அண்மையில்
+ 2 தேர்வுகளில் சிறப்பான நிலையடைந்த
தேவானை, குறிசொல்லும் குழுவாகச் தொடர்ந்து வாழ்ந்து வரும் பழங்குடி மக்களிடையே காணப்படும் புகைப்படம் ஒன்றில் சென்ற ஆண்டு நான் கண்ட ' நல்லகாலம்' ஒரு ஓரமாய் நிற்பது போல் ஒரு எண்ணம்.
(ஆதலால் இது மீண்டது)
*
மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
தளிர் இளைஞன்.
பொத்தலால்களாலான கருப்புக் கோட்;
அழுக்கே நிறமான தலைப்பாகை.
காவியே சாயம்போன கைலி (அ) வேட்டி.
கையில் குடுகுடுப்பை;
கனவேகமாக
"நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது"
அவன் வாயிருந்து ஓடுது.
இருபுறமும் சேர்ந்து
பதினான்கு வீடுகளேயுள்ள குறுக்குத் தெரு எமது.
நாய்களின் குரைப்பை மீறிக் கீச்சாய்
'நல்ல காலம் பொறக்குது' கேட்கிறது.
நாங்கள் நாய் வளர்ப்பதில்லை;
எதிர்வீட்டு 'வெள்ளை'
எம் வாசலில் யார் நின்றாலும்
கத்திக் காட்டிவிடும்.
வேகப் பரவலாய் அவன்நடை...
அட!
கால்களிற் செருப்புமில்லை.
எந்தக் கதவும் திறந்தபாடில்லை.
எப்படி வரும்?
நல்ல காலம்,
அவனுக்கு?
சரசரவென இறங்கினேன்.
முதன் முதலாக வேலைக்குப் போகத் தைத்த கோட்.
சேராது யாருக்கும் வீட்டில்.
இருப்பினும் கிடக்குது பலகாலம் பீரோவில்.
40 ஆண்டுமீறிய
நினைவுப் பொக்கிஷம்!
தெருக்கோடிவரை சென்று வெறுங்கையோடு திரும்பியது
'நல்லகாலம்.'
' தம்பி, இந்தா' என்றேன்
கேட்டின் பின்
நம்ப மறுத்து நின்றான்;
கை கண்டான்.
உணர்ச்சி வசமோங்க
'நல்லகாலம் பொறக்குது, ' 'நல்லகாலம் பொறக்குது'
எனக் கிளிப்பிள்ளையாய்க் கீச்சிட்டான்.
'ஆமாம் 'என்றேன்.
வாங்கிக்கொண்டான்.
எதிர்வீட்டு வெள்ளை குரைத்துக் குவிக்கிறது...
வெகுநேரம் அவன் தெருவிலகிப்
போவதையே பார்த்துக்கொண்டு பூட்டியகேட்டின் பின் நின்றேன்.
நல்லகாலம்,
வெள்ளை உடனுறை
நாய்கள் குறைப்பு நின்றது.
- பூவனத்தான்
சூலை 23, 2019
No comments:
Post a Comment