Saturday, July 24, 2021

நாம்  1887ம் ஆண்டு வெளி வந்த விவேக சுந்தரம் என்ற இதழின்  

நம்பர் 2ல், பக்கம் 7 முதல் 8 வரை வெளியாகியுள்ள -

தன் கணவனை விட்டுப் பர  புருஷனைத் தேடி அவமானம் அடைந்த 

வச்சிராங்கியின் கதை.

என்ற சிறுகதையை எழுதியவரின் அன்றைய மொழியிலேயே இங்கே காண்போம்.

 **

மச்சராச்சியம் என்ற  ஓர்தேசத்தில் கச்சிநாதன் என்று ஓர் அரசன் இருந்தான்.அவனுக்கு வச்சிராங்கி என்ற அதிரூப லாவண்ய மனைவி இருந்தாள்.அவள் கற்பு நீக்கமே சிறந்த அறம் ஆக மதித்த ஓர் புண்ணியவதி. அவள் நெடுநாளாக அவ்வூர் இராஜ மாளிகை காப்போன் ஆகிய முத்து நாய்க்கனிடம் விருப்பங்கொண்டு இருந்து, ஒரு நாள் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல் தன் வீட்டிலிருந்த சொத்துக்களில் பாதிக்குமேல் சுருட்டிக்கொண்டு மேற்படி கள்ள புருஷனையும் கூட்டிக்கொண்டு பிற தேசம் செல்வாளாயினள்.

போகும் வழியிலே ஒரு ஆறு எதிர் இருந்தது. அவ்வாற்றை நீந்திச் செல்ல முயன்று முத்து நாயக்கன், வச்சி ராங்கியைப் பார்த்து பெண்ணே! இவ்வாற்றைத் தாண்ட வேண்டி இருத்தலினாலே, உன் ஆபரணங்கள், வஸ்திரங்கள் யாவற்றையும் கழற்றிக்கொடு; நான் அக்கரையில் வைத்துவிட்டு வந்து உன்னை கூட்டிச் செல்கிறேன் என்றுகூற-

இவள் அவன் பேச்சை நம்பி ஆடை ஆபரணாதிகள் யாவும் கழற்றிக் கொடுத்துவிட்டு அம்மணமாய் நின்றாள்.அம் முத்து நாயக்கன் ஆனவன் இச் சொத்துக்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஆற்றைத் தாண்டி ஓடிப் போய்விட்டான்.

 இம்மாது சிரோன்மணி சிறிது நேரம் நின்று பார்த்து, போன கள்ளப்புருடன் மீண்டும் வராமையைபார்த்துஇவ்விடம் நிற்றல் தகுதி அன்று; மான பங்கம் வந்துவிட்டது; என் செய்வேன்! என் தெய்வமே! பர புருஷனை நம்பி வந்ததனால் அல்லவா இந்த அவமானம் நேரிட்டது என்று சொல்லித் துக்கித்து அந்த ஆற்றில் போய் நின்றுகொண்டாள்.

அங்கே  ஓர்தந்திரமுள்ள குள்ளநரி மாமிசத் துண்டைக் கவ்வி ஓடிவந்துஅவ்வாற்றின் கண்ணே ஓடும்மீனைப் பார்த்து மாமிசத்தை விட்டு ஆற்றில் குதித்து மீனைப் பிடிக்க ஓடிற்று. அப்போது கருடன் மாமிசத்தை கவ்வி ஓடினான்மீனும்தப்பி ஓடிவிட்டது.இந்த தந்திர நரி வாய்த்த விடும்போய் அடுப்பு நெருப்பும்  இழந்தவள் போல ஆகாயத்தைப் பார்த்து நின்றது. 

அப்போது ஆற்றினுள் நிற்கும் வச்சிராங்கியானவள் கேட்கிறாள்:

சம்புவே என்ன புத்தி? சலந்தனின் மீனை நம்பி 

வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்பதனோ ?”

அதாவது, ஓ தந்திரம் உள்ள குள்ளநரியே! நீ சலத்தின்கண்ணே வசிக்கின்ற ஓர் அற்ப மீனை நம்பி,மிகவும் இனிப்பு பொருந்திய மாமிசத் துண்டை இழந்து ஆகாயம் பார்க்கிறாயே இது என்ன புத்தி? என்றாள்.  அதற்கு நரி சொன்னதாவது- 

அம்புலி மாதே கேளாய்! அரசனை அகலவிட்டு

வம்பனைக் கைப்பிடித்த போலாயிற்றன்றே

அதாவது, ”மச்ச தேசத்து அரசியே!நீ சொல்வது சரியே! நான் சொல்வதைச்  சிறிது செவிகொடுத்துக் கேட்பாயாக. அழகும் கல்வியும் நிறைந்த மச்ச தேசத்தை அரசாட்சி செய்யும் உன் பத்தாவை  விட்டுவிட்டு ஒரு துன்மார்க்கனைச் சேர கருதி அவனைத் துணைப் பற்றி வந்து மானபங்கம் அடைந்து ஆற்றின்கண் நிற்கிறாயே! அந்தக்கதி நானும் அடைந்தேன்என்றதாம். அது கேட்ட அவள் மனம்திடுக்கிட்டு ஒரு நரியிடம் நாம் அவமானச்சொல் கேட்க வேண்டியதாயிற்று என்று உயிரிழந்தாள்.

ஆகையால், பர புருஷர்களை விரும்பும் ஸ்திரீகாள்! இனி இவ்வாறு துன்பத்தைத் தரும் வியாபிசாரம் செய்யாதீர்கள்! செய்தானல் வச்சிராந்தி அடைந்த துன்பத்தை அடைவீர்கள்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! கற்பெனப்படுவது மாதர்க்கு சிறந்த அணிகலன் என்று மதியுங்கள்.

**

[ இச்சிறுகதை எழுதப்பட்ட காலத்தின் போக்கும், மொழிநடையும் அறிந்து கொள்வதற்காகவே ஒரு எடுத்துக்காட்டாக இங்கு மீள்உலா வர ஏற்பாடு செய்தோம். பெண்களைப் பற்றி இக்கதையில் உள்ள கருத்துக்கும் நமக்கும் உடன்பாடு ஏதும் இல்லை..]

Friday, July 23, 2021

Date of Birth என்பது பிறந்த நாளல்ல

 (முன்பெப்போதோ இவ்விசயம் பதிவிட்டதைக் காணோம்.

ஆகவே இது.)

Date of Birth என்றால் 

பிறந்த நாளல்ல.

வேறென்ன? எனக் கேட்கிறீர்களா?

எங்களுக்கெல்லாம் (டிஸ்டிரிக்ட் போர்டு துவக்கப்பள்ளி , திருப்பூவனம்)

(மேற்கு) -  

ஐம்பது அறுபதுகளில் படித்தவர்களுக்கெல்லாம்

அப்படித்தான்!

எங்கள் பள்ளியின் தலைமையாசிரியாக இருந்த திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.

எங்களது தொடக்கப் பள்ளி 

பெருந் தலைவர் காமராஜ் அவர்கள் 

பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளைக் திறந்த வரலாற்றின் ஒரு விளைவாகப் புதிதாகத் தோன்றியது.

சந்தைக்கருகில் இருந்ததால் "சந்தைப்பள்ளிக்கூடம்" என்றே அறியப்பட்டது.

 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ள பள்ளி அது. 

ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்.

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்களூர்ப் பெருமாள் கோவில் அருகே (தொடங்கிப் பெரியகோவில் வரை நீளும்) அக்ரஹாரத்தில் குடியிருந்தார்.

எப்போதும் வீட்டிலிருந்து

 நேராகப் பள்ளிக்கு அவர் வந்திருக்கமாட்டாரென்றே கருதுகிறேன்.

பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு வெகுமுன்னதாகவே கிளம்பி

எங்கள் பகுதிக்குள் (பழையூர்) வந்துவிடுவார்.

முதலில்

எங்கள் பகுதியின் பின்புறத்திலுள்ள

தாழ்த்தப்பட்ட

(வர்கள் எனச் சொல்லப்பட்டுவரும்) மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வார்.

தெருவில் விளையாடும் சிறுவர்களையெல்லாம் ( இருபாலரும்)

 பெற்றோர்களிடம் சொல்லிக் குளிக்க வைத்துத் தயார்படுத்தி- தானே சிலரைத் குளிக்க வைத்து-  

 Pied Piper பின்னால் 

( just for example, கூட்டமாக வரும் எலிகள் போல்) குழந்தைகள்

பத்து இருபது பேராவது பின்தொடர வந்து, 

எங்கள் பகுதிக்குள் நுழைவார். 

இங்கும் அதேபோலச் சிறுவர்களை ஆயத்தப் படுத்தித் திரட்டுவார்.

ஒரு இளம்படை காச்மூச் எனக் கத்திக்கொண்டு தொடரத் 

திரு பாலகிருஷ்ணன் சார் தெருவிஜயம் முடிந்து உள்நுழையவும் கிணிங்கிணி எனப் எங்கள் பள்ளி மணி அடிக்கும்.

இது தினப் பிரவேசம்.

இதுபோகப் பெற்றோர்கள் சிலர் தாமே குழந்தைகளை அழைத்துவந்து (அதெல்லாம் சும்மா. தரதரவென இழுத்து வந்து, வரும் வழியில் முதுகில் நாலு போட்டு) பள்ளியில் விடுவதும் வாடிக்கை.

இதையெல்லாம் விடச் 

சந்தை நாட்களில் சந்தைக்கு வரும் பெற்றோர் சர்வ சுதந்திரமாக வகுப்பில் 

தம் பிள்ளைகளை "இங்க உக்காந்து இரு, சந்தைக்குப் போய்ட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்" என அப்போதே ஒரு creche மாதிரி பாவித்து டீச்சர் ஒப்புதலுக்காக ஒரு புன்னகையை மட்டும் அவசரமாக உதறிவிட்டு  சரேலென்று சந்தைக்குச் சென்று விடுவார்கள்.

அவ்வாறு தற்காலிகமாக இலவச இணைப்பாக விட்டுச் செல்லப்படும் சிலர்

பெற்றோர் வந்து கூப்பிடும் போது ' வர மாட்டேன் போ' என அடம் பிடிக்கும் காட்சிகளும் அரங்கேறும். 

அடுத்து என்ன?

முதுகில் ஒரு அடி அல்லது காதைப்பிடித்துத் திருகி ஆசிரியர் இருப்பைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கொத்தாகக் தூக்கிச் செல்வார்கள்.

சரி...வாங்க...

பள்ளியைப் பார்க்க.

ஐந்து வகுப்புகளுக்கு 

மூன்று ஆசிரியர்கள்.

தலைமையாசிரியர் திரு பாலகிருஷ்ணன் சார்.

ஒன்று இரண்டு வகுப்புகளுக்கு

அன்பே உருக்கொண்ட அம்மா 

மேரி டீச்சர்.

மூன்றாவது வகுப்புக்கும்

நான்காவது வகுப்புக்கும் டீச்சரின் கணவர் 

திரு பாலையா சார்.

(கெடுபிடி, பிரம்படி)

ஐந்தாம் வகுப்பு தலைமையாசிரியர் 

திரு பாலகிருஷ்ணன் அவர்கள் நேரடிப் பொறுப்பு.( Union Territory)

வகுப்பு என்பதெல்லாம் அறைகளால்/ சுவர்களால் பிரிக்கப்படுவது என்று நினைக்கும் பலர் 

நிச்சயமாக

ஏமாந்து போவீர்கள்.

ஒரு பெரிய ஹால்(.!)- ஓடு வேய்ந்தது.

ஹால் என்பதே பெரிய வார்த்தை தான். இருக்கட்டும் எங்கள் பள்ளி அல்லவா?

தலைமையாசிரியர் ஒரு முனையில். 

அடுத்து 1,2,4, கடைசியில் 3வது வகுப்புகள்.

எவ்விதத் தடையோ, பிரிவுச்சுவர்களோ இல்லாத பெருஞ்சமத்துவம் அது.

1 வது வகுப்புக்கும் 

2 வது வகுப்புக்கும் நடுவில் 

ஒரு சேர் மட்டும் போட்டு மேரி அம்மா டீச்சர் அமர்ந்திருப்பார்.

அடுத்த 4 ,3 வகுப்புகளிடையே 

டேபிள் சேர் போட்டு திரு பாலையா சார் இருப்பார்.

தலைமையாசிரியருக்கு இடது பக்கத்தில் சுவரோரம் ஒரு மரபீரோ நிற்கும். ஆவண அறை அது.

எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து திரு பாலையா சார் தான் அட்டெண்டெஸ் எடுப்பார்.

பெயர்கூப்பிட்டதும் மின்னலாய் எழுந்து வலதுகை தூக்கி ஒரு சல்யூட் அடித்து " ஆஜர்" சொல்லுவோம் 

முடிந்த அளவு உரத்த குரலில். தெருவெல்லாம் "ஆஜர்" கேட்கும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் "பிரசண்ட் சார்" 

ஆறாம் வகுப்பில் ABCD யெல்லாம் படிக்கனுமே.

அதற்கு ஆயத்தமாய் இந்த 'பிரசண்ட் சார்!'

சரி, விஷயத்துக்கு வருவோம்.

(இப்பத்தான் விசயத்துக்கே வருகிறோமா என முறைக்கிறீர்களா?) 

வாங்க.

தெருவில் திரிபவர்களையெல்லாம் பள்ளிக்கு அள்ளிக்கொண்டு வருவதால் 'பெர்த் சர்டிபிகேட்' எல்லாம் கேட்டு யாரையும் தொல்லைப் படுத்துவதில்லை பாலகிருஷ்ணன் சார்.

ஒரு எண்டரன்ஸ் டெஸ்ட் வைக்கப்படும் மேரி அம்மா டீச்சரால்.

பின்பக்கமாகக் கையைக்கொண்டு வந்து மூக்கைத் தொடவேண்டும்.

தொட்டுவிட்டால் அட்மிஷன்.

என்ன?

பேர் கூப்பிடுவார்கள்.

அவ்வாறு பின்பக்கமாக கைவைத்து மூக்கைத் தொடாதவர்களையும் வெளியேற்றுவதேயில்லே மேரி டீச்சர்.

அவர்கள்  'உப்புக்குச் சப்பாணி'யாக முதல் வகுப்பில் உட்காரவைக்கப் படுவார்கள்‌.

அவர்களைப்பாலையா சார் பேர் கூப்பிடமாட்டார்.

' ஆஜர்' சொல்ல முடியாது.

ஆனால்

மேரியம்மா டீச்சர் அவர்களையும் குஷிப்படுத்தத் தானே எழுந்து பெயர் சொல்லி ஆஜர் சொல்லச் சொல்லுவார்.

அட்மிஷன் எப்படி?

திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தேசபக்தர்.

கதர்தான் அணிவது. கணுக்கால் தெரிய வேட்டி. கைமறைய முழுக்கைச் சட்டை. கண்டிப்பும் கனிவும் உடுத்திய ஆறடிச் சிவப்பழகர்.

நீங்காது நீறு முப்பட்டையாய் நெற்றியில்.

'சேர்க்கலாம்' என்று முடிவு செய்யப்பட்டவர்களுக்குப் பிறந்தநாள் அவரே நிர்ணயித்து விடுவார்.

சுதந்திரதினம் ( ஆகஸ்ட் 15);

குடியரசு தினம் ( ஜனவரி 26);

காந்திஜி பிறந்தநாள் ( அக் 2);

பள்ளிகள் பல திறந்த காமராஜர் பிறந்தநாள் ( சூலை 15)

இந்த நான்குக்குள் ஏதாவது ஒருநாள்

சேர்க்கையின்போது ஐந்தாண்டுகள் நிறைவடையுமாறு பின்னோக்கி வருடம்  கணக்கிட்டுப் பதிவாக்கிவிடுவார்.

பின் சில சமயங்களில் யாராவது பெற்றோர் வந்து தம் "பையன் பிறந்த தேதி மாதம் வருடம் மாறியுள்ளதே" எனக்கேட்டால்

"எல்லாம் நல்ல நாள்தான் பதிந்திருக்கிறேன்.நல்லா வருவான் போங்கள்" என்பார்.

அவ்வளவுதான்.

பிறந்தநாள் விசயம் முற்றுப் பெற்றுவிடும்.

அப்படித்தான் செப்டம்பரில் பிறந்த எனக்கு

காமராஜர் பிறந்தநாள் (சூலை 15) பதிவாகியது.

அதுவே பணிமுழுதும் தொடர்ந்தது.

ஒரே ஒரு சிக்கல்.

நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டதால்,

ஐந்தாண்டுக் கணக்கிற்காக அப்படியே ஒரு ஆண்டு பின்னோக்கி வைத்துவிட்டார் பாலகிருஷ்ணன் சார்.

இது என்ன பெரிய சிக்கல்?

பலருக்கு இதுமாதிரிதானே நடந்துள்ளது என்கிறீர்களா?

திரு பாலகிருஷ்ணன் சார் எனக்குப் பதிவிட்ட பிறந்தநாள்/ ஆண்டில்

என் பெற்றோருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லையே.

நல்ல காலம் பொறக்குது

 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

தளிர் இளைஞன்.

 பொத்தலால்களாலான கருப்புக் கோட்;

அழுக்கே நிறமான தலைப்பாகை.

காவியே சாயம்போன கைலி (அ) வேட்டி.

கையில் குடுகுடுப்பை; 

கனவேகமாக "நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது"

அவன் வாயிருந்து ஓடுது.

இருபுறமும் சேர்ந்து

பதினான்கு வீடுகளேயுள்ள குறுக்குத் தெரு எமது.

நாய்களின் குரைப்பை மீறிக் கீச்சாய்

 'நல்ல காலம் பொறக்குது' கேட்கிறது.

நாங்கள் நாய் வளர்ப்பதில்லை;

எதிர்வீட்டு 'வெள்ளை'

எம் வாசலில் யார் நின்றாலும் 

கத்திக் காட்டிவிடும். 

வேகப் பரவலாய் அவன்நடை...

அட!

கால்களிற் செருப்புமில்லை.

எந்தக் கதவும் திறந்தபாடில்லை.

எப்படி வரும்?

நல்ல காலம்,

 அவனுக்கு?

சரசரவென இறங்கினேன்.

முதன் முதலாக வேலைக்குப் போகத் தைத்த கோட்.

சேராது யாருக்கும் வீட்டில்.

இருப்பினும் கிடக்குது பலகாலம் பீரோவில்.

40 ஆண்டுமீறிய

நினைவுப் பொக்கிஷம்!

தெருக்கோடிவரை சென்று வெறுங்கையோடு திரும்பியது

'நல்லகாலம்.'

' தம்பி, இந்தா' என்றேன்

கேட்டின் பின் நின்று.

நம்ப மறுத்து நின்றான்;

கை கண்டான்.

உணர்ச்சி வசமோங்க 'நல்லகாலம் பொறக்குது, ' 'நல்லகாலம் பொறக்குது' எனக் கிளிப்பிள்ளையாய்க் கீச்சிட்டான்.

'ஆமாம் 'என்றேன்.

வாங்கிக்கொண்டான்.

எதிர்வீட்டு வெள்ளை குரைத்துக் குவிக்கிறது...

வெகுநேரம் அவன் தெருவிலகிப்

போவதையே பார்த்துக்கொண்டு பூட்டியகேட்டின் பின் நின்றேன்.

நல்லகாலம்,

வெள்ளை உடனுறை

நாய்கள் குறைப்பு நின்றது.

- பூவனத்தான்

சூலை 23, 2019

*

UBUNTU

'உபுண்டு' குறித்து நட்பினர் பதிவொன்று   முகநூலில் இன்று கண்டதும் நினைவில் பொறி கிளம்பியது.

தேடிக் கிடைத்தது இது.

அங்கேயே பின்னூட்டமாக  இட விரும்பினேன்.

Mark Zuckerberg இடந்தரவில்லை.

எனவே இங்கே மீண்டும் பதியனிடுகிறேன் முந்தைய (ஏப் 14,2019) எனது முகநூல் பதிவை.

UBUNTU என்பது 

'மானிட இணக்கம்' 

என்னும் மகத்தான தத்துவத்தை 

மிக எளிதாய்ச் சொல்லும் ஒரு ஆப்பிரிக்கச் சிறுகதை.

இதோ, அது 

என் தமிழில்.

*

மானிடவியல் வல்லுநர் ஒருவர் 

ஆப்பிரிக்கப் பழங்குடியினச் சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு வைத்தார்.சுமார் 20- 25 சிறுவர்கள் அங்கே இருந்தனர்.

------------------------

விளையாட்டு இதுதான்:

-----------------------

ஒரு கூடை நிறைய அந்தச் சிறுவர்களின் நாவில் எச்சில் ஊறச் செய்யும் 

சாக்லேட் மற்றும் பிற இனிப்புகளை நிரப்பி வைத்து, 

அதை சுமார் 100 அடி தூரத்தில் ஒரு மரத்தடியில் வைத்தார்.

அவர் சொன்னார்:

 " நான், 1,2,3, go என்று சொல்லி ஒரு விசில் அடிப்பேன். 

உங்களில் யார் முதலில் ஓடி வருகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய அளவு இந்த இனிப்புகளை அள்ளிக் கொள்ளலாம்.

அடுத்தடுத்து வருபவர்கள் அதே மாதிரி தமக்கு வேண்டிய அளவு அள்ளிக் கொள்ளலாம்.

முன்னால் ஓடி வந்தவர்கள் யாவற்றையும் அள்ளிக் கொண்டுவிட்டால், பின்தங்கி வருபவர்களுக்கு ஏதும் இல்லாமல் போகலாம். ஆனால், இதுதான் விளையாட்டு. ஆகையால் ஏமாற்றம் யாரும் அடையக்கூடாது '' என்று விளக்கினார்.

( அவர் நினைத்தது,  'இந்தப் பசங்க இது மாதிரி சாக்லேட், இனிப்புகளை இதுவரை பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆகவே கடும் போட்டி இருக்கும்' என.)

'ஆரம்பிக்கலாமா?' எனக் கேட்டு,

 '1,2,3 go' 

எனச்சொல்லி விசில் அடித்தார்.

அம்பு போல ஓடிவரப்போகிறார்கள் எனத் தூர விலகி நின்றார்.

அங்கே அவரது வாழ்வின் அதிசயம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன?

விசில் அடித்ததும் இந்த ஏழைப் பழங்குடியினச் சிறுவர்கள் 

இனிப்புகளை ஓடிவந்து அள்ளிக்கொள்ளக் கடும் போட்டி போடப்போகிறார்கள் என எண்ணினார்.

விசில் அடித்ததும் நிகழ்ந்த அதிசயம் என்ன?

'உபுண்டு ' என ஒரு குரல் முதலில் கேட்டது.

பிறகு  எல்லாச் சிறுவர்களும் 'உபுண்டு' எனக் கோரஸாகக் கத்திக்கொண்டே, 

ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு,

ஒரு சிறுவர் அலை திரண்டு வருவது போல --

அதிகாலைப் பறவைகள் 

கூட்டமாகச் சேர்ந்து சிறகு விரித்துத் தம் இலக்கு நோக்கி வானளப்பது போல --

ஒரு சேர 

' உபுண்டு' எனக் குரல் எழுப்பிக் கொண்டு

கரையருகு வரும் அலையென 

மித வேகங்காட்டி 

வந்து கொண்டிருந்தனர்.

வியந்து , 

வியப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார் வல்லுநர்.

மரத்தருகே வந்த பின்

விளையாட்டு 

விதியின் படி கூடையைத்தூக்கிக் கொண்டு வந்து,

கூடையில் இருந்ததைச் சிறுவர்கள் சமமாகப் பகிர்ந்து கொண்டனர்.

வல்லுநருக்குச் சற்றே புரிய ஆரம்பித்தது.

இப்போது 'உபுண்டு' என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால் போதும்.

சிறுவர்களைக் கேட்டார்,' உபுண்டு' என்றால் என்ன?

அவர்கள் சொன்னதன் சாரம் 

நமக்குப் புரியும் மொழியில்: 

" நம்மில் ஒருவர் மகிழ்ச்சி குறைந்தாலும், நம்மில் பிறர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?"

அவர்கள் மொழியில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அச்சொல்லைப்  (UBUNTU) பிழிந்தால்,

' I AM BECAUSE 

WE ARE'

என்பதே பொருளாகும்..

மானுடர் யாவரும்,

சந்ததி சந்ததியாய்க்

மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மகத்தான பண்பல்லவா இது.

"மானுட சமுத்திரம் நானென்று கூவு" 

என நமக்குப் பயிற்சி சொன்ன பாவேந்நர்,

'நைந்தாயெனில் நைந்து போகும் என் வாழ்வு'

என ' உயிருக்கு நேரான' 

மொழியுடன் நேசம் பேசினார்.

இந்த ஆப்பிரிக்கப் பழங்குடிச் சிறார்கள் சொல்லும் 

UBUNTU 

அதைத்தானே

('யாவருங் கேளிர்' என) உறவுக்குச் சொல்கிறது?

"How can one of us be happy when some one else of us is not."

இன்று 

இது பகிர எனக்கு வாய்த்தது 

இனிமைக்கு இனிமை.

 அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் எழுதப்படுவதற்கும் தமிழில் கையெழுத்திடுவதற்கும் 

தற்போதைய அரசு ஆணைகள் வழங்கி இருப்பது குறித்து நெடுநாள் நட்பினர்,

மூத்த (ஆனால் காட்சிக்கு இளைஞர்) பத்திரிகையாளர்

Thiruvengimalai Saravanan அவர்கள் பதிவிட்டிருந்தார்.

இப்பின்னூட்டம் அங்கு நட்டது... இங்கும்.

இது 1971ல்.

ஆங்கிலத்தில்  அப்போது என் பெயர் R Mutthirulandi என்றிருந்தாலும்,

மிக முன் காலத்திலிருந்தே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே எனது கையெழுத்து.

அரசுக் கல்லூரிப் பணியில் 1971 திருவண்ணாமலை அரசுக்கல்லூரியில் முதல் மாத ஊதியம் பெற-

முன்சொன்னவாறு- தமிழில் கையெழுத்திட்டேன்.

பதறிப்போய் அலுவலகக் கண்காணிப்பாளர் ஊதியப் பதிவேட்டை முதல்வருக்கு ( வேதியியல் பேரா.டி.கே.மீனாட்சி சுந்தரம் அவர்கள்) எடுத்துச் சென்று காட்டிவிட்டு வந்தார்.

" உங்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லி முதல்வர் சொல்லியுள்ளார். அவரைப் போய்ப் பாருங்கள்" என்றார்.

நான் முதல்வரை அவரது அறைக்குச் சென்று பார்த்தேன்.

 "நீ  ( அவர் அப்படித்தான்) எப்படி இங்கிலீஷில் இருப்பது மாதிரி கையெழுத்திடாமல் 

வேறு மாதிரி கையெழுத்திட்டாய். உனக்குச் சம்பளம் வழங்க முடியாது" என்றார்.

பணியில் சேர்ந்த முதல் மாதமாக இருந்தாலும் அப்போதே

 'நாமார்க்கும் குடியல்லோம்,

நமனையஞ்சோம்' 

என்பது தான் நம் நிலைப்பாடு.

"சார், நான் ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்தும் போட்டுவிட்டேன்.

சம்பளம் மறுப்பதெனில் தனியே எனக்கு அதற்கு எழுத்துப்பூர்வ ஆணை வழங்குங்கள். அது இல்லாமல் எனது சம்பளத்தை நிறுத்தி முடியாது " என்றேன்.

" starving" என்று இயக்குநருக்குத் தந்தி அடிக்கப் போகிறேன்" என்றேன்.

இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

"நீ தமிழில் கையெழுத்திட்டிருப்பதை அடித்து விட்டு இங்கிலீஷில் போட்டுட்டு வா. சம்பளம் தரச் சொல்கிறேன்" என்றார்.

மீண்டும் நான் 

" சார், நான் இந்தக் கல்லூரியில் பணியில் சேரும் போதே தமிழில் 

இராச முத்திருளாண்டி என்றே கையெழுத்துப் போட்டுள்ளேன். ஆகவே, அந்த இராச முத்திருளாண்டிக்கு நீங்கள் சம்பளம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்" 

என்று வாதிட்டேன்.

உடனே மிக அழுத்தமாக அலுவலகத்திற்குப் பெல் அடித்தார்.

அப்போதைய பணியாள் ( பெயர் நினைவில்லை)

 " இன்னா சார் ?" என்றபடி வந்தார். ( அவரும் அப்படித்தான்.

முதல்வருக்கு மட்டும் தான் 'இன்னா சார்'.எங்களுக்கெல்லாம் 'இன்னாப்பா தான்!')

"யோவ் இந்தாளு joining reportஐ சூப்பரண்ட்டை எடுத்துட்டு வரச்சொல்லு" 

என்று கத்தினார். 

சிறிது கழித்து 

எனது பணிசேர் அறிக்கையுடன் கண்காணிப்பாளர் வந்து முதல்வரிடம் 

அத் தாளை நீட்டினார்.

முதல்வர் முகத்தில் ஈயாடவில்லை.

என்னை மேலுங்கீழும் பார்த்தார்.

"வேலைல சேரும்போதே வினை" எனத் திருவண்ணாமலையில் அன்று சபித்தார். ( பணிசேர் அறிக்கையில் ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் கையெழுத்திட்டிருந்ததுதான் காரணம்! 

பணியிற் சேர்ந்த நாளில் 

ஐந்தாறு பேர், நானும்- 10(a)1 சேர்ந்ததால் அன்று கவனிக்கவில்லை போலும் கல்லூரி முதல்வர்)

மெல்லிய, சிவந்த அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க

( அதுதானே சொல்லனும்) கண்காணிப்பாளரிடம்

" யோவ், இவன் சம்பளத்தைக் கொடுத்துத் தொலையா" என்று வாழ்த்தினார்.

முதல் மாதம் சம்பளம்  (475+25-5) பெற்ற கதை முற்றும்.

( ம்க்ஹூம்... எங்க முற்றும்? ...

அப்புறம் பல முட்டும் தொடர்ந்தே!)

Thursday, July 22, 2021

தமிழ்ச் சிறுகதை வரலாறு தொடர்பான பயணத்தில்...

 தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைச் சீர் செய்ய மேற் கொண்டுள்ள பயணத்தில்...

இன்னொரு மைல் இன்று.

இந்த இதழ் மின்னூலகத்திலிருந்து கண்டு - உருப்பெருக்கு ஆடியால் உருப்பெருக்கி மடிக்கணிணியில்

தட்டுத் தடுமாறிப் படித்து,

அதனைப் பதிவு( record) செய்து,

பதிவுசெய்த ஒலிப்பேழையை 

slow modeல் ஓடவிட்டுப் செப்பமாக எழுதி

மீண்டுமொருமுறை

 மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து 

இங்கு பந்தியில் பரிமாறப்படுகிறது.

( இதனை வேறு வகையில் எளிமைப்படுத்திச் செய்யும் வாய்ப்பறிந்த வர்கள் அறிவூட்டலாம்.)

*

விவேக சுந்தரம்  என்னும் ஒரு இதழ் 

1887 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்த இதழ் ‘ஜனோபகாரமாகப் பலருக்கும் பயன்படும்படி பிரசுரம் செய்யப்பட்டது’ என்ற அறிவிப்புடன், மெட்ராஸ் ரிப்பன் பிரஸ் என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டு சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஆகும். 

இதனுடைய பத்திராதிபர் சை. நமசிவாய செட்டி, இதழினுடைய விலை மூன்று பைசா என்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

விவேக சுந்தரம் நம்பர் 1 இதழில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுகதை  இங்கு....

இதை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

 கதையின் தலைப்பு - கெட்டமனைவி  

(Bad Wife )

-----

 மித்திரர்களே!

அநேகம் பெண்கள் கல்வியின்மையின்மையாலாயே இல்வாழ்க்கையைக் கெடுத்துப்  புருடர்க்குத்  துன்பத்தை விளைவிக்கின்றார்களாகையால் அதற்குக் கதா ரூபமாக ஓர் திருஷ்டாந்தம் கூறுகின்றோம். சிறிது செவிசாயுங்கள் .

ஒருத்தி  தன் கொழுநனை  மிகக் கடுமையாய் பகைத்து அவன் சொல்லியவற்றுக்கெல்லாம் முற்றும் எதிரிடையாய்ச் செய்து வந்தாள். 

அவளுடைய கணவன் அவளை நோக்கிப் ‘பெண்ணணங்கே நீ காலையில் துயில் எழு’ என்றான்.  அவள் மூன்று நாளைக்கு குறையாமல் படுத்த படுக்கையை விட்டு எழுந்திராள்.  அவன் ‘என்னுயிரே! படுத்து உறங்கு’ என்றால் அவள் தூக்கத்தை மறந்து .விடுவாள். புருஷன் அவளை தோசை வார்த்துக் கொடுக்கச் சொன்னால், அவள் ‘அட கள்வா,  உன் பவிஷுக்கு  தோசை கூட வேண்டுமோ’ என்பாள் .அவன் அவளை நோக்கி ‘பெண் பாவாய், எனக்கு தோசையில் இஷ்டமில்லை, நீ வார்க்க வேண்டாம்’ என்றால் அவள் வீம்புக்காவது கூடை நிறைய தோசை வார்த்து அடுக்கி ‘அட திருடா இவ்வளவையும் நீயே சாப்பிட்டுத் தீரவேண்டும் ஒன்று கூட மிச்சம் வைக்கக்கூடாது’ என்று பலவந்தப் படுத்துவாள். கொண்டான் அவளை நோக்கி இனியவளே, உனக்கு வேலை வைத்தால் எந்தன் மனம் புண்படுகிறதா  கையால் நீ யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். இதுவுமன்றி நீ இனிமேல் மாட்டிற்கு புல்லறுக்க போகவும் வேண்டாம்’ என்றால், அவள் ‘அட சோரா உனக்கு என்ன பாரம்? நான் போகத்தான் வேண்டும்’ என்று போவாள். 

அவன் இவள் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் காட்டிற்குப் போய் கனிகளைப் பொறுக்கி உண்டு பசியாறி துன்பம் தீர்ந்திருக்கலாம் என்று வனம் போக, அவ்விடத்தில் திராட்சைப் பழத்தால் நிறைந்த ஒரு பெரும்புதர் இருக்கிறதையும் அதற்கு நடுவில் அகாதமான  பள்ளம் இருப்பதையும் கண்டு, ‘ஓஹோ நான் ஏன் கெட்ட மனைவியை வைத்துக்கொண்டு இவ்வாறு துன்புற்று இருக்கவேண்டும் அவளை எப்படியாவது இப்படுகுழியின் கீழே தள்ளித் தொலைத்து இன்புற்றிருக்கலாகாதா என்று நினைத்து வீடு வந்து சேர்ந்து, அந்த பிடாரியை பார்த்து, ‘மெல்லியலே கனிக்காக  நீ காட்டிற்குப் போக வேண்டாம் என அவளை நோக்கி என அவள் அவனை நோக்கி ‘அடே பையா நான் போகத்தான் போவேன், கேட்பதற்கு நீ யார்?’ என்றறாள். அவன் மறுபடியும் தன்  இல்லாளை நோக்கி,  ‘மடமானே! நான் கண்டிருக்கிற திராட்சைக் கனிகளைக் கொண்டு வரும்படி நீ காட்டிற்குப் போக வேண்டா’மென அவள் அதற்கு ‘தடை ஒன்றும் இல்லை, நானே போய் கனிகளை எல்லாம் கொண்டு வருகிறேன். பேயே உனக்கு ஒரு பழமாவது கொடேன்’ என்றாள். அந்நீலி.

தன் கொழுநன் பின்னோடு கூட காட்டிற்குச் சென்று அங்குள்ள புதரைக் கண்டதும் அவளை முற்கொண்டு ஒரே பாய்ச்சலாய்த் தாவிப் பாய்ந்து, ‘அட கெடுவாய்! நீ இங்கு வராதே, வந்தால் உன் உயிர் இழந்தாய்யென்று நினை’  என்று சொல்லி, அப்புதர் நடுவே சென்று, அங்குள்ள பாதாளக் குழியில் குப்புற விழுந்தாள். அதன் பின்னர் அவன் தன்னைப் பிடித்திருந்த துன்பமனைத்தும் இத்துடன் தொலைந்து போய்விட்டது என்று அகமகிழ்ந்து தனது கிருகத்திற்கு வந்து அங்கேயே மூன்று நாள் சுகித்திருந்துவிட்டு மனையாள் கதி என்னவாயிற்று என்று அறியும்படி நான்காவது தினம்   அப் படடுகுழியண்டை சென்று, நெடுங் கயிறொன்றறை அதற்குள்ளே விட்டு இழுக்க அதனோடு சிறு பேய் ஒன்று வருவதை கண்டு நடுங்கி அதை எப்பொழுதும்போல அதளப்பாதாளத்தில்தானே விடும்படி பார்க்க, இவன் குறிப்பை அறிந்த அவ்வலகையானது கீச்சென்று பெருங்கூச்சலிட்டு “ஐயா என்மேல் கிருபை செய்து என்னை காப்பாற்றி அருள வேண்டும். என்னை மீண்டும் அவ்விடத்திற்கு போய் விடும்படி செய்ய வேண்டாம். இப்படியே எங்காவது தப்பி ஓடிப்போய்ப் பிழைக்கிறேன். ஒரு கொடும்பாவி அங்கே வந்திருக்கிறாள் அவள் எங்கள் எல்லோரையும் கிள்ளிக்கடித்து அனேகமாக விழுங்கி விட்டாள். என்னால் இனிமேல் சகிக்கத்திறன் இல்லை. என்னை நீர் இதை விட்டு எடுத்து விட்டால் நான் அந்த நன்றியை மறவாது உனக்கு கைமாறு செய்வேன் என்று அவனை பஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டது..

அக்குடியானவன் இதை கண்டு இரக்கம் கொண்டு, அவ்வலகையைப்  படுகுழியிலிருந்து தூக்கிவிட அது வெளியே வந்து தன்  உபகாரியை நோக்கி மித்திரரே! நீர் என்னோடு பாடலிபுத்திரத்திக்கு வாரும்; அங்குள்ளவர்களை  நான் பிடித்துவருத்த்துகிறேன்; நீர் அவர்களைக் குணப்படுத்தலாம் என்று சொல்லிப் போய் அந்நகரத்தின் கண்ணுள்ள பெரியவணிகர்களுடைய மனைவி மக்களைப் பிடித்துக்கொள்ள, அவர்களுக்கெல்லாம் நோய் கண்டு பைத்தியம் பிடிக்கத் தலைப்பட்டன. 

இது கண்ட அக்குடி யானவன் முதலில் இந்நோய் கண்ட ஒருவர் வீட்டிற்கு போய் நுழையவே, அந்த பேய்  அதை விட்டு ஓடிப்போக, உடனே நோய் நீங்கி பிணியாளிகள் அனுகூலம் அடைந்து அவனுக்குப் பணம் கொடுத்தார்கள். குடியானவன் இது முதல் மஹா வைத்தியமன் என்று ஊரெங்கும் பெயர் எடுத்து, வீடு வீடாய் நுழைந்து அளவற்ற செல்வப் பெருக்குடையவனாகிக் குபேரனையும் மேற்கொண்டான். இது கண்ட பேய்யானது அவனை நோக்கி “ஐயா உமக்கு இப்பொழுது குறைவற்ற நிதிக்குவை இருக்கின்றது அல்லவா? இந்நகராதிபதியின் மகளை நான் போய் பிடித்துக் கொள்ளப் போகிறேன் பத்திரம். நீர் அவளுக்கு நோய் தீர்க்கும் படி அங்கே வரவேண்டாம். அப்படிக்கின்றி நீர் என் வார்த்தையை மீறி அவளைக் குணப்படுத்தும்படி அங்கே வருவீராயின்,உம்மை அவ்விடத்திலேயே மாய்த்துப் பக்ஷித்து விடுவேன் என்று சொல்லிவிட்டு ஊராளியின்   மகளைப் பேய் பிடித்துக் கொண்டது. அவளுக்கு நோய் அதிகரித்து பைத்தியம் பலமாய்பிடித்துக்கொண்டு மனிதரை கொன்று தின்ன ஆரம்பித்தனள். நகராபதி எங்கும் ஆள் அனுப்பி அந்த  நிபுணவைத்தியனை எங்கே கண்டாலும் கையோடு அழைத்து வரும்படி கட்டளையிட்டான். இது கேட்ட அந்தக் குடியானவன் அந்தப் பிரபுவினிடத்திற்கு விரைந்து சென்று  பிரபுவே நீர் இக்கணமே இந்நகரத்தில் உள்ளோர் யாவரையும் தெருக்களில் நின்று கொண்டும் ,சாரதிகளை வண்டிகளின் மேல் நின்று கொண்டு கொறடாவை நீட்டிக் கொண்டும், “கெட்ட மனைவி வந்து விட்டாள், கெட்ட மனைவி வந்து விட்டாள்” என்று ஓலமிடும் படி செய்யவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுத் தான் நடு அறைக்குள் புகுந்தான். அங்குள்ள பிசாசம் ஆனது  இவனைக் கண்டதும் மூண்டு எழுந்த கோபத்தாற்சீறி நீ ஏன் இங்கு வந்தாய் உன்னைக் கொன்று தின்று விடுகிறேன் பார் என்றது. அவன் அதை நோக்கி நான்  என்ன செய்யட்டும்? நான் உன்னை இந்த இடத்தை விட்டு ஓட்டும் படியாக நான் இவ்விடத்திற்கு வரவில்லை. ஐயோ கெட்ட மனைவி இங்கும் வந்து விட்டாளே என்று உன் மீது  இரக்கம் கொண்டல்லவோ உன்னோடு இச்செய்தி சொல்ல வந்தேன் என்றான். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த வலகையானது பயந்து,  பலகணி வழியிலிருந்து குணிந்து கீழே பார்த்து  எல்லோரும் “கெட்ட மனைவி” என்று பெரும் கூச்சல் இடுகிற ஆரவாரம் கேட்டு மித்திரரே!நான் எங்கே போய் தப்பிப் பிழைப்பேன் என்றது. அவன் பேயயைப் பார்த்து “நீ எப்பொழுதும்போல் அந்தப் பாதாளக்குழி்க்கே போவது நலம், அவள் இனி அங்கு வர மாட்டாள்” என்றான்.அப்பேய்அதை நம்பி அங்கே போனதும் அப் பிடாரியைக் கண்டு அவள் கொடுமைக்கு உட்பட்டது. நகர அதிபதி தன் மகளுக்கு நோய் நீங்கியது கண்டு களிப்புற்று அவளை அவ்வைத்தியனுக்கே பாணிக்கிரகணம் செய்துகொடுத்து தன் பெண்ணிற்குச் சீதனமாக தன்ஆஸ்தியிலும் பாதி கொடுத்தான்.

“வழிபாடு உடையவளாய் வாழ்க்கை நடையாய்

முனியாது சொல்லிய செய்தாங்கு-எதிர் உரையாது 

ஏத்திப் பணியுமேல்இல்லாளை  ஆண்மகன்

போற்றிப் புனையும் புரிந்து .”

இப்புருடன் அறிவுடையோன் ஆகையால் இவ்வித உபாயங்களை செய்தான். மட்டி புத்தியினை உடையவன் என் செய்வான்? இம் மனைவியைக் கட்டியழ வேண்டியதே.கல்வி இன்மையினாலேயே இவ்வளவு துன்பத்தை இப்பெண் செய்தாள்.ஆகையால் பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பது அவசியமாகிறது. 