தேர்ந்த, காய்தல் உவத்தலில்லா விமர்சனப் பார்வையைத் தமிழிலக்கியப் பரப்பில் நிறுவி நின்ற இலக்கிய விமர்சகர், ''கல்விச் சூழலில் தீவிரவாதி' என்று கவனித்து மதிப்பிடப்பட்ட பல்கலைக்கழக ஆளுமை, தமிழ்ச் சிறுகதை வரலாறு'(1979) நூல்வழியே இக்களத்து முன்னத்தி ஏர் எனும் சிறப்புடைய பேராசிரியர் வேதசகாய குமார் அவர்கள்( 1949-2020) பிரிந்த முதலாண்டு நினைவு இன்று (17-12) என்பதை அவரது முதல் ஆய்வு மாணவர் முனைவர் அ. சஜன் அவர்கள் ( மார்த்தாண்டம் நேசமணி நினைவுக் கிறிஸ்துவக் கல்லூரித் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியர்) எனக்கு நினைவூட்டினார்.
அறிவார்ந்த ஆய்வும் கூர்ந்த விமர்சனப்பார்வையும் கொண்டு சிறந்து நின்ற அமரர் பேராசிரியர் வேதசகாய குமார் அவர்களுக்கு என் அஞ்சலியாக, விரைவில் வெளிவரவுள்ள 'பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்' எனும் எம் தொகுப்பில் இடம்பெறும் இந்த அத்தியாயத்தை முன்வைக்கிறேன். - இராஜ முத்திருளாண்டி.
*
மழை.
முகப்பு:
அனுபவங்களைக் கதைகளாக்கும் ஆற்றல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தனது புதுச்சேரி வாழ்க்கையில்
நிகழ்ந்ததொரு சாதாரண அனுபவம் பாரதியின்
,அற்புதமான கதை சொல்லும் ஆற்றல் காட்டும்
எழுத்தொளியாகிறது.. இதனைப் பெ.தூரன் “கட்டுரை” என்றே குறிப்பிடுகிறார். ஆனால், “
இரண்டாம் தொகுதியில் கதைக்கொத்து என்ற பகுதியில் வெளியாகியுள்ளது” என்று
முரண் செய்தியும் தருவதோடு, தொடர்ந்து, “முதல் தொகுதியில், ஸ்வசரிதையும் பிற
பாடல்களும் என்ற பகுதியில் மழை என்ற
தலைப்பில் உள்ள பாட்டு இக்கட்டுரையில் வந்ததேயாகும்” எனச்சொல்லி இக்கதையைக் கட்டுரையாகவே கணிக்கிறார்.(பாரதி
தமிழ், பக் 295).
‘சிறுகதை வரலாற்றாசிரியர்கள் பலரும் பாரதியை’ - சிறுகதைத் துறையில் ‘பாரதியின்முக்கியத்துவம்’
காணாமல்- ‘விட்டுச்சென்றிருக்கின்றனர்’ என்ற உண்மையை உரத்துச் சொல்லியிருப்பதோடு, (தமிழ்ச்
சிறுகதை வரலாறு,1979, பக்20) ‘சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைப் பாரதி அறிந்திருந்தார்’
என்றும் உறுதியொலிக்கக் கூறியுள்ள பேராசிரியர்
வேதசகாயகுமார், இச்சிறுகதையைக் கொண்டே காய்தல்
உவத்தல் இன்றிப் பாரதியைத் தமிழ்சிறுகதை வரலாற்றுக்களத்தில் மதிப்பீடு செய்கிறாரென்பது(
1979, பக்.25-26), ‘மழை’ கதையா? கட்டுரையா? எனும் விவாதத்திற்கான முற்றுப்புள்ளி.
‘இயற்கை என்ற மகாசக்தியின் முன் மனிதன் வெறும் அற்பம், அதனை அவன் அடக்கியாள்வதாக
இவன் நினைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு மடமை என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயம். விஷயம்
அனுபவ வெளிப்பாடாக உருவாவதிலும் வெற்றிதான்’ என வேதசகாயகுமார் இக்கதையை மதிப்பீடு செய்கிறார்.(
பக் 25) இருப்பினும், தமிழ்ச் சிறுகதை மரபில்
கலைப்படைப்புகளுள் ஒன்றாக நம் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கக்கூடும்’ என்று உள்ளாரந்த
வெளிப்படைத் தன்மையுடன் உரைத்துள்ள வேதசகாயகுமார்
இறுதியில் பாரதி ‘...தர்ம போதனையைத் துவக்கி விடுகிறான்.கதை கலைப்படைப்பாக உருவாகி
வந்து பிரச்சாரமாக வீழ்ச்சியடைகிறது’(பக் 26) என்ற பெருங்குறை சுட்டுகிறார்.( நேர்மையுடன்
இதனை இங்கு குறிப்பிட்டு, வேதசகாய குமாருடன் – அவர் சுட்டியுள்ள குறையுடன்- இக்கருத்திலிருந்து
மாறுபடும் எனது கருத்து நிறுவலை வேறொரு களத்தில் விரித்து விளக்குவதே சரியாக இருக்குமாதலால்,
பேராசிரியர் வேதசகாய குமார் அவர்களது ‘ பாரதி பிரச்சாரகன்’ என்ற கருத்தை(பக்26) ஒளிக்காது
வாசகர்முன் இம் முகப்பில் வைத்து விலகி நிற்கத் தேர்த்துள்ளேன்.)
‘ சட்டச் சட, சட்டச் சட, டட்டா-என்று / தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்/ எட்டுத் திசையும்
இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா?’ என்ற வரிகளுள்ள, இக்கதையிற் பொதிந்துள்ள பாடல், இந்தக் கதைக்காகவே
பாரதியின் கவிதா வானத்திலிருந்து பொழிவாகியுள்ளதென்பதை முன் காட்டிய ‘பாரதி தமிழ்’
மூலம் நாம் அறிய முடிகிறது. “மழை
இனிது. மின்னல் இனிது. இடி இனிது.”என இயற்கையின் யாவற்றிலும்
இனிது கண்டவனல்லவா பாரதி.? இக்கதை 12-7-1917இல் வெளியானது
கதையின் ஆரம்பமே புதிய, சிறுகதைக்கான நேர்த்தியான, பரபரப்பான தொடக்கமாகக்
– குதிரையோட்டம்போலத் - தொடங்கப்பட்டுள்ளது
(எடுத்த எடுப்பிலேயே, “ ஓம், ஓம்
ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று
சுழித்துச் சுழித்து வீசுது, மணல்
பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து
வீட்டுக்குத் திரும்புகிறார்கள்....) .’இவ்வரிகள்
கதையினுள் நம்மை நேரடியாக அழைத்துச் செல்கின்றன’
என்று சிலாகிக்கிறார் வேதசகாயகுமார். பிறகுதான் பாரதி சொல்கிறார் அவரும் சில
நண்பர்களும் ‘கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம்’
என.
(கவனிக்க: வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம்’. குறிப்பிலாத, ‘sweet nothing’ chat பொதுப்படையான கடற்கரைப் பொழுதுபோக்குப் பேச்சு போலும்)
மழையில் தொப்பலாக நனைவதென்பது சாதரணர் பயன்பாடு; கவியூறித்
ததும்பிடும் பாரதியோ நனைந்தது ‘ஊறுகாய்
ஸ்திதியில்’
இன்னும் ‘வழிமறிச்சானாக’ நானெதற்கு இங்கே?.
வாங்க.... ‘யானைத்திரள் போலவே மேகத்திரள் தலைமீது போக’ , ‘ மின்னல் சூறையடிக்க’, ‘இடி நகைக்க’, ‘வர்ஷமாகச் சொரிந்த’
மழையில்.... கவிராஜனோடு இணைய...நனைய.
நுழைவு:
மழை
ஓம், ஓம்
ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது,
மணல் பறக்குது, வான் இருளுது, மேகம்
சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத்
திரும்புகிறார்கள்.
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு, சாளரமெல்லாம்
தொளைத் தடிக்குது கூடத்திலே-மழை
தொளைத் தடிக்குது கூடத்திலே.
"பாட்டெல்லாம் சரிதான், ஆனால் மழை பெய்யாது' என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார்.
தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட
தீம்
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது, பாயுது,
பாயுது, தாம்
தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது, சாயுது,
சாயுது, பேய்
கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டி யடிக்குது, மின்னல்-கடல்
வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூ வென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச் சட, சட்டச் சட, டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!-
தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!
இவ்வாறு பாடிக் கொண்டு வேணு முதலியார்
குதிக்கத் தொடங்கினார். காற்று ஹ¤ஹ¤ஹ¤
என்று கத்துகிறது. வேணு முதலியாரும் கூடவே கத்துகிறார். இடி
நகைக்கிறது. வேணு முதலியார் அதனுடன் கூட நகைக்கிறார்.
அண்டங் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக்குதித் திடுகின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண் முன்பு
கண்டோம்
கண்டோம், கண்டோம்,
கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு
கண்டோம்?
தக்கத்தகத் தக்கத்தக தித்தோம்.
மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய
அய்யருக்குப் பந்தய ரூபாய் பத்தும் செலுத்திவிட்டார்.
**
( பல மாதங்களாக வேதசகாய குமார் அவர்களது மதிப்புமிக்க படைப்பான ' தமிழ்ச் சிறுகதை வரலாறு' நூற்பிரதி கிடைக்காமல் அலைந்து முயன்று கொண்டிருந்தேன். இணையதளம் வாயிலாக முனைவர். அ.சஜன் பேராசிரியரது முதல் ஆய்வு மாணவர் எனுந் தகவல் கிடைக்க, அவரைத்தேடினேன். அவர் பணியாற்றும் கல்லூரித் தளத்தில் அவரது தொடர்பு எண் கண்டு, தொடர்பு கொண்டு பேசிய முதல் நொடியிலேயே எனது தேடலை நிறைவு செய்யும் அன்புக் கொடையாக அவரிடமிருந்த அந்தப் பொக்கிஷ நூலின் முழுமையான நகலெடுத்துக் கூரியர் மூலம் அனுப்ப இனிப்புறுதி வழங்கினார். தனது பேராசிரியர் வேதசகாய குமார் குறித்த நேர்த்தியான, நேர்மையான தனது மதிப்பீட்டு நூலொன்றையும் பரிசாகக் கூட்டி விரைந்தனுப்பிய முனைவர். அ.சஜன் அவர்களது தமிழன்பிற்கு எனது மகிழ்வும் நன்றியும் இங்கு பதியனிடுகிறேன். )
*
No comments:
Post a Comment