அதிரடி அதிரடி
தற்போதெல்லாம் நாளிதழ்களிலும் பிற ஊடகங்களிலும் எங்கு பார்த்தாலும், எதற்கெடுத்தாலும்
ஒரே அதிரடியாகத் தான் இருக்கிறது.
மிகச்சாதாரண நிகழ்வு கூட ‘அதிரடி’ என்று அடைமொழி சேர்க்காமல் ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதே இல்லை. ஒரு புள்ளி அசைந்தால் கூட ‘புரட்சி’ என்றும், பெண்ணொருத்தி தன் கூந்தலை அள்ளி முடித்தால் கூட ‘அதிரடி’ என்றும் வார்த்தை சேர்க்காமல் ஊடகத்தாரால் நிகழ்வுகளைச் சொல்ல முடியாது போலிருக்கிறது.
போகிற போக்கை பார்த்தால், சமையலறையிலோ அல்லது சாலையோர உணவகத்திலோ ஒரு தோசையைத் திருப்பிப் போட்டால் கூட உடனேயே ஓடிப்போய் தோசை, கல்லில் திரும்ப விழுவதற்குள் ‘அதிரடியாக’ என்ற வார்த்தையை அங்கே போடாமல் ஊடகங்கள் அந்நிகழ்வைச் சொல்லாது. கூடுதலாக, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அதிரடிப்பாட்டி என்று தலைப்பூச்சூட்டி நாலுகாலம் படச்செய்தி போடுவார்கள் ஊடகத்தார்.
சரி,அதிரடி என்றால் என்ன?
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், திரு மு சண்முகம் பிள்ளை அவர்களைத் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர்கள் அ.ச.ஞானசம்பந்தம், அ.மு.பரமசிவானந்தம், கொண்டல் சு மகாதேவன் ஆகியோர்களை மேலாய்வாளர்களாகவும் கொண்டு பதிப்பித்துள்ள தமிழ்- தமிழ் அகரமுதலி (பக்26) அதிரடி என்ற சொல்லுக்குப் ‘பெருங் கலகம்; மிரட்டு; அளவுக்கு மிஞ்சியது’ என்று பொருள் தந்து நிற்கிறது.
தமிழ் இலக்கியங்களில் அதிரடி என்ற சொல் ஆளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
‘அதிர்’ என்ற சொல் (பெரும் ஓசை என்ற பொருளில்) மலைபடுகடாம், நற்றினை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலும்-
அதே பொருளில் ‘அதிர்பு’ என்ற சொல் பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகம் ஆகிய இலக்கியங்களிலும்-
அதிர என்ற சொல் (நடுங்கச்செய்ய என்ற பொருளில்) பட்டினப்பாலை, நற்றினை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பரிபாடல் திரட்டு, அகநானூறு, புறநானூறு, குறள், ஐந்திணை எழுபது, சிலப்பதிகாரம் என்ற இலக்கியங்களிலும்-
‘அதிர்க்கும்’ என்ற சொல் (ஓசையெழுப்பும், நடுங்கச்செய்யும் எனும் பொருளில்) பதிற்றுப்பத்து, பரிபாடல், நான்மணிக்கடிகை என்ற இலக்கியங்களிலும்-
அதிர் கழல் வேந்தன் என்ற சொல் மணிமேகலையிலும்-
அதிர் குரல் என்ற சொல் நற்றினை, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலும்-
அதிர் குரல் எழிலி என்ற சொல் ( இடிமுழக்கத்துடன் மழை தரு மேகம் எனப் பொருள் பட) நற்றிணையிலும்
அதிர் குரல்ஏறு(உரத்த ஓசையுடன் கத்துகிற காளை)என்ற சொல் புறநானூற்றிலஉம் காணப்படுகிறது.
ஊடகத்தார் எந்த அதிரடியைக் குறிப்பிடுகிறார்களெனத் தெரியவில்லையே!
ஊடக உலகத்தாரே! அரசோ, மாவட்ட ஆட்சியரோ, நீதிமன்றங்களோ வழக்கமான மிகச்சாதாரன முடிவுகள் அறிவித்தால்கூட அதிரடி உத்தரவு என்று அலப்பறை செய்கிறீர்களே
ஏன்?ஏன்?
**
-
No comments:
Post a Comment