Saturday, July 24, 2021

 

நாம்  1887ம் ஆண்டு வெளி வந்த விவேக சுந்தரம் என்ற இதழின்  

நம்பர் 2ல், பக்கம் 7 முதல் 8 வரை வெளியாகியுள்ள -

 

தன் கணவனை விட்டுப் பர  புருஷனைத் தேடி அவமானம் அடைந்த 

வச்சிராங்கியின் கதை.

 

என்ற சிறுகதையை எழுதியவரின் அன்றைய மொழியிலேயே இங்கே காண்போம்.

 **

மச்சராச்சியம் என்ற  ஓர்தேசத்தில் கச்சிநாதன் என்று ஓர் அரசன் இருந்தான்.அவனுக்கு வச்சிராங்கி என்ற அதிரூப லாவண்ய மனைவி இருந்தாள்.அவள் கற்பு நீக்கமே சிறந்த அறம் ஆக மதித்த ஓர் புண்ணியவதி. அவள் நெடுநாளாக அவ்வூர் இராஜ மாளிகை காப்போன் ஆகிய முத்து நாய்க்கனிடம் விருப்பங்கொண்டு இருந்து, ஒரு நாள் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல் தன் வீட்டிலிருந்த சொத்துக்களில் பாதிக்குமேல் சுருட்டிக்கொண்டு மேற்படி கள்ள புருஷனையும் கூட்டிக்கொண்டு பிற தேசம் செல்வாளாயினள்.

 

போகும் வழியிலே ஒரு ஆறு எதிர் இருந்தது. அவ்வாற்றை நீந்திச் செல்ல முயன்று முத்து நாயக்கன், வச்சி ராங்கியைப் பார்த்து பெண்ணே! இவ்வாற்றைத் தாண்ட வேண்டி இருத்தலினாலே, உன் ஆபரணங்கள், வஸ்திரங்கள் யாவற்றையும் கழற்றிக்கொடு; நான் அக்கரையில் வைத்துவிட்டு வந்து உன்னை கூட்டிச் செல்கிறேன் என்றுகூற-

இவள் அவன் பேச்சை நம்பி ஆடை ஆபரணாதிகள் யாவும் கழற்றிக் கொடுத்துவிட்டு அம்மணமாய் நின்றாள்.அம் முத்து நாயக்கன் ஆனவன் இச் சொத்துக்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஆற்றைத் தாண்டி ஓடிப் போய்விட்டான்.

 இம்மாது சிரோன்மணி சிறிது நேரம் நின்று பார்த்து, போன கள்ளப்புருடன் மீண்டும் வராமையைபார்த்துஇவ்விடம் நிற்றல் தகுதி அன்று; மான பங்கம் வந்துவிட்டது; என் செய்வேன்! என் தெய்வமே! பர புருஷனை நம்பி வந்ததனால் அல்லவா இந்த அவமானம் நேரிட்டது என்று சொல்லித் துக்கித்து அந்த ஆற்றில் போய் நின்றுகொண்டாள்.

 

அங்கே  ஓர்தந்திரமுள்ள குள்ளநரி மாமிசத் துண்டைக் கவ்வி ஓடிவந்துஅவ்வாற்றின் கண்ணே ஓடும்மீனைப் பார்த்து மாமிசத்தை விட்டு ஆற்றில் குதித்து மீனைப் பிடிக்க ஓடிற்று. அப்போது கருடன் மாமிசத்தை கவ்வி ஓடினான்மீனும்தப்பி ஓடிவிட்டது.இந்த தந்திர நரி வாய்த்த விடும்போய் அடுப்பு நெருப்பும்  இழந்தவள் போல ஆகாயத்தைப் பார்த்து நின்றது. 

 

அப்போது ஆற்றினுள் நிற்கும் வச்சிராங்கியானவள் கேட்கிறாள்:

 

சம்புவே என்ன புத்தி? சலந்தனின் மீனை நம்பி 

வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்பதனோ ?”

 

அதாவது, ஓ தந்திரம் உள்ள குள்ளநரியே! நீ சலத்தின்கண்ணே வசிக்கின்ற ஓர் அற்ப மீனை நம்பி,மிகவும் இனிப்பு பொருந்திய மாமிசத் துண்டை இழந்து ஆகாயம் பார்க்கிறாயே இது என்ன புத்தி? என்றாள்.  அதற்கு நரி சொன்னதாவது- 

 

அம்புலி மாதே கேளாய்! அரசனை அகலவிட்டு

வம்பனைக் கைப்பிடித்த போலாயிற்றன்றே

 

அதாவது, ”மச்ச தேசத்து அரசியே!நீ சொல்வது சரியே! நான் சொல்வதைச்  சிறிது செவிகொடுத்துக் கேட்பாயாக. அழகும் கல்வியும் நிறைந்த மச்ச தேசத்தை அரசாட்சி செய்யும் உன் பத்தாவை  விட்டுவிட்டு ஒரு துன்மார்க்கனைச் சேர கருதி அவனைத் துணைப் பற்றி வந்து மானபங்கம் அடைந்து ஆற்றின்கண் நிற்கிறாயே! அந்தக்கதி நானும் அடைந்தேன்என்றதாம். அது கேட்ட அவள் மனம்திடுக்கிட்டு ஒரு நரியிடம் நாம் அவமானச்சொல் கேட்க வேண்டியதாயிற்று என்று உயிரிழந்தாள்.

 

ஆகையால், பர புருஷர்களை விரும்பும் ஸ்திரீகாள்! இனி இவ்வாறு துன்பத்தைத் தரும் வியாபிசாரம் செய்யாதீர்கள்! செய்தானல் வச்சிராந்தி அடைந்த துன்பத்தை அடைவீர்கள்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! கற்பெனப்படுவது மாதர்க்கு சிறந்த அணிகலன் என்று மதியுங்கள்.

 

**

[ இச்சிறுகதை எழுதப்பட்ட காலத்தின் போக்கும், மொழிநடையும் அறிந்து கொள்வதற்காகவே ஒரு எடுத்துக்காட்டாக இங்கு மீள்உலா வர ஏற்பாடு செய்தோம். பெண்களைப் பற்றி இக்கதையில் உள்ள கருத்துக்கும் நமக்கும் உடன்பாடு ஏதும் இல்லை..]

 

No comments:

Post a Comment