Thursday, October 8, 2020

 துவையல் தொகை.

----------------

( அம்மா கையரைத்த துவையல் ருசித்தவர்கள் 'பாக்கியசாலிகள்' என நண்பர்  ஒருவர் கூறினார்.  நானும் ஒரு பாக்கியசாலி என்பதால் இத் 'துவையல் தொகை')

*

பருப்புத் துவையலெனில், 
வறுத்து ஆறவைக்கும் போது
தாங்கும் சூட்டிலேயே,

தேங்காய்த் துவையலெனில்
தேங்காய் துருவியதுமே,

பொட்டுக்கடலையெனில்
அரை தட்டில் கடலை போட்டவுடன்,

பாதி எம் வாயரைக்கும்!
மீதியே அம்மிக்கு.

புளித்துவையலென்று ஒன்றுண்டு;
நாமதன் குடியல்லோம்.
(எங்கப்பத்தாவின் சிறப்பு விருப்பம் அது.)

பள்ளி சென்று கற்கவில்லை என்றாலும்,
பிள்ளைகள் வாய்க் கழிவுபோக 
எவ்வளவு தேவைப்படும் என்று 
எங்கம்மாவிற்கு எப்போதும் தெரிந்திருக்கும்.

கால்நீட்டியமர்ந்து
கல்லை உடைப்பதுபோலத்
தட்டி,
நையாண்டி மேள இழுப்பாய்த்
தடவி, 
கல்லுள் துவையலைத் திணித்து விடும் 
முயற்சி போல் 
இறுக்க அழுத்தி,
இழுத்து,
தொட்டிலாட்டும் லயத்தில்,
தொடர்ந்து,
கைவலிக்கக்

கருணை தெளித்துக் 

கச்சிதப் பக்குவமாய்

அரைத்துக் கொண்டிருக்கையிலே,

வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருக்கும் 
எங்கப்பத்தா 
எழுந்து வந்து

தீத்தொடுவதுபோல
ஒரு விரலால் குழவியில் தடவி,
"இன்னும் இரண்டிழுப்பு 
இழுத்திருக்க வேண்டு"மென்பார்.
"ரெம்ப மையாயில்லாமல்
நெரு நெருன்னு 
இருக்க நிறுத்து"
எனப் 
பையச் சொல்வார்,
பொக்கை வாயால்.

'இக்கும்' என ஓரிழுப்பு

எங்கம்மா இழுத்து...
குழவி நிறுத்திச் 
லாவகமாய்ச் சுற்றி
வழித்து,

அம்மியிலிருப்பதெல்லாம் அங்கேயே 
திரட்டி, உருட்டிக்
கிண்ணம்  நிறைத்துவைப்பார்.

எம் தட்டில் வருமுன்,

எட்டி, எட்டி, விரல் நீட்டி
எடுத்துண்போம்
அவ் வமுதை.

அக்காலம் அற்றது.

அம்மா இல்லை;
அம்மியுமில்லை;
ஆளுமில்லை.
அரைக்கும் அன்பில்

ஆக,

அன்னை அன்பரைத்த

அமுதத் துவையலில்லை.

அன்னையொடுபோன
அறுசுவையுடன்-
அமுதத் துவையலும் 
போயே போச்சு.

கெட்டிச் சட்னியே 
இப்பத் துவையாலாச்சு.

என்ன சொல்ல? இக்கொடுமை.

.
தொலைந்தது துவையல்.
தொலைத்தும் வாழ்கிறோம்.

துவையல் நினைந்து...

அரைத்தரைத்தே
அம்மி தேய்த்த அம்மாவை நினைத்து...

* 2019

No comments:

Post a Comment