பிரதிநிதித்துவ மொழியாக, சந்தேகத்திற்கு இடமின்றி பண்டைய வடிவங்களின் வேர்கள்கொண்ட வளமிகு பரம்பரை "என்கிறார். வெண்பா உள்ளிட்ட பாவகை வடிவங்களும் அப்பரம்பரை வளப்பட்டியலில் இருந்திருக்கும் எனும் எதிர்பார்ப்பு இயற்கையானதன்றோ?

விவாதக் கருத்தளித்துள்ள ஆய்வாளர் குறிப்பிடும் மொழியாய்வு அறிஞர்கள்  கு. அரசேந்திரன்  (‘தமிழும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும்’), அருளியார் (‘அருளியம்’) ஆகியோர் ஒப்பியல் மொழியியல் நோக்கில் இக்கருத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். 

இவர்களது ஆய்வுகள் தனித்த கற்பனைகள் அல்ல; கமில் சுவலபில் (Kamil Zvelebil), தாமஸ் பர்ரோ (Thomas Burrow), எம்.பி. எமினோ (M.B. Emeneau) ஆகியோர் தொகுத்த 'திராவிட வேர்ச்சொல்அகராதி' (Dravidian Etymological Dictionary) , தாமஸ் ஆர். டிரவுட்மென்  (திராவிடச் சான்று: எல்லீஸும் திராவிடமொழிகளும்,’ தமிழில் இராம.சுந்தரம்) போன்ற அறிஞர்களின் நூற்கருத்துகளும் வலுகூட்டிநிற்கின்றன. ‘ மொழிகளின் ஒற்றுமை தானே வெளிப்படும் உண்மையல்ல; அது அசைக்கவியலாச் சான்றுகளோடு விளக்கப்படவேண்டிய உண்மை’ என்பதை வலியுறுத்தும் பெரும் சான்றுகளாகவும் விளங்குகின்றன.

திராவிடமொழிக்குடும்பத்தலைமொழியான தமிழுக்குச் “சொற்கள் அளவிலான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் உண்டு” (எல்லிஸ்,1777-1819),  மூலவேர்கள் திராவிட மண்ணிலேயே உள்ளன என்ற கருத்துநிலை வலுப்பெற்றுள்ளது அறிஞர்களது ஆய்வுகளால்.

வலிந்து திணிக்கப்படும் பிற 'ஒற்றுமை'களும் விளக்கங்களும்

மேற்கண்டவை தவிர, தமிழ் இலக்கண இலக்கியங்களை வடமொழியோடும் ஆரிய மரபோடும் இணைக்க இன்னும் பல புனைவுகள் வலிந்து திணிக்கப்படுவதுண்டு.

அகத்தியர் புனைவு:

தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ஆரிய முனிவரான அகத்தியர் என்பது சொல்லப்பட்டு வரும் தொன்மம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார்,

"வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து...

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி"

என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, எந்த இடத்திலும் தொல்காப்பியம் அகத்தியத்திடமிருந்து வந்ததென்று குறிப்பிடக்காணோம். தொல்காப்பியரே தமக்குமுன் தமிழ்ப்பரப்பில் தம்முன்னோர் மொழிந்துள்ளவற்றை அறிந்துள்ளவராக  ‘என்ப’, ‘என்மனார் புலவர்’, எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளாரே. இவ்வளவு குறிப்புகள் வழங்கிய தொல்காப்பியர் அகத்தியம் பற்றி ஏதும் சொல்ல வில்லையே. தென்னகத்தின் வளமையான இலக்கண மரபை, வடக்கின் அதிகாரத்தோடு இணைக்கப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அடிப்படையிலாப் புராணப் புனைவே ‘அகத்தியர் தொன்மம்’.

அறம், பொருள், இன்பம் - தர்ம, அர்த்த, காம:

திருக்குறள் முதலான தமிழ் நூல்களின் முப்பால் பகுப்பு, சமஸ்கிருதத்தின் 'புருஷார்த்தம்' (தர்ம, அர்த்த, காம, மோட்ச) என்பதன் மொழிபெயர்ப்பே என்றொரு முடவாதமும் உண்டு. இதுவும்  நேர்நிற்கவியலாதது. தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் மனித வாழ்வை நுட்பமாக அகம் (உள்ளத்து உணர்வுகள், காதல்), புறம் (வீரம், கொடை, சமூக வாழ்வு) என இரண்டாகப் பகுத்தன. இது வேறு எந்த மொழியிலும் இல்லாத தமிழருக்கே உரிய பகுப்பு என்பது வெள் ளிடை மலையன்றோ?.

வடமொழி மரபில் 'மோட்சம்' என்பது மனித வாழ்வின் இறுதி இலக்காகக் கொண்டாடப்படும் நிலையில், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிலையற்ற மறுமையைப் பற்றிப் பெரிதுபடுத்தாமல், வாழும் இம்மை வாழ்வின் ஒழுங்கைச் சிறப்பை ஏத்தின. அதனால்தான் தொடக்க காலங்களில், தமிழில் 'வீடுபேறு' என்ற நான்காம் பகுப்பு இல்லை. முப்பால் சிந்தனை தமிழின் அக-புற மரபிலிருந்து முகிழ்த்ததே அன்றி வடமொழி இறக்குமதி அல்ல.

காவிய மரபுகள்:

வடமொழியின் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் கடவுள் அவதாரங்களையும், மாயாஜால நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டவை. ஆனால் தமிழின் புறநானூற்று மரபும், சிலப்பதிகாரம் போன்ற தொடக்ககாலக் காப்பியங்களும் சாதாரண மனிதர்களின் வீரத்தையும், அறத்தையும், மானுட மேன்மைகளை,பிழைகளைப் பேசுபவை. தமிழ் இலக்கியம் மண்ணோடும் மனிதப் பண்போடும் கொண்டிருந்த நெருக்கத்தைப் பகிர்ந்தன.

ஒரே புவிப்பரப்பில் நெடுங்காலத் தொடர்பினால் மொழியியல்  பண்பாட்டுத் தளங்களில், இரண்டு மரபுகளுக்கிடையே ‘கொள்வினை கொடுப்பினை’ நிகழ்வது - மேட்டிலிருந்து பள்ளம் பாய்நீர்போல-   இயற்கையே. ஆனால், "சில மேலோட்ட வெளிப்பாடுகள் காணப்படுவதாலேயே ஒற்றுமைகள்" எனக்கொண்டாட இயலாது. ஒன்று மற்றொன்றின் நகலென்றோ, இரண்டும் ஒரே ஊற்றிலிருந்து கிளம்பியவை என்றோ நிற்பது மொழியியல் அறிவியலுக்கு முரணானது. தொல்காப்பியத்தின் யாப்பு விதிகளும், திணைக் கோட்பாடும், அக-புற வாழ்வியலும், பல்லாயிரக்கணக்கான திராவிட வேர்ச்சொற்களும் தமிழ்-இந்தோ ஆரிய மரபுகளுக்கிடையேயான அடிநாதம் முற்றிலும் வேறானது என்பதைச் சந்தேகமற மெய்ப்பிக்கின்றன.

இவ்விளக்கத்தின் நிறைவாக, “தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் பகிரப்பட்ட மரபுகள், மீட்டர்கள் மற்றும் நுட்பங்களை ஒரு பொதுவான மூலத்திலிருந்து பெறுகின்றன என்பதையே சான்றுகள் வலுவாகத் தெரிவிக்கின்றன.... இரண்டும் மற்றொன்றிடமிருந்து நேரடியாகக் கடன் வாங்கவில்லை என்பது தெளிவாகிறது. தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கவில்லை. ஏனெனில் பல மரபுகள் முதலில் தமிழில் தோன்றியுள்ளன. ‘மீட்டர்’ சமஸ்கிருதத்திற்குச் சொந்தமானது அல்ல; ஆனால் தமிழுக்குச் சொந்தமானது. ... சமஸ்கிருதம் தமிழிலிருந்து கடன் வாங்கவில்லை, ஏனெனில் சமஸ்கிருத எழுத்தாளர்கள் தமிழ் பாரம்பரியத்தை அறிந்திருக்க வில்லை என்பதாலும், மீண்டும், இரண்டு இலக்கியங்களுக் கிடையேயான ஒற்றுமை நேரடி கடன் வாங்குவதைக் குறிக்கும் அளவுக்கு நெருக்கமாக இல்லை.” (George Luzerne Hart, The Relation between Tamil and classical Sanskrit Literature.) என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

எக்களத்திலும் ஆராய்சிகள் முற்றுப்பெற்று நிற்பன அல்ல; முடிவற்ற தேடல்களாகத் தொடர்வனவே. மூழ்கி, முத்துக்கள் ‘கண்டவர்’ ‘விண்டது’ காண்கிறோம். இனிக் காண்பவர் விண்டதும் கேட்போம்.  ஆய்வொளி வெளிச்சம் அகலாது விளைக்கட்டும் அறிவைத், தெளிவை அகிலமெலாம்.


 **

புதன், 31 டிசம்பர், 2025

வந்தே மாதரம் 150?

 சிறப்புக் கட்டுரைகள் 

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Nov/07/150-years-of-vande-mataram-truths-behind-our-national-song


வந்தே மாதரம் 150? 


இராஜ முத்திருளாண்டி,      07 நவம்பர் 2025



'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று (நவ. 7) தொடங்கியுள்ளன.

'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற மாதம் (அக்டோபர் 1-இல்) ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுபற்றி, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான (Plan of Action, 18 Pages)  பரிந்துரைகளை வழங்கியது. இதில் குறிப்பிட உரிய குதர்க்கமான இரண்டு அம்சங்களைச் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

2025 நவம்பர் 7 முதல் தொடங்கும் வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால நிகழ்ச்சித் திட்டத்தின் 4 கட்டங்கள் இதோ:

முதற் கட்டம்: 7-14 நவம்பர் 2025; இரண்டாவது கட்டம்: 26 ஜனவரி, 2026 (குடியரசு தினத்தைச் சுற்றி); மூன்றாவது கட்டம்: 7-15 ஆகஸ்ட், 2026 (இல்லந்தோறும், மூவண்ணக் கொடியுடன்); நான்காவது, நிறைவுக்கட்டம்: நவம்பர் 1 முதல் 7 வரை, 2026. முதற்கட்டமான (நவம்பர் 7 முதல் 14 வரையான நிகழ்ச்சித் திட்டத்தின்படி) இன்று (நவம்பர் 7-இல்), தில்லி இந்திரா காந்தி  திடலில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை தாங்க, நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.

‘’பிரதமர் நிகழ்ச்சியின் நேரடி இணைப்பு உள்ளூர் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது (தொலைக்காட்சி இணைப்பு எம்.ஓ.சி. சமூக கையாளுதலில் பகிரப்படும்);  குடிமக்கள், குடியிருப்புச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்கேற்புடன் 'வந்தே மாதரம்' பாடல் பொது இடங்களில் பரப்பப்படும் என்றும் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பு பாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாடும்போது பாடலின் ஆடியோ இசைக்கப்படும்; பாடல் வரிகள் திரையில் தோன்றும்; பங்கேற்பாளர்களுக்குப் பாடல்களின் அச்சுப் பிரதிகள் வழங்கப்படும்; மக்கள் நின்று பாடவேண்டும்’’ என்ற விவரங்களும் வழங்கி, வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை அணுகத் தொடர்பும் (Link) வழங்கப்பட்டுள்ளது.

அதன்படியே, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில் பொது இடங்களில் நிகழ்ச்சியுடன் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பாடப்பட்டு வருகிறது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி (ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8,1894) எழுதிய வந்தே மாதரம் பாடல், நம் நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று மிகுந்திருந்த விடுதலைப் போராளிகள் அனைவரின் தீரமுழக்க கீதமாக விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. “உண்மையில், வங்காளத்தைப் பற்றி எழுதப்பட்ட வந்தே மாதரம், பழைய, புதிய தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரிடையே அகில இந்திய செல்வாக்குப் பெற்றது. மாகாண மொழியில் எழுதப்பட்ட ஒரு பாடல், ஒரு தேசிய முழக்கமாக மாறியதற்கும் பெரும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை உறுதிப்படுத்தும் சக்தியாக செயல்படுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் - வந்தே மாதரம் - இங்கே உள்ளது” (எஸ்.கே. போஸ் 1974). 

ஆனால், நவம்பர் 7 எவ்வகையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வந்தே மாதரம் உருவான நாள் எனக் கணக்கிட்டு, வந்தே மாதரம்-150 கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டன என்று தரவுகளின் மூலம் அறிய இயலவில்லை. ‘வந்தே மாதரம் 150’ என ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செயல்திட்டக் குறிப்பில் ‘வந்தே மாதரம் பின்புலம்’ (Vande Mataram: Background) என இடம்பெற்றுள்ள குறிப்புரையில், இப்பாடல், தொடர் வடிவில் வெளியிடப்பட்ட பங்கிம் சந்திரரின் நாவல் ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெற்றதாகவும் ‘வந்தே மாதரம்’ 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அக்ஷய் நவமி அன்று எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது” என்றும் (சந்தேகமாகவே) குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், “குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலை முதன்முதலாக 1896 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் பாடினார். அந்த நிகழ்வின் பின்வந்த காலங்களில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை (மட்டும்) பாடுவது காங்கிரஸ் கூட்டங்களில் வழக்கமாகிவிட்டது” என்றும் தெரியப்படுத்தியுள்ளது. 


மேற்கண்ட பின்புலக்குறிப்பில் கவனிக்க உரிய இரண்டு செய்திகள்: 

  1. வந்தே மாதரம் பாடல் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது என்ற செய்தி. ஆக, வந்தே மாதரம் பாடல் எப்போது எழுதப்பட்டது என ஆதாரப்பூர்வமான, உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தரவுகள் இல்லை. 

பிறகெப்படி நவம்பர் 7, 2025, வந்தே மாதரம் 150 ஆவது ஆண்டுத் தொடக்கமாகும்? இந்த கேள்வி எழுவது நியாயமாகிறதல்லவா?

நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய கீதம் / தேசியப் பாடல் என்ற பொருள் குறித்து முதன்முதலாக, ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நவம்பர் 1951-இல் (முதற் பதிப்பு) வெளியிட்ட, நமது தேசியப் பாடல்கள் (Our National Songs) எனும் வெளியீட்டில் (அத் 1), “இரண்டு பாடல்களுள் வந்தே மாதரம் பழையது. 1882 ஆம் ஆண்டு வெளிவந்த பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்' என்ற நாவலில் இது காணப்படுகிறது. எவ்வாறாயினும், அதன் தோற்றம் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளுக்கு முற்பட்டது. 1896 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் நமது தேசியப் பாடல்கள் பாடப்பட்டன’’ என்ற மேலோட்டமான விவரம் மட்டுமே வந்தே மாதரத்தின் தோற்றம் குறித்து அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, 1974-இல் எஸ்.கே. போஸ் எழுதி வெளியிட்ட ‘பங்கிம் சந்திர சாட்டர்ஜி’ வாழ்க்கை வரலாற்று நூலில், “அவர் இறந்து சரியாக பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளப் பிரிவினையை எதிர்த்த வலிமையான இயக்கம் வந்தே மாதரம் பாடலுக்குப் புதுச் செலாவணி அளித்தது. ஆனந்த மடம் நாவலாசிரியர் படிப்படியாக மக்களின் இதயத்தில், ‘இந்தியாவின் தேசியவாத தீர்க்கதரிசி’யின் நிலையைப் பெற ஆரம்பித்தார். ஒரு தீவிர தேசபக்தி உணர்வு வெடிப்பின் பின்னணியில்தான் சாட்டர்ஜி வந்தே மாதரத்தை எழுதினார். பாடல் எப்போது இயற்றப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் இது 1875 இன் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது’’ என ஜி.சி. ராய் எழுதிய வந்தே மாதரம் (வெளியீடு: ஜுகாந்தர், ஆகஸ்ட் 15, 1959) என்ற நூலொன்றைத் தனது கூற்றுக்குச் சான்று காட்டி, போஸ் தன் நூலில் குறிப்பு வைத்துள்ளார். தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன் குறிப்பிட்டுள்ள இரு வெளியீடுகளும் நவம்பர் 7, 1875 குறித்து எதுவும் தெளிவாகக் கூறவில்லை.

அடுத்ததாக, வந்தே மாதரம் (தகவல்) [Vande Mataram (Sanskrit Document Information, sanskritdocuments.org] என்ற செப்டம்பர் 11, 2017 பதிப்பில், சிவராமு(1937- ) எழுதிய "ஒரு பாடலின் கதை: பரவசம் மற்றும் வேதனை" என்ற ஆங்கில நூலிலிருந்து [1972, வெளியீட்டாளர்: சாகித்ய சிந்து; விநியோகஸ்தர்கள்: ராஷ்ட்ரோத்தான சாகித்ய, மொழி: ஆங்கிலம், பக்கங்கள்: 166] சில பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், பாடல் எப்படி இயற்றப்பட்டது? என்ற பகுதியில் 'வந்தே மாதரம்‘ ஆனந்த மடத்தில் மலர்ந்தது உண்மைதான்; ஆனால் அது ஆனந்த மடம் எழுதப்படுவதற்கு முன்பே இயற்றப்பட்டது. நாட்டின் விடுதலைக்கான இயக்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த உத்வேக நெம்புகோலாகச் செயல்பட்ட அற்புதமான பார்வையை பங்கிம் எவ்வாறு கண்டார்? அந்த பார்வையை அவர் எவ்வாறு அழியாததாக ஆக்கினார் என்பது பாடலில் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 1875 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பங்கிம் விடுமுறை எடுத்தபோது ஒரு நல்ல தருணம் வந்தது. அவர் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்குச் செல்லும் ரயிலில் ஏறினார். அப்போது பிறந்தது அப்பாடல்’’ என்ற விவரம் அறியக் கிடைக்கிறது. நவம்பர் 7 குறித்த செய்தியில்லையே!  

பாடலின் பிறப்பு குறித்த முன் குறிப்பிட்ட நூலின் அதே கருத்து, ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி முன்னுரையுடன், 1977 இல் வெளியிடப்பட்ட சாது பேராசிரியர் வி. ரங்கராஜன் எழுதிய  ‘வந்தே மாதரம்’ எனும் ஆங்கில நூலில், (வெளியீடு: சகோதரி நிவேதிதா அகாதெமி, சென்னை) கீழ்க்கண்டவாறு எதிரொலிக்கிறது. ‘’ஆனந்த மடம் பிறப்பதற்கு முன்பே வந்தே மாதரம் இயற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஒரு விடுமுறையில், கொல்கத்தா நகரில் உத்தியோகபூர்வ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பங்கிம் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்கு ரயிலில் ஏறி வந்தபோது இது நடந்தது’’ என்ற தகவல்தான் ‘பாடலின் பிறப்பு’ (Birth of the Song) என்ற குறுந்தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.


பின்னர், வந்தே மாதரம் குறித்து விரிவாக (210 பக்கங்கள்) படைத்துள்ள அமரேந்திர லக்ஷ்மண் காட்கில், வந்தே மாதரம் (பாடல் வற்றாத பாடல்) என்ற பெயரில் எழுதி, வந்தே மாதரம் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக ஏப்ரல், 1978-இல் வந்த நூலில்  ‘’வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட சரியான தேதி சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. 1880 மற்றும் 1882-க்கு இடையில் பங்கிம் சந்திரரின் பிரபலமான நாவலான ‘ஆனந்த மடம்’, வங்க தர்ஷன் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. கடைசிப் பகுதி ஜூன் 1882 இல் முடிவுற்றதும் இந்த நாவல் 1883 ஆம் ஆண்டில் முதல் முறையாக புத்தக வடிவில் வாசகர்களைச் சென்றடைந்தது. இந்த பாடல் 1874 ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது என்று ஆராய்ச்சி நிறுவியுள்ளது. இவ்வாறு, பாடலின் பிறப்புக்கும் நாவலில் சேர்ப்பதற்கும் இடையே ஆறு வருட இடைவெளி உள்ளது’’ என்ற செய்திகளும் நமக்குக் கிடைக்கிறது. 

பிறகெப்படி நவம்பர் 7, 1875 கதை தோன்றியது? தக்க ஆதாரங்கள் ஏதும் தேடல்களுக்கு எட்டிய தொலைவில் காணோம். இறுதியாக, புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சவ்யசாச்சி பட்டாச்சார்யா, வந்தே மாதரம் பாடலின் வரலாறு குறித்து எழுதிய சிறப்பு நூலிலும் ‘’1870-களின் முற்பகுதியில் எழுதப்பட்ட அசல் பதிப்பு, சில ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது. 1881 ஆம் ஆண்டில், இது ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்டது” என்ற தரவே கிடைக்கிறது (பார்க்க: வந்தே மாதரம் ஒரு பாடலின் வாழ்க்கை வரலாறு , சவ்யசாச்சி பட்டாச்சார்யா, பெங்குயின் புக்ஸ், 2003).

வந்தே மாதரம் நவம்பர் 7, 1875 தொடர்பை யாரும் ‘கண்டா வரச் சொல்லுங்க’.

2.  ஒன்றிய அரசு பண்பாட்டுத் துறை, நவம்பர் 2025-இல் வெளியிட்டுள்ள ‘வந்தே மாதரம் 150’ செயல் திட்ட அறிவிப்பில், இந்திய அரசமைப்புச் சபை (Constituent Assembly of India) ஜனவரி 1950-இல் எடுத்து அறிவித்து, இன்று வரை நடைமுறையிலுள்ளதொரு தீர்மானத்தை ஓசையில்லாமல், மீறும் வகையில், ஒரு குதர்க்கத்தை நிகழ்த்த முற்பட்டுள்ளதை யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை என்பது மிகுந்த ஆச்சரியமே.

பங்கிம் சந்திர சாட்டர்ஜின் வந்தே மாதரம் மூலப் பாடல் ஆறு பத்திகள் / சரணங்கள் (Stanzas) கொண்டது. இந்திய விடுதலைப் போரின் உக்கிரம் உயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பில் நாட்டு மக்கள் அனைவரது ஒற்றுமையும் ஒத்துழைப்பும் எவ்வகையிலும் இடையூறுக்குள்ளாகிவிடக் கூடாது என்ற கவனமும் கவலையும் அண்ணல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் வந்தே மாதரம் பாடல் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு உடன்படா நிலையில் இருப்பதால் 1930-களில் அந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு வலுத்து பாடலின் ஆசிரியர் கடுமையான கண்டனத்திற்குள்ளானார். அவரது ‘ஆனந்த மடம்’ மற்றும் ‘ராஜ்சான்ஹா’ நாவல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆட்சேபனைகளுக்கு அரசியலமைப்புச் சபைத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதிலளித்தார் "பாடல் உருவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை" என்றும், "துர்கா எந்த சிலையையும் குறிக்கவில்லை, ஆனால், தாய் நாட்டிற்கு மற்றொரு பெயர்" என்றும் கூறினார். இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதானது.

இவற்றால் வந்தே மாதரம் குறித்த சூடான சர்ச்சை நீடித்து வந்தது. வெளிப்படையாகச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன்,  அக்டோபர் 1937-இல், காங்கிரஸ் செயற்குழு இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாகக் கையிலெடுத்து, வந்தே மாதரம் பாடலின் இரண்டு சரணங்களை (Stanza) மட்டுமே பாட பரிந்துரைத்தது. இந்த முடிவை எடுக்கக் காங்கிரஸ் செயற்குழு அமைத்த கமிட்டிக்கு கவிஞர் தாகூர் அக்டோபர் 26, 1937 தேதியிட்டு நேருவுக்கு எழுதிய கடிதத்தில், பாடலின் முதல் இரண்டு சரணங்களைப் பாடுமாறு பரிந்துரைத்தார் என்பதும் குறிப்பாக அறியப்பட வேண்டும். இதுதான்- வந்தே மாதரம் பாடலி்ன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே (முழுப்பாடலும் அல்ல) - அரசியலமைப்பு சபையால் வந்தே மாதரம் பாடல் எனக் குறிப்பிடப்படுவது. 

அந்த முதல் இரண்டு பத்திகளுக்கே தேசியப் பாடல் (National Song) என்ற அங்கீகாரம். இது தெளிவாக அறிந்துகொள்ளப்பட உரியது.

(சுருக்கப்பட்ட வந்தே மாதரத்தையும் முகம்மது அலி ஜின்னா தலைமையிலிருந்த முஸ்லிம் லீக் இறுதி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதுகுறித்து விரிவாகத் தற்போது இங்கு விளக்க அவசியமில்லை).

ஆனால், 1930களிலிருந்து ஜனவரி 1950-இல் தேசிய கீதம், தேசியப் பாடல் குறித்து அரசியல் அமைப்புச் சபையில், தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவிப்புச் செய்து இன்று வரை வந்தே மாதரம் பாடலைப் பொருத்து நடைமுறையில் இருப்பது அதன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே.

அப்பட்டமாக, ஓசையில்லாமல், இதனை முற்றிலும் மீறும் வண்ணம், ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தைப் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு பாடலில் தவிர்க்கப்பட்ட நான்கு பத்திகளையும் இணைத்துப் பாடத் தொடர்பும் (link) வழங்கியுள்ளதே! 

‘’சுதந்திரமாக இருப்பதற்கான விலை எப்போதும் விழிப்போடிருப்பதே’’.

கொசுறு: உலக நாடுகளில் இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட இரண்டு நாடுகள்: நியூசிலாந்து, டென்மார்க். நம் பெருமை: உலக நாடுகளிலேயே ஒரு தேசிய கீதமும் (National Anthem ஜன கண மன..), ஒரு தேசியப் பாடலும் ( National Song, வந்தே மாதரம் ) கொண்டிருக்கும் ஒரே நாடு, இந்தியா.

 வாழ்க பாரதத் திருநாடு.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

**


வெள்ளி, 23 செப்டம்பர், 2022

 

 

 

அறியாத பாரதி

இராஜ முத்திருளாண்டி

 

 

தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே  பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நாறாண்டுகள் கழிந்துவிட்டன. “பார் மீது நான் சாகாதிருப்பேன் (பாரதி- அறுபத்தாறு -6) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடியஒரே கவிஞன் பாரதி. தான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்து விட்டு வந்தான். ஆனால், மெல்ல வந்து- 1921 செப்டம்பர் 11 நள்ளிரவுகடந்து- மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாவேந்தரின் நம்பிக்கை முழக்கத்திற்கேற்ப, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் புகழுருவாகத் தமிழ்கூறும் உலகெலாம் வளர்ந்துகொண்டே இருக்கும் விந்தையின் பெயர்தான் சி.சுப்பிரமணிய பாரதி. இன்றவன் நினைவு நாள்.

 

அவன் வாழ்ந்த குறுகிய காலத்தில் (39ஆண்டுகள்) பாரதியைச் சரியாகவும், முழுமையாகவும் தமிழுலகில் யாரும் அறிந்து, புரிந்து, ஆதரித்துப் போற்றவில்லை என்பது  கசப்பான  உண்மை. அவன் வாழுங்காலத்தில் அவனைத் தக்கவாறு அறிந்து போற்றி ஆதரவளிக்கத் தவறி, “அலஷியம் செய்த தமிழுலகம் திடீரென்று அவர் புகழில் மோஹமுற்று” (நாவலர் சோமசுந்தர பாரதி,1954) தொடர்வது விந்தைதான். சரி, பாரதி மறைவிற்குப் பின்னாவது அவனை முழுதாக அறிந்து தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதே உண்மையான பதில்.

 

பாரதியின் மறைவிற்குப் பின் அவனது கவிதாவாழ்வின் ‘காரியம் யாவிலும்’ உடன் நின்றுழன்ற பாரதியின் மனைவி செல்லம்மாள் வழங்கிய ‘ பாரதி சரித்திரம்’ எனும் மெல்லிய நூலுக்குச் சுத்தானந்த பாரதி எழுதியுள்ள முன்னுரையில், “அங்குமிங்கும் சில குறிப்புகளைக் கேட்டே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் வரலாற்றை எழுதுகிறவர் எழுதியளித்தால் தமிழ் மரபிற்கே பெரும் பயனாகும்  என்று உண்மை சொல்லியிருக்கிறார். “ பாரதியினுடைய ஜீவியத்தின் ஆதாரத்தைக் கொண்டு ஒரே நோக்கில் பூர்த்தியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு மதிப்புரை இன்னும் வெளிவரவில்லை.” என்று குறைப்பட்டார் கு.ப. இராஜகோபாலன் (கண்ணன் என் கவி, 1937). அன்று சுத்தானந்த பாரதி, கு.ப.ரா உள்ளிட்டோர் சொல்லிச் சென்றதே இன்றும் நிலை. ஆம், இதுவரை நமக்குக் கிடைத்துள்ள பாரதியைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பாரதி விமர்சனம், பாரதி ஆய்வுகள், பாரதி படைப்புகளின் ஆய்வுத் தொகுப்புகள் எனப் பலவும் பூர்த்தியற்ற, “அங்கொன்றும் இங்கொன்றுமான ” தகவல்களே தந்து நம்மை இன்றுவரை பாரதியை முழுமையாக அறியாத நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கின்றன.

 

பாரதியின் மறைவுக்குப்பின், செல்லம்மாள் பாரதியைத் தொடர்ந்து பாரதியின் இரு மகள்கள் தங்கம்மாள் (1947) , சகுந்தலா ஆகியோர் தம் தந்தையார் குறித்து ஆர்வமுடன் பதிப்பிக்கச் செய்த சிறு வெளியீடுகள் முழுமையற்றவையாகவும் “அங்குமிங்குமான சில குறிப்புகளைத் தருவதாக இருந்தனவேயொழிய, விவரமான  வரலாறு எனும் வகையில் உறுதியான ஆண்டுக் குறிப்புகளோ, ஆவண ஆதரவுகளோ இல்லாமல்தான் வந்தன. அவ்வெளியீடுகள் - ‘உடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள தனிப்பட்ட தத்தமது நினைவுகளைக் கிளறி வடித்த, உணர்வு வெளிப்பாடு’ என்ற வகையில் - வரலாற்று வளமின்றி வற்றிக் கிடக்கின்றன. மேலும், பாரதி வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளைக் காட்டும்போது மூவரது விவரிப்புகளிலும் ஒருமை மாறுபடுவதும் காணமுடிகிறது. பாரதியின் குடும்பத்து மூவரது படைப்புகளும் வெவ்வேறு கால இடைவெளிகளில், பெரும்பாலும் அவரவர்கள் சொல்ல வேறு வேறு நபர்களால் எழுதப்பட்டதாகவே அறிகிறோம். பாரதியின் மிக இளம் வயது  மகள்கள் பாரதியைத் தந்தை என்பதைத் தாண்டி, அம்மகாகவியின் பிற பன்முகப் பரிமானங்களை அவரவர் வயதில் முழுதுணர்ந்திருக்கும் வாய்ப்புகளும் குறைவே. இன்னும் சொல்வதானால், இளையமகள் சகுந்தலாவின் ஏழுவயதுவரை தலைமகள் தங்கம்மாள் (வயது 12), காசியில், செல்லம்மாள் பாரதியின் மூத்த சகோதரி வீட்டில் வளர்ந்து வந்தவர்.சகுந்தலாவே  சொல்கிறார்: “தன் தந்தையாருடன்”கூட வசிக்கும் பாக்கியம் பெருமை” தங்கம்மாளுக்குக் “கிடைத்தது இரண்டு வருஷம் மட்டும்தான்...என் தந்தைக்கும் அவளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு அத்துடன் அற்றுப் போயிற்று ” என்று. (என் தந்தை, பக் 87; 89) இக்காரணங்களாலும் குறைபாடுகள் விளைந்திருக்கலாம்.

 

நெல்லை ஏ,வி.சுப்பிரமணிய ஐயர் (1933), பாரதி சரிதம் தந்த ஆக்கூர் அனந்தாச்சாரி (1936), ஆகியோர் சிறு சிறு ஒளிக்கீற்றுகளாய்ப் பாரதி வரலாறு குறித்த செய்திகளை வழங்க முற்பட்டனர். முதலில் விரிவாக எழுதப்பட்ட பாரதி வரலாறு எனப் பலராலும் மேற்கோள்களாக எடுத்தாண்டுவரும் பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் பல தந்துள்ள வ.ரா., (மகாகவி பாரதியார்,1944) தனது நூலின் முதற் பதிப்பு முன்னுரையிலேயே, நான் இப்பொழுது எழுதியிருக்கும் கதை பாரதியார் சம்பந்தமாக முடிந்த கதையல்ல” என்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். வரலாற்று நூலுக்குத் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு/நாள்/இடம், உடனிருந்தோர் விவரங்கள்  அதிகம் அளிக்காத காரணத்தால், ‘வரலாறு’ எனக் குறிப்பிடத் துணியாமல்’  கதை’ அதிலும் ‘முடிவுறாக்கதை’ எனப் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் பாரதி மறைந்து 23ஆண்டுகள் கழிந்து எழுதித் தந்துள்ள அந்த நூலில், “லட்சணமாகக் கொடுக்க முடியாத ஒன்றை அவலட்சணத்தோடு கூடிய உருவத்தில் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. எனவே அனேக சங்கதிகளை நான் சொல்லாமல் விட்டுவிடவேண்டியதாயிற்று” என வருத்தமும் வெளிப்படுத்தியுள்ளார்.  கூடுதலாக, “இன்னும் சில வருஷங்களுக்குள்ளேனும் பாரதியாரைப் பற்றி விரிவாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப்புத்தகத்தைச் சுருக்கி விட்டேன்என்றும் கைவிரித்து விடுகிறார்.அவரும் பாரதியாரைப் பற்றி அதற்குப்பின் விரிவாக எழுதவில்லை. வேறு எவரும்கூட முழுமையாகப் பாரதியார் வரலாறு எழுத முன்வரவில்லை.

 

உஸ்மானியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தலைவராயிருந்த ப.மீ.சுந்தரம் (பாரதியார் வரலாறும் கவிதையும்,1954);  “பாரதியாரின் ஜீவியத்தில் ஒரு பகுதியை இவரெழுதத் தகுதியுடையார்’ எனப் பாரதியின் ‘மனைவியார் கருதியதற்கிணங்க’  பாரதியின் பள்ளித் தோழர் சோமசுந்தர பாரதியும், பாரதிக்கு நண்பரான சர்க்கரைச் செட்டியாரும் இணைந்து வழங்கிய (பாரதியார் சரித்திரம், 1955),  ஆகிய படைப்புகளும் பாரதி வரலாற்றின் ஒரு சில பகுதிகளையே காட்ட முடிந்தது. இவ்வாறு, பாரதி வரலாறு எழுதப் புகுந்த ஆரம்ப காலத்து ஆர்வலர்கள் அனைவருமே எழுத மறந்த, எழுத விடுபட்ட வரலாற்றுத் தகவல்களைக் கண்ட தொ.மு.சி. ரகுநாதன்(பாரதி காலமும் கருத்தும், 1982), கொதித்து “பாரதி வரலாற்றாசிரியர்களும், பாரதி பற்றிய நூலாசிரியர்களும் ...காணத்தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட ,...சொல்லப்போனால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட, பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாக அதிரடி காட்டினார்.

 

நாம் போற்றும் ஒரு மகாகவிஞனை, பன்முகப் படைப்பாளியைத், துறைதோறும் புதுமைகள் செய்த முன்னத்தி ஏராக நிற்கும் பாரதியை முழுமையாக நாமறிந்து கொள்ள முடியாத நிலையே அவனிறந்து நூறாண்டுகள் கடந்தும் தொடரும் இந்த அவலம், நமது அலட்சியம், மெத்தனம் ஆகியவற்றுக்கான வலுத்த சான்றாகும். தொடரும் இத்தகைய அலட்சியம் மெத்தனம் ஆகியவற்றுக்கு மற்றொரு சான்றாகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகம் தனக்களித்த கடமையை மறந்து நிற்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

பாரதியின் நூற்றாண்டு விழா (1982) நடைபெறும்போது அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் நூற்றாண்டு விழாக்குழு பாரதியின் முழுமையான ஆதாரங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் கடமை தமிழகப் பல்கலைக் கழகங்களின் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாரதியின் படைப்புகளைச் சீர்படத்தொகுத்துச் செம்பதிப்பாக வெளிக்கொணரும் கடமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டது. அதற்கேற்ப அப்பணியின் ஒரு பகுதியாக பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு 1987இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.  பாரதி நூற்றாண்டு விழாமலரைப் பதிப்பிக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - விழாமலர் என்பதால் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படத்தக்க நுண்மாண் நுழைபுலங் காட்டும் வகைக் கட்டுரைகளில்லையாயினும் பல நிலையிலுள்ளோர்  பாரதியைப் பார்த்த, பார்க்கும் பார்வைகளின் தொகுப்பாகக் கருதும் வகைக் கனம் கொண்டதாக, 476 பக்கங்கள் கொண்ட-  மகாகவி பாரதி நூற்றாண்டு விழாமலர் (1982) ஒன்றைக் வெளிக் கொண்டுவந்தது. ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட கடமை இன்றுவரை -ஆளின்றி மிதக்கும் படகுபோல- கரைசேராமலே மிதக்கிறது.

பாரதி நினைவு நூற்றாண்டைச் (2021) சிறப்பான முன்னெடுப்புகளுடன் தொடங்கி மேற்கொண்டுவரும்  தற்போதைய தமிழக அரசு இவ்விசயத்தை மீண்டும் தூசிதட்டிக் கையிலெடுத்துக், கொடுத்த கடமையை நிறைவேற்றச் சென்னைப் பல்கலைக் கழகத்தை முடுக்கி விட்டுத் அவசியப்படும் உதவிகளும் வழங்கவேண்டும். பல்கலைக்  கழகத்தால் அது இயலாதெனத் தெரியவந்தால், தமிழக வரலாறு எழுதப்படக் குழு அமைத்ததுபோல, பாரதி வரலாறு படைத்தளிக்கும் பணிக்கு – தக்கார், தகவுடையார்,பாரதி ஆய்வில் தோய்ந்திருப்பார் தேர்ந்து - ஒரு அறிஞர் குழு அமைத்துக் காலவரையரை சுட்டி அப்பொறுப்பைச் செயல்படுத்த உரியன செய்யலாம்.  இம்முயற்சி பாரதி நினைவு நூற்றாண்டு தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுஅர்த்தப்படுத்துவதாக இருக்கும். ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூல மூர்த்தி’ (கு.ப.இரா,1937) பாரதியை-  நாமின்னும் முழுமையாக அறியாத பாரதியை - அறிந்து போற்ற  உதவும்.

 

**

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்

 இராஜ முத்திருளாண்டி.


வீரமாமுனிவர்  வரலாற்றில் வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.

இராஜ முத்திருளாண்டி

வருக.

காண்போம்.

https://bit.ly/3e0YyNG


**

வீரமாமுனிவர்  வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.

 

இராஜ முத்திருளாண்டி*

 

 

 

தமிழ்ப் பரப்பில் வீரமாமுனிவரென நாமறிந்துவரும் (Constanzo Gioseffo Eusebio[1]- தமிழில், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என வழங்கப்படும்) பெஸ்கி அவர்கள், இத்தாலி நாட்டில் , நவம்பர் 8,1680 இல் பிறந்தவர். இளமையிலேயே இயேசு சபை ஊழியம் செய்யப் பெரிதும் விரும்பி, ரோம் நகரில் உரிய போதனையும் முறையான பயிற்சியும் பெற்ற பின்னர் இடர்மிகு கடற் பயணம் மேற்கொண்டு இந்தியா (கோவா) வந்து சேர்ந்து தமிழகம்  அடைந்தவர்.  மதுரை திருச்சபையில்  ஒன்றி, ‘தைரியநாத சாமி’ யாக  , இயேசு சபை ஊழியம் தொடங்கிக் கால் கொண்டு நின்று -  சமய ஊழியத்தோடு அளப்பரிய தமிழ்த்தொண்டும் ஆற்றி - இன்றளவும் நினைந்து போற்றப்படுகிறவர். இருப்பினும், அவரது வரலாற்றுத் தகவல்களில் இன்றுவரை பல குழப்பங்கள் வளர்ந்து தொடர்கின்றன.

 

இத்தாலியில் பிறந்த பெஸ்கி அவர்களின் பிறந்த ஆண்டு (1680) விவரங்குறித்து மாறுபாடான செய்திகள் இதுவரை இல்லை. ஆனால், தான் விரும்பிய பணி செய்யப் பெஸ்கி எப்போது இந்தியா வந்தடைந்தார்? என்பதிலிருந்து ஆரம்பித்தால் அவர் என்று?, எங்கு இறுதியடைந்தார்?; எங்கு அவரது கல்லறை அமைந்துள்ளது?;  என்பன தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் மாறுபட்ட விவரங்களை வழங்கிக் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையில் இனி விரிவாக விவாதிக்குமுன் எடுத்துக்காட்டுகளாக:- வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டு என 1700 , 1707, 1710, 1711 என்றும்; அவர் இறுதியடைந்த ஆண்டு 1740, 1742, 1746, 1747 எனவும்; அவர் தமிழ்நாட்டில் இறுதியடைந்தார், இல்லை கேரளாவில் இயற்கை எய்தினார் என மாறுபட்டும்; அவர் மறைவடைந்த இடம் காயல்பட்டிணத்துக்கருகே ; அம்பலக்காடு; மணப்பார் (மணப்பாடு) என்ற இடங்கள் சுட்டியும்; அவருடைய கல்லறை இருக்குமிடங்களாக அம்பலக்காடு, திருச்சி, மணப்பாறைக்கருகே மலையடிப்பட்டி என்ற கிராமக் கிறித்தவ ஆலயம் எனவும் உறுதிப்படுத்தாத் தகவல்கள் உலவிவருகின்றன நாளதுவரை

 

மேலும் அவர் தமிழகத்தில் பணியாற்றியது; அவரது சபை ஊழிய காலத்தில் நிகழ்ந்தவையாகக் குறிப்பிடப்படும் செய்திகள்; திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிப்புடன் அவர் நட்புறவாக இருந்ததுடன், அவரது திவானாக இருந்தது குறித்தும்; அவரது வாழ்க்கை - உணவுப்பழக்கம், உடை, சமயப்பிரச்சாரப் பயண நடைமுறைகள்; அவர் படைத்தளித்ததாக நாம் போற்றிவரும்  நூல்கள் முதலியன குறித்த பல முக்கியமான வாழ்க்கை வரலாற்று விசயங்களிலும் ஒருமையில்லா நிலை அடர்ந்திருக்கிறது.[2] வீரமாமுனிவரைச் சமயம் கடந்து பலரும் போற்றுவதற்கான முதன்மைக் காரணமே அவர் தமிழுக்குப் படைத்தளித்துள்ளதாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் - “ஆறறுநூற்று மூவைம்பூக்களால்” கோர்க்கப்பட்டிருக்கும் வாடாத் தமிழ் மாலையான தேம்பாவணி உள்ளிட்ட-  25 இலக்கிய, இலக்கண நூல்களாகும்.

 

இந்த முதன்மை அடிப்படையையே இடித்துத் தகர்க்கும் கருத்தில்,  தமிழிலக்கிய வரலாற்றை நூற்றாண்டுகளாகப் பகுத்து விரிவாகவும் முன்னோடியாகவும் எழுதி வழங்கியுள்ள மு.அருணாசலம் (1974) தனது ஆங்கில நூலில் ‘வீரமாமுனிவர் பெயரில் அறியப்படும், தேம்பாவணி,சதுரகராதி, தொன்னூல் விளக்கம்,பரிபூரண குருகதை உள்ளிட்ட  அனைத்து நூல்களுமே உண்மையில் சுப்ரதீபர் எழுதியவை’[3] என  அதிரடியாக அறியத்தந்தார். இதே கருத்து,முன்னொரு சமயத்தில்  கசடதபற (1971) இதழிலும் முன்வைக்கப்பட்டிருந்தது.[4] வலுவான, உறுதியான ஆதாரங்களை  அடிப்படையாகக்கொண்டு வீரமாமுனிவர் படைப்புகள் தொடர்பான கருத்துகள்  எழுப்பப் படாததால், நிலைத்து நின்று வீரமாமுனிவர் குறித்த ஆய்வுப் பரப்பில் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படாமல் சிதிலமடைந்துள்ளன.

 

நடுநிலை நின்று, தேடித் தீர ஆராய்ந்து, ஆவணங்கள், சான்றுகள் மூலம்  வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுக் குழப்பங்களுக்கான விடைகள் தேடாநிலையே இன்றும் தொடர்கிறது. இதனால் பலரும் பலவாறாகத் தமக்குத் தோன்றியவகையில் – ஏற்கத்தக்க ஆதாரங்களின் துணையின்றியே - நூல்களிலும் கட்டுரைகளிலும், தகவல் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவ்விசயத்தில் காய்தல் உவத்தலற்ற நேர்மையோடு குறிப்பிட உரியதென்னவென்றால், வீரமாமுனிவர் குறித்துத் தற்போதுவரை நமக்குக் கிடைக்கும் செய்திகள் யாவும், மிகப் பெரும்பாலும் அவர் சார்ந்திருந்த கத்தோலிக்கக் கிறித்தவ மத சபைகள் / நிறுவனங்களது ஆவணங்கள், கடிதங்கள்,பிற பதிவுகள், சான்றுகள் முதலியவற்றுடன் ; இந்தியாவிலும் அயல்நாட்டிலுமுள்ள கிறித்தவ ஆய்வாளர்களது நூல்கள், கட்டுரைகள் முதலியவற்றின் வழியாகவே கிடைக்கின்றன. இருந்தும், வீரமாமுனிவரது வாழ்க்கை, பணி விவரங்களில் உறுதியும் நேரொருமையுமின்றி மாறுபட்ட தகவல்கள் பரவிக்கிடக்கின்றன என்பது நெருடலாக உள்ளது.

 

வீரமாமுனிவர் தனது மதப்பிரிவான கத்தோலிக்கக் கிறித்துவப் பரவலுக்குப் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு  மும்முரமாகப் பணியாற்றியதால், புராட்டெஸ்டண்ட் கிறித்தவப் பிரிவினரும், அவர்களைவிட அதிகக் காட்டமாக லுத்தரன் பிரிவினரும் பெஸ்கி அவர்கள் குறித்து மாறுபட்ட, வெறுப்புமிழும் தகவல்களையும் [5] பதிவுகளில் நிறுத்தியுள்ளனர். இவை தவிர்த்துப் பிற சமயத்தாரால் படைக்கப்பட்ட வீரமாமுனிவர் குறித்த நூல்கள், ஆய்வுகள் மிகச்சிலவே கிடைக்கின்றன. 

 

அயல்மண்ணிலிருந்து வந்து, தாம் மேற்கொள்ளும் சமயப் பரவல் செய் பணிக்கு இம்மண்ணின் மக்கள் பேசும் மொழிவாயிலாக அணுகுவதே உசிதமானது என்பதைத் தெளிவுற உணர்ந்தார் தைரியநாதர். ஆர்வமுடன் முயன்று, தமிழ் கற்றுத் தமிழுக்குப் பலவகைப்பட்ட அரிய, 25 நூல்கள்[6]  வழங்கித் தமிழ்வளத்தைத் தனக்கியன்றவரை பெருகச் செய்துள்ளவரான வீரமாமுனிவரது வாழ்க்கை தொடர்பான ஆதாரம் நிறை செய்திகளும் ஏற்கத்தக்க உண்மையான ஆவணங்களும் உரியவாறு பாதுகாத்து வைக்கப்படவில்லை. பிற்காலத்தில், “தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய பாவேந்தரின் உறுதிப்பாட்டை அவர் சார்ந்த மதத்தவர்களும், அவர்களைப் போலவே தமிழுலகும் முற்றாகச் செயல்படுத்தவில்லையே என்பது பெரும் ஆதங்கமாக நிற்கிறது.

 

மாறுபட்டுப் பரவிக் கிடக்கும் வீரமாமுனிவர் வரலாறு குறித்த விவரங்களைக் காண்போம். தமிழில் முதன் முதலில் (1822 & மறுபதிப்பு 1836) அச்சேறிய மிகச் சுருக்கமான வீரமாமுனிவர் சரித்திர வரலாறு” எழுதிய அ.முத்துச்சாமிப் பிள்ளை, வீரமாமுனிவர் வாழ்ந்த காலத்தை 1680-1742 என்று குறிப்பிட்டுள்ளார்.[7] ஆனால், அவரே தனது நூலின் முற்பகுதியில் வைத்துள்ள வீரமாமுனிவர் (Father Beschi) படத்தின் கீழ் ( Father Beschi’s life by Rev. L. Bessel, S.J என்று குறிப்பிட்டுள்ள ஆங்கில நூலிலிருந்து[8]) எடுத்தாண்டுள்ளதாகக் காட்டியுள்ள சிறு குறிப்பில் —

... ... பற்பல நூல்கள் இயற்றி 4-2-1747ல் கடவுள் திருவடி நீழலில் அம்பலக்காட்டில் – இன்புற வதிந்த பெரியார்

எனத் தமிழ்ப்படுத்திக்  குறிப்பிடப்பட்டுள்ளது. முத்துச்சாமி பிள்ளையோ, வீரமாமுனிவர் மறைந்தது ‘மணற்பாடு’ என்ற ஊரென்கிறார்; மறைந்த ஆண்டு 1742 என்கிறார். ஆனால் அவரே - மறுப்புக் குறிப்பு எதுவும் தனது நூலில் வைக்காமல்-  வீரமாமுனிவர் படத்தின் கீழ் எடுத்தாண்டுள்ள- ஆங்கிலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட பெஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலான- பெஸ்ஸியின் (Fr. L. Besse, 1918) நூல் செய்தியோ, வீரமாமுனிவர் மறைந்தது அம்பலக்காடு என்னும் ஊர்; மறைந்த ஆண்டு 1747 என்கிறது.   வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுப் பதிவுகளின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த இவ்விரண்டு முதன்மை ஆதாரங்களையும் நோக்குமிடத்தில் வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாற்றுக் குழப்பங்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன எனலாம். வீரமாமுனிவர் குறித்த முதல் தமிழ் நூலான முத்துசாமிப் பிள்ளையின் நூலில் பல தவறான செய்திகள் நிறைந்திருப்பதாகப் பின்னர் (1996 ல்) வெளிவந்த  ‘வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்’[9] என்னும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும் கருத்தில் நிறுத்தி மேற்செல்வோம்.

வீரமாமுனிவர் குறித்துக் கிறித்து மத நிறுவனங்கள் வழங்கும்  தகவல்களும் மாறுபட்டு நிற்கின்றன. ஹெரிட்டேஜ் வேம்பாறு (Heritage Vembaru)[10] எனும் தகவலமைப்பு, பெஸ்கி ‘இந்தியாவில் தனது முப்பதாண்டுப் பணிக்காலத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1746ல் இறந்தார்’ என்ற செய்தி வழங்குகிறது. ஆனால், ‘கத்தோலிக்க சபை வரலாறு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தரும் ஏற்பாடாகத்’ [11] தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் கத்தோலிக்க  என்சைக்ளோபீடியா (Catholic Encyclopedia) பெஸ்கியின் வாழ்வுக் காலத்தை 1680-1746 எனக் குறிப்பிட்டிருந்தாலும், ‘அவர் 1744 ல் மணப்பார் மிஷன் ரெக்டராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி, மணப்பாரில் 1746ல் இறந்ததாக’[12] தகவல் தருகிறது. தைரியநாதராகப் பணி தொடங்கிய அவரது மதுரை சபை (பின்னாட்களில் டயோசிஸ் Madurai Dioses அந்தஸ்தடைந்தது) அவருடைய வாழ்க்கைக் குறிப்பை 1680-1747 என வழங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள பூண்டி மாதா ஆலயம், பெஸ்கி இறைப்பணி செய்த பல ஆலயங்களில், பிரபலமாக விளங்கும் ஒரு ஆலயமாகும். இது குறித்த தகவலமைப்பு[13] அதிகாரப்பூர்வமாக வழங்கும் தகவல் குறிப்பு ‘இந்த ஆலயத்தை நிர்மானித்த கானஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 1680-1742என்பதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. அண்மையில், ‘தமிழ்க் கத்தோலிசிசம்’ குறித்துச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்திற்கான தனது ஆய்வுக்காக இந்தியாவில் பெஸ்கி அவர்கள் தொடர்புடைய பல இடங்களிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்த ஆய்வாளர் (Marghereta Trento, 2022) இயேசுசபை இரங்கல் குறிப்புகளை ( Jesuit obituary records) நுணுக்கமாக ஆராய்ந்து, அக்குறிப்புகளின்படி,  ‘பெஸ்கி, எந்தச் சூழலில் இறந்தாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாவிட்டாலும்,   பிப்ரவரி 4, 1747ல் அம்பலக்காட்டில் மறைவடைந்ததாக முடிவுகொள்ளலாம்’ என ஆய்வறிக்கை அளித்துள்ளார்.[14]

 

வீரமாமுனிவரது இந்திய வருகையிலிருந்தே பார்த்தோமானால், அவரது இந்தியா வருகை ‘1710 பிற்பால்’  என ஆங்கில வரலாற்று நூலாசிரியர் பெஸ்ஸி (Fr. L. Besse, 1818) குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே ‘கிறிஸ்தவமும் தமிழும்’ என்ற தலைப்பில் இத்துறையில் முதல் நூலினை ஆக்கம் செய்த தமிழாய்வு அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி,[15] பெஸ்கி இந்தியாவுக்கு 1700ல் வந்தடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, வீரமாமுனிவர் மறைந்த ஆண்டு 1742 என்றும், மறைவடைந்த ஊர் மணப்பாடு என்றும்[16] நூற்பதிவு செய்து வைத்துள்ளார். வீரமாமுனிவர் லிஸ்பனிலிருந்து 1709ஆம் ஆண்டு கப்பல் வழியாகப் புறப்பட்டு இறுதியாக 1710ல் கோவா வந்தடைந்தார்[17] என்று ஒரு ஆய்வுத் தகவல் உள்ளது. பெஸ்கி 1707 லிலேயே இந்தியாவந்தடைந்து விட்டதாகவும், அவர் 1742ல் மறைவடைந்ததாக இன்னொரு தகவல் ஒரு பன்னாட்டிதழில்[18]  வெளியான கட்டுரையில் காணக்கிடைக்கிறது. வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டுக் குழப்பங்களோடு அவரது மறைவு குறித்தும் தெளிவற்ற தகவல்களே பதிவுகளாகி வருகின்றன என்பதை முன்னருங் கண்டோம்.  சுருக்கமாக, அவரது மறைவு 1742[19] என்றும்; 1746[20] எனவும்; ‘இல்லை’, அவர் மறைந்த ஆண்டு 1747[21] என்றும் வீரமாமுனிவர் ஆய்வாளர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம்.

இக்கட்டுரையில் முன்னர்க் குறிப்பிட்டுள்ள முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதாக இராஜமாணிக்கம்(1998)  நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[22] மேலும் அதே நூலில், ‘’1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச் சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணி புரிந்த பின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர் துறந்தார்’’[23]எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் இவர் மணப்பாட்டில் உயிர் துறந்தார் என்ற குறிப்பினைச் சற்றே திரித்து, திருச்சிக்கருகிலுள்ள மணப்பாறையில் அவர் உயிர் துறந்தார் என்றும் கூறுவதும் காணப்படுகிறது. மணப்பாறைக்கு அருகிலுள்ள மலையடிப்பட்டி என்ற கிராமத்துக் கிறித்துவ ஆலயத்துக்கருகில் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டடுள்ளதாக ஒரு இடமும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.[24] மற்றொரு இடத்தில் கிடைக்கும் தகவலின்படி, அவரது உடலடக்கம் செய்யப்பட்ட இடம் கேரளவில் (கொச்சின் சமஸ்தானத்தைச் சேர்ந்த) சம்பலூர் (Sampaloor) என அறியக் கிடைக்கிறது.[25]   திருத்தங்களுக்குள்ளாகும் வாய்ப்புகளுள்ள விக்கிபீடியா தகவலின்படி  அவர் இறுதி ஓய்வடைந்திருக்கும் இடம் கேரளாவிலுள்ள சம்பலூர் அல்லது தமிழ்நாட்டிலுள்ள மணப்பாடு [26]எனச் சமவாய்ப்புக் காட்டுகிறது.

வீரமாமுனிவர் குறித்து இவ்வாறான மாறுபட்ட கருத்துகள் நிலவ ஒரு காரணம் அப்போதைய கிறித்து மதச்சபையினரிடையே நிலவிய விரிவான பிளவுகளும், அசிரத்தையும் ஆகும், வீரமாமுனிவரது நூல்களைப் ஓரளவு பாதுகாத்த அளவிற்குக்கூட அவரது வாழ்க்கை விவரங்கள், சமயப்பணி, பயணித்த ஊர்கள், அவர் தமிழ்நாட்டில் தொடர்பு கொண்டிருந்தவர்கள் (குறிப்பாக சந்தா சாகிப் தொடர்பு, அவரது திவானாகப் பணியாற்றியது);  அவரது செயற்பாடுகளின் காலவிவரங்கள் முதலியற்றைக் கவனம் செலுத்தி ஆவணப் படுத்தாமை பெருங்குறை.முத்துசாமிப் பிள்ளை (தமிழ் 1822,1836, ஆங்கிலம் 1840) நூலில்  வீரமாமுனிவர் – சந்தா சாகிப் நல்லுறவும், சந்தா சாகிப்பின் திவானாக வீரமாமுனிவர் பணியாற்றியதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அச்செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதும் நிகழ்ந்துள்ளது.[27]

 

இரண்டாவது காரணம் பலரும் தத்தமக்கு எட்டிய நூல்கள் / செய்திகளிலிருந்து – உண்மை ஆராயும் முயற்சிகள் ஒரு சிறிதும் மேற்கொளாது – தயங்காமல் நகலெடுத்து சர்வசகஜமாகப் பரிமாறிவருதலாகும்.[28] மூன்றாவது காரணமாக உணரப்பட்டு, அதிகம் பேசப்படாமலிருப்பது வீரமாமுனிவர் மிகச் சிறப்பான பணிகளைத் தமது சமயப் பரவலுக்கும் தமிழின் வளம் பெருக்கவும் நிறைவுற ஆற்றியும் கடைசிவரை அவர் ஒரு பாஸ்டராகவே நிறுத்திவைக்கப்பட்டது ஏன் என்னும் வினாவிற்கான விடையில் இருக்கிறது.[29]

 

கிறித்தவ மதத்திலேயே போட்டிப் பிரிவினர் ( குறிப்பாக லூத்தரன் பிரிவினர்)  தூற்றினாலும், வீரமாமுனிவரது செயலாற்றலும் தமிழாற்றலும் மறைக்கப்படாமல் மதிக்கப்பட்டன[30]. ஆனால், அவரது கத்தோலிக்கத் திருச்சபை அவரை எந்த உயர் பொறுப்பிலும் அமர்த்தவேயில்லை; திருச்சபையில் முக்கிய நிர்வாகப் பொறுப்பு ஏதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை; அவரது திருச்சபை தொடர்பான கடிதங்களும் இயேசு சபை ஆவணக்காப்பகங்களில்(Jesuit Archives) பாதுகாத்து ஆவணப்படுத்தப்படவில்லை[31]; அவர் ஊழியஞ்செய்த கொங்கனாங்குப்பம், ஏலாக்குறிச்சி,பூண்டி, கூட்டங்குளி ஆகிய ஆலய மக்களிடையே அவர் அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளதாக பரவலான செவிவழிச் செய்திகள் வழங்கப்பட்டுவரும் நிலையிலும் வாடிகன் தலைமை அவரைப் புனிதராக அறிவிக்கவோ, வேறுவகைக் கௌரவம் அளிக்கவோ ( Beautification/Canonization) கருதவில்லை இதுவரை. பற்பல சிறப்புகளைத் தமது பணிவழி பேசவைத்துள்ள வீரமாமுனிவருக்குத் தமிழக மக்கள் சார்பில் அரசு, சென்னை மெரீனாவில் சிலைநிறுவிப்(1968) போற்றி வருகிறது. அவரது திருச்சபை, வீரமாமுனிவருக்கு உரிய சிறப்பு வழங்கக் காலம் கனியுமென நம்புவோம்.

 

**

 

 

 

 

* profrajamuthu@gmail.com

[1] Name found in the baptismal certificate records. [See:- Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, The great heroic sage, 2018.It is said by the Authors that he later used to sign as Constantius Joseph Beschi ]

[2] For more and Christian accounts See: Anand Amaldoss, S.J., Gift of the Virgin Conch-Shell, வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம், Golden Net, Computers, Trichy, 2018 P.2 &  Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, Constanta Gioseffo Beschi  ( 1680-1747), The great Heroic Sage,2018 [‘ The existing literature on Beschi contains numerous errors and variations in dates, names and other information..’)

[3] Mu Arunachalam, An Introduction to Tamil Literature, Gandhi Vidyalayam, Thiruchitrambalam, 1974. (P 274-279)

[4] நா.கிருஷ்ணமூர்த்தி, கசடதபற, அக்கம் பக்கம், 5 பிப்ருவரி, 1971 (பக்கம் 16)

[5] See, for a sample:- Julius Richter, History of Missions in India, 1908, Page 111-113

[6] அவர் பெயரிலுள்ளதாகக் காட்டப்பட்டுவரும் சுமார் 15 மருத்துவ நூல்கள் தவிர்த்து.

[7]அ.முத்துச்சாமிப் பிள்ளை , வீரமாமுனிவர் சரித்திரமும் பாடற்றொகுதிகள் முதலியனவும். (மறு பதிப்பு 1836,).  “ காயல் பட்டிணத்திற்கடுத்த மணற்பாடென்னு மூருக்குப் போயங்குள்ள சேசுசபை மடத்தி லவரந்தியமட்டு மிருந்த விரண்டு வருஷகாலமு முதிர்ந்தவயதினராயினும் உயர்ந்த மனமுயற்சியோ டங்கே வேதோபதேசம் பண்ணிக் கொண்டும் , தாம் பாடிய பெருங் காப்பிய முதலானவற்றைப் பிரசங்கித்துக் கொண்டுமிருந்தார். ஈந்தியாவில் வந்தநேகம் பிரசைகள் பரலோக இன்ப வெள்ளத்திற் றுளைந்து விளையாடும்படி ஆற்றற்கரிய முயற்சித்துன்ப வெள்ளத்தி லுலைந்து  வருந்திய சீவகாருண்ணியராகிய வீரமாமுனிவரால் அப்பரலோகத்தை அலங்கரிக்க 1742*ம் ஆண்டு  ஆண்டவற்குத் திருவுளமாயிற்று.” (*மூலத்தில் 1742க்குத் தமிழ் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.) (பக்.19)

[8] Rev.L. Besse, Father Beschi of the Society of Jesus: His times  and his writings, Trichinopoly, 1918

[9] எஸ். இராஜமாணிக்கம், எஸ்.ஜே., வீரமாமுனிவர் தொண்டும் புலமையும், தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 66-67.)

[11] The Catholic Encyclopedia: An International Work of Reference on the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church (also referred to as the Old Catholic Encyclopedia and the Original Catholic Encyclopedia.

[12]https://www.catholic.com/encyclopedia/costanzo-giuseppe-beschi

[14] Marghereta Trento, Writing Tamil Catholicism, Ph.D. Thesis, University of Chicago,2019 “We have no account of the specific circumstances of Beschi’s death, but Jesuit  obituary records show that he died in Ambalakkadu on  February 4,1747-See ARSI H.S53, (Defuncti 1741-1750) P.64 -Note 44

[15] மயிலை சீனி வேங்கடசாமி, கிறஸ்தவமும் தமிழும், 1936

[16] முன்னது பக்.75

[17] பார்க்க:- Sascha Ebeling & Margherita Trento, 2018

[18] Complexity International Journal CJI, Dec 2020

[19] Gregory James (2019),The Pesky Ablative: Early European Missionaries, Journal of Portugese Linguistics, 2019ந ; Complexity International Journal (Dec. 2020);

[20]Catholic Encyclopaedia, (https://www.newadvent.org/cathen/02526c.htm) -  Costanzo Giuseppe Beschi "Born at Castiglione in the Venetian Republic, 1680; died at Manapar c. 1746.

[21] C.S Srinivasacharyalu, Article in  Indian Antiquary, Vol LVL January  (1927); Margherita Trento (2022); Henry & Owen Chadwick (Ed), Christianity in India From the Beginnings to The Present, Oxford History of Christian Church, First Edn 2008; India and Its Missions, The capuchia Mission Unit (CSMC), Macmillan Co. Newyork, 1923

[22] எஸ். இராஜமாணிக்கம், எஸ்.ஜே., 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 66-67

[23] முன்னது.

[24] பார்க்க:- Anand Amaldoss, Gift of the Conch-shell, Tiruchy, 2018

[25] He died at Ambalakaadu in Thrissur, Kingdom of Cochin (now a part of the state of Kerala), and is buried at St. Francis Xavier's Church, Sampaloor, where his tomb can be seen. https://www.howold.co/person/constanzo-beschi

[26] Kingdom of Cochin, Ambalakkaru, India or Manapad, Tamilnadu, India, Resting Place: Sampaloor, Kerala or manapad, Tamilnadu

[27] See https://tamilnation.org/literature/veeramamunivar.htm- The tradition that he was at one time prime minister to a native raja is not sufficiently authenticated’;     Joseph McCabe, The Jesuits : Religious Rogues (1927) One, Father Beschi, won a native prince, became his chief minister, and rode about with an escort of thirty horse and a band.; Also Amaladass (2018)

[28] See - Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, Constanta Gioseffo Beschi 

( 1680-1747), The great Heroic Sage,2018 [ The existing literature on Beschi contains numerous errors and variations in dates, names and other information, as all of them are copied time and again without verification.]

[29] See- The Month 1889-08: Vol 66 Iss 302- ‘’From the correspondence of Father Beschi, and the letters addressed to him by his superiors and fellow-religious in Europe, it may be gathered that the superb advan was in truth esteemed by savants, and treated with distinction by Nabobs and generals ; but he remained ever what he had been, a poor missioner of Madura, living on rice and water, and clad in the yellow calico of the sanzasszs (Indian penitents).”

[30] See Julius Richter, 1908 (Translated by Sydney H Moore.

[31] நான்கு அதிமுக்கியமற்ற (பெஸ்கியின்) கடிதங்களே இதுவரை பல ஆய்வாளர்களால் தேடப்பட்டு இனங்கானப்பட்டுள்ளன.