Friday, September 11, 2020

 ஒரு விவாதம்.


நான், என் தரப்பின் நியாயத்தை நிறுவிக் கொண்டிருக்கிறேன்.

எரிச்சல் புகைந்து விட்டது போலும் எனக்கு மேலலுவராகப் பணிக்கப்பட்டிருந்த அதிகாரத்துக்கு.(ஐ.ஏ.எஸ்)

"நான் யார்னு தெரியுமா? You are after all an Assistant Professor....." 

எனஎன்னைப்பார்த்து அந்த அதிகாரம்  கேட்டது.

சுருக்கென உயிர் பறிக்கும்

சொல்வேல் பாய்ந்துவிடுமோ என்தரப்பிலிருந்து

 ஏதும் 

இராசாபாசம் நிகழ்ந்து விடக்கூடாதே  

எனப் பதறி,

உடனிருந்த அமைச்சர் என்னை அதிகாரத்திடம் சுட்டிக்காட்டி

"அவர் யாரென உங்களுக்குத் தெரியுமா?"

எனச் சமாதானத் தீயணைப்புச் செய்தபோது

எழுந்த நினைவு....

( அதன் பின்னர் நிகழ்ந்தவைகள் பொது வெளிக்குரியவை அல்ல. 

ஆனால் அந்த அதிகாரம் 

அதற்குப் பின் 

என்னைக் காண நேரும் போதெல்லாம் கண்களை வேறுபுறம் திருப்பிக் கொண்டு  'காணாத பாவனையோடு' விரைவதைக் கண்டு நகைத்திருக்கிறேன்.)

*

( மிகப் பிற்பாடு எழுத்தில்.)



நான் யார் தெரியுமா?


நானென்பதே நானல்ல!

நான் என நான் நினைத்துக் கொண்டிருப்பதும் 

நானல்ல;

நான் என 

நீங்கள் காண்பதோ-

நினைத்துக் கொண்டிருப்பதோ 

எதுவும் நானல்ல;


நானென்பது நானேயறியாமுன்

நானென எனை 

என்னவாய்க் காண்கிறீர்கள்?

கருதுகிறீர்கள்?


என்னைப்பற்றி

எனக்கே தெரியுமுன்-

என்னைப்பற்றி

எதைவைத்து 

'இது இவனென' என்னைக் கொள்கிறீர்கள்?


யாருக்குத் தெரியும்?

நான் யார்?

நான் யார்?

அது சரி

உங்களை உங்களுக்குத் தெரியுமா?

தெரிந்தபின் 

வருக... ...தவறாமல்;


வந்து,

'நான்' யாரென உறுதியாய்ச் சொல்லுங்களே...

காத்திருக்கிறேன்....

அதுவரை

'நான்' யாரெனத்

தெரிந்து கொள்ள ஆவலுடன்-


நான் யாரெனத் தெரிந்து கொள்ள

முயன்று கொண்டே...

இறுதிவரை.

வருவீர்கள்தானே?


_ பூவனத்தான்

(Posted in Facebook on 21-7-2020)

No comments:

Post a Comment