Friday, July 8, 2022

 

தமிழ்ச் சிறுகதை வரல் ஆறு.

 ஆறு-1

 இராஜ முத்திருளாண்டி

 

பரமாற்த்(த) குருவின் கதை

 

The Adventures of the

GOOROO PARAMATAN

 

A Tale in the Tamul Language: Accompanied

By A Translation And Vocabulary,

Together With An Analysis of

The First Story

 

By Benjamin Babington

Of the Madras Civil Service

 

London

J.M.Richardson, 23, Cornhill,

MDCCCXXII    

என்னும் நூலே அச்சில் முதன் முதலாக (1822) வந்த தமிழ்க் கதைத் தொகுப்பாகும்.

 ‘சிறுகதை’ என்று தற்போது (ஒற்றைச் சொல்லாக) நாம் கையாண்டு வரும் சொல்/ சொற்கூட்டு/இலக்கியவகை அக்காலத்தில் (1882இல்) பிறக்கவே இல்லை என்பதால், முதன் முதலாகத் தமிழ் அச்சுவாகனமேறி உலகு காண வந்த ‘சிறு கதைகளின் தொகுப்பு’ இதுவே என்று உறுதிபடச் சொல்லலாம்.

 ‘வீரமாமுனிவர்’ எனத்  தமிழ்ப் பரப்பில் இன்றளவும் போற்றப்படுகிற, இதாலியிலிருந்து யேசு சபை ஊழியஞ்செய்ய விரும்பி இந்தியா வந்து கி.பி. 1700 இல் கோவாவில் இறங்கிப் பின் தமிழகம் வந்து கால் கொண்டு நின்ற கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (பெஸ்கி) அவர்கள் தமிழுக்கு அளித்துள்ள அளவிறந்த கொடைகளில் – கதை இலக்கிய வகையின் எழுத்துருப் பெற்ற மூலவிதையாகக்   காலங்கடந்து நிற்கும் - இத்தொகுப்பும் ஒன்றாகும்.

தானேற்றுக் கொண்ட சமயப் பரவலுக்கூழியம் செய்ய வந்தவராயினும், மக்களோடு அணுக்கமாக நிற்பதற்கும் அவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவர்களது தாய்மொழியின் மூலம் அணுகுவதே எளிதும் பயன் விளைப்பதாகவு மிருக்குமெனும் ‘நுட்பம்’ உணர்ந்து, தமக்குப் புதிய மொழிகளான தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், பாரசீகம் எனப் பல மொழிகளை ஆர்வமுடன் முயன்று, கற்றுப், பயிற்சி மேற்கொண்டு தமிழில் படைப்புப் பலபடைக்கும் வல்லமை நிறைந்த வித்தகரானார்.  தேம்பாவணி, திருக் கோவிலூர்க் கலம்பகம், அடைக்கலமாலை, கிதேரியம்மாள் அம்மானை, வேதியரொழுக்கம், வேத விளக்கம், தமிழ்-பிரெஞ்சு அகராதி, தமிழ்- போர்த்துக்கீசியம் அகராதி, தமிழ்-லத்தீன் அகராதி, தொன்னூல் விளக்கம், தமிழிலக்கணம், சதுரகராதி எனப் பல படைப்புகளை- செய்யுள், உரைநடை என்ற இரு களங்களிலும் - படைத்தளித்துள்ளார்.

 

 

 

பெஸ்கி அவர்கள் தமிழ் வித்தகம் பெற்றதோடு அமையாமல், தமிழ் முனிவரன்னவே – புலால் விடுத்து, பிராமன போஜனம் தயாரித்து உண்டு, இங்குள்ள இந்து மத வழிபாட்டு முறைகள் சிலவற்றை  கிரிஸ்து ஆலயங்களிலும் அறிமுகப்படுத்தி , இந்து சந்நியாசிகள் போல உடையும் பூண்டு- அறவாழ்வை வெளிப்படையாகத் தொடர்ந்தார். அரியானூர், கொங்கனாங்குப்பம் என்றவிடத்தில் பெஸ்கி நிர்மானித்த தேவாலயத்தில்  தானே ஓவியமாய் வரைந்து, மணிலாவில் வண்ணம் தீட்டப்பட ஏற்பாடுகள் செய்து, குழந்தை ஏசுவைக் கையிலேந்தியுள்ள மடோனா படத்தை முதன்முறையாக கிரிஸ்துவ தேவாலயத்தில் நிறுவினார். இந்த அம்மை, அப்பன், (ஜோசப்), குழந்தையை (ஏசுவை)ப் போற்றும் வண்ணம் இயற்றப்பட்டதே தேம்பாவணி எனும் தேன் தமிழ்க் காப்பியம்.

‘செந்தண்மை பூண்டொழுகிய’ கிரிஸ்து மதப் பிரச்சாரகரான பெஸ்கி அவர்கள், மதங்கடந்து, அனைவராலும் அன்பு பாராட்டப்படும் தன்மையரானார். அதற்கொரு ஒளிரும் எடுத்துக் காட்டாக, இஸ்லாம் மதத்தைக் கைக்கொண்ட  நவாப் ஆன, சந்தா சாஹிப் திருச்சிப் பகுதியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தபோது தனது திவானாகப் பெஸ்கி அவர்களை  நியமித்ததொன்றே (1736) போதுமானது. மேலும், பெஸ்கி அவர்களுக்கு- மன்னர்கள், மதத் தலைமைப் பீடக்கார்களுக் கிணையாகப்- பல்லக்கிற் செல்லும் சிறப்புரிமையையும்  சந்தா சாகிப் அளித்ததாக வரலாறு.

 

கதைக்கு வருவோம்.

 

இத்தொகுப்பு தொடர்பான பதிப்புகள் மிகப் பெரும்பாலும் அவரவர் விரும்பிய கதைகளின் எண்ணிக்கையில், மூலத்திலிருந்து வரிசையும், மொழிநடையும் பெரிதும் விலகி - எளிமைப்படுத்துவதாகக் கருதி மூலநடை விடுத்துச் சமகால மொழியில் எழுதி-  மூலஞ் சிதைந்த, வருத்தப்பட வைக்கும் பதிப்புகளாகவே மலிந்துள்ளன.

பழந்தமிழ் இலக்கியச் செய்யுள்களுக்கு உரையாசிரியர்கள் எழுதியளித்த உரைகள் போக, முழுதும் உரைநடையிலேயே நூல் வடிக்கும் திறனை, (பல செய்யுள் நூல்களுடன்) உரைநடையில் மட்டுமே பத்துக்கு மேற்பட்ட நூல்களை உருவாக்கி, வெளிக்காட்டியது பெஸ்கி போன்ற கிறிஸ்தவப் பாதிரியார்களே. அவ்வகையில் இருநூறாண்டுக்கு மேலான பழமை கொண்ட ‘பரமாற்த்த குரு கதை’ உரைநடையிலேயே முழுநூலையும் எழுதக்கூடும் என்பதைக் காட்டுவதாக இருப்பதால்தான்,  ‘தமிழில் உரைநடையில் ஆக்க இலக்கியம் ஆக்கப்படுவதற்கான அடிக்கல்’ இக்கதைத் தொகுப்பு (கா.சிவத்தம்பி. ப.22) என்றும், சிறுகதை என்பதன் மொழி ஊடகம் உரைநடை என்ற அளவில் பரமாற்த்த குரு கதை ‘தமிழ்க் கதை வரலாற்றிலே ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்தது’ (இரா.தண்டாயுதம். ப.20) என்றும்  மதிப்பிட்டுள்ளனர்.

பெஸ்கி அவர்களது உரைநடை கிட்டத்தட்ட செய்யுள் நடைக்குரிய புணர்ச்சி விதிகளை மிகவுங் கையாண்டு, ஆரம்பகால உரைநடை வழக்கமிதுவே எனக் காட்டியுள்ளார். செய்யுளுக்குரிய புணர்ச்சி முறைகள் கையாளப்பட்டிருக்கும் நிலையிலும், சாதாரண மக்களின் வாய்மொழி வழக்குச் சொற்கள் பல [‘ஐயாவய்யா’ (ஐயா, ஐயா); ‘வெகு வியாபாரியாக்கும்’(பெரியவியாபாரியாக்கும்); ’கோடை நாளாகக் கொள்ள’ (கோடை நாளாக இருந்தமையால்); ‘சொரிந்து விட்டு’( வாரி எடுத்து விட்டு); ‘சுறுக்காய்’(விரைவாய்); ‘சொல்லுங்கோள்’; ‘வெகு வித்தை’ (பற்பல பெரிய வித்தைகள்);  வேணுமோ; சீச்சீ, ] விரவிக் கிடக்கின்றன கதைகளிலெல்லாம்.

மக்களைச் சந்தித்துப் சமயப் பணியாற்ற வேண்டிய ஏசு சபையினர், இக்கதைகளின் மூலம் நடைமுறையில் தமிழ்  மொழியைப் பயன் படுத்தும் அறிவை எளிதாகப் பெறவும், அதற்கான பயிற்சி விளையவுந்தான் -வெற்றுப் பொழுது போக்குக்காக அல்ல- இக்கதைகளை எழுதியளித்ததாக பெஸ்கி லத்தின் மொழியிலெழுதிய  தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

“It is the object of the following pages, to furnish materials for commencing, in this country, the study of Tamul Language, and for this purpose a Tamul Tale has been selected…..

 

The Story of Gooru Paramarthan, is one of the lighter productions of that profound scholar and rare genius, Father Beschi; and if it had any higher aim than the mere amusement which its author might derive from satirizing the Indian Priesthood, it was probably intended as a pleasant vehicle of instruction to those Jesuits whose labours required a knowledge of the Tamul Language. Its grammatical accuracy, the variety of idiomatical expressions and constructions which it contains and the apparently studied manner in which a great number of words are brought together in so small a compass seem to justify the supposition;…..”

-       From the Preface ( extracted from pages ii, iii, iv and v) by Benjamin Babington, The Adventures of the GOOROO PARAMATAN, J.M Richardson, Cornhill, London 1822. (Copy preserved in Tamil Heritage Foundation (THF)

 

 **

 

 

பரமாற்த்த குருவின் கதை

முதலாவது

 

ஆற்றைக் கடந்த

கதை

 

 பரமாற்த்தன்   என்றொரு குருவானவன் இருந்தார்.  அவரேவினதுக் கூழியம் செய்ய  மட்டியும்,  மடையனும், பேதையும், மிலை(லே) ச்சனும் மூடனும் என்றைவர் சீஷர் (சிஷ்யர்)* களாக விருந்தார்கள்.  இவர்கள் அறுவரும் கா(ல்)நடையாக மற்ற சீஷாக்களை (சிஷ்யர்களை) விசாரிக்கக்  கிராமங்கள் வழி போய்த் திரும்பி மடத்துக்கு வருகையில் ஒருநாள் மூன்றாஞ் சாம நேரத்தில் ஓரா ற்றங்கரைக்குச் சென்றார்கள்.

 இந்த நதி கொடிதானதாகையால் விழித்திருக்கும்  வேளையில்  கடக்கப் படாதென்று  குருவானவர்  மிலைச்சனை யேவி ஆற்றி(ன்) நித்திரை சோதிக்க விட்டார்.  அதற்கிவன் புகையிலை சுருட்டிற் றீப்பற்றவைக்க கையிலேந்தின கொள்ளிக்கட்டையை கொண்டு போயதை  ஆற்றை யண்டாது  தூர நின்றெட்டித் தண்ணீரிலே   தோய்த்தான்.

தோய்த்தவுடன்  தண்ணீர் சுறீரென்று புகைந்தது கண்டு  மிலைச்சன் என்பவன்    பதறித் தவறிவிழுந்தோடி ‘‘ஐயோ வய்யா ( ஐயோஐயா) ’  நதியைக் கடக்க விப்போது தறுவாய் அன்று.  அது விழித்திருந்தது; நான் தொட்ட வுடனே நச்சு நாகம் போல் சீறித்தியேரி கோபத்திற்  புகைந்து பாய்ந்தென்னையே எதிர்த்த வெகுளிக்கு நானுயிர் பிழைத்துத் தப்பினதே யதிசியந்தா னென்றான். 

  அதுக்கு குருவானவர் “தேவ திருஉளத்துக்கு நாம் என்ன செய்வோம்.  சற்று நேரம் காத்திருப்போம்” என்று அண்டையில் இருண்ட நிழலை செய்து படர்ந்த பூஞ்சோலையிலு(உ)ட்கார்ந்தார்கள். 

 அங்கே பொழுதுபோக்க வி(இ)ந்த நதியின் பல  விசேஷங்களை அவனவன் சொல்லிக் கொண்டு வரும் அளவில் மட்டி என்பவன் சொன்னதாவது.

  இந்த நதியின் குரூரமும் தந்திரமும் பற்பல முறை என்   பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன் . என் பாட்டன்   வெகு (பெரிய) வியாபாரியாக்கும். அவர் ஒரு நாள் உப்புப் பொதி யேற்றின  இரண்டு  கழுதைகளைத்  தானும் தன் கூட்டாளியுமோ டோட்டிக்கொண்டு நடுவாற்றிலிறங்கி வருகையி ல(அ)ரை மட்டமோடுகின்ற குளிர்ந்த தண்ணீரிலே கோடை நாளாகக் கொள்ளச் சற்றிளைப்பாற தாங்களும் குளித்துக் கழுதைகளையும் நிறுத்திக் குளிப்பாட்டினார்கள்.

பின்ப(பு) (அ)க்கரைக்குச் சென்றவிடத்தில் உப்பெல்லாத்தையும் ஆறு   தின்றதுமல்லாமல், நன்றாய் தைத்திருந்த கோணி  வாயை சற்றுந் திறவாமல் அற்புதமாய் உப்பல்லாம் சொரிந்து விட்டுத் திருடின தாகக் கண்டார்கள். ‘’ஆ!ஆ! இந்த உப்பைப் பிடுங்கிக் கொண்டிருந்ததினாலேயல்லோ வெ(எ)ங்களை யாறு விழுங்காமல் விட்டது மகா நன்மையென்றவர்கள் சந்தோஷப்பட்டார்களெ”ன்று மட்டி சொன்னான்.

அதற்குப் பேதையானவன் மற்றொறு  செய்தி துவக்கினான். “இந்த  வாற்றுக்குள்ள வுபாய தந்திர திருட்டுகள் மெத்த வென்நாளிலே நடந்தது கேட்க.”

  ஒரு நாய் திருடின வாட்டுக்கறிக் கண்டத்தை வாயிலே கவ்விக்கொண்டு நடுவாற்றிலே நீந்திப் போகையிற் கபடமாக ஆறு வேறோரு மாம்ஸத் துண்டு  தண்ணீரிலே காட்டினதாம். நாயோவென்றா லொரு கபடில்லாமல், கண்டது பெரிய தென்று தோன்றினதாலே கவ்வியிருந்த துண்டத்தைவிட்டுப் பெரியதைக் கவ்வ வமிழ்ந்தினபோ(து) ததுவுமிதுவும் போயிற்று. நாயும் வெறுமனே ஊரிற் சென்றதெ”ன்றான்.

 

 இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில (ல் அ)க்கரையி லிருந்து ஒரு   குதிரைக்காரனை வரக் கண்டார்கள். ஒரு சாண் தண்ணீர் மாத்திரமா ற்றிலே ஓடி வருகிறதினாலவன்  குதிரை மேனின்று சற்றுங் கூசாமற் சலசலவென்று கடுகி வந்தான். இதைக் கண்டிவர்கள் “ஐயையோ, எங்கள் குருக்களுக்குங் குதிரை இருந்தா லவரும், அவரையண்டி நாங்களும் பயமில்லாம லாற்றில் லிறங்கலாமே. எப்படியாகிலு மோர் குதிரை வாங்க வேணுமையா”வென்று மன்றாடத் துவக்கினார்கள். பரமாற்த்த குருவா “னிந்தச் செய்தி மேலைக்கு(பிறகு)  பேசுவோம்” என்று, பொழுது சாய்ந்து அஸ்தமனம் ஆன நேரம் கிட்டின தாலே திரும்ப ஆற்று நித்திரை சோதிக்க வனுப்பினார்.

 அப்படியே அந்த கொள்ளிக்கட்டையைத்தானே (அதாவது மிலைச்சனால் ஏற்கனவே நீரிலமிழ்த்தி அணைந்துபோன கொள்ளிக்கட்டையை ) மடையன் கொண்டுபோ யுள்ளே தோய்த்துச் சோதிக்கு மிடத்திலே முன் றீயவிந்ததினாலே (முன்னரே தீ அணைந்துவிட்டதால் ) சற்றும் கிளம்பாததைக் கண்டு களிகூர்ந் தோடிச்சென்று “சமயம் சமய வாய்(த்து) விட்டது, சத்தப் படாது  சுறுக்காய் வாருங்கோள்; ஆற்றுக்கு நல்ல சோத்திய (ஆழ்ந்துறங்கும்) நேரமாயிற்று. இப்பொழு தஞ்சவுங் கூசவுந் தேவையில்லை”யென்றான்.  

 இந்த நன்மையை மடையன் சொல்லிக் கூப்பிட, யெல்லோருந் திடீரென் றெழுந்து கிமாவென்பாரின்றி (சோம்பலேதுமின்றி) யறுவரும் பதலமாக (பதனமாக)ஆற்றி லிறங்கினார்கள். காலாலடிபட்ட லைகள்  (அலைகள்) முதலாய் சலசலவெனன்னுஞ் சத்தம் மிடாதபடிக்கு வைத்த  ஒவ்வோ ரடிக்கும் காலைத் தண்ணீர் மேலெடுத்துத் தூக்கி யப்பாற்ப் பேர்த்தூன்றித் துணுக்கென  நெஞ்சம் பதை(பதைக்க)க்த்  தாண்டி தாண்டி நதியைக் கடந்து போனார்கள். 

 கரை சென் றேறினவுடன் பட்ட சஞ்சலத்துக்கு அளவாக மகிழ்ந்து துள்ளிக் கொண்டாடியிருக்கிறபோது,  பிந்தி நின்ற மூடன் என்பவன் தன்னை கூட்டாமல் மற்றவர்களை யெண்ணினான். எண்ணினவிடத்தி லைவர் மாத்திரம் கண்டதனால், “அப்பாடா, வப்பாடா, ஒருவன் ஆற்றோடே போனானே! யிதனா லைந்துபேர் மாத்திரம் நிற்கிறோமையா” என்று (அ)பயமிட்டான்.

 எல்லாரையும் வரிசையாய் நிறுத்தி இருமுறை, மும்முறை குரு தானே  கணக்குப் பார்க்க வப்போதுந் தன்னை நீக்கி யைவர் மாத்திரம் நிற்கிறோ மென்றார். அப்படி யவனவன் தன்னைவிட்டு ஒழிந்தவர்களை(மற்றவர்களை ) மாத்திரமே கூட்டினதாலே ஒருத்தனை ஆறு விழுங்கினது தங்களுக்குள்ளே நிச்சயம் ஆயிருச்சு

 அதற்கு அவர்கள் ‘கூகூ’ வென்று அலறிக் “கோ”வென்றழுது தம்முள்ளே யொருவனைஒருவன்  கட்டிக் கொண்டு “நிஷ்டூர நதியே கறட்டினுங் கடிதே: புலியினுங் கொடிதே;  லோகாத்தியந்தம் (உலகமெலாம்) வணங்கி வாழ்த்திப் பணிந்து புகழப்படும் பரமாற்த்த குருவின் சீஷனை(சிஷ்யனை) விழுங்க சற்றும் அஞ்சாதே போனாயோ? உனக்கு அத்தனை பெரிய நெஞ்சோ?    (துணிவோ?) கருங்கறட்டு மகனே! கொடும் வேங்கைப் பிறப்பே! நீ இனி லோகத்திலாவாயோ? இனிக் குளும் புனலை யுருட்டிப் போவாயோ?உன் ஆற்று முழுவதும் வற்றிக் காய! உன் னடி மணலிலே கானல் பாய! உன்னலைகளை அக்கினி மேய! உன் வயிற ழன்று வறள! உன் பள்ள(ம்) முள்ளாலே நிரம்ப ! இனி ஈரமின்றிக் குளுமையின்றி, நின்றவிடத்தடையாளமின்றி  வெந்து கிடக்க” வென்றார்கள்

 இப்படிப் பற்பல வசையுந் திட்டும் கை நெரித்து விரல் முறுக்கி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஆகிலும் பதறின மிலைச்சத் தனத்தினா லந்நேரம்மட்டும்  தங்களுக்குள் ளாற்றிலே போனவனி ன்னாரென்று ஒருவனு மறியவில்லை; அவனெவனென்று விசாரிக்கவுமில்லை.

 அத்தறு வாயிலே   வழிப்போக்கனாகப் புத்திமானொருவன் சென்று மனதிரங்கி “எதையாவேது வந்ததுரிதமென்ன சொல்லுங்கோளெ”ன்று கேட்டான். அவர்களும்  ஒழுங்குப்படி நடந்ததைச் சொல்ல, அவனிவர்கள் மிலைச்சத் தனத்தை நன்றாய்க் கண்டு கொண்டு “முன் னானது மெல்லாமாயிற்று; நீங்கள் எனக்கு ஒத்த வெகுமானத்தைப் செய்வீர்களானா லாற்றோடே போனவனை யிங்கே யழைப்பிக்கவே யெனக்குத் திராணி உண்டு.வெகு வித்தை படித்தவனாக்கு மெ”ன்றான்.

 அதுக்குக் குருவானவர் சந்தோஷப்பட்டு “நீ யிப்படி செய்தால் வழிக்கு நான்  வைத்திருந்த (வழிச் செலவுக்கு வைத்திருந்த) நாற்பத்தஞ்சு  பணமும் உனக்கே தருவோம்’’ என்றார்.

  அவனும் கையிலேந்தின தடியை யோங்கி “யிதிலேயாக்கு மிந்த வித்தையோடிருக்குது.    நீங்கள் நிரை நிரையா யிருந் திந்தத் தடியால் முதுகிலோரடி படவே யவனவன் தன் பெயரைச் சொல்லி யெண்ணிக் கொண்டு வந்தால் அறு வரும் இங்கே வந்திருக்கப் பண்ணுவேன்” என்றான்.

 இப்படி யவர்களை நிறுத்தி முந்தி முந்திக்  குருவின் முதுகின் மேலே பலக்க வோரடி போட,அவரும்  “அப்பா நான்தான் குருவென” அவன் ஒன்றென்றான்.   இவ்வா றிவ னெல்லாரையும் ஒரு வீச்சு வீசவே, அவர்களுந்  தங்கள் பெயர் வேறு வேறாக உச்சரிக்கவும்  கணக்கேற்றவு மாறு பெயரி லொருவனுங் குறையாமல் நிற்கக் கண்டொத்துக் கொண்டார்கள். ஆகையா லதிசயப்பட்டு, வந்த தேவ வித்தைக்காரனை மிகவும் ஸ்தித்து, சொன்ன பணத்தைக் கொடுத்து விட்டுப் போனார்கள்.

**

 * ( இக்கதை முழுதும் அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை 1822 பதிப்பு மூலத்திலில்லை. வாசிக்கச் சற்றேதுவாகட்டுமேயெனக் கருதி நான் சேர்த்தவை.)

**

 


Wednesday, July 6, 2022

 

தமிழ்ச் சிறுகதை வரல் ஆறு.

 நதிமூலம்-1

 

இராஜ முத்திருளாண்டி.

 

  

கதா மஞ்சரி

 

கதா மஞ்சரி  என்ற தலைப்பில் சென்னைக் கல்விச் சங்கத் தமிழ் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியாரால்  தொகுத்து,

சாலிவாகன சகாப்தம்  சக வருடம்

(1827 ஆம் ஆண்டு) பதிப்பித்த   நூலில், 

பாயிரமாகமாகக்  கீழ்க்கண்டவாறு  பதிவிடப்பட்டுள்ளது.

 

மஹா ராஜ ராஜ ஸ்ரீ -  ரிச்சார்ட் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராக யிருந்த    காலத்தில்-  தமிழ் படிப்போர்-  தொடக்கத்திற்    படிக்கத் தக்கதோர்  கதை     திரட்டுவாய் என்றேவ, மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் - பல கதைகளை யிவ்வாறின்றி யேற்றவாறு சிலவிடத்துச்  சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதா மஞ்சரி யெனும் பெயர்தந்திவ்வாறிக்கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.

   தொடக்கத்தில் தமிழ்   படிப்பவர்க்கு   உதவி செய்வதற்காக’ எழுதப்பட்ட கதைகள்  என்பதால் முதலில்  மிகச்சிறு கதையாக பிரித்தல், கூட்டல் என்று இரு பகுதிகளாக கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.

கதாமஞ்சரியின் நோக்கம்,  தொடக்கத்தில் தமிழ் படிப்போர்க்கு உதவுதற்காக என்பதால்,  மெல்ல,  ரயில் எஞ்சின்   கிளம்பி,  கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து,  பெரும் பயணம் தொடர்வதுபோல்,  

மிகச்சிறிய அளவில் (பிரித்தல்,  கூட்டல் என்று) தொடங்கிப்  பின்னர் உள்ள ( அக-81) கதைகள்  பிரித்தல்  கூட்டல் என்று தனியாக இல்லாமல், ஒரு பக்கம் இரு பக்கம்  என்று அளவு விரிந்து பெரிதாகிச் செல்கிறது

  பிரித்தல்

  எந்த-  உயிரையும்- கொல்லாத-  ஒரு சந்நியாசி-  ஒரு- ஏரி- கரை- மேலே  - போனான்-  போகும் -போது- ஒரு- செம்படவன்- அந்த- ஏரியிலே-   மீன்-   பிடித்தான்-  சந்நியாசி-  செம்படவனை- பார்த்து- ஐயோ- நீ- எப்போது- கரை- ஏறுவாய்- என்றான்-  ஐயா- என்-   பறி - நிரம்பினால்-கரை-   ஏறுவேன் என்றான்.

 கூட்டல்

 எந்த உயிரையுங்  கொல்லாததொரு சந்நியாசி யோரேரி கரை மேலே போனான்- போகும்போதொரு செம்படவனந்த வேரியிலே மீன் பிடித்தான்- சந்நியாசி செம்படவனைப் பார்த் தையோ நீ யெப்போது கரையேறுவாய்  என்றா னையா என் பறி நிரம்பினால் கரையேறுவேனென்றான்..

 இக்கதை நான்கே வாக்கியங்களில் பின்னப்பட்டுள்ளதுதான். 

ஆனால், ’கரையேறும் தத்துவம்’ உட்பொருளாகி 

மன ஏரி  பரவி நிறைக்கிறதே.

 

உயிர்வதை அஞ்சும் (உண்மையான) சந்நியாசி, “ஐயோ, இந்த மீன்பிடிக்கும் செம்படவன், நீரில் சர்வ சுதந்திரமாய் நீந்திக் களித்துவரும் மீன்களைப் பிடித்து, அறுத்துச் சமைத்து உண்டு வாழும் உலக வாழ்க்கையிலிருந்து எப்படி (வாழ்க்கையின் உன்னத மறுகரையான) சொர்க்கத்திற்குக் ‘கரையேறுவானோ’? என்று கரிசனத்துடன் கலங்க, வயிற்றுப்பாட்டிற்கும் வாழ்க்கையோட்டத்திற்கும் மீன் பிடித் தொழில் செய்  செம்படவனோ, மிகச் சாதாரணமாக “ ஐயா என் ‘பறி’* நிரம்பினால் உடன் கரையேறி விடுவேனே” என்பதும் ஆழ்ந்த தத்துவக் கடலாய் விரியுந் தகைமை கொண்டதன்றோ?

 அவரவர் ‘பறி’ நிறைவதெப்போ?

கரையேறுதல்’ சாமான்யர்களுக்கும் இயல்வதெப்போ?

 

‘கரையேறி’ச்சென்று கொண்டிருக்கும் சந்நியாசியும்-

அமிழாது, அமிழ்ந்து போகும் வாய்ப்புகளும் அகலாது, நீருள் நிற்கும் செம்படவனும்-

 நமக்கு நிறையச் சொல்வார்கள்...,

கதைக்கு வெளியிலுங் கருத்தை நிரப்பினால்.

 வந்து நிரம்புக.

 

------------

 *(மீன் கூடை/ குடுவை. மீனவர்கள் மீன் பிடித்துப் போட்டுக்கொள்ளக் குருத்துப் பனையோலை அல்லது இளமூங்கிற் குச்சிகளால் சுரைக்குடுக்கை போன்றதொரு வடிவில்-பிடித்து உள்ளே போட்ட மீன் துள்ளி வெளியே வராதவாறு குறுகிய வாய் கொண்டதாக-வனையப்படுவது.)

 *