பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடாக விரைந்து களங்காணவிருக்கும்
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுதைகள்
முதற் தொகுப்புக்கு எம்மால் அமைக்கப்பட்டுவரும்
தோரணவாயிலின் இரண்டாம் பகுதி .
முன்னோட்டம் வருகிறது இங்கே
-இராஜ முத்திருளாண்டி
தோரண வாயில்.
II
வரலாறு (வரல் + ஆறு, வந்த வழி) அறிவது வேறு; விமர்சனம்/மதிப்பீடு/ திறனாய்வு செய்வது வேறு என்பதை நாம் அறிவோம். மிகப் பொதுவாகச்
சொல்வதானால் வரலாறு என்பது கடந்த கால
நிகழ்வுகளின் காலவரிசைப் படியான பதிவுகள் எனலாம். குறிப்பிட்ட
காலம்வரை, குறிப்பிட்ட காலத்திற்கு
முன்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து (திரும்பிப்) பார்க்க உதவுவது
வரலாறு, என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட உரியது.
ஆனால், தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப்
பதிவு செய்வதில் ஈடுபட்ட பலர் அவ்வரலாற்றைக் காலவரிசைப்படி முறையாகச்
சரியாக, நிரவாமலும், தமிழில் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விளைந்த சிறுகதைகளை
அல்லது அக்கதைகளின் படைப்பாளிகளை- சரியான மதிப்பீட்டுக் கருவிகள் தம் கைவசமில்லா
நிலையில், தத்தமக்குத் தோன்றிவாறு, ஏற்கத்தக்க தரவுகள் சுட்டாமல்-
தி/றனாய்வு/விமர்சனம் செய்யவும் முனைப்புக் காட்டியுள்ளனர். வரலாறு வேறு, விமர்சனம்
வேறு என்பதை உணர்ந்திருந்தும்,சேராச் சேர்க்கையாக, வரலாற்றையும் விமர்சனத்தையும் தவறுபட இணைத்து, அவ்வாறு
நிகழ்வது ‘தவிர்க்க முடியாததாகும்’[1]
என ஏற்க இயலாத கருத்து நிறுவிப் பலர் - குழுக்களாகக் கூட்டமாக- இத்துறையில் பயணித்ததால்
தமிழ்ச் சிறுகதையின் முறையான வரலாறு, முழுமையான
திறனாய்வு இரண்டுமே குழம்பிக் காணப்படுகின்றன.
தமிழில் குறிப்பிட்ட ஒரு சிறுகதைப் படைப்பாளரது கால நிரலான படைப்புகள் பற்றி அல்லது குறிப்பிட்ட ஒருகாலகட்டத்தில் சிறுகதைப் படைப்புகளை வெளிக்கொணர்ந்தவர்கள் பற்றித் தெளிவான, காலமுறைப் பதிவுகள் இல்லாமல், விமர்சனத் / திறனாய்வுக் கலப்புக் கூட்டி (அதனையும் சரிவரச் செய்யாமல்) கருத்துக்களை நடவு செய்துள்னர். எடுத்துக் காட்டாக:
· பாரதியார் எழுதிய முதற் சிறுகதை எது?;
· எட்டுச் சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ள வ.வெ.சு ஐயரின் ஐந்து சிறுகதைகள் கொண்ட முதற் தொகுப்பு (மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்) எப்போது வெளிவந்தது? ;
· மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பில் கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் ‘குளத்தங்கரை அரச மரம்’கதை- ‘தமிழின் முதற் சிறுகதை’ என்று பல்லாண்டுகளாகப் பலரால் ஓங்கி ஓதப்பட்டுவரும் நிலையிலும் – முதலில் எப்போது வெளியானது? ஏன் வேறொருவர் பெயரில் வெளிவந்தது?
என்பன போன்றவற்றிலும் ஏகப்பட்ட,
வேறுபாடான பார்வைகள் விளைந்துள்ளன. மேலும், முன் குறிப்பிட்டுள்ள வ.வெ.சு ஐயரின்
தொகுப்பில், உரிய விளக்கம் ஏதுமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் ‘குளத்தங்கரை
அரசமரம்’ கதை அத் தொகுப்புக்கு முன்பே வேறு ஒரு இதழில் வேறொருவர் பெயரில்
வெளிவந்ததே பலருக்குத் தெரிந்திருப்பதாக அவர்களது எழுத்துக்கள் வழியே அறிய
முடியவில்லை.
பாரதியார் காலத்திலும் சரி, அதற்குப் பின்னும் சரி, தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள், இலக்கிய விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் முன்தோன்றியாய்ப் பாரதி சிறுகதைகள் படைத்திருந்ததைச் சரிவர அறியாமற் கடந்துள்ளார்கள்; அறிந்ததுபோல் காட்டியுள்ள சிலரும் அப்படைப்புகள் எந்தக் கால வரிசையில், எந்தமாதிரியான அரசியல், சமூகப், பொருளாதாரப், பண்பாட்டுச் சூழலமைத்த பின்புலத்தில் எழுதப்பட்டன என்பதையும் இணைத்துக் கருதி அப்படைப்புகளை நேர்மையாக, முழுமையாக மதிப்பீடு செய்யாமல் - தடங்கண்ட பாதையிலேயே சுகப் பயணம் மேற்கொண்டு, சுயமுயற்சிகள் முற்றாக மங்கிக் - கடந்து சென்றுள்ளனர். தேராத் தடாலடிகள் சிலவும் காணலாம்.
எடுத்துக்காட்டு: ” பாரதியின்
கதைகள் பலவும் மாசம் தப்பிப் பிறந்த மாமிசப் பிண்டங்களாகவே இருக்கின்றன.” என்ற
ரகுநாதன்[2] கூற்று.
இவர் பாரதியாருடைய எந்தெந்தக் கதைகளை ஆராய்ந்து இந்த ‘மாமிசப்
பிண்ட’ முடிவுக்கு வந்தார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். முன்னர் இவரே
வலிந்து போய்
“இன்றைய சிறுகதை வளர்சிக்கு வ.வெ.சு
அய்யர்தான் சிறந்த வழிகாட்டி. அவருடைய நடைத்தெளிவு ஒருபுறம் இருக்க, கதாம்சம்
பிறந்த மேனியுடனேயே காட்சியளிக்கிறது”[3]
என.முன்மொழிந்துள்ளார். அய்யரது என்னென்ன கதைகளை ஆராய்ந்து ‘பிறந்தமேனியுடன்
காட்சியளிக்கும்’ அவரது கதாம்சம் கண்டு மகிழ்கிறார் என்பதெல்லாம் சொல்லப்படுவதில்லை
இலக்கியவிமர்சன நூலாசிரியரால். யாரையும் சபிப்பதும், விரும்பியோர்க்குப் பிரம்ம
ரிஷிப் பட்டம் சூட்டுவதும் வல்ல வஷிஸ்டர்கள் போல, எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான்
வலம் வந்திருக்கிறார்கள் இவ்வகை இலக்கிய விமர்சகர்கள்.
பாரதியார்-வ.வெ.சு ஐயர் ஆகிய இருவருள் சிறுகதைத் துறையின் உண்மையான முன்னோடி பாரதியே என்பதை மறந்தும், மறுத்தும் முன்னரே பலர் உலவியதும் தற்போதும் சிலர் அவ்வாறு தொடர்வதும் நிதர்சனமே. இலக்கியத் தளத்தில் இவ்வகை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் மிகப்பலராகப் பெருகி நிற்பதாலும், அவ்வினமே விரைந்து எளிதில் புற்றீசல்போல அதிகம் நிறைந்துவிடுவதாலும்,
“சுமார் ஒரு நூற்றாண்டாக ‘தமிழின்
முதல் சிறுகதை’ என்று வ.வெ.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தையே கிளிப்பிள்ளை மாதிரி
நாம் பாடப்புத்தகங்களில் சொல்லிவந்தோம். இது பாரதிக்கு ஏற்பட்டஅநீதி.[4]
எனும் கருத்து தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தக்க காரணங்களின்றிப் பாரதிக்கு இழைக்கப்பட்டுத் தொடரும் அநீதியின் உச்சம் யாதெனில், பாரதியின் முதல்
சிறுகதை வெளிவந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த - முதலில் வேறொருவர் பெயரில் வெளிவந்த - அதிலும் தாகூரின்
வங்காளக் கதை ஒன்றின் அப்பட்டமான தழுவல் கதையின் அடிப்படையில்- வ.வெ.சு ஐயருக்குத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்,முதல்வர், பிதா, பிதாமகர் என வகைதொகை அளவிறந்த மகுடங்கள்
இதுவரை அணிவிக்கப்பட்டுள்ளதாகும்.
சிறுகதைப்
படைப்புத்துறையில், நாமறிந்துள்ளவரையில், பாரதி, 1905-1906இல், அவர்
ஆசிரியராக இருந்த சக்கரவர்த்தினி இதழில் பகுதிகளாக (அத்தியாயங்களாக)
அவரது முதல் சிறுகதைப் படைப்பான துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின்
சரித்திரம் (துளஸிபாயி சரித்திரம்)
என்ற படைப்பை ‘ஒரு சிறுகதை’
என்று செம்மாந்த படைப்பாண்மையுடன் வகைப்படுத்தி, அறிவிப்பும் செய்து ஷெல்லிதாஸ்
என்ற புனைபெயரில் வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு, 1910இல் அவரது ஆறில்
ஒருபங்கு சிறுகதையைத் தனி வெளியீடாகப் பரவிடச்செய்துள்ளார்.படைப்பு பலவாக அறுபதுக்குமேல்
சிறுகதைகள் படைத்துள்ள பாரதி, இதற்கிடையிலும் (1905-1910) சில சிறுகதைகளைப் படைத்திருக்கலாம். ஆனால்
அக்காலத்தில் பாரதியின் சிறுகதைகள் தொகுப்பாக வராத காரணத்தால், தெளிவாக வெளியீட்டு
ஆண்டு அறியப்பட்ட இருகதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம். ஆனால் இவற்றின் வெகு பின்னர்தான்- 1915இல்-
முதலில் விவேக போதினி செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் ஸூ.பாக்கியலக்ஷுமி
அம்மாள் என்பவர் பெயரில் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை
வெளியாகியுள்ளது. ஸூ.பாக்கியலக்ஷுமி அம்மாள் என்பது வ. வெ. சு ஐயர் அவர்களது மனைவி
பெயராக இருக்கலாம். ஆனால் அப்பெயரை இக்கதைக்கு முன்னும் பின்னும் வ.வெ.சு தனது
புனை பெயராகவோ, மாற்றுப் பெயராகவோ பயன்படுத்திய ஆதாரங்கள் ஏதுமில்லை. முன்
குறிப்பிட்ட விவேகபோதினி இதழில் இருபகுதிகளாக பாக்கியலக்ஷுமி அம்மாள் எழுதிய கதை
தமிழில் ‘சிறுகதை’ என்ற சொல்வழக்கு பயன்பாட்டிற்கு வந்த பின்னும் -தமிழ்ச்
சிறுகதையின் பிதா எனப் போற்றப்படும் வ.வெ.சு ஐயரின் படைப்பாக இருப்பின் - ஏன் “
“ஒரு சிறிய கதை”[5]
என்ற குறிப்புடன் வெளியானது? வேறொரு பெயரில் இவ்வாறு வெளிவந்த ‘ஒரு சிறிய கதை,’
தனது சிறுகதை என்பதை இலக்கியத் தார்மீக முன்னெடுப்புடன் பொது அறிவிப்புச் செய்யவேண்டிய வ.வெ.சு எங்கும் அதனைச் செய்யவில்லை, ஏன்?.
எவ்வகையில் இக்கதை வ. வெ.. சு. ஐயருக்குப் பாத்தியப்பட்டது என்பதற்கான சிறு
விளக்கமும்கூட வ. வெ. சு. ஐயராலோ, அவரது புகழ் பாடிகளாலோ அல்லது சார்பற்ற(வரெனக்
கருதக் கோரும்) இலக்கிய ஆய்வாளர்களாலோ எடுத்து வைக்கப்படவில்லை. மாறாகப்
புதுச்சேரிக் கம்ப நிலையப் பிரசுரம்-௪ என - ஆண்டு குறிப்பிடாமல் வெளிவந்துள்ள- மங்கையர்க்கரசியின் காதல்
முதலிய கதைகள் என்ற- குளத்தங்கரை அரசமரம் கதையைக் கடைசியாக வைத்துள்ள, ஐந்து
சிறுகதைகள் மட்டும் அடங்கிய அத்தொகுப்பின் முகப்பாக ‘ இவை சந்திரகுப்தன்
சரித்திராசிரியர் வ.வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை என
வெளியிட்டிருப்பது இலக்கிய அற வறட்சியாகவும், தொடர் நெருடலாகவும் உறுத்துகிறது. இந்தக் குறிப்பின் அடிப்படையில்
பார்த்தால் ‘சந்திர குப்த சக்ரவர்த்தி சரித்திரம்’ வெளிவந்த 1918க்குப்
பின்னர்தான் ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ எனும் தொகுப்பு வெளியாகி
இருக்க வேண்டும்.
இத்தொகுப்பு வெளியான ஆண்டு குறித்துக்கூட எண்ணற்ற, ஆதாரமற்ற கருத்துகள் தொடர்ந்து நிலவி வருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. “வருடக் கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டாலும் சரி, தமிழில் நவீனச் சிறுகதை –வேறு பல சமகால இலக்கிய வடிவங்களைப் போல –சுப்பிரமணிய பாரதியிடம் இருந்தே துவங்குகிறது என்று ஆதாரங்களுடன் மாலன்[6] வலியுறுத்துவதை ஏற்றுக்கொள்ள இன்னும் இலக்கியக் களத்தில் தயக்கம் இருப்பதற்குத் தக்க நியாயங்கள் நிரவிய காரணங்கள் ஏதுமில்லை.
[1] கா.சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
தமிழ்ப் புத்தகாலயம், மூன்றாம் பதிப்பு, 1980 இரண்டாம் பதிப்பின் முன்னுரை பக்.9
[2] ரகுநாதன்,இலக்கிய விமர்சனம், மீனாட்சி புத்தக நிலையம், நான்காம் பதிப்பு 1980 பக் 98
[3] ரகுநாதன் 1980 பக்97-98
[4] தமிழ் மகன், தமிழ் சிறுகதைக்
களஞ்சியம், விகடன் பிரசுரம்,சென்னை. 2013, பக்.14.
[5] பார்க்க:
பக் 101, விவேக போதினி, செப்டம்பர்,1915; பக்கம் 138, விவேக போதினி அக்டோபர்,1915
[6] மாலன், அன்று, தொகுதி 1,ஓரியண்ட் லாங்மென், சென்னை,1983, முன்னுரை,
No comments:
Post a Comment