Tuesday, September 8, 2020

 Date of Birth என்றால் 

பிறந்த நாளல்ல.


வேறென்ன எனக் கேட்கிறீர்களா?

எங்களுக்கெல்லாம் (  டிஸ்டிரிக்ட் போர்டு துவக்கப்பள்ளி , திருப்பூவனம் -மேற்கு) -  ஐம்பது அறுபதுகளில் படித்தவர்களுக்கெல்லாம் - அப்படித்தான்!


எங்கள் பள்ளியின் தலைமையாசிரியாக இருந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.

எங்களது தொடக்கப் பள்ளி பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளைக் திறந்த வரலாற்றின் ஒரு விளைவாகப் புதிதாகத் தோன்றியது.

சந்தைக்கருகில் இருந்ததால் "சந்தைப்பள்ளிக்கூடம்" என்றே அறியப்பட்டது.

 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ள பள்ளி அது. ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்.

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்களூர்ப் பெருமாள் கோவில் அருகே (தொடங்கிப் பெரியகோவில் வரை நீளும்) அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.

எப்போதும் வீட்டிலிருந்து  நேராகப் பள்ளிக்கு அவர் வந்திருக்குமாட்டாரென்றே கருதுகிறேன்.

பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே கிளம்பி

எங்கள் பகுதிக்குள் ( பழையூர்) வந்துவிடுவார்.

முதலில், எங்கள் பகுதியின் பின்புறத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வார்.

தெருவில் விளையாடும் சிறுவர்களையெல்லாம் ( இருபாலரும்)

 பெற்றோர்களிடம் சொல்லிக் குளிக்க வைத்து த் தயார்படுத்தி  Pied Piper பின்னால் கூட்டமாக வரும்  குழந்தைகள் போல (Just for example) பத்து இருபது பேராவது பின்தொடர வந்து, 


எங்கள் பகுதிக்குள் நுழைவார். 

இங்கும் அதேபோலச் சிறுவர்களை ஆயத்தப் படுத்தித் திரட்டுவார்.

ஒரு இளம்படை காச்மூச் எனக் கத்திக்கொண்டு தொடரத் 

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் உள்நுழையவும் பள்ளி மணி அடிக்கும்.

இது தினப் பிரவேசம்.

இதுபோகப் பெற்றோர்கள் சிலர் தாமே குழந்தைகளை அழைத்துவந்து ( அதெல்லாம் சும்மா. தரதரவென இழுத்து வந்து, வரும் வழியில் முதுகில் நாலு போட்டு) பள்ளியில் விடுவதும் வாடிக்கை.

ஐந்து வகுப்புகளுக்கு மூன்று ஆசிரியர்கள்.

தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன்.

ஒன்று இரண்டு வகுப்புகளுக்கு அன்பொழுகும் அம்மா மேரி டீச்சர்.

மூன்றாவது வகுப்புக்கும் நான்காவது வகுப்புக்கும் டீச்சரின் கணவர் திரு பாலையா அவர்கள் ( கெடுபிடி, பிரம்படி)


ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடிப் பொறுப்பு.

வகுப்பு என்பதெல்லாம் அறைகளால்/ சுவர்களால் பிரிக்கப்படுவது என்று நினைக்கும் பலர் ஏமாந்து போவீர்கள்.

ஒரு பெரிய ஹால்(.!)

பெரிய வார்த்தைதான் இது. இருக்கட்டும்.

தலைமையாசிரியர் ஒரு முனையில். 

அடுத்து 1,2,4, கடைசியில் 3வது வகுப்புகள்.

 எவ்விதத் தடையோ, பிரிவுச்சுவர்களோ இல்லாத பெருஞ்சமத்துவம்.

1 வது வகுப்புக்கும் 2 வது வகுப்புக்கும் நடுவில் ஒரு சேர் மட்டும் போட்டு மேரி அம்மா டீச்சர் அமர்ந்திருப்பார்.

அடுத்த 4 ,3 வகுப்புகளிடையே டேபிள் சேர் போட்டு திரு பாலையா சார் இருப்பார்கள்.

தலைமையாசிரியருக்கு இடது பக்கத்தில் சுவரோரம் ஒரு மரபீரோ நிற்கும். ஆவண அறை அது.

எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து திரு பாலையா சார் தான் அட்டெண்டெஸ் எடுப்பார்.

பெயர்கூப்பிட்டதும் மின்னலாய் எழுந்து வலதுகைதூக்கி ஒரு சல்யூட் அடித்து " ஆஜர்" சொல்லுவோம் . முடிந்த அளவு உரத்த குரலில். தெருவெல்லாம் "ஆஜர்" கேட்கும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் "பிரசண்ட் சார்" ஆறாம் வகுப்பில் ABCD யெல்லாம் படிக்கனுமே. அதற்கு ஆயத்தமாய் இந்த 'பிரசண்ட் சார்.'

சரி, விஷயத்துக்கு வருவோம்.

(இப்பத்தான் விசயத்துக்கே வருகிறோமா என முறைக்கிறீர்களா?) வாங்க.

தெருவில் திரிபவர்களையெல்லாம் பள்ளிக்கு அள்ளிக்கொண்டு வருவதால் 'பெர்த் சர்டிபிகேட்' எல்லாம் கேட்டு யாரையும் தொல்லைப் படுத்துவதில்லை பாலகிருஷ்ணன் சார்.

ஒரு 'எண்டரன்ஸ் டெஸ்ட்' வைக்கப்படும் மேரி அம்மா டீச்சரால்.


பின்பக்கமாகக் கையைக்கொண்டு வந்து மூக்கைத் தொடவேண்டும்.

தொட்டுவிட்டால் அட்மிஷன்.

 என்ன?

 பேர் கூப்பிடுவார்கள்.

அவ்வாறு பின்பக்கமாக கைவைத்து மூக்கைத் தொடாதவர்களை வெளியேற்றுவதேயில்லே.

அவர்கள்  'உப்புக்குச் சப்பாணி'யாக முதல் வகுப்பில் உட்காரவைக்கப் படுவார்கள்‌.

 பாலையா சார் பேர் கூப்பிடமாட்டார்.' ஆஜர்' சொல்ல முடியாது.

மேரியம்மா டீச்சர் அவர்களையும் குஷிப்படுத்தத் தானே எழுந்து பெயர் சொல்லி ஆஜர் சொல்லச் சொல்லுவார்.

அட்மிஷன் எப்படி?

திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தேசபக்தர்.

கதர்தான் உடுத்துவது. கணுக்கால் தெரிய வேட்டி. கைமறைய முழுக்கைச் சட்டை. கண்டிப்பும் கனிவும் போர்த்திய ஆறடிச் சிவப்பழகர்.

சேர்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிறந்தநாள் அவரே நிர்ணயித்து விடுவார்.

சுதந்திரதினம் ( ஆகஸ்ட் 15);

குடியரசு தினம் ( ஜனவரி 26);

காந்திஜி பிறந்தநாள் ( அக் 2);

பள்ளிகள் பல திறந்த காமராஜர் பிறந்தநாள் ( சூலை 15)

இந்த நான்குக்குள் ஏதாவது ஒருநாள். சேர்க்கையின்போது ஐந்தாண்டுகள் நிறைவடையுமாறு பின்னோக்கி வருடம்  கணக்கிட்டுப் பதிவாக்கிவிடுவார்.

பின் சில சமயங்களில் யாராவது பெற்றோர் வந்து தம் "பையன் பிறந்த தேதி மாதம் வருடம் மாறியுள்ளதே" எனக்கேட்டால்

"நல்லநாள்தான் பதிந்திருக்கிறேன்.நல்லா வருவான் போங்கள்" என்பார்.

அவ்வளவுதான்.

பிறந்தநாள் விசயம் முற்றுப் பெற்றுவிடும்.

அப்படித்தான் 

செப்டம்பரில் பிறந்த எனக்கு, காமராஜர் பிறந்தநாள் (சூலை 15) பதிவாகியது. அதுவே பணிமுழுதும் தொடர்ந்தது.

ஒரே ஒரு சிக்கல்.

நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதால், ஐந்தாண்டுக் கணக்கிற்காக அப்படியே ஒரு ஆண்டு பின்னோக்கி வைத்துவிட்டார் பாலகிருஷ்ணன் சார்.

இது என்ன பெரிய சிக்கல்?

பலருக்கு இதுமாதிரிதான் நடந்துள்ளது என்கிறீர்களா?

திரு பாலகிருஷ்ணன் சார் எனக்குப் பதிவிட்ட பிறந்தநாள்/ ஆண்டில்

என் பெற்றோருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லையே!

*

No comments:

Post a Comment