தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைச் சீர் செய்ய மேற் கொண்டுள்ள பயணத்தில்...
இன்னொரு மைல் இன்று.
இந்த இதழ் மின்னூலகத்திலிருந்து கண்டு - உருப்பெருக்கு ஆடியால் உருப்பெருக்கி மடிக்கணிணியில்
தட்டுத் தடுமாறிப் படித்து,
அதனைப் பதிவு( record) செய்து,
பதிவுசெய்த ஒலிப்பேழையை
slow modeல் ஓடவிட்டுப் செப்பமாக எழுதி
மீண்டுமொருமுறை
மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து
இங்கு பந்தியில் பரிமாறப்படுகிறது.
( இதனை வேறு வகையில் எளிமைப்படுத்திச் செய்யும் வாய்ப்பறிந்த வர்கள் அறிவூட்டலாம்.)
*
விவேக சுந்தரம் என்னும் ஒரு இதழ்
1887 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
இந்த இதழ் ‘ஜனோபகாரமாகப் பலருக்கும் பயன்படும்படி பிரசுரம் செய்யப்பட்டது’ என்ற அறிவிப்புடன், மெட்ராஸ் ரிப்பன் பிரஸ் என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டு சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ் ஆகும்.
இதனுடைய பத்திராதிபர் சை. நமசிவாய செட்டி, இதழினுடைய விலை மூன்று பைசா என்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
விவேக சுந்தரம் நம்பர் 1 இதழில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுகதை இங்கு....
இதை எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
கதையின் தலைப்பு - கெட்டமனைவி
(Bad Wife )
-----
மித்திரர்களே!
அநேகம் பெண்கள் கல்வியின்மையின்மையாலாயே இல்வாழ்க்கையைக் கெடுத்துப் புருடர்க்குத் துன்பத்தை விளைவிக்கின்றார்களாகையால் அதற்குக் கதா ரூபமாக ஓர் திருஷ்டாந்தம் கூறுகின்றோம். சிறிது செவிசாயுங்கள் .
ஒருத்தி தன் கொழுநனை மிகக் கடுமையாய் பகைத்து அவன் சொல்லியவற்றுக்கெல்லாம் முற்றும் எதிரிடையாய்ச் செய்து வந்தாள்.
அவளுடைய கணவன் அவளை நோக்கிப் ‘பெண்ணணங்கே நீ காலையில் துயில் எழு’ என்றான். அவள் மூன்று நாளைக்கு குறையாமல் படுத்த படுக்கையை விட்டு எழுந்திராள். அவன் ‘என்னுயிரே! படுத்து உறங்கு’ என்றால் அவள் தூக்கத்தை மறந்து .விடுவாள். புருஷன் அவளை தோசை வார்த்துக் கொடுக்கச் சொன்னால், அவள் ‘அட கள்வா, உன் பவிஷுக்கு தோசை கூட வேண்டுமோ’ என்பாள் .அவன் அவளை நோக்கி ‘பெண் பாவாய், எனக்கு தோசையில் இஷ்டமில்லை, நீ வார்க்க வேண்டாம்’ என்றால் அவள் வீம்புக்காவது கூடை நிறைய தோசை வார்த்து அடுக்கி ‘அட திருடா இவ்வளவையும் நீயே சாப்பிட்டுத் தீரவேண்டும் ஒன்று கூட மிச்சம் வைக்கக்கூடாது’ என்று பலவந்தப் படுத்துவாள். கொண்டான் அவளை நோக்கி இனியவளே, உனக்கு வேலை வைத்தால் எந்தன் மனம் புண்படுகிறதா கையால் நீ யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். இதுவுமன்றி நீ இனிமேல் மாட்டிற்கு புல்லறுக்க போகவும் வேண்டாம்’ என்றால், அவள் ‘அட சோரா உனக்கு என்ன பாரம்? நான் போகத்தான் வேண்டும்’ என்று போவாள்.
அவன் இவள் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் காட்டிற்குப் போய் கனிகளைப் பொறுக்கி உண்டு பசியாறி துன்பம் தீர்ந்திருக்கலாம் என்று வனம் போக, அவ்விடத்தில் திராட்சைப் பழத்தால் நிறைந்த ஒரு பெரும்புதர் இருக்கிறதையும் அதற்கு நடுவில் அகாதமான பள்ளம் இருப்பதையும் கண்டு, ‘ஓஹோ நான் ஏன் கெட்ட மனைவியை வைத்துக்கொண்டு இவ்வாறு துன்புற்று இருக்கவேண்டும் அவளை எப்படியாவது இப்படுகுழியின் கீழே தள்ளித் தொலைத்து இன்புற்றிருக்கலாகாதா என்று நினைத்து வீடு வந்து சேர்ந்து, அந்த பிடாரியை பார்த்து, ‘மெல்லியலே கனிக்காக நீ காட்டிற்குப் போக வேண்டாம் என அவளை நோக்கி என அவள் அவனை நோக்கி ‘அடே பையா நான் போகத்தான் போவேன், கேட்பதற்கு நீ யார்?’ என்றறாள். அவன் மறுபடியும் தன் இல்லாளை நோக்கி, ‘மடமானே! நான் கண்டிருக்கிற திராட்சைக் கனிகளைக் கொண்டு வரும்படி நீ காட்டிற்குப் போக வேண்டா’மென அவள் அதற்கு ‘தடை ஒன்றும் இல்லை, நானே போய் கனிகளை எல்லாம் கொண்டு வருகிறேன். பேயே உனக்கு ஒரு பழமாவது கொடேன்’ என்றாள். அந்நீலி.
தன் கொழுநன் பின்னோடு கூட காட்டிற்குச் சென்று அங்குள்ள புதரைக் கண்டதும் அவளை முற்கொண்டு ஒரே பாய்ச்சலாய்த் தாவிப் பாய்ந்து, ‘அட கெடுவாய்! நீ இங்கு வராதே, வந்தால் உன் உயிர் இழந்தாய்யென்று நினை’ என்று சொல்லி, அப்புதர் நடுவே சென்று, அங்குள்ள பாதாளக் குழியில் குப்புற விழுந்தாள். அதன் பின்னர் அவன் தன்னைப் பிடித்திருந்த துன்பமனைத்தும் இத்துடன் தொலைந்து போய்விட்டது என்று அகமகிழ்ந்து தனது கிருகத்திற்கு வந்து அங்கேயே மூன்று நாள் சுகித்திருந்துவிட்டு மனையாள் கதி என்னவாயிற்று என்று அறியும்படி நான்காவது தினம் அப் படடுகுழியண்டை சென்று, நெடுங் கயிறொன்றறை அதற்குள்ளே விட்டு இழுக்க அதனோடு சிறு பேய் ஒன்று வருவதை கண்டு நடுங்கி அதை எப்பொழுதும்போல அதளப்பாதாளத்தில்தானே விடும்படி பார்க்க, இவன் குறிப்பை அறிந்த அவ்வலகையானது கீச்சென்று பெருங்கூச்சலிட்டு “ஐயா என்மேல் கிருபை செய்து என்னை காப்பாற்றி அருள வேண்டும். என்னை மீண்டும் அவ்விடத்திற்கு போய் விடும்படி செய்ய வேண்டாம். இப்படியே எங்காவது தப்பி ஓடிப்போய்ப் பிழைக்கிறேன். ஒரு கொடும்பாவி அங்கே வந்திருக்கிறாள் அவள் எங்கள் எல்லோரையும் கிள்ளிக்கடித்து அனேகமாக விழுங்கி விட்டாள். என்னால் இனிமேல் சகிக்கத்திறன் இல்லை. என்னை நீர் இதை விட்டு எடுத்து விட்டால் நான் அந்த நன்றியை மறவாது உனக்கு கைமாறு செய்வேன் என்று அவனை பஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டது..
அக்குடியானவன் இதை கண்டு இரக்கம் கொண்டு, அவ்வலகையைப் படுகுழியிலிருந்து தூக்கிவிட அது வெளியே வந்து தன் உபகாரியை நோக்கி மித்திரரே! நீர் என்னோடு பாடலிபுத்திரத்திக்கு வாரும்; அங்குள்ளவர்களை நான் பிடித்துவருத்த்துகிறேன்; நீர் அவர்களைக் குணப்படுத்தலாம் என்று சொல்லிப் போய் அந்நகரத்தின் கண்ணுள்ள பெரியவணிகர்களுடைய மனைவி மக்களைப் பிடித்துக்கொள்ள, அவர்களுக்கெல்லாம் நோய் கண்டு பைத்தியம் பிடிக்கத் தலைப்பட்டன.
இது கண்ட அக்குடி யானவன் முதலில் இந்நோய் கண்ட ஒருவர் வீட்டிற்கு போய் நுழையவே, அந்த பேய் அதை விட்டு ஓடிப்போக, உடனே நோய் நீங்கி பிணியாளிகள் அனுகூலம் அடைந்து அவனுக்குப் பணம் கொடுத்தார்கள். குடியானவன் இது முதல் மஹா வைத்தியமன் என்று ஊரெங்கும் பெயர் எடுத்து, வீடு வீடாய் நுழைந்து அளவற்ற செல்வப் பெருக்குடையவனாகிக் குபேரனையும் மேற்கொண்டான். இது கண்ட பேய்யானது அவனை நோக்கி “ஐயா உமக்கு இப்பொழுது குறைவற்ற நிதிக்குவை இருக்கின்றது அல்லவா? இந்நகராதிபதியின் மகளை நான் போய் பிடித்துக் கொள்ளப் போகிறேன் பத்திரம். நீர் அவளுக்கு நோய் தீர்க்கும் படி அங்கே வரவேண்டாம். அப்படிக்கின்றி நீர் என் வார்த்தையை மீறி அவளைக் குணப்படுத்தும்படி அங்கே வருவீராயின்,உம்மை அவ்விடத்திலேயே மாய்த்துப் பக்ஷித்து விடுவேன் என்று சொல்லிவிட்டு ஊராளியின் மகளைப் பேய் பிடித்துக் கொண்டது. அவளுக்கு நோய் அதிகரித்து பைத்தியம் பலமாய்பிடித்துக்கொண்டு மனிதரை கொன்று தின்ன ஆரம்பித்தனள். நகராபதி எங்கும் ஆள் அனுப்பி அந்த நிபுணவைத்தியனை எங்கே கண்டாலும் கையோடு அழைத்து வரும்படி கட்டளையிட்டான். இது கேட்ட அந்தக் குடியானவன் அந்தப் பிரபுவினிடத்திற்கு விரைந்து சென்று பிரபுவே நீர் இக்கணமே இந்நகரத்தில் உள்ளோர் யாவரையும் தெருக்களில் நின்று கொண்டும் ,சாரதிகளை வண்டிகளின் மேல் நின்று கொண்டு கொறடாவை நீட்டிக் கொண்டும், “கெட்ட மனைவி வந்து விட்டாள், கெட்ட மனைவி வந்து விட்டாள்” என்று ஓலமிடும் படி செய்யவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுத் தான் நடு அறைக்குள் புகுந்தான். அங்குள்ள பிசாசம் ஆனது இவனைக் கண்டதும் மூண்டு எழுந்த கோபத்தாற்சீறி நீ ஏன் இங்கு வந்தாய் உன்னைக் கொன்று தின்று விடுகிறேன் பார் என்றது. அவன் அதை நோக்கி நான் என்ன செய்யட்டும்? நான் உன்னை இந்த இடத்தை விட்டு ஓட்டும் படியாக நான் இவ்விடத்திற்கு வரவில்லை. ஐயோ கெட்ட மனைவி இங்கும் வந்து விட்டாளே என்று உன் மீது இரக்கம் கொண்டல்லவோ உன்னோடு இச்செய்தி சொல்ல வந்தேன் என்றான். இதைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த வலகையானது பயந்து, பலகணி வழியிலிருந்து குணிந்து கீழே பார்த்து எல்லோரும் “கெட்ட மனைவி” என்று பெரும் கூச்சல் இடுகிற ஆரவாரம் கேட்டு மித்திரரே!நான் எங்கே போய் தப்பிப் பிழைப்பேன் என்றது. அவன் பேயயைப் பார்த்து “நீ எப்பொழுதும்போல் அந்தப் பாதாளக்குழி்க்கே போவது நலம், அவள் இனி அங்கு வர மாட்டாள்” என்றான்.அப்பேய்அதை நம்பி அங்கே போனதும் அப் பிடாரியைக் கண்டு அவள் கொடுமைக்கு உட்பட்டது. நகர அதிபதி தன் மகளுக்கு நோய் நீங்கியது கண்டு களிப்புற்று அவளை அவ்வைத்தியனுக்கே பாணிக்கிரகணம் செய்துகொடுத்து தன் பெண்ணிற்குச் சீதனமாக தன்ஆஸ்தியிலும் பாதி கொடுத்தான்.
“வழிபாடு உடையவளாய் வாழ்க்கை நடையாய்
முனியாது சொல்லிய செய்தாங்கு-எதிர் உரையாது
ஏத்திப் பணியுமேல்இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து .”
இப்புருடன் அறிவுடையோன் ஆகையால் இவ்வித உபாயங்களை செய்தான். மட்டி புத்தியினை உடையவன் என் செய்வான்? இம் மனைவியைக் கட்டியழ வேண்டியதே.கல்வி இன்மையினாலேயே இவ்வளவு துன்பத்தை இப்பெண் செய்தாள்.ஆகையால் பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
**
No comments:
Post a Comment