இலக்கியச்சொல் வரிசை-30
சிறுபாணாற்றுப்படை. ( வரி-85)
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.
சிறுபாணாற்றுப்படை. ( வரி-85)
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.
''... கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய...பேகன்."
தன்னிடமிருப்பதைப் பிறர்க்கு வழங்க உதிக்கும் எண்ணம் உயர்ந்தது.கொடுக்க எண்ணம் தோன்றியவுடன் கொடுப்பது நன்றாம்.அப்போதுதான், இதை இவருக்கு வழங்கலாமா? என்று ஆராயாமல் வழங்க முடியும்.
(அகவும் மயிலுக்குத் தான் போர்த்தியிருந்த போர்வையை - மயில் குளிரால் நடுங்கி அகவுவதாக எண்ணிய கருணையால்- வழங்கியதமிழ் வள்ளல் பேகனின் கொடைச் செயல் பாடலில்,போற்றப்படு கிறது.)
மயிலுக்கு போர்வை போர்த்துவதெல்லாம் அறிவுடைச் செயலாகுமா என்ற விதண்டாவாதக் கேள்விகளுக்கெல்லாம் இங்கு இடமில்லை.அறிவின் பாற் பட்டதன்று இச்செயல். நிகழ்வது அடைக்கலாகா ஆற்றுப் பெருக்கன்ன பெருங்கருணைப் பெருக்கம்; பால்நினைந்தூட்டும் தாயின் பேரன்பொத்த வெளிப்பாடு;வாடிய பயிர் கண்டபோதெல்லாம் வாடும் வளர் நேயம்.
நயம் யாதெனில், பேகன் தன் அரண்மனையில் வளர்த்த செல்லப் பறவைக்கு வழங்கியதல்ல அப்போர்வை. தேரேறி வனம் சென்றபோது கண்ட ஏதோவொரு காட்டுமயிலுக்குப் பாய்கிறது 'கொடைமடம்' எனச்சுட்டப்படும் கொடுக்கும் மனம்
இதுதானே வாடிய பயிர் காண வாடுகின்ற பேருள்ளம்?
இன்னாரிவரென அறியா நிலையிலும் ஈரம் காட்டி, இயன்றன உடன் ஈயும் எண்ணமும் செயலும் என்றும் வளர்ப்போம், பேகன் போல.
*
No comments:
Post a Comment