Friday, December 24, 2021

 


பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக விரைந்து களங்காணவிருக்கும்  பாட்டிடையிட்ட பாரதியார் சிறுதைகள் 

முதற் தொகுப்புக்கு எம்மால் அமைக்கப்பட்டுவரும் 

தோரணவாயிலின் முதற்பகுதி. 

முன்னோட்டம் வருகிறது இங்கே

      -இராஜ முத்திருளாண்டி


தோரண வாயில்.



 

முப்பத்தொன்பது ஆண்டுகளே தமிழ் நிலத்தில் உருவாழ்ந்து முடித்துக்கொண்டாலும் (11-12-1882 11-9-1921),  அதனிலும் குறுகிய தனது படைப்புக் காலத்திற்குள், படைப்புப் பலபடைத்துத் தமிழ்க் களத்தில் நிலைபெற்று இன்னும் தொடர்வதுதான் பாரதியின் பெருவாழ்வுச் சிறப்பு. தான் எழுதக் கைவைத்த எல்லாத் துறைகளிலும், எதனிலும் குறுகாமல், எழுகதிரென விகசித்து நின்று, தமிழ்ப் படைப்பு மரபின் பரிமாணங்களனைத்தையுங் காட்ட வல்லானாகவும், அதற்குமேலும் கூட்டிக் காட்டியவனாகவும் பாரதி   விளங்கினான். அவனது - கவிதை, வசனகவிதை, கட்டுரை, சிறுகதை உள்ளிட்டு – வகைவகையாய்த், தொகைதொகையாய் அணிவகுத்த படைப்புகள்  யாவற்றையும் - ‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என முழங்கிச்- ’சொல் புதிது,பொருள் புதிது,முறை புதிது, நடை புதிது, வகை புதிது’  என்ற அணிவகுப்பாய்க் களமாட அனுப்பிவைத்தான். முழுமையாக அவனது படைப்புகளைச் ‘சுயமாக’க் கூர்ந்து, ‘ஒருபால் கோடாது’ சீர்நோக்க முயல்பவர்கள், பாரதி தனது படைப்புகளை, மரபைப் பின்பற்றியதாகவோ அல்லது  மரபுடன் புதுமை கலந்ததாகவோ அல்லது மரபு அருகிய முற்றிலும் புதிய வகையாகவோ வார்த்தளித்திருப்பதை அறியக்கூடும். பன்மொழியாற்றலும் பன்முகப் படைப்புத் திறனும் கொண்டிருந்த பாரதியைத் தமிழ் இலக்கியத் தளத்தில் ஒரு பெருங் கவிஞனாக (‘மகா கவி’ என) மட்டுமே ஏற்றிப் போற்றி அங்கீகரிப்புச் செய்யும் பொதுப் பழக்கம் நிலைகொண்டுவிட்டதால், தமிழுக்குப் புதுமை சேர்க்கவேண்டும் என்ற தணியாத் துடிப்புடன் பிறந்த அவனது பிறதுறைப் படைப்புகளை - எடுத்துக்காட்டாகப் பாரதி,  சிறுகதைத் துறையிலும் - புதியன ‘சிருஷ்டிக்கும்’  பிரம்மனாக - முன் நின்றதைக் காலத்தே  கண்டுணர்ந்திருக்காத நிலை ஏற்பட்டுவிட்டது.

 

வாழ்ந்தகாலமெலாம் தாங்கவொண்ணாத் தரித்திரமும் தமிழும் பெருக வாழ்ந்த பாரதி மறைந்த சில ஆண்டுகள் கழிந்து ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் (1933) “பொதுவாகக் கருதுமிடத்து, தமிழ் இலக்கிய உலகிற்கு சுப்பிரமணிய பாரதி ஒரு புதிய ஜோதியையும் சக்தியையும் தேடி அளித்தார்” என்று ஒரு புதுப் பார்வையுடன்  மதிப்பீடு செய்ததோடு, “அவர் ஒரு நூதன சக்தியாதலால் அவருடைய பெருமையைப் பழைய முறைகளில் பழக்கம் பெற்ற தமிழ்ப் புலவர்கள் அறியமுடியாமல் இருக்கிறார்கள் என்று அடர்ந்த  கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார்.[1] இதே மாதிரிக் கவலையைப், பின்னாட்களில் வெளிவந்த பாரதி குறித்த தனது நான்காவது நூலில், தன் பாங்கில், தொ.மு.சி.ரகுநாதன் (1982), “பாரதி வரலாற் றாசிரியர்களும் பாரதி பற்றிய நூலாசிரியர்களும், கட்டுரையாளர்களும் மற்றும் பிறரும்”  பாரதி பற்றிக் “காணத் தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக் கொண்டு விட்ட, சொல்லப்போனால்.. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாகப் பதிவிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தினார்.[2] கல்விக் கள மாசேதுமற்றுச் சாயா நேர்மைச் சிறப்பாய்வு நூலாக, அண்மைக் காலத்தே பாரதி பற்றி வெளிவந்த பாரதி கிருஷ்ண குமாரின் ‘அருந்தவப் பன்றி’ ஆழ்ந்தகன்று தோண்டிக் காட்டியுள்ள  அதிர்ச்சித் தகவல்களில் ஒன்று, ஆண்டுகள் பல கழிந்தும், பாரதி சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலோ அல்லது வேறு புறக் காரணங்களால் மறைக்கப்பட்டோ முழுதாக இன்னும் அறியப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகிறது.  முன்குறிப்பிட்ட அந்த நிலைகளில்  பெருமாற்றம் எதுவும் நிகழாமலே அவை தொடர்கின்றன என்பது நமைக் கலங்க வைக்கிறது.  “நேரம் கிடைக்கிற போதெல்லாம் பாரதியின் படைப்புகளையோ பாரதி குறித்த படைப்புகளையோ வாசிப்பது பழக்கம்” எனக் கொண்டிருப்பதால், உழைத்துக் ‘கவியுளம் கண்டு’, பாரதியின் ‘சொற்சுரங்கத்திலிருந்து’  பாரதி கிருஷ்ணகுமார் கடைந்து கொண்டு வந்தளித்திருக்கும் ஆவணச் சுருக்கம் இதுதான்: 1909இல் பிறந்த மகாகவி பாரதியின் பாட்டொன்று,  (கவிதாதேவி அருள் வேண்டல்/ கவிதா தேவிக்கு வேண்டுகோள் ) சிலருக்கு நெருடலாக இருக்குமோ என அறியாமையாலஞ்சிப் பலரால், பலகாலமாக (1909 முதல் 1987 வரை)  எதேச்சதிகாரமாகத் தணிக்கைக்  கத்தரி போடப்பட்டும், தான் தோன்றியாகத்  தலைப்பிடப்பட்டும், தவறாகப் பகுக்கப்பட்டும்  (தொ.மு.சி ரகுநாதன்  கூறியதுபோல, ‘ மறைக்கப்பட்டு.......திரையிட்டு மூடப்பட்டு) வெளித் தள்ளிய பகுதிகளே (83/172) நாளதுவரை வெளிச்சத்தில் நின்றிருக்கின்றன என்பதாகும்.[3]  இருட்டில் புதைக்கப்பட்டுக் கிடந்த ‘கவிதாதேவி அருள்வேண்டல்’ பாடலின் உயிர்ப்பகுதிகளில் பாரதியின் கவியாற்றலிருண்டு நின்ற  ஆறாண்டு வாழ்வின் அவலச்சரிதை அவர்மொழியிலேயே, நேர்மையின் வெளிச்சங் கொண்டொளிர்வதாக பாரதி கிருஷ்ணகுமார் அறிந்து காட்டியிருப்பதைக் கண்ணுறும்போது, மேலுங் கூர்ம அகழ்வில், கீழடிபோல், பாரதிப் புதையல் பல கிட்டலாமெனும் எதிர்பார்ப்பமுதை யல்லவா அளித்திருக்கிறது அருந்தவப் பன்றி?’

 

‘’பிற நாட்டார் நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்ற இலட்சிய வேட்கையோடு எழுதப் புறப்பட்டுவந்தவனல்லவா எட்டையபுரத்து இளசை?. படைப்புக் களம் நின்று சொன்னபடி செய்தான். பாட்டாறாய்ப் பரவித் தமிழ்ப்பரப்பை அவன் செழுமைப்படுத்திக் கொண்டிருந்த காலத்திலேயே உரைநடையிலும் நிறைசெய்தான் பாரதி.  ”உரை நடைப் படைப்புத் துறையில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அவருக்குத் தமிழில் குறிப்பிடத் தக்க முன்னோடிகள் இல்லையென்றே கூறலாம்”  என உறுதி சொல்லுகிறார் அகிலன்.[4] அதேசமயம்,  பராசக்தியைப் பற்றிக்கொண்டிருந்த பாரதியையே பற்றிக்கொண்டு, சுற்றிச்சுற்றிப் பாரதி படைப்புகளைத் தேடிப் பதிப்பித்து அரும்பணியாற்றிய முன்னோடிகளில் சிறந்தவரான - பெ.தூரன், “பாரதியாரின் உரைநடை வெகுகாலமாகச் சரியாக மதிப்பிடப்படவில்லை” என்று  தனது ஆழ்ந்த ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளதையும் [5] இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. இதே உண்மையை வேறு வகையாகச் சிட்டி-சிவபாத சுந்தரம் தமது நூலில்[6]  “தமிழ்ச் சிறுகதைப் படைப்பில் பலருடைய கவனமெல்லாம் (அவரது) கவிதையளவில் நின்றுவிட்டதால் தீவிரமாக ஆராயப்படவில்லை” என்று வெளிப்படுத்தியுள்ளதையும் சேர்த்து நினைவிற் பதித்து மேற்செல்லலாம்.

 

சற்று முன் சென்று, மூத்த தமிழாளுமைகளது கருத்துக்களை அறிய முற்படும்போது, விளக்கங்கள் ஏதுமின்றி, ஆலய மூலஸ்தானத்தே புரியாப் பாங்கில் வேத மந்திர உச்சாடனங்கள் ஒலிப்பது போலத் தமது கருத்துகளை அவர்கள் ஓதிச் சென்றுள்ளனர். “ நாம் முதன் முதலாகத் தமிழில் காணும் சிறுகதைகள் 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் என்பவையே ஆகும்” [7] என்றும், “சிறுகதை அதன் முழு வடிவத்தில் முதன் முதலில் வ.வெ.சு.ஐயரின் பேனா முனையிலிருந்து வெளிப்பட்டது”[8] என்றும் பொத்தாம் பொதுவாகத் தத்தமக்கு வந்தவாறு மொழிந்து சென்றுள்ளனர்.

 

கல்வி நிலையங்களிலிருந்து வெளிவரும் ஆய்வுகளோ, நூல்களோ,கட்டுரைகளோ உண்மையாக உட்சென்று ஆராயாமல்- ஊதிய உயர்வுக்கும் பெயருக்குமுன் சூட்டிக்கொள்ளும் பட்ட(டு)க் குஞ்சங்களுக்கும் ‘போதிய அளவுக்கு’ மட்டுமேயான மேலோட்ட ஆய்வுகளில் திளைப்பதால் - மந்தைக்  குணத்தில், சாய்கிற பக்கம் சாய்கிற பாங்கில் சாய்ந்து ‘காணாததையெல்லாம் கூடக் கண்டதுபோல்’ விண்டுரைக்கும் கிளிப்பேச்சாக உலவிவருகின்றன. 

இரு எடுத்துக்காட்டுகள் இதோ:

“மேலை நாட்டில் சிறுகதை ஒரு தனி இலக்கியமாக வளர்வது கண்டு தமிழ் மொழியும் அப்பேறு பெறவேண்டுமென ஆர்வம் கொண்டவர் வ.வெ.சு ஐயர்.அவரது மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. வங்காளத்தில் தாகூர் எழுதிய சிறுகதைகள் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கு ஒருவகைத் தூண்டுகோலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைந்தன. அவற்றைக் கண்ட பாரதியார் தாமும் தமிழில் சிறுகதைகள் எழுதவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை..வ.வெ.சு.ஐயர்  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளை 1927ஆம் ஆண்டு வெளியிட்டு வெற்றிபெற்றார்”

என மிகப் பொதுப்படையான, அடிப்படையிலேயே  தப்பும் தவறுமான அறிவிப்புகளைச் செய்து சென்றிருக்கின்றனர்.[9] வங்கமொழி நன்கு அறிந்திருந்த பாரதியாரே தாகூரின் சிறுகதைகளை மூல மொழியிலிருந்து தமிழில் பாராட்டத்தக்கவாறு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார் என்பதை இந்நூலாசிரியர் அறிந்துள்ளாரா என்பது ஐயமாகவே உள்ளது.மேலும். நூலசிரியர் குறிப்பிடும் ஆண்டில் (1927) வெளிவந்த  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பை ஐயர் ‘வெளியிட்டு வெற்றி பெற்றதாகக்’ கூறுவது அபத்தமாகும். அந்த 1927 தொகுதி என்பது, 1918 (?) வாக்கில் புதுச்சேரிக் கம்ப நிலைய வெளியீடாக வந்த மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் முதற் பதிப்பில் இருந்த ஐந்து கதைகளுடன், மூன்று கதைகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் எட்டுக்கதைகளாக – 2014இல் , பாபநாசம் நீர்வீழ்ச்சியில் வ.வெ.சு தவறி வீழ்ந்திறந்தபின் - அவரது மனைவி பாக்யலெக்ஷுமி அம்மாள் சார்பில் சங்கு கணேசன் என்பவர் வெளியிட்டதாகும். ‘பாரதியார் வெற்றிபெறவில்லை; வ.வெ.சு வெற்றிபெற்றார்’ என்று பொதுப்படையாக ஆதாரங்கள் சுட்டாமல் கூறுவதெல்லாம் ஆய்வுக் கருத்தாகா; உடனடித் தள்ளுபடிக்கு உரியனவே.

பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையின் பச்சையப்பன் ஆய்வரங்க வெளியீடொன்றில் (1998)[10] ‘சிறுகதை’ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியிருப்பவர்,

தமிழ் சிறுகதையின் தொடக்கம் 1913 ஆண்டளவில் தான்’’ என்று

(தவறாக) அறுதியிட்டும், “ அது குறித்த பார்வை முதன்முதலாக வ. வே. சு ஐயரால்  நோக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் (1917)என்ற சிறுகதைத் தொகுதியில் சூசிகை ஆகிய முன்னுரைப் பகுதியில் சிறுகதை இயல்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். …. சிறுகதை பற்றிய புரிதல் அவருடைய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.’’ எனக் கதைத்திருப்பதும் காணப் பதைக்கிறது நெஞ்சம்.

குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதைத் தொகுதியே கிடையாது என்பதை அறியாமலும், குளத்தங்கரை அரசமரம் எனும் கதைக்கு வ.வெ.சு  சூசிகையே அமைக்கவில்லை என்பது தெரியாமலும், மேலும் சூசிகை என்பது அந்தந்தக் கதையின் முன் சுருக்கமாகவே சொல்லப்பட்டு கதைக்குள் வாசகர்களை அழைக்கும் பாணியில் எழுதப்பட்டவையேயன்றி, ஆய்வரங்கம் தொகுத்துள்ள கட்டுரை கூறியிருப்பதுபோல ‘சூசிகை ஆகிய முன்னுரைப் பகுதியில் சிறுகதை இயல்புகளை சுட்டிக்காட்டியுள்ளார்’ என வ.வெ..சு பற்றிப் பதிவு செய்திருப்பது சூசிகையைக் ‘காணாமலே கண்டதாக’ விண்டுரைக்கும் அழிச்சாட்டியமே.

 

இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள போக்குகளால் பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், தமிழ்ச் சிறுகதைகள் குறித்த வரலாற்று வழி ஆய்விலும், பாரதி குறித்த ஆய்வுகளிலும். நிகழ்ந்து நிலவுகின்ற குறைகளும் பிழைகளும் வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பாதைகளை மறித்துச் சரியான பார்வைகளையும் மறைத்து நிறைந்துள்ளன என்ற. உண்மை வெளிப்படுகிறது அல்லவா?

 

இச்சூழலில்,காய்தல் உவத்தலின்றி, எவ்வகைப் புதுப்பிழைக்குமிடமிலா வகையில், ஆழ்ந்தும்,விரிவாகவும் தற்போதாவது தமிழ்ச் சிறுகதை வரலாற்றைக் காலநிரலில், முறையாக ஆய்ந்து, தெளிந்து, உண்மையைக்  கண்டுரைக்க வேண்டிய அவசியங்கள் பலவாகக் கிளைத்துள்ளன என்பதை இத்தோரண வாயிலில் நின்று  அறிவிப்புச்செய்யும் வாய்ப்பெடுத்துக் கொள்கிறேன். அப்படி உண்மை காண முயன்றுவரும்  தேடலில் நானும் இயன்றவாறு இணைந்துள்ள நிலையில், சும்மா “சுவடு கண்ட வழியே” (க.நா.சு. சொற்பிரயோகம்) செல்லாமல், உண்மையறிந்து சொல்ல உறுதி கொண்டுள்ள இலக்கிய நேர்மைப் பார்வை  என்பதன்றி, மற்றபடி எவர் மீதும்  காழ்ப்போ, யார் மீதும் அதீதப் பிரீதியோ ஏதுமில்லை எமக்கென்பதும் இங்கு தொடக்கத்திலேயே பிரகடனப்படுத்தப்படுகிறது.

 

தற்காலச் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முன்னெடுப்புகள் மேற்கொண்ட முதல் மூவராக அறியப்பட்டுள்ள பாரதியார், மாதவையா, வ.வெ.சு ஐயர் ஆகியோருள் யார் தமிழ்ச் சிறுகதையின் தந்தை? என்ற விவாதம் பெரும்பயன் விளைவிக்க வல்லதல்ல என்றாலும், தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி, வரலாற்று விமர்சன (Historical criticism of Tamil Short Stories) நோக்கில், இதுவரை நம்முன் நிலவச்செய்யப்பட்டிருக்கும் முந்தைய கருத்துக்களைச் சாய்ந்தொருபால் கோடாத மறுபார்வைக்கு உட்படுத்துவது தவறாகாது. சரியானதை உள்ளவாறு ஏற்றுக்கொண்டு, குறைக்கிடந்தரும் கருத்துக்களை நேர்மையாக எதிர்கொண்டு அவற்றின் மாற்று (உண்மை) நிலைகள் காண உதவும் எதிர்பார்ப்பிலேயே இனிவரும் முன்வைப்புகள் இங்கே.

                             ... வளரும்.



[1] A.V.Subramaniya Aiyar, Modern Tamil Literature,Sarada and Company,1933 ( தமிழ் இலக்கியம்: தற்காலம், பக்.51)

[2] தொ.மு.சி.ரகுநாதன்,பாரதி காலமும் கருத்தும்,1982 முன்னுரை

[3] பாரதி கிருஷ்ணகுமார், அருந்தவப் பன்றி,சுப்பிரமணிய பாரதி, மூன்றாம் பதிப்பு 2018’ பக் 6

[4] அகிலன், பாரதியின் கதைப்படைப்பு,மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர்,1982 அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்197

[5] பெரியசாமித் .தூரன், பாரதி நூல்கள்: ஓர் திறனாய்வு, வானதி பதிப்பகம், முதற் பதிப்பு,1982

[6]சிட்டி-சிவபாத சுந்தரம், தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், 1989

[7] டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, ,பாரி நிலையம், சென்னை, மு.ப.1978, பக்244

[8] தெ.பொ.மீ.,தமிழர் நாகரீகமும் தமிழ் மொழி வரலாறும், தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பு,2021, பக்.578

[9] டாக்டர் மு.வரதராசன், இலக்கிய மரபு, பக்168-169

[10] பச்சையப்பன் ஆய்வரங்கம், பச்சையப்பன் கல்லூரி, ஆராய்ச்சி வரலாறு, முதல் தொகுதி, 1998 முனைவர் இராம குருநாதன் கட்டுரை.

 

No comments:

Post a Comment