Friday, July 23, 2021

UBUNTU

'உபுண்டு' குறித்து நட்பினர் பதிவொன்று   முகநூலில் இன்று கண்டதும் நினைவில் பொறி கிளம்பியது.


தேடிக் கிடைத்தது இது.


அங்கேயே பின்னூட்டமாக  இட விரும்பினேன்.

Mark Zuckerberg இடந்தரவில்லை.


எனவே இங்கே மீண்டும் பதியனிடுகிறேன் முந்தைய (ஏப் 14,2019) எனது முகநூல் பதிவை.


UBUNTU என்பது 


'மானிட இணக்கம்' 


என்னும் மகத்தான தத்துவத்தை 

மிக எளிதாய்ச் சொல்லும் ஒரு ஆப்பிரிக்கச் சிறுகதை.


இதோ, அது 

என் தமிழில்.

*

மானிடவியல் வல்லுநர் ஒருவர் 

ஆப்பிரிக்கப் பழங்குடியினச் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு வைத்தார்.சுமார் 20- 25 சிறுவர்கள் அங்கே இருந்தனர்.


------------------------

விளையாட்டு இதுதான்:

-----------------------


ஒரு கூடை நிறைய அந்தச் சிறுவர்களின் நாவில் எச்சில் ஊறச் செய்யும் 

சாக்லேட் மற்றும் பிற இனிப்புகளை நிரப்பி வைத்து, 


அதை சுமார் 100 அடி தூரத்தில் ஒரு மரத்தடியில் வைத்தார்.


அவர் சொன்னார்:

 " நான், 1,2,3, go என்று சொல்லி ஒரு விசில் அடிப்பேன். 


உங்களில் யார் முதலில் ஓடி வருகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய அளவு இந்த இனிப்புகளை அள்ளிக் கொள்ளலாம்.

அடுத்தடுத்து வருபவர்கள் அதே மாதிரி தமக்கு வேண்டிய அளவு அள்ளிக் கொள்ளலாம்.

முன்னால் ஓடி வந்தவர்கள் யாவற்றையும் அள்ளிக் கொண்டுவிட்டால், பின்தங்கி வருபவர்களுக்கு ஏதும் இல்லாமல் போகலாம். ஆனால், இதுதான் விளையாட்டு. ஆகையால் ஏமாற்றம் யாரும் அடையக்கூடாது '' என்று விளக்கினார்.


( அவர் நினைத்தது,  'இந்தப் பசங்க இது மாதிரி சாக்லேட், இனிப்புகளை இதுவரை பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆகவே கடும் போட்டி இருக்கும்' என.)


'ஆரம்பிக்கலாமா?' எனக் கேட்டு,

 '1,2,3 go' 

எனச்சொல்லி விசில் அடித்தார்.


அம்பு போல ஓடிவரப்போகிறார்கள் எனத் தூர விலகி நின்றார்.


அங்கே அவரது வாழ்வின் அதிசயம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருந்தது.


என்ன?


விசில் அடித்ததும் இந்த ஏழைப் பழங்குடியினச் சிறுவர்கள் 

இனிப்புகளை ஓடிவந்து அள்ளிக்கொள்ளக் கடும் போட்டி போடப்போகிறார்கள் என எண்ணினார்.


விசில் அடித்ததும் நிகழ்ந்த அதிசயம் என்ன?


'உபுண்டு ' என ஒரு குரல் முதலில் கேட்டது.


பிறகு  எல்லாச் சிறுவர்களும் 'உபுண்டு' எனக் கோரஸாகக் கத்திக்கொண்டே, 


ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு,


ஒரு சிறுவர் அலை திரண்டு வருவது போல --


அதிகாலைப் பறவைகள் 

கூட்டமாகச் சேர்ந்து சிறகு விரித்துத் தம் இலக்கு நோக்கி வானளப்பது போல --


ஒரு சேர 

' உபுண்டு' எனக் குரல் எழுப்பிக் கொண்டு


கரையருகு வரும் அலையென 

மித வேகங்காட்டி 

வந்து கொண்டிருந்தனர்.


வியந்து , 


வியப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார் வல்லுநர்.


மரத்தருகே வந்த பின்

விளையாட்டு 

விதியின் படி கூடையைத்தூக்கிக் கொண்டு வந்து,


கூடையில் இருந்ததைச் சிறுவர்கள் சமமாகப் பகிர்ந்து கொண்டனர்.


வல்லுநருக்குச் சற்றே புரிய ஆரம்பித்தது.


இப்போது 'உபுண்டு' என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால் போதும்.


சிறுவர்களைக் கேட்டார்,' உபுண்டு' என்றால் என்ன?


அவர்கள் சொன்னதன் சாரம் 

நமக்குப் புரியும் மொழியில்: 


" நம்மில் ஒருவர் மகிழ்ச்சி குறைந்தாலும், நம்மில் பிறர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?"


அவர்கள் மொழியில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அச்சொல்லைப்  (UBUNTU) பிழிந்தால்,


' I AM BECAUSE 

WE ARE'

என்பதே பொருளாகும்..


மானுடர் யாவரும்,

சந்ததி சந்ததியாய்க்

மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மகத்தான பண்பல்லவா இது.


"மானுட சமுத்திரம் நானென்று கூவு" 


என நமக்குப் பயிற்சி சொன்ன பாவேந்நர்,


'நைந்தாயெனில் நைந்து போகும் என் வாழ்வு'


என ' உயிருக்கு நேரான' 

மொழியுடன் நேசம் பேசினார்.


இந்த ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறார்கள் சொல்லும் 

UBUNTU 

அதைத்தானே

('யாவருங் கேளிர்' என) உறவுக்குச் சொல்கிறது?


"How can one of us be happy when some one else of us is not."


இன்று 

இது பகிர எனக்கு வாய்த்தது 

இனிமைக்கு இனிமை.

No comments:

Post a Comment