Saturday, September 5, 2020

முதல் சென்னைப் பயணம்


Anna Funeral Procession 1969 | Shocking facts, Photo, Indian history

1969 பிப்ரவரி 3.

51 ஆண்டுகள் கடந்துள்ளன.

பேரறிஞர் அண்ணாவை இறுதியாய்க் காண்பதற்கே முதலாவது சென்னைப் பயணம்.

எனது முதல் பயணம் சென்னைக்கு ஆறாச் சோகம் நிறைந்த மனதுடன்.

அந்நாள் அவ்வகையிலும் என்றும் நினைவிலிருக்கும்.

உடன் வந்த பலரும் ரயிலில் இடமில்லாமல் ரயில் கூரையில் பயணித்துக் கொள்ளிடம் பாலத்தில் சடசடவென அடிபட்டு மறைந்த சோகமும்-

அவர்களது உடல்களைச் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கிடத்தியபோது ,யார்யார் எனப் பார்க்கக்கூட இறங்க முடியாது இரயில்பெட்டியில் நெரிசலில் சிக்கிக் கிடந்த அவஸ்தையும்-

ரயில் இரக்கமின்றி தொடர்ந்து பயணித்ததும் -

இவ்வகை இணைந்த நிகழ்வுகளும் அண்ணா மறைந்த சோகத்துடன்நீங்காது நினைவில் இருந்து, மாறாது இறுதிவரை.

சோகங்களின் கனந்தாங்கி...நினைக்கிறோம்.

பின்நாட்களில் தலைவர் கலைஞரின் பி.ஆர்.ஓ.ஆன என் வகுப்புத்தோழன் மருதவிநாயகம் தலைமையில் தான்அந்தச் சோகப்பயணம்.

வீட்டில் கூடச் சொல்லாமல் மதுரையிலிருந்து மறக்கமுடியாத அந்த இரயில்பயணம். 

நான் அப்போது மதுரை மாவட்ட மாணவர் திமு.க. செயலாளர்.

அண்ணாவின் அருகில் சென்று அஞ்சலி செய்தபின் கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டு என்னைக் கைபிடித்துத் தொடர்ந்து வந்த மருது மற்றும்  நண்பர்களையும், வழியையும் தவறவிட்டேன்.

இராசாசி அரங்கில் இருந்து கூட்ட நெரிசலே என்னை வெளியே, என் முயற்சி ஏதும் இல்லாமலே தள்ளிக்கொண்டு வந்துவிட்டது.

திக்குத் தெரியவில்லை.

ஆனாலும் ஓரிடத்தில் அசையாமல் இருந்துவிடுவது என முடிவுசெய்து-பின்னாட்களில்,அரசினர்தோட்டம் அருகில் - 

தற்போதைய அண்ணா சிலைக்கருகே - வாலாஜா சாலைத் தொடக்கத்தில் இருந்த கீதா ( உடுப்பி) கபே அருகேயுள்ள சந்தில் வேறெங்கும் செல்லாமல்,

உணவேதும் எங்குமே கிடைக்காமல் ஒருகல் மீது மணிக்கணக்காக உட்கார்ந்திருந்ததும், ஒருவழியாக அன்று மதியத்திற்கு மேல் மருதவிநாயகம் என்னை எவ்வாறோ கண்டுபிடித்துச் சேர்ந்ததும், 

அந்தச் சோகநாளின் மறக்க இயலா முத்திரைகள்.பின்நாட்களில்

இராசாசி ஹால் அருகிலேயே  "தமிழரசு "ப் பணியில் மருது இருந்தபோது நானும் மாநிலக்கல்லூரிப் பணியில், எம்.எல்.ஏ விடுதியிலேயே -

1969-ல் காணாமற்போன அதே பகுதியிலேயே தங்கியதும்,அந்நாளில் ரயிலில் பயணித்து உயிர்நீத்த பலர் உடல் கிடைத்தப் பட்டிருந்த சிதம்பரம் ரயில் நிலையமே அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்வில் 

தினமும் செல்லும் இடமானதும்-வாழ்க்கைப் பயண அத்தியாயங்களாகின.

தமிழரசு அலுவலகத்திற்கு மருதுவைச் சந்திக்கப் போகும்போதெல்லாம்,

"இங்கிருந்து எங்கெல்லாம் அன்று உனைத்தேடினேன்" எனப் பலமுறை மருது சொல்லிக் காட்டுவதுண்டு.

இதனைப் பலமுறை கேட்டிருந்த  கவிஞர் திரு தமிழ்ப்பித்தன் அவர்கள் (தமிழரசு உதவி ஆசிரியர்)

அலுவலக வாயிலில் என்னைக் கண்டவுடன், " மருது, காணாமல்போன உன் நண்பர் வந்திருக்கிறார் பார்" என்றே தமிழரசு அலுவலகம் உள்ளே இருந்தால் மருதுக்குச் சேதி சொல்லுவார்.

1969, பிப்ரவரி 3 மறக்கவே இயலாது, 

அண்ணாவின் நினைவுடன்...

உடன் பயணித்து உயிர்துறந்த பலரின் நினைவும்...

அன்றிலிருந்து இன்றும் பயணத்தில் உடனிருக்கும் நட்பினரையும் ஈரமுடன் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment