இராஜ முத்திருளாண்டி.
வீரமாமுனிவர் வரலாற்றில் வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.
இராஜ முத்திருளாண்டி
வருக.
காண்போம்.
https://bit.ly/3e0YyNG
**
வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்.
இராஜ முத்திருளாண்டி*
தமிழ்ப் பரப்பில் வீரமாமுனிவரென நாமறிந்துவரும் (Constanzo Gioseffo Eusebio[1]-
தமிழில், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
என வழங்கப்படும்) பெஸ்கி அவர்கள், இத்தாலி நாட்டில் , நவம்பர் 8,1680 இல் பிறந்தவர். இளமையிலேயே இயேசு சபை ஊழியம் செய்யப் பெரிதும்
விரும்பி, ரோம் நகரில் உரிய போதனையும் முறையான பயிற்சியும் பெற்ற பின்னர் இடர்மிகு
கடற் பயணம் மேற்கொண்டு இந்தியா (கோவா) வந்து சேர்ந்து தமிழகம் அடைந்தவர். மதுரை திருச்சபையில் ஒன்றி, ‘தைரியநாத சாமி’ யாக , இயேசு சபை ஊழியம் தொடங்கிக் கால் கொண்டு நின்று
- சமய ஊழியத்தோடு அளப்பரிய
தமிழ்த்தொண்டும் ஆற்றி - இன்றளவும் நினைந்து போற்றப்படுகிறவர். இருப்பினும், அவரது
வரலாற்றுத் தகவல்களில் இன்றுவரை பல குழப்பங்கள் வளர்ந்து தொடர்கின்றன.
இத்தாலியில் பிறந்த பெஸ்கி அவர்களின் பிறந்த ஆண்டு (1680)
விவரங்குறித்து மாறுபாடான செய்திகள் இதுவரை இல்லை. ஆனால், தான் விரும்பிய பணி
செய்யப் பெஸ்கி எப்போது இந்தியா வந்தடைந்தார்? என்பதிலிருந்து ஆரம்பித்தால் அவர் என்று?,
எங்கு இறுதியடைந்தார்?; எங்கு அவரது கல்லறை அமைந்துள்ளது?; என்பன தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் மாறுபட்ட
விவரங்களை வழங்கிக் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையில் இனி விரிவாக
விவாதிக்குமுன் எடுத்துக்காட்டுகளாக:- வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டு என 1700
, 1707, 1710, 1711
என்றும்; அவர் இறுதியடைந்த ஆண்டு 1740, 1742, 1746, 1747 எனவும்; அவர்
தமிழ்நாட்டில் இறுதியடைந்தார், இல்லை கேரளாவில் இயற்கை எய்தினார் என மாறுபட்டும்; அவர்
மறைவடைந்த இடம் காயல்பட்டிணத்துக்கருகே ; அம்பலக்காடு; மணப்பார் (மணப்பாடு) என்ற
இடங்கள் சுட்டியும்; அவருடைய கல்லறை இருக்குமிடங்களாக அம்பலக்காடு, திருச்சி, மணப்பாறைக்கருகே
மலையடிப்பட்டி என்ற கிராமக் கிறித்தவ ஆலயம் எனவும் உறுதிப்படுத்தாத் தகவல்கள்
உலவிவருகின்றன நாளதுவரை
மேலும் அவர்
தமிழகத்தில் பணியாற்றியது; அவரது சபை ஊழிய காலத்தில் நிகழ்ந்தவையாகக்
குறிப்பிடப்படும் செய்திகள்; திருச்சியை ஆண்டுவந்த சந்தா சாகிப்புடன் அவர்
நட்புறவாக இருந்ததுடன், அவரது திவானாக இருந்தது குறித்தும்; அவரது
வாழ்க்கை - உணவுப்பழக்கம், உடை, சமயப்பிரச்சாரப் பயண நடைமுறைகள்; அவர்
படைத்தளித்ததாக நாம் போற்றிவரும் நூல்கள்
முதலியன குறித்த பல
முக்கியமான வாழ்க்கை வரலாற்று விசயங்களிலும் ஒருமையில்லா நிலை அடர்ந்திருக்கிறது.[2]
வீரமாமுனிவரைச் சமயம் கடந்து பலரும் போற்றுவதற்கான முதன்மைக் காரணமே அவர் தமிழுக்குப்
படைத்தளித்துள்ளதாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் - “ஆறறுநூற்று
மூவைம்பூக்களால்” கோர்க்கப்பட்டிருக்கும் வாடாத் தமிழ் மாலையான தேம்பாவணி
உள்ளிட்ட- 25 இலக்கிய, இலக்கண
நூல்களாகும்.
இந்த முதன்மை
அடிப்படையையே இடித்துத் தகர்க்கும் கருத்தில்,
தமிழிலக்கிய வரலாற்றை நூற்றாண்டுகளாகப் பகுத்து விரிவாகவும்
முன்னோடியாகவும் எழுதி வழங்கியுள்ள மு.அருணாசலம் (1974) தனது ஆங்கில நூலில் ‘வீரமாமுனிவர்
பெயரில் அறியப்படும், தேம்பாவணி,சதுரகராதி, தொன்னூல் விளக்கம்,பரிபூரண குருகதை
உள்ளிட்ட அனைத்து நூல்களுமே உண்மையில்
சுப்ரதீபர் எழுதியவை’[3]
என அதிரடியாக அறியத்தந்தார். இதே கருத்து,முன்னொரு
சமயத்தில் கசடதபற (1971) இதழிலும்
முன்வைக்கப்பட்டிருந்தது.[4]
வலுவான, உறுதியான ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு
வீரமாமுனிவர் படைப்புகள் தொடர்பான கருத்துகள் எழுப்பப் படாததால், நிலைத்து நின்று
வீரமாமுனிவர் குறித்த ஆய்வுப் பரப்பில் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படாமல்
சிதிலமடைந்துள்ளன.
நடுநிலை நின்று, தேடித் தீர ஆராய்ந்து, ஆவணங்கள், சான்றுகள்
மூலம் வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுக் குழப்பங்களுக்கான
விடைகள் தேடாநிலையே இன்றும் தொடர்கிறது. இதனால் பலரும் பலவாறாகத் தமக்குத் தோன்றியவகையில் – ஏற்கத்தக்க ஆதாரங்களின்
துணையின்றியே - நூல்களிலும் கட்டுரைகளிலும், தகவல் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும்
கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இவ்விசயத்தில் காய்தல் உவத்தலற்ற நேர்மையோடு குறிப்பிட
உரியதென்னவென்றால், வீரமாமுனிவர் குறித்துத் தற்போதுவரை நமக்குக் கிடைக்கும்
செய்திகள் யாவும், மிகப் பெரும்பாலும் அவர் சார்ந்திருந்த கத்தோலிக்கக் கிறித்தவ
மத சபைகள் / நிறுவனங்களது ஆவணங்கள், கடிதங்கள்,பிற பதிவுகள், சான்றுகள்
முதலியவற்றுடன் ; இந்தியாவிலும் அயல்நாட்டிலுமுள்ள கிறித்தவ ஆய்வாளர்களது நூல்கள்,
கட்டுரைகள் முதலியவற்றின் வழியாகவே கிடைக்கின்றன. இருந்தும், வீரமாமுனிவரது வாழ்க்கை, பணி விவரங்களில் உறுதியும் நேரொருமையுமின்றி
மாறுபட்ட தகவல்கள் பரவிக்கிடக்கின்றன என்பது நெருடலாக உள்ளது.
வீரமாமுனிவர் தனது மதப்பிரிவான கத்தோலிக்கக் கிறித்துவப் பரவலுக்குப் பல
இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு மும்முரமாகப்
பணியாற்றியதால், புராட்டெஸ்டண்ட் கிறித்தவப் பிரிவினரும், அவர்களைவிட அதிகக்
காட்டமாக லுத்தரன் பிரிவினரும் பெஸ்கி அவர்கள் குறித்து மாறுபட்ட, வெறுப்புமிழும்
தகவல்களையும் [5] பதிவுகளில் நிறுத்தியுள்ளனர். இவை தவிர்த்துப் பிற சமயத்தாரால் படைக்கப்பட்ட வீரமாமுனிவர் குறித்த
நூல்கள், ஆய்வுகள் மிகச்சிலவே கிடைக்கின்றன.
அயல்மண்ணிலிருந்து
வந்து, தாம் மேற்கொள்ளும் சமயப் பரவல் செய் பணிக்கு இம்மண்ணின் மக்கள் பேசும்
மொழிவாயிலாக அணுகுவதே உசிதமானது என்பதைத் தெளிவுற உணர்ந்தார் தைரியநாதர். ஆர்வமுடன்
முயன்று, தமிழ் கற்றுத் தமிழுக்குப் பலவகைப்பட்ட அரிய, 25 நூல்கள்[6] வழங்கித் தமிழ்வளத்தைத் தனக்கியன்றவரை பெருகச் செய்துள்ளவரான
வீரமாமுனிவரது வாழ்க்கை தொடர்பான ஆதாரம் நிறை செய்திகளும் ஏற்கத்தக்க உண்மையான
ஆவணங்களும் உரியவாறு பாதுகாத்து வைக்கப்படவில்லை. பிற்காலத்தில், “தமிழுக்குத்
தொண்டுசெய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய பாவேந்தரின் உறுதிப்பாட்டை அவர்
சார்ந்த மதத்தவர்களும், அவர்களைப் போலவே தமிழுலகும் முற்றாகச் செயல்படுத்தவில்லையே
என்பது பெரும் ஆதங்கமாக நிற்கிறது.
மாறுபட்டுப் பரவிக் கிடக்கும் வீரமாமுனிவர் வரலாறு குறித்த
விவரங்களைக் காண்போம். தமிழில் முதன் முதலில் (1822 & மறுபதிப்பு 1836)
அச்சேறிய மிகச் சுருக்கமான “வீரமாமுனிவர் சரித்திர வரலாறு” எழுதிய
அ.முத்துச்சாமிப் பிள்ளை, வீரமாமுனிவர் வாழ்ந்த காலத்தை 1680-1742 என்று
குறிப்பிட்டுள்ளார்.[7]
ஆனால், அவரே தனது நூலின் முற்பகுதியில் வைத்துள்ள வீரமாமுனிவர் (Father
Beschi) படத்தின் கீழ் ( Father Beschi’s life by Rev. L.
Bessel, S.J என்று குறிப்பிட்டுள்ள
ஆங்கில நூலிலிருந்து[8])
எடுத்தாண்டுள்ளதாகக் காட்டியுள்ள சிறு குறிப்பில் —
” ... ... பற்பல
நூல்கள் இயற்றி 4-2-1747ல் கடவுள் திருவடி நீழலில் அம்பலக்காட்டில் – இன்புற
வதிந்த பெரியார் “
எனத் தமிழ்ப்படுத்திக்
குறிப்பிடப்பட்டுள்ளது. முத்துச்சாமி பிள்ளையோ, வீரமாமுனிவர் மறைந்தது ‘மணற்பாடு’
என்ற ஊரென்கிறார்; மறைந்த ஆண்டு 1742 என்கிறார். ஆனால் அவரே - மறுப்புக்
குறிப்பு எதுவும் தனது நூலில் வைக்காமல்-
வீரமாமுனிவர் படத்தின் கீழ் எடுத்தாண்டுள்ள- ஆங்கிலத்தில் முதன் முதலில்
எழுதப்பட்ட பெஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலான- பெஸ்ஸியின் (Fr. L. Besse, 1918) நூல் செய்தியோ, வீரமாமுனிவர் மறைந்தது அம்பலக்காடு என்னும்
ஊர்; மறைந்த ஆண்டு 1747 என்கிறது.
வீரமாமுனிவர் குறித்த வரலாற்றுப் பதிவுகளின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த
இவ்விரண்டு முதன்மை ஆதாரங்களையும் நோக்குமிடத்தில் வீரமாமுனிவர் வாழ்க்கை
வரலாற்றுக் குழப்பங்கள் இங்கிருந்தே தொடங்குகின்றன எனலாம். வீரமாமுனிவர்
குறித்த முதல் தமிழ் நூலான முத்துசாமிப் பிள்ளையின் நூலில் பல தவறான செய்திகள் நிறைந்திருப்பதாகப்
பின்னர் (1996 ல்) வெளிவந்த ‘வீரமாமுனிவர் தொண்டும்
புலமையும்’[9]
என்னும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும் கருத்தில் நிறுத்தி மேற்செல்வோம்.
வீரமாமுனிவர் குறித்துக் கிறித்து மத நிறுவனங்கள் வழங்கும் தகவல்களும் மாறுபட்டு நிற்கின்றன. ஹெரிட்டேஜ்
வேம்பாறு (Heritage Vembaru)[10] எனும் தகவலமைப்பு, பெஸ்கி ‘இந்தியாவில் தனது முப்பதாண்டுப்
பணிக்காலத்திற்குப் பின் தமிழ்நாட்டில் 1746ல் இறந்தார்’ என்ற
செய்தி வழங்குகிறது. ஆனால், ‘கத்தோலிக்க சபை வரலாறு குறித்து அதிகாரப்பூர்வ
தகவல்கள் தரும் ஏற்பாடாகத்’ [11]
தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் கத்தோலிக்க
என்சைக்ளோபீடியா (Catholic Encyclopedia) பெஸ்கியின் வாழ்வுக் காலத்தை 1680-1746 எனக்
குறிப்பிட்டிருந்தாலும், ‘அவர் 1744 ல் மணப்பார் மிஷன் ரெக்டராக
நியமிக்கப்பட்டுப் பணியாற்றி, மணப்பாரில் 1746ல் இறந்ததாக’’[12] தகவல் தருகிறது. தைரியநாதராகப் பணி தொடங்கிய அவரது மதுரை சபை
(பின்னாட்களில் டயோசிஸ் Madurai Dioses அந்தஸ்தடைந்தது) அவருடைய வாழ்க்கைக்
குறிப்பை 1680-1747 என வழங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள
பூண்டி மாதா ஆலயம், பெஸ்கி இறைப்பணி செய்த பல ஆலயங்களில், பிரபலமாக விளங்கும் ஒரு
ஆலயமாகும். இது குறித்த தகவலமைப்பு[13]
அதிகாரப்பூர்வமாக வழங்கும் தகவல் குறிப்பு ‘இந்த ஆலயத்தை நிர்மானித்த
கானஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 1680-1742’ என்பதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டியுள்ளது. அண்மையில், ‘தமிழ்க் கத்தோலிசிசம்’ குறித்துச் சிகாகோ பல்கலைக்
கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்திற்கான தனது ஆய்வுக்காக இந்தியாவில்
பெஸ்கி அவர்கள் தொடர்புடைய பல இடங்களிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்த ஆய்வாளர் (Marghereta
Trento, 2022) இயேசுசபை இரங்கல் குறிப்புகளை ( Jesuit
obituary records) நுணுக்கமாக ஆராய்ந்து, அக்குறிப்புகளின்படி, ‘பெஸ்கி,
எந்தச் சூழலில் இறந்தாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாவிட்டாலும், பிப்ரவரி 4, 1747ல் அம்பலக்காட்டில்
மறைவடைந்ததாக முடிவுகொள்ளலாம்’ என ஆய்வறிக்கை அளித்துள்ளார்.[14]
வீரமாமுனிவரது இந்திய வருகையிலிருந்தே பார்த்தோமானால், அவரது இந்தியா
வருகை ‘1710 பிற்பால்’ என ஆங்கில
வரலாற்று நூலாசிரியர் பெஸ்ஸி (Fr. L. Besse, 1818)
குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு எண்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே ‘கிறிஸ்தவமும்
தமிழும்’ என்ற தலைப்பில் இத்துறையில் முதல் நூலினை ஆக்கம் செய்த தமிழாய்வு
அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி,[15] பெஸ்கி இந்தியாவுக்கு 1700ல்
வந்தடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, வீரமாமுனிவர் மறைந்த ஆண்டு 1742
என்றும், மறைவடைந்த ஊர் மணப்பாடு என்றும்[16] நூற்பதிவு செய்து
வைத்துள்ளார். வீரமாமுனிவர் லிஸ்பனிலிருந்து 1709ஆம் ஆண்டு கப்பல் வழியாகப்
புறப்பட்டு இறுதியாக 1710ல் கோவா வந்தடைந்தார்[17] என்று ஒரு ஆய்வுத் தகவல்
உள்ளது. பெஸ்கி 1707 லிலேயே இந்தியாவந்தடைந்து விட்டதாகவும், அவர் 1742ல்
மறைவடைந்ததாக இன்னொரு தகவல் ஒரு பன்னாட்டிதழில்[18] வெளியான கட்டுரையில் காணக்கிடைக்கிறது.
வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டுக் குழப்பங்களோடு அவரது மறைவு குறித்தும்
தெளிவற்ற தகவல்களே பதிவுகளாகி வருகின்றன என்பதை முன்னருங் கண்டோம். சுருக்கமாக, அவரது மறைவு 1742[19] என்றும்; 1746[20] எனவும்; ‘இல்லை’, அவர் மறைந்த ஆண்டு 1747[21] என்றும் வீரமாமுனிவர்
ஆய்வாளர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிகிறோம்.
இக்கட்டுரையில்
முன்னர்க் குறிப்பிட்டுள்ள முத்துசாமிப்
பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள்
அடங்கியிருப்பதாக இராஜமாணிக்கம்(1998)
நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[22]
மேலும் அதே நூலில், ‘’1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச் சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணி புரிந்த பின்,
1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த
குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம்
நாளில் தமது 67ஆம் வயதில் உயிர் துறந்தார்’’[23]எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிலர் இவர் மணப்பாட்டில் உயிர் துறந்தார் என்ற குறிப்பினைச்
சற்றே திரித்து, திருச்சிக்கருகிலுள்ள மணப்பாறையில் அவர் உயிர் துறந்தார் என்றும்
கூறுவதும் காணப்படுகிறது. மணப்பாறைக்கு அருகிலுள்ள மலையடிப்பட்டி என்ற கிராமத்துக்
கிறித்துவ ஆலயத்துக்கருகில் வீரமாமுனிவர் அடக்கம் செய்யப்பட்டடுள்ளதாக ஒரு இடமும்
சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.[24]
மற்றொரு இடத்தில் கிடைக்கும் தகவலின்படி, அவரது உடலடக்கம் செய்யப்பட்ட இடம்
கேரளவில் (கொச்சின் சமஸ்தானத்தைச் சேர்ந்த) சம்பலூர் (Sampaloor) என அறியக் கிடைக்கிறது.[25]
திருத்தங்களுக்குள்ளாகும் வாய்ப்புகளுள்ள
விக்கிபீடியா தகவலின்படி அவர் இறுதி
ஓய்வடைந்திருக்கும் இடம் கேரளாவிலுள்ள சம்பலூர் அல்லது தமிழ்நாட்டிலுள்ள மணப்பாடு [26]எனச்
சமவாய்ப்புக் காட்டுகிறது.
வீரமாமுனிவர் குறித்து இவ்வாறான மாறுபட்ட கருத்துகள் நிலவ ஒரு காரணம்
அப்போதைய கிறித்து மதச்சபையினரிடையே நிலவிய விரிவான பிளவுகளும், அசிரத்தையும் ஆகும்,
வீரமாமுனிவரது நூல்களைப் ஓரளவு பாதுகாத்த அளவிற்குக்கூட அவரது வாழ்க்கை விவரங்கள்,
சமயப்பணி, பயணித்த ஊர்கள், அவர் தமிழ்நாட்டில் தொடர்பு கொண்டிருந்தவர்கள்
(குறிப்பாக சந்தா சாகிப் தொடர்பு, அவரது திவானாகப் பணியாற்றியது); அவரது செயற்பாடுகளின் காலவிவரங்கள் முதலியற்றைக்
கவனம் செலுத்தி ஆவணப் படுத்தாமை பெருங்குறை.முத்துசாமிப் பிள்ளை (தமிழ் 1822,1836,
ஆங்கிலம் 1840) நூலில் வீரமாமுனிவர் –
சந்தா சாகிப் நல்லுறவும், சந்தா சாகிப்பின் திவானாக வீரமாமுனிவர் பணியாற்றியதும்
விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் அச்செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதும் நிகழ்ந்துள்ளது.[27]
இரண்டாவது காரணம் பலரும் தத்தமக்கு எட்டிய நூல்கள் /
செய்திகளிலிருந்து – உண்மை ஆராயும் முயற்சிகள் ஒரு சிறிதும் மேற்கொளாது –
தயங்காமல் நகலெடுத்து சர்வசகஜமாகப் பரிமாறிவருதலாகும்.[28] மூன்றாவது காரணமாக
உணரப்பட்டு, அதிகம் பேசப்படாமலிருப்பது வீரமாமுனிவர் மிகச் சிறப்பான பணிகளைத் தமது
சமயப் பரவலுக்கும் தமிழின் வளம் பெருக்கவும் நிறைவுற ஆற்றியும் கடைசிவரை அவர் ஒரு
பாஸ்டராகவே நிறுத்திவைக்கப்பட்டது ஏன் என்னும் வினாவிற்கான விடையில் இருக்கிறது.[29]
கிறித்தவ மதத்திலேயே போட்டிப் பிரிவினர் ( குறிப்பாக லூத்தரன்
பிரிவினர்) தூற்றினாலும், வீரமாமுனிவரது
செயலாற்றலும் தமிழாற்றலும் மறைக்கப்படாமல் மதிக்கப்பட்டன[30]. ஆனால், அவரது கத்தோலிக்கத்
திருச்சபை அவரை எந்த உயர் பொறுப்பிலும் அமர்த்தவேயில்லை; திருச்சபையில் முக்கிய
நிர்வாகப் பொறுப்பு ஏதும் அவருக்கு வழங்கப்படவேயில்லை; அவரது திருச்சபை தொடர்பான
கடிதங்களும் இயேசு சபை ஆவணக்காப்பகங்களில்(Jesuit Archives) பாதுகாத்து ஆவணப்படுத்தப்படவில்லை[31]; அவர் ஊழியஞ்செய்த
கொங்கனாங்குப்பம், ஏலாக்குறிச்சி,பூண்டி, கூட்டங்குளி ஆகிய ஆலய மக்களிடையே அவர்
அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளதாக பரவலான செவிவழிச் செய்திகள் வழங்கப்பட்டுவரும்
நிலையிலும் வாடிகன் தலைமை அவரைப் புனிதராக அறிவிக்கவோ, வேறுவகைக் கௌரவம் அளிக்கவோ ( Beautification/Canonization) கருதவில்லை இதுவரை. பற்பல சிறப்புகளைத் தமது பணிவழி பேசவைத்துள்ள
வீரமாமுனிவருக்குத் தமிழக மக்கள் சார்பில் அரசு, சென்னை மெரீனாவில் சிலைநிறுவிப்(1968) போற்றி வருகிறது. அவரது திருச்சபை, வீரமாமுனிவருக்கு உரிய சிறப்பு
வழங்கக் காலம் கனியுமென நம்புவோம்.
**
* profrajamuthu@gmail.com
[1]
Name found in the baptismal certificate records. [See:- Sascha Ebeling &
Margherita Trento, From Jesuit Missionary to Tamil Pulavar, The great heroic
sage, 2018.It is said by the Authors that he later used to sign as
Constantius Joseph Beschi ]
[2] For
more and Christian accounts See: Anand Amaldoss, S.J., Gift of the Virgin
Conch-Shell, வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம், Golden Net,
Computers, Trichy, 2018 P.2 & Sascha Ebeling & Margherita Trento,
From Jesuit Missionary to Tamil Pulavar, Constanta Gioseffo Beschi ( 1680-1747), The great Heroic Sage,2018 [‘
The existing literature on Beschi contains numerous errors and variations in
dates, names and other information..’)
[3]
Mu
Arunachalam, An Introduction to Tamil Literature, Gandhi Vidyalayam,
Thiruchitrambalam, 1974. (P 274-279)
[4] நா.கிருஷ்ணமூர்த்தி,
கசடதபற, அக்கம் பக்கம், 5 பிப்ருவரி, 1971 (பக்கம் 16)
[5] See,
for a sample:- Julius Richter, History of Missions in India, 1908, Page
111-113
[6] அவர் பெயரிலுள்ளதாகக்
காட்டப்பட்டுவரும் சுமார் 15 மருத்துவ நூல்கள் தவிர்த்து.
[7]அ.முத்துச்சாமிப்
பிள்ளை , வீரமாமுனிவர் சரித்திரமும் பாடற்றொகுதிகள் முதலியனவும். (மறு
பதிப்பு 1836,). “ காயல்
பட்டிணத்திற்கடுத்த மணற்பாடென்னு மூருக்குப் போயங்குள்ள சேசுசபை மடத்தி
லவரந்தியமட்டு மிருந்த விரண்டு வருஷகாலமு முதிர்ந்தவயதினராயினும் உயர்ந்த
மனமுயற்சியோ டங்கே வேதோபதேசம் பண்ணிக் கொண்டும் , தாம் பாடிய பெருங் காப்பிய
முதலானவற்றைப் பிரசங்கித்துக் கொண்டுமிருந்தார். ஈந்தியாவில் வந்தநேகம் பிரசைகள்
பரலோக இன்ப வெள்ளத்திற் றுளைந்து விளையாடும்படி ஆற்றற்கரிய முயற்சித்துன்ப
வெள்ளத்தி லுலைந்து வருந்திய
சீவகாருண்ணியராகிய வீரமாமுனிவரால் அப்பரலோகத்தை அலங்கரிக்க 1742*ம் ஆண்டு ஆண்டவற்குத்
திருவுளமாயிற்று.” (*மூலத்தில் 1742க்குத் தமிழ் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.) (பக்.19)
[8]
Rev.L. Besse, Father Beschi of the Society of Jesus: His times and his writings, Trichinopoly, 1918
[9] எஸ். இராஜமாணிக்கம், எஸ்.ஜே., வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்,
தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக்
கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம்
பதிப்பு), பக். 66-67.)
[11] The Catholic Encyclopedia: An International Work of Reference on
the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church
(also referred to as the Old Catholic Encyclopedia and
the Original Catholic Encyclopedia.
[12]https://www.catholic.com/encyclopedia/costanzo-giuseppe-beschi
[14]
Marghereta Trento, Writing Tamil Catholicism, Ph.D. Thesis, University
of Chicago,2019 “We have no account of the specific circumstances of
Beschi’s death, but Jesuit obituary
records show that he died in Ambalakkadu on
February 4,1747-See ARSI H.S53, (Defuncti 1741-1750) P.64 -Note 44
[15]
மயிலை
சீனி வேங்கடசாமி, கிறஸ்தவமும் தமிழும், 1936
[16]
முன்னது
பக்.75
[17]
பார்க்க:- Sascha Ebeling & Margherita
Trento, 2018
[18]
Complexity International Journal CJI, Dec 2020
[19]
Gregory James (2019),The Pesky
Ablative: Early European Missionaries, Journal of Portugese Linguistics, 2019ந ; Complexity International Journal (Dec. 2020);
[20]Catholic Encyclopaedia, (https://www.newadvent.org/cathen/02526c.htm) - Costanzo
Giuseppe Beschi "Born at Castiglione in the Venetian
Republic, 1680; died at Manapar c. 1746.
[21]
C.S Srinivasacharyalu, Article in Indian Antiquary, Vol LVL
January (1927); Margherita Trento
(2022); Henry & Owen Chadwick (Ed), Christianity in India From the
Beginnings to The Present, Oxford History of Christian Church, First Edn 2008;
India and Its Missions, The capuchia Mission Unit (CSMC), Macmillan Co.
Newyork, 1923
[22]
எஸ்.
இராஜமாணிக்கம், எஸ்.ஜே., 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 66-67
[23]
முன்னது.
[24]
பார்க்க:-
Anand Amaldoss, Gift of the Conch-shell, Tiruchy, 2018
[25]
He died at Ambalakaadu in Thrissur,
Kingdom of Cochin (now a part of the state of Kerala), and is buried at St.
Francis Xavier's Church, Sampaloor, where his tomb can be seen. https://www.howold.co/person/constanzo-beschi
[26] Kingdom of Cochin, Ambalakkaru, India or Manapad,
Tamilnadu, India, Resting Place: Sampaloor, Kerala or
manapad, Tamilnadu
[27]
See https://tamilnation.org/literature/veeramamunivar.htm- ‘The tradition that he was at one
time prime minister to a native raja is not sufficiently authenticated’; Joseph McCabe, The Jesuits : Religious Rogues (1927) One, Father Beschi, won
a native prince, became his chief minister, and rode about with an escort of
thirty horse and a band.; Also Amaladass (2018)
[28]
See - Sascha Ebeling & Margherita Trento, From Jesuit Missionary to
Tamil Pulavar, Constanta Gioseffo Beschi
( 1680-1747), The great
Heroic Sage,2018 [ The existing literature on Beschi contains numerous
errors and variations in dates, names and other information, as all of them are
copied time and again without verification.]
[29] See- The Month 1889-08: Vol 66
Iss 302- ‘’From the correspondence of
Father Beschi, and the letters addressed to him by his superiors and
fellow-religious in Europe, it may be gathered that the superb advan was in
truth esteemed by savants, and treated with distinction by Nabobs and generals
; but he remained ever what he had been, a poor missioner of Madura, living on
rice and water, and clad in the yellow calico of the sanzasszs (Indian
penitents).”
[30]
See Julius Richter, 1908 (Translated by Sydney H Moore.
[31]
நான்கு
அதிமுக்கியமற்ற (பெஸ்கியின்) கடிதங்களே இதுவரை பல ஆய்வாளர்களால் தேடப்பட்டு
இனங்கானப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment