இற்செறிப்புக் காலத்துக்கு முந்திய
ஒரு நாளில் (அக் 2019)
இளவல், முனைவர் வாசுதேவன் ( தமிழ்த்துறைத் தலைவர், பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி) எனக்கு வாட்டர் மேன், பாரிஸ்
( ஒரிஜினல்) பேனா அன்பளித்தார்.
(அடிக்கடி இவ்வாறு நண்பர்களுக்கு நல்லன அளித்து அன்பு காட்டுவார். அப்பட்டியலில் நானும்.)
சட்டைப்பையில் வைக்கவே கம்பீரமாக இருக்கிறது.
பேனா கொண்டு எழுதுவதே அரிதாகிவிட்டது.
இப்போதெல்லாம் கையெழுத்துப் போடத்தான் பேனா.
( அதற்கும் அதிக வாய்ப்புகளில்லை தற்போது.)
வங்கிக்கு எடுத்துப் போனால் வாட்டர்மேனை இரவல் கொடுக்கத் தயக்கம் வருகிறது.
இரண்டு பேனாக்களை ஓரிருமுறை எடுத்துச்சென்றேன்.
நாம் எப்போது வருவோம் எனக் காத்திருந்தது போல்
" சார் கொஞ்சம்..." என ( அதற்குமேல் பேசினால் வங்கியில் வட்டி போட்டுவிடுவார்கள் எனக் கருதி...) எழுதுவதுபோல் கையைப் பாவனை செய்து
நம் சட்டைப் பாக்கெட்டில் கண்ணைப்போட்டு 'கேட்பு' நடைபெறும்.
இரண்டு பேனா எடுத்துச்சென்ற புத்திசாலித்தனமான நாளது.
வாட்டர்மேனைக் கவனமாய்ப் பார்த்துத் தவிர்த்துப் பால்பாய்ண்ட் பேனாவை வள்ளல்போல வழங்கினேன். ( திருப்பித்தராவிட்டாலும் ஒப்புதலே எனும் பாவனையில்)
வங்கிமேலாளரிடம் பேச வேண்டியிருந்தது. அவரது அறைக்கதவைத் திறக்குமுன், அருகில் வந்த மற்றொருவர் (அம்மணி)
" சார் கொஞ்சம் பேனாக் கொடுத்துட்டுப் போங்க" என வங்கியிலுள்ள அனைவருக்கும் கேட்கும் ஸ்தாயியில்--
நான் ஏதோ அவரிடம் பேனா வாங்கிவிட்டுக் கொடுக்காமல் மறந்து செல்வது போல
அனைவரும் எனைப் பார்க்க...
'எடுக்கவோ?கொடுக்கவோ?' என நான் தடுமாற,
ஆபத்பாந்தவனாய் முதலில் என்னிடம் பேனா வாங்கியவர்
தேடிவந்து
" சார், தேங்ஸ்" என்று பேனாவைத் திருப்பித்தர,
அப்பாடா பிழைத்தேன்.
அந்தப் பேனாவையே அம்மையாருக்குத் தந்துவிட்டு ( விட்டு) மேலாளர் அறைக்குள் நுழைந்தேன்.
அங்கொருவர் படிவத்தில் கையெழுத்திடும் பால்பாய்ண்ட் பேனாவை அசுர வேகத்தில் உதறிக் கொண்டிருந்தார்.
உள்நுழைந்த என் சட்டைப்பாக்கெட்டைக் கழுகுப்பார்வையாய் அவர் பார்க்கும்போதே புரிந்துவிட்டது.
வாட்டர்மேனுக்குக் காத்திருக்கிறது வேற்றுக்கை என்று.
நல்லவேளை.
வங்கி மேலாளர் ( என் மகளின் பள்ளித் தோழி)
"இந்தாங்க சார்" என அவரது பேனாக்குவியலில் இருந்து
கையுதறிக் கொண்டிருந்தவர் கேட்காமலே ஒரு பேனாவை எடுத்து நீட்ட..
வாட்டர்மேன் கைமாறுதல் நிகழ்வு ஒருவாறாகத் தள்ளிப்போயிற்று.
கையுதறியின்
வேலை முடியட்டும் எனச் சைகையாலே மேலாளருக்குச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன்.
சுற்றி என்ன நடக்கிறது எனத் திரும்பிப் பார்த்தால்,
மேலாளர் அறையில் நுழை தருணத்தில் என்னிடம்
(அந்த இரண்டாவது) பேனா வாங்கிய அம்மணி
படிவம் ஏதோ பூர்த்திசெய்ய பேனாவும் தாளுமாக ஒரு சிலரை அணுகிக் கொண்டிருக்கும் காட்சி கண்ணாடி வழியே.
சரி...வெளியே சென்று அந்த அம்மைக்கு உதவி வரலாமா என நினைக்கும்போது,
பேனாவுக்காக வந்துவிட்டேனோ என அற்பமாகப் பார்ப்பாரோ என்று ஐயமும் எழுந்தது.
எழுந்து சென்று உதவவில்லை.
நாம் வெளியே செல்லும்போதும்
அதே நிலை தொடர்ந்தால் உதவலாம் எனச் சமாதானமாகி அமர்ந்து விட்டேன்.
அச்சமயத்தில்
வாட்ஸப்பில் எனது மாணவர் வெங்கடேசன் பகிர்ந்த (கீழுள்ள) சுஜாதாவின் 'இங்க் பேனா' வந்தது.
ஆகா என்ன பொருத்தம்?!
இதோ
எனது பேனாப்புலம்பலுடன்...
சுஜாதாவின் " இங்க் பேனா"வும்.
*
இங்க் பேனா
- சுஜாதா
ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது -
அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.
நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி, பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.
"இங்க் பென் இருக்கா?"
ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.
"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"
"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"
வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.
இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ?
12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.
நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!
சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.
நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.
கடைகளில் தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்
படுத்துவார்கள். பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.
பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது. ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.
படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும். ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும்.
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்த மாட்டார்கள்.
புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.
கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.
பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.
கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு. பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.
இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.
கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.
இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.
என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது. ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம் தொலைத்துவிட்டோம்.
---
நான் ரசித்தது பிறர் ரசிக்க.
No comments:
Post a Comment