Friday, July 23, 2021

 அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் எழுதப்படுவதற்கும் தமிழில் கையெழுத்திடுவதற்கும் 


தற்போதைய அரசு ஆணைகள் வழங்கி இருப்பது குறித்து நெடுநாள் நட்பினர்,

 

மூத்த (ஆனால் காட்சிக்கு இளைஞர்) பத்திரிகையாளர்

Thiruvengimalai Saravanan அவர்கள் பதிவிட்டிருந்தார்.

இப்பின்னூட்டம் அங்கு நட்டது... இங்கும்.

இது 1971ல்.


ஆங்கிலத்தில்  அப்போது என் பெயர் R Mutthirulandi என்றிருந்தாலும்,

மிக முன் காலத்திலிருந்தே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே எனது கையெழுத்து.


அரசுக் கல்லூரிப் பணியில் 1971 திருவண்ணாமலை அரசுக்கல்லூரியில் முதல் மாத ஊதியம் பெற-


முன்சொன்னவாறு- தமிழில் கையெழுத்திட்டேன்.


பதறிப்போய் அலுவலகக் கண்காணிப்பாளர் ஊதியப் பதிவேட்டை முதல்வருக்கு ( வேதியியல் பேரா.டி.கே.மீனாட்சி சுந்தரம் அவர்கள்) எடுத்துச் சென்று காட்டிவிட்டு வந்தார்.


" உங்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லி முதல்வர் சொல்லியுள்ளார். அவரைப் போய்ப் பாருங்கள்" என்றார்.


நான் முதல்வரை அவரது அறைக்குச் சென்று பார்த்தேன்.


 "நீ  ( அவர் அப்படித்தான்) எப்படி இங்கிலீஷில் இருப்பது மாதிரி கையெழுத்திடாமல் 

வேறு மாதிரி கையெழுத்திட்டாய். உனக்குச் சம்பளம் வழங்க முடியாது" என்றார்.


பணியில் சேர்ந்த முதல் மாதமாக இருந்தாலும் அப்போதே


 'நாமார்க்கும் குடியல்லோம்,

நமனையஞ்சோம்' 

என்பது தான் நம் நிலைப்பாடு.


"சார், நான் ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்தும் போட்டுவிட்டேன்.

சம்பளம் மறுப்பதெனில் தனியே எனக்கு அதற்கு எழுத்துப்பூர்வ ஆணை வழங்குங்கள். அது இல்லாமல் எனது சம்பளத்தை நிறுத்தி முடியாது " என்றேன்.


" starving" என்று இயக்குநருக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்" என்றேன்.


இதை அவர் எதிர்பார்க்கவில்லை.


"நீ தமிழில் கையெழுத்திட்டிருப்பதை அடித்து விட்டு இங்கிலீஷில் போட்டுட்டு வா. சம்பளம் தரச் சொல்கிறேன்" என்றார்.


மீண்டும் நான் 

" சார், நான் இந்தக் கல்லூரியில் பணியில் சேரும் போதே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே கையெழுத்துப் போட்டுள்ளேன். ஆகவே, அந்த இராச முத்திருளாண்டிக்கு நீங்கள் சம்பளம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்" 

என்று வாதிட்டேன்.


உடனே மிக அழுத்தமாக அலுவலகத்திற்குப் பெல் அடித்தார்.


அப்போதைய பணியாள் ( பெயர் நினைவில்லை)


 " இன்னா சார் ?" என்றபடி வந்தார். ( அவரும் அப்படித்தான்.

முதல்வருக்கு மட்டும் தான் 'இன்னா சார்'.எங்களுக்கெல்லாம் 'இன்னாப்பா தான்!')


"யோவ் இந்தாளு joining reportஐ சூப்பரண்ட்டை எடுத்துட்டு வரச்சொல்லு" 

என்று கத்தினார். 


சிறிது கழித்து 

எனது பணிசேர் அறிக்கையுடன் கண்காணிப்பாளர் வந்து முதல்வரிடம் 

அத் தாளை நீட்டினார்.


முதல்வர் முகத்தில் ஈயாடவில்லை.

என்னை மேலுங்கீழும் பார்த்தார்.


"வேலைல சேரும்போதே வினை" எனத் திருவண்ணாமலையில் அன்று சபித்தார். ( பணிசேர் அறிக்கையில் ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் கையெழுத்திட்டிருந்ததுதான் காரணம்! 

பணியிற் சேர்ந்த நாளில் 

ஐந்தாறு பேர், நானும்- 10(a)1 சேர்ந்ததால் அன்று கவனிக்கவில்லை போலும் கல்லூரி முதல்வர்)


மெல்லிய, சிவந்த அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க

( அதுதானே சொல்லனும்) கண்காணிப்பாளரிடம்

" யோவ், இவன் சம்பளத்தைக் கொடுத்துத் தொலையா" என்று வாழ்த்தினார்.


முதல் மாதம் சம்பளம்  (475+25-5) பெற்ற கதை முற்றும்.


( ம்க்ஹூம்... எங்க முற்றும்? ...

அப்புறம் பல முட்டும் தொடர்ந்தே!)

No comments:

Post a Comment