ஞாயிறு, 11 ஜனவரி, 2026

 பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - சில ஆலோசனைகள்! 


இராஜ முத்திருளாண்டி 

 [ https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Nov/22/standard-guidelines-and-advice-for-holding-public-meetings  -Updated on:  22 நவம்பர் 2025, 6:38 pm ]


அண்மையில் 41 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய ''கரூர் பெருந்துயரைத்'' தொடர்ந்து தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ‘சாலை உலாக்கள்’ நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை - உயிரிழப்புகள் நடந்த அடுத்த நாளே - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வழிகாட்டு நெறிமுறைகள், அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசித்து விரைவில் உருவாக்கப்படும் என்று அறிவிப்புச் செய்தார். பின்னர், இவ்விஷயம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் பரிசீலனையாகி, பத்து நாள்களுக்குள் தமிழக அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தடாலடியாக அக்டோபர் 27 அமர்வில் வற்புறுத்தியது.

அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) அவசர கோலத்தில் செய்யக்கூடிய வேலையல்ல. இவ்விஷயம் அனைத்து அரசியல் கட்சியினர், அரசுத் துறைகள், சேவை அமைப்புகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பலதரப்பினரது விரிவான கருத்துக்களைப் பெற்று, உரியக் கால அவகாசமளிக்கப்பட்டுப் பொதுவெளியிலும் பலநிலைகளில் விவாதிக்கப்பட்டு, இவற்றின்வழி சேகரிக்கப்படும் கருத்துக்கள் அதன்பின் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டுத் தொகுக்கப்பட வேண்டியதாகும். இத்தகைய மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளைப் பத்தே நாள்களில் வடிவமைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மாநில அரசை உயர்நீதிமன்றம் முதலில் வற்புறுத்தியது சரியேயல்ல.

என்றாலும், 10-11-2025 விசாரணை அமர்வில், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘வரைவு வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக பல்வேறு நிர்வாக நிலைகளில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், நவம்பர் 6 ஆம் தேதி 20-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும், மேலும் 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக் கருத்துக் கேட்டு SOP வரைவு நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், தகவல் அளித்தார். கருத்துகளைச் சேகரிக்கவும், மேலும் ஆலோசனைகளை நடத்தி வரைவை இறுதி செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார். ஆனால், நியாயமான அக்கால அவகாசத்தை அளிக்காமல், நீதிமன்றம், மேலும் 10 நாள்கள் (நவம்பர் 20 வரை) மட்டுமே அவகாசம் அளித்தது.

தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அமர்வில் (21 நவம்பர் 2025) , கூடுதல் அட்வகேட் ஜெனரல் 46 பக்கங்கள் கொண்ட எஸ்ஓபி-யின் இறுதி வரைவு நகலைச் சமர்ப்பித்தார் என்றும், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை நிகழ்ச்சிகள், பல்வேறு பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 16 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சமர்ப்பிக்கப்பட்ட SOP விதிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமானால், தற்போது நீதிமன்றத்தின் முன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், ஒரு முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. முதல் காரணம், இது நீதிமன்ற நிர்பந்தத்தால் அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் அவலங்கள் நம் நாட்டில் மேலும் நடைபெறா வண்ணம் நம் நாட்டில் ஏற்கெனவே முயன்று வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு உருவாக்கிய பெருந்திரள் மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்களை நிர்வகிப்பது குறித்த (2014) வழிகாட்டுதல்கள்; தேசிய காவல் இயக்ககத்தின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள ‘கூட்டக் கட்டுப்பாடு மற்றும் கூட்ட மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், 2025, பிற மாநிலங்களில் ( உ.பி., குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம்) உள்ள கூட்ட மேலாண்மை ஒழுங்காற்று விதிகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்து, அவற்றின் சிறந்த கூறுகளைத் தெரிந்து, சேகரித்து வரைவு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் ( நவம்பர் 6, 2025) வழங்கப்பட்ட வரைவு நெறிமுறைகளை அக்கட்சிகள் தமது அமைப்புகளில் விவாதித்துக் கருத்துகளைத் திரட்டி வழங்கப் போதிய கால அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை. நவம்பர் 6 கூட்டத்திற்குப்பின், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு வரைவு நெறிமுறைகளை அனுப்பிக் கருத்துக் கேட்கப்பட்டிருப்பதாக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட வரைவு நெறிமுறைகள் குறித்து எத்தனை கட்சிகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன என்பதும், பெறப்பட்ட கருத்துகளைச் சரிபார்த்துத் தொகுத்து வழங்கப் போதிய கால அவகாசம் இருந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.

மேலும் SOP குறித்து அரசியல் கட்சிகளிடம் மட்டும் ஆலோசனை பெற்றால் போதாது. பேரிடர் மேலாண்மை, கூட்ட மேலாண்மை வல்லுநர்கள், கூட்டங்களால் உயிர் இழப்புகளைச் சந்தித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நெரிசல்களிலிருந்து நல்வாய்ப்பாகத் தப்பித்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பொது வெளியில் விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் அடிப்படையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே நியாயமானது.

வழிகாட்டு நெறிமுறைகள் என்பது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும் சமய நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு அளித்திருப்பது சரியல்ல. ஹரித்துவார் கும்பமேளா 1820-இல் உயிரிழப்புகள் 430; அலாகாபாத் (உ.பி) கும்பமேளா 1954-இல் கூட்ட நெரிசல் மரணம் 500 - 800 பேர் வரை; 2005-இல் மகாராஷ்டிரம், மந்தேர் தேவி கோயில் நெரிசல் சாவு 291; 2008 (செப்டம்பர்) ராஜஸ்தான், சாமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 224 பேர் பலி; கடந்த ஆண்டில் (2024) உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் மதப் பிரசங்க நிகழ்வில் 121 பேர்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது என்பதெல்லாம் பாடமாக இருக்க வேண்டும் அல்லவா?

ஐந்தாயிரம் பேருக்குக் குறைவான கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது என்பதும் ஒரு சரியான உத்தேசம் அல்ல. நடைமுறையிலுள்ள காவல் சட்டம் 1861 (பிரிவுகள் 30,31,32) கூட்ட மேலாண்மை குறித்த தெளிவான ஏற்பாடுகளை வரையறுப்பதாக இல்லை என்பது முன்பிருந்தே உணரப்பட்டுவரும் குறைபாடாகும்.

கூட்டம் எந்த அளவினது ஆயினும், அடிப்படை வசதிகள் (உணவு குடிநீர், கழிப்பறைகள், தீத்தடுப்பு, முதலுதவி) முதலிய ஏற்பாடுகளும் பாதுகாப்பு அம்சங்களும் எந்த வகையிலும் குறைவில்லாததாகவே இருக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் உடல் திறன் மாறுபட்டவர்கள் முதியோர், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். காத்திருப்பு நேரம், நிகழ்வுகளின் மொத்த நேரம் குறித்த வரையறைகள், அவசரகால வெளியேற்ற வழிகள் என்பவை அனைத்துக் கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும்.

கூட்டங்களில் ஏற்படும் இழப்புகள் (பொதுச்சொத்து, தனியார் சொத்துகளுக்கான சேதங்கள் உள்ளிட்டவை) குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் நிகழ்வுகளுக்குப்பின் பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் செம்மையாகச் செயல்படுத்த , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கரூர் நிகழ்வு தொடர்பான வழக்கொன்றில் குறிப்பிட்டதுபோல, கூட்டம் / நிகழ்வுக்கு அனுமதி பெறும்போதே ஒரு குறிப்பிட்ட அளவு, நியாயமான தொகையை - தேவை ஏற்படாவிட்டால் திரும்பப் பெறக்கூடியதான முன் பணமாக - வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என நிர்ணயிப்பது கூட்ட ஏற்பாளர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கும். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் இழப்புகளுக்குப் பொறுப்பேற்கப் பிணைப்பத்திரம் பெறும் நடைமுறையும் இணைக்கப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடத்த எவ்வளவு நாள் முன்பு அனுமதி கோரி விண்ணப்பம் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயித்திருப்பதுபோல, அனுமதி அளிக்கும் அலுவலர் எவ்வளவு நாள்களுக்குள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து - விதிக்கப்படும் நிபந்தனைகளைக் கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்ய ஏதுவாக உரிய கால அவகாசம் தரும்வகையில் – விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடையாளம் காணும்போது, அது ஒருதலை பட்சமாக நிகழாமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சியினர், சேவை அமைப்புகள் காவல்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல தரப்பினரையும் கலந்து ஆலோசித்து இசைவுடன் உரிய இடங்களாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

கூட்டம்/ நிகழ்வு நடந்த பின்னர் திடக்கழிவுகள் அகற்றுதல், நிகழ்விடத்தை முன்பிருந்த நிலைக்குச் சரிசெய்து அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாக வைக்கும் ஏற்பாடுகளுக்கான கட்டணம்/ தனியே முன் வைப்புத்தொகையாகச் செலுத்தப்பட வழிகாட்டு நெறிமுறைகளில் விதிக்கப்பட வேண்டும்.

உயிரிழப்புகள் ஏற்படாத நோக்கில் உரிய ஏற்பாடுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டாலும், ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் கூட்ட ஏற்பாளர்கள் பொறுப்பேற்பதை உறுதி செய்யும்வகையில், பொது, குழு காப்பீடு வாய்ப்புகளைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஆலோசித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அத்தகைய காப்பீடுகள் செய்ய அரசுத் தரப்பில் முன்னெடுப்புகள் வேண்டும்.

அடிப்படையில், தற்போது நீதிமன்றத்தின் முன் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் போதுமான அளவு விரிவாகப் பல நிலைகளில் கலந்து ஆலோசிக்கப்பட வாய்ப்பில்லாமல் – உயர்நீதிமன்றம் நிர்ணயித்த மிகக் குறைந்த காலத்திற்குள்- நீதிமன்ற நிர்ணயத்திற்கு மதிப்பளித்து- அவசரமாக வரைவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றமே வரைவு SOPஐ பொது வெளியில் தக்கவாறு விவாதித்துக் கருத்துகள் பெற்று இதனைச் செம்மைப்படுத்த ஏதுவான ஆணைகள் பிறப்பிப்பது மிகவும் வரவேற்க உரியதாகும்.

அனைத்துத் தரப்பிலும் விரிவாகக் கருத்துகள் பெற்று வடிவமைக்கப்படும் SOP எதிர்ப்புகளின்றி எளிதாகச் செயல்படுத்தப்படும் வாய்ப்புகள் பெருகும். கூட்ட நெரிசல்களில் மனித உயிர்கள் இழப்பு என்பது பழங்கதையாக வேண்டும்!

**

 நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் 

எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா? 


இராஜ முத்திருளாண்டி 


 [ https://www.dinamani.com/editorial-articles/special-stories/2026/Jan/10/are-the-standard-operating-procedures-easy-to-implement     Updated on:  10 ஜனவரி 2026, 3:46 pm ]



பத்து நாள்களுக்கு முன் நாம் கடந்துவந்த ஆண்டில் (2025) செப்டம்பர் மாதத்தில் கரூரில் புதிய அரசியல் கட்சியொன்றின் பரப்புரையின்போது 41 மனித உயிர்கள் கொத்தாகப் பலியான பெருந்துயரை மறக்கவும் கூடுமோ? நிலைத்துள்ள கனத்த கரூர் சோகப் பின்புலத்தில், பொதுக் கூட்டங்களை, சாலை வலங்கள் ஒழுங்குபடுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி) பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. இடையில், இவ்விஷயத்தில் நீதிமன்றத் தலையீடுகளும் நிகழ்ந்ததை நாமறிவோம். மிக அண்மையில், மாநிலத்தில் பொதுமக்கள் கூடும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) தமிழ்நாடு அரசால், அரசாணை மூலம் (G.O No 5 Home (Police VIII) Department, Dated 5-1-2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்க உரிய செயல்பாடுதானிது.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சாலை வலங்கள், பெரிய அளவில் மக்கள் கூடும் பல்வேறு நிகழ்வுகள் முதலியன ஜனநாயக வெளிப்பாடுகளிலும், குடிமக்களின் கலாசார, மத நடைமுறைகளிலும், ஈடுபாடுகளிலும் இன்றியமையாதவை ஆகியுள்ளன. என்றாலும், 'கட்டுப்பாடற்ற கூட்டங்கள் மனித உயிர், பொது ஒழுங்கு, அரசு, தனியார் சொத்துகளுக்குச் சேதம் மற்றும் ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடும்' என்ற அனுபவ எச்சரிக்கை பொதிந்த முகப்புரையுடன் தற்போதைய எஸ்.ஓ.பி. அறிவிப்பாகியுள்ளது. இந்த எஸ்.ஓ.பி. பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, ஊர்வலங்கள், ‘ரோடு ஷோ’ எனப்படும் தலைவர்களது 'சாலை வலங்கள்' முதலியவற்றுக்கும் சேர்த்தே செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது.

இந்த எஸ்.ஓ.பியைச் சற்று விரிவாக அலசிப் பார்ப்பதற்கு முன், ஒரு பறவைப் பார்வையாகக் காணும்போது, நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் கடமைப் பொறுப்புகள் (Vide SOP Section 9), காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு (SOP Section 10) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நிகழ்வில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முதன்மைப் பொறுப்புக் கொண்டவர்கள் என்பதை எஸ்.ஓ.பி. தெளிவாக வலியுறுத்துகிறது [Preamble d) iii].

Advertisement ஆரம்பத்திலேயே, இந்த எஸ்.ஓ.பி.யின் முகப்புரையில் (உட்பிரிவு d) அரசின் பங்காக என்னென்ன உறுதி செய்யப்படும் என்ற முக்கியமான அம்சம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுத் தரப்பில்,

  1. ஏற்பாட்டாளர்களுக்கும், நிகழ்வுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் (நிகழ்வு நடத்த அனுமதிக்கப்பட்டால், எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் தொந்தரவு செய்யப்படாது).

  2. அனுமதிக்கப்படும் நிகழ்ச்சி, எவ்வகையிலும் பொதுமக்களுக்குத் தொந்தரவு, அசௌகரியத்தை ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்படும்.

  3. நிகழ்வை நடத்துவதால் போக்குவரத்து, பொது ஒழுங்கு போன்றவை பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்யும்.

இதனுடன், முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி உறுதி செய்வதற்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களே முழுப்பொறுப்பு என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட வேண்டும். அடிப்படையில், இந்த எஸ்.ஓ.பி. நான்கு அடுக்குகள் கொண்டதொரு செயல்பாட்டு நடைமுறைகளை வகுப்பதாக அமைந்துள்ளது.

  1. நிகழ்வு நடத்த விரும்புவோர் உரியவாறு விண்ணப்பம் அளிக்கும் நிலை (Pre-Event Application Process-SOP Section 5).

  2. விண்ணப்பம் பரிசீலனை, அனுமதி வழங்கல் நிலை (Scrutiny and Approval Process-SOP Section 6).

  3. நிகழ்வு மேலாண்மை (Managing the Event).

  4. நிகழ்வுக்குப் பிந்தைய நிலவர மதிப்பீடு (Post-event Assessment of compliance, complaints etc- SOP Section 12).

எஸ்.ஓ.பி. எந்த நிகழ்வுகளுக்குப் பொருந்தும்?

இந்த எஸ்.ஓ.பி. 5,000 பேருக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருக்கும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், சாலை வலங்கள் பவனிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் முதலியவற்றுக்கு மட்டுமே பொருந்தும். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக இருக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இந்த எஸ்.ஓ.பி. பொருந்தாது. அவ்வாறான நிகழ்வுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்படும் மதக் கூட்டங்கள், முன்னுதாரணங்களால் இடம் / பாதை முதலியன ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட மத நிகழ்வுகளை இந்த செயல்பாட்டு நடைமுறைகள் கட்டுப்படுத்தாது. அதுபோலவே, தேர்தல் காலங்களில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள், மாதிரி நடத்தை விதிகள் (எம்.சி.சி.) நடைமுறையில் இருக்கும் காலங்களில், கூட்டங்கள் நடத்த 'சுவிதா' போர்ட்டல் மூலம் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டியதிருக்கும். இருப்பினும், கூட்டப் பாதுகாப்பு விதிமுறைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அத்தியாவசிய வசதிகளை வழங்குவது தொடர்பான நிகழ்வு அமைப்பாளரின் பொறுப்புகள் எஸ்.ஓ.பி.யில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தொடர்ந்து பொருந்தும்.

16 பக்க எஸ்.ஓ.பி.

மொத்தம் 56 பக்கங்கள் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் 16 பக்க இணைப்பாக வழங்கப்பட்டிருப்பதே கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) ஆகும். இதனுடன் (1முதல் 7 வரை) படிவங்களும் அதற்கடுத்து இரண்டு பிற்சேர்க்கைகளும் உள்ளன.

படிவங்கள் 1, 2.5.

எஸ்.ஓ.பி.யுடன் உள்ள படிவங்களில் குறிப்பாக, படிவம்-1 என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், (சென்னையைப் பொருத்தவரை சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர்) தத்தமது ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில், விதிக்கப்படும் நிபந்தனைகளுக்குள்பட்டு பொதுக் கூட்டங்கள் முதலியவற்றை நடத்தலாம்; எந்தெந்த வழித்தடங்களில் ஊர்வலங்கள், சாலை வலங்கள் நடத்தலாம்; ஒவ்வொரு இடத்திலும் அதிக அளவாக எவ்வளவு பேர் நின்றுகொண்டோ, அமர்ந்தோ திரள முடியும் என்பதை முன்கூட்டியே உரியவாறு நிர்ணயித்து, அறிவிப்புச் செய்து வைத்திருக்கும் (Designated places/ routes-vide section 4 of the G.O.) தகவலைக் கொண்டதாக இருக்கும்.

கூட்டம் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த விரும்புவோர், அந்தந்தப் பகுதி காவல் நிலைய ஆளுகையுள்ள காவல் துறை அதிகாரியிடம் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி நேரில் அளிக்கப்பட உரிய விண்ணப்பம், படிவம்-2. இப்படிவங்கள் இரண்டுடன், நிகழ்வினை நடத்த வழங்கப்படும் நிபந்தனைகள் அடங்கிய அனுமதியும் (படிவம்-5) நிகழ்வுகளை, பொதுக் கூட்டங்களை நடத்தக் கருதுவோர்களால் கூர்ந்து கவனங்கொள்ள உரியதாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, இனி, மாநிலத்தின் எப்பகுதியிலும் (முன்னர் குறிப்பிட்ட படிவம்1இல்), அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடங்கள், வழித்தடங்களில் மட்டுமே, கணித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் கூட்டம் அல்லது பிற நிகழ்வுகளை நடத்த முடியும்.

அறிவிப்புச் செய்யப்படாத வேறு இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதாயின், அவ்விடத்தின் அமைப்பு, பரப்பு, கூட்டக் கொள்ளளவு முதலியன குறித்துப் பொதுப் பணித் துறைப் பொறியாளர் அளிக்கும் சான்றிதழ், கூட்டம் நடத்த நிலம் / இட உரிமையாளரின் எழுத்துப்பூர்வ இசைவு, நுழைவு, வெளியேற்ற வழிகள் முதலியன தெளிவாகக் குறிப்பிடப்பட்ட தளவரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட அவசியமாக்கப்பட்டுள்ளது. (எஸ்.ஓ.பி. படிவம் 2, பிரிவு 4)

அனுமதி கோரும் விண்ணப்பம் (படிவம்- 2)

கூட்டம் நடத்த அனுமதி வேண்டி காவல்துறை அலுவலரிடம் நேரில் விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் விரிவான பல விவரங்களுடனும், இணைப்புகளுடனும் அளிக்க வேண்டியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளிப்பவர் அல்லது நிகழ்வு ஏற்பாட்டாளர் குறித்த முழு விவரங்கள்; நிகழ்வு என்ன வகையானது? (பொதுக்கூட்டம், ஊர்வலம், சாலை வலம் போன்றவை); நிகழ்வு நடத்த உத்தேசித்துள்ள இடம் அல்லது வழித்தடம் (படிவம்-1ன்படி அங்கீகரிக்கப்பட்டதா?) குறித்த விவரங்கள்; நிகழ்வு நாள், நேரம் (தொடக்கம், முடிவு) ஆகியன அளிக்க வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஊர்வலமாக இருந்தால், எங்கு தொடங்கி, எவ்வழிச் சென்று எங்கு முடியும் என்ற விவரங்கள் (ரூட் மேப்புடன்); முதன்மை விருந்தினர் வருகையும் அங்கிருந்து, வெளிச் செல்லும் நேரமும்; எதிர்பார்க்கப்படும் கூட்ட அளவு; நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள், பேச்சாளர்கள் விவரங்களுடன் முழு நிகழ்ச்சி நிரல், எதிர்பார்க்கப்படும் வாகனங்களின், எண்ணிக்கை, அவை முறையாக நிறுத்தப்படும் இடம், அளவு, பிற ஏற்பாட்டு விவரங்கள், 50 வாகனங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ள விவரம் ஆகியன யாவும் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும்.

நிகழ்வானது ‘சாலை வலம்’ என்றால், இடம், எங்கிருந்து எதுவரை, எங்கே நிறுத்தம் / பேச்சு, நிகழ்வு நாள், நேரம், முதன்மை விருந்தினர் வருகை நேரம் (தொடக்கத்தில், முடிவில்), எதிர்பார்க்கும் கூட்ட அளவு வழியில் ஒவ்வொரு இடத்திலும், தொடரும் வாகனங்கள் எண்ணிக்கை, கூட்டத்தின் அளவு குறித்து பொதுப் பணித் துறைப் பொறியாளர் மதிப்பீட்டுச் சான்று (இணைப்பு), சாலையைப் பராமரிக்கும் / நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ள விவரம் ஆகியன இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில், கூட்டத்திற்கான பாதுகாப்பு, பிற வசதிகள் குறித்த முழு விவரங்கள், முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவர், செவிலியர், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஏற்பாடு, கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வேலிகள், பிரிவுகள், தடுப்புகள், கயிற்றுத் தடுப்புகள், கூட்ட மேலாண்மைக்கென 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் ஏற்பாடு, முதலிய பல்வேறு விவரங்களும் முழுமையாக விண்ணப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும். இவற்றுடன், இடம், சாலைப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி, மதிப்பீட்டுச் சான்றுகளுடன், விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் மீறப்படாமல் கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதிமொழியளித்து விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு விண்ணப்பத்தை உரிய காவல்துறை அலுவலரிடம் (கவனிக்க) நேரில் வழங்க வேண்டும். கூடுதலாகத் தனியே படிவம் -3 இல் நிபந்தனைகள் அனைத்தையும் பொறுப்போடு ஏற்றுச்செயல்பட ஒரு 13 அம்ச இசைவும் எழுத்துப்பூர்வமாகத் தரவேண்டும்.

அனுமதி கோரும் விண்ணப்பம் எப்போது அளிப்பது?

  1. அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இடத்தில் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாளுக்குப் பத்து (10) நாள்களுக்கு முன் (21 நாள்களுக்கு முன் அமையாமல்) விண்ணப்பம் முன் விவரிக்கப்பட்டவாறு சமர்ப்பிக்க வேண்டும்.

  2. அறிவிக்கப்படாத, மாற்று இடத்தில் நிகழ்வு திட்டமிடப்பட்டால், முன்மொழியப்பட்ட தேதிக்கு பதினைந்து (15) நாள்களுக்கு முன்பு, (ஆனால் முப்பது (30) நாள்களுக்கு முன் இல்லாமல்) வழங்க வேண்டும்.

  3. கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு, எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக இருந்தால், நிகழ்வுக்கு முன்மொழியப்பட்ட தேதிக்கு 30 நாள்களுக்கு முன்பே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

  4. மேற்கண்ட 1 & 2 க்கு விதிவிலக்காக, திடீர் சம்பவங்கள் அல்லது விஷயங்களால் எழும் அவசர ஜனநாயக வெளிப்பாடுகளுக்கு அவசியமான போராட்டங்கள் அல்லது கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் / பெருநகர சென்னை காவல்துறை ஆணையர், தங்கள் விருப்பப்படி, விண்ணப்பத்தைப் பெறவும், அதனை SDPO-யால் பரிசீலனை செய்யவும் அனுமதிக்கலாம்.

ஒப்புகை, அனுமதி, நிபந்தனைகள்

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் அலுவலர், அதற்கான ஒப்புகையைப் படிவம்-4இல் உள்ளவாறு வழங்க வேண்டும். அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து 18 நிபந்தனைகள், தேவைப்படும் கூடுதல் நிபந்தனைகளுடன் நிகழ்வு நடப்பதற்குக் குறைந்தது 5 நாள்களுக்கு முன் அனுமதி அல்லது அனுமதி மறுப்பு வழங்கப்படும்.( எஸ்.ஓ.பி. பிரிவு 6 d).

அனுமதி மறுக்கப்பட உரியதானால், படிவம்-6 இல் கண்டுள்ளவாறு உரியக் காரணங்களைப் பட்டியலிட்டு, குறைகளைக் களைந்து, மீண்டும் மாற்றிடம் வேண்டியோ, பிற நாளிலோ அனுமதிக்காக விண்ணப்பிக்க வாய்ப்பளித்து ஆணை பிறப்பிக்கலாம். நிகழ்வு நடந்தபின், இடம், சேதங்கள், திடக்கழிவுகள் முதலியவற்றை மதிப்பீடு செய்து அபராதம், இழப்பீடு முதலியன விதிப்பது வழக்குத் தொடர்வது குறித்தது படிவம் -7.

எஸ்.ஓ.பி. எளிதாகச் செயல்படுத்த ஏதுவாக உள்ளதா?

அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஓ.பி. மிக விஸ்தாரமானது என்ற தோற்றம் உள்ளது. இரண்டு பிற்சேர்க்கைகளாக இணைத்திருப்பவற்றுள் (Annexures A & B) சில பொதுவான, நிலைத்த (ஸ்டாண்டர்டு) கருத்துகள், ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு சதுர மீட்டருக்கு நிற்பதென்றால் எத்தனை பேர்?, அமர்ந்திருந்தால் எத்தனை பேர், எத்தனை பேருக்குள் இருந்தால் இலகுவாக ஒரு இடத்திலிருந்து கூட்டத்திற்குள் மற்ற இடங்களுக்கு ஒருவர் வசதியாக நகர அல்லது பரவ இயலும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற தெளிவான செயல்முறை எஸ்.ஓ.பி.யில் இல்லை.

விண்ணப்பத்தில் குறிப்பிட்டவாறான ஏற்பாடுகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரால் நிகழ்வு நடக்கும் வரை செய்யப்படாவிட்டால் என்ன செய்வது? அல்லது அனுமதி அளிக்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பாட்டாளர் நிகழ்வு நடக்கும் வரை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? பார்வையாளர்கள் காத்திருப்பு நேரம் விதிக்கப்பட்டுள்ள 2 மணி நேரத்திற்கு மேல் முக்கியப் பிரமுகரின் வருகை பெரிதும் தாமதமானால் என்ன செய்வது?

விண்ணப்பம் அளிக்க வரையறுக்கப்பட்டுள்ள காலம் (10 நாள்களுக்கு முன்), நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ள காலம் (நிகழ்வுக்கு 5 நாள்கள் முன்) ஆகியவற்றுக்கிடையே, விதிக்கப்பட்டுள்ள பற்பல நிபந்தனைகளின்படி உறுதியான கட்டமைப்புடன், மேடை, வேலிகள், தடுப்புகள், சுகாதார வசதிகள், ஒலி, ஒளி, மின்சார அமைப்புகள் முதலியவற்றை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மிக அவசர கதியில் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கும். அல்லது நிறைவேற்றாத நிலை ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள நேர்வுகளில், பாதுகாப்பு உள்ளிட்ட, பிற வசதிகள் குறைபாடுகளோடு நிகழ்வுகள் / கூட்டங்கள் நடைபெறும் வாய்ப்புகள் ஏற்படலாம். அவற்றை முன்கூட்டியே தவிர்க்க, மக்களுக்கான பாதுகாப்பு, பிற வசதிகளை உறுதிப்படுத்த வலுவான ஏற்பாடு எஸ்.ஓ.பி.யில் இல்லையே. அப்படியுள்ள சூழல்களில் நிகழ்வை நிறுத்தலாமா? தள்ளி வைக்கலாமா? என்பதை (கரூர் நினைவிலாவது) எஸ்.ஓ.பி. உறுதிப்படத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். நிலையான செயல்முறைகள் வேறெதற்கு?

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாட்டில் 5,000 பேர்களுக்கு அதிகமான கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும். மத வழிபாட்டுத்தலங்களில் கூடும் கூட்டங்களுக்குப் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மத நிகழ்வுகளில், வழிபாட்டுத் தலங்களில் அதிக மனித உயிர்கள் இழப்புகள் நிகழ்ந்துள்ள வரலாற்றை நோக்கும்போது, இந்த நெறிமுறைகளில் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு விலக்கு அளித்திருப்பது சரியல்ல.

விண்ணப்பத்திற்கான அனுமதி அளிக்கும்போது 18 வகை நிபந்தனைகளும், (படிவம்-5) தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்வு நடப்பதற்கு முன்போ அல்லது நிகழ்வின்போதோ அத்தகைய நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் உடனடியான நிவர்த்திக்கோ, தண்டிக்கவோ, வழியைக் காணோம். நிகழ்வை ரத்து செய்யவும் எஸ்.ஓ.பி. மூலம் அதிகாரம் அளிக்கப்படவேண்டும். நிகழ்வு நடந்தபின், விசாரணை, வழக்குகள் நடத்துவது என்ன பயன் தரும்?

நிகழ்வு / கூட்டம் நடைபெற்றபின் இழப்புகள், சேதங்கள், திடக்கழிவு அகற்றுதல் முதலியவற்றுக்கான மதிப்பீடுகளைச் செய்து, அதனடிப்படையில் கூட்ட ஏற்பாட்டாளர்களிடமிருந்து அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகை நிர்ணயித்துப் பெற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, விண்ணப்பத்துடன், நியாயமான அளவு முன் பணத்தை வைப்புத்தொகையாக நிர்ணயிப்பது நடைமுறைக்கு எளிதாகும்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும்; அதனை வளர்க்கும்.

ஒரு வழியாக எஸ்ஓ.பி. வெளியாகியுள்ளதை வரவேற்கலாம். அதனை எந்த விலக்குகளுக்கும் யாருக்காகவும் இடமளிக்காமல், 'மக்கள் பாதுகாப்பே தலை' எனக்கொண்டு உரிய துறைகளின் அலுவலர்கள் உறுதிப்படச் செயல்படுத்த வேண்டும். இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள தேவைகளும், எஸ்.ஓ.பி.யை நடைமுறைப்படுத்.தும் போது பெறக்கூடிய அனுபவங்களும் வருங்காலத்தில் அதன் திருத்தங்களுக்கும் செம்மைக்கும் வழியமைக்கும் என எதிர்பார்ப்போம்.

[Regarding the issue  of new SOPs in the wake of the tragic incident -Sep 2025-  in Karur.]

புதன், 31 டிசம்பர், 2025

 கவிதைதான் குற்றம் 1 - 

டாரின் டட்டூர் என்ற பாலஸ்தீன கவிதைக்குரல்! 


இராஜ முத்திருளாண்டி      12 அக்டோபர் 2024, 



அக் 11 - நேற்றுடன் பத்தாண்டு முடிந்துவிட்டது. இதே நாள்,  2015-ல், நள்ளிரவு கடந்து, 3.30 மணியளவில், எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காததொரு பொழுதில் பரம இரகசியமாக அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொரில்லாத் தாக்குதல் நிகழ்த்தப் போவதுபோல–இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பு அதிகாரிகளது (Israeli Zionist occupation authorities) கொடுங்கரமாகச் செயல்பட்டுவரும் எல்லைக் காவல் (Border Guards) அணியினர் புடைசூழ, நாஸரேத் காவல்துறையின் ரோந்து வாகனங்கள், அந்நகரின் அருகிலுள்ள அல் ரய்னே (Al-Reineh) என்றதொரு சிறு கிராமத்தை முற்றுகையிட்டன. அமைதி போர்த்து நின்ற ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தன அப்படைகள். இன்னும் விடியாத இரவையும்,உறங்கி விழிக்காத அவ்வீட்டினர் அனைவரையும் அதிர்ந்துபோகச் செய்து வீட்டின் கதவுகளைத் தகர்த்து அதிரடியாக நுழைந்தது எதேச்சதிகாரம்.

நுழைந்த அதிகாரம் - வழக்கமான மரபுகள் அத்தனையையும் கனத்த பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கியவாறே, தயக்கம் ஏதுமின்றி அவ்வீட்டில் பெண்கள் உறங்கும் பகுதிக்குள்ளும் புகுந்து துழாவத் தொடங்கியது. அதிகாரச் சீருடை அணிந்திருந்த அதிகாரிகள் எவரது சீருடையிலும் அடையாளங் காட்டக்கூடிய ‘பெயர் பட்டி’ (Name Badge) காணப்படவில்லை. அந்த அகாலத்தில், இவ்வளவு களேபரங்களை, அவ்வீட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் பிரதிநிதிகளிடம் அவ்வீட்டைச் சோதனையிடவோ, குறிப்பிட்ட யாரையாவது கைது செய்யவோ எந்த ஆவணமும் கிடையாது. யாரும் கேட்கவும் முடியாது. ஏனென்றால், அந்த வீட்டார்  பாலஸ்தீன அரேபியர்கள்.

எக்குற்றமும் செய்தறியாத அவ்வீட்டார் எவருக்கும்,என்ன நடக்கிறது? இரவு கழிவதற்குள் இப்படித்தடாலடியாக நுழைந்து வீட்டிற்குள் உறங்குபவர்களைப் பதைபதைக்க வைக்கிறார்களே ஏன்? யாரைத்தேடி வந்தது அந்த அதிகாரப்படை? யாராவது அஞ்சத்தக்க தீவிரவாதியைத் தேடித் தவறான முகவரிக்கு வந்து விட்டார்களா  என்ன? என்ற சந்தேகங்களும் வினாக்களும் வார்த்தைகளாக வெளியில் வர இயலாமல் முடங்கி முட்டி நிற்பது அவர்களது முகங்களில் தெரிய,கலவரப்பட்டு உறைந்து நிற்கிறார்கள் வீட்டினர்.

ஒருவழியாகப் ‘பேர்’ பெற்றிருக்கும் எல்லைப் படையின் அதிகாரி ஒருவரின் கனத்த குரல் உடைக்கிறது அச்சூழலில் உறைந்து கிடந்த அமைதியை. அவர் உச்சரித்த பெயரைக்கேட்டு உடைந்து நொறுங்கினர் வீட்டாரனைவரும். அதிகாரி உரக்கச் சொன்ன பெயர்- யாருமே எதிர்பார்க்காத - அக்கம் பக்கத்தில் ‘அமைதியான பெண்’ என அறியப்பட்டிருந்த - (அப்போது) 33 வயதுள்ள, பொறியியல் பட்டதாரியான  அந்த வீட்டுப்பெண் ஒருவரது பெயர். அந்தப்பெண், டாரின் டட்டூர் (Dareen Tatour).(அந்த அரேபிய மொழிப்பெயர் டாரின் ரற்றூர் என்றும் மொழிபெயர்ப்பாகியுள்ளது.)

வீட்டினுள்ளே, பெண்கள் உறங்கும் பகுதியில், ஏதுமறியாது - அப்போது நடப்பது எதனையும் எள்ளளவும் எதிர்பாராமல் - உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண்ணை அதிர்ச்சியுற எழுப்பி இழுத்து வருகிறார்கள் படையினர். அவரென்ன தீவிரவாதியா? ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவரா? இல்லையே. அந்தச் சமயம்வரை அவர் எந்தக் கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கூடத் தனிப்பட்ட முறையில் கலந்துபங்கேற்றதில்லை. பள்ளிக்கல்வி முடித்தவுடன் ஏற்பட்ட தன்னார்வத்தால் புகைப்படக்கலைப் (Photography) பயிற்சி பெற்றிருந்த ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில், அவர் வாழ்கின்ற நாஸரேத் மாவட்டப் பகுதிகளில் நிகழ்ந்த ஓரிரு போராட்ட நிகழ்வுகளில் புகைப்படம் எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். அதற்காகவா இத்தனையும்? ஒன்றும் புரியவில்லை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும்.

கலையாத உறக்கத்தோடு காவல்படையால் இழுத்து வரப்பட்ட அந்த வீட்டின் அமைதிப்பெண் டாரின் டட்டூரைத் தீவிரவாதியாகவே கருதிக் கைவிலங்கிட்டுக் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாத் தள்ளி ஏற்றிக்கொண்டு – வீட்டிற்குள் அவரது படுக்கை அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் முதலியவற்றுடன் - அப்பெண்ணை எங்கு, எதற்காகக் கொண்டுசெல்கிறோம் என்று (அடிப்படையாக,முறைப்படி வழங்கப்படவேண்டிய)எந்தத் தகவலுங்கூட வீட்டிலுள்ளவர்களுக்குத் தராமல், உறங்கும் ஊர் விழித்துக் கொள்ளும் முன்பே அங்கிருந்து விரைந்தன முற்றுகைப்படை வாகனங்கள். அந்த வாகனங்கள் அலைக்கழிப்பதுபோல அங்கும் இங்கும் சுற்றி நாஸரேத் காவல்நிலையத்தின் பின் ஒரு ஒதுக்குப்புறமான வாகன நிறுத்துமிடத்தில் பல மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டு அப்பெண்ணை இறங்க வைக்காமல் இடையூறு செய்தும் அவரைத் ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுக் கிண்டலுங் கேலியும் செய்து வதைப்புக்குள்ளாக்கினர்.

சரி, யார் இந்த டாரின் டட்டூர்?

மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், அப்போது (2015-ல்) அவரது ஊர், அல்லது அதிகம்போனால் அவ்வூருக்கருகிலிருந்த நாஸரேத் நகருக்கு அப்பால் அதிகம் அறியப்படாதிருந்த ஒரு பாலஸ்தீனப் பெண் கவிஞர், புகைப்படக்காரர். அவ்வளவுதான்.

ஆனால், அன்று நடைபெற்ற அதிரடிக் கைது நிகழ்வு; அதனால் அவருக்கு விளைந்த சிறைவாசக்கொடுமைகள்; சொந்த ஊருக்கப்பால், கடும் நிபந்தனைகளுடன் இருக்க விதிக்கப்பட்ட  தனிமை வீட்டுச்சிறை; தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குகள்; வழக்குகளுக்கு மூலகாரணங்களாகச் சேர்க்கப்பட்ட (மிக அசாதாரண) விசயங்கள்; ஒருதலைப்பட்ட நாஸரேத் மாவட்ட நீதிமன்ற விசாரணைகள்; விசாரணைகளின் போக்கு; நீதிமன்றத்தில் நடந்த பிற நிகழ்வுகள்; விசாரணை முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை; மேல்முறையீடு; அதன்மீதான தீர்ப்பு  முதலியன யாவும்அவர்மீது அதீத ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட உதவின.

பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், கருத்துரிமைக்கான உலகளாவிய செயலமைப்புகள், சமூக ஊடகங்கள், ஆர்வத்தோடு புதிதாகச் சேரந்த ஆதரவாளர்கள் எனப் பலவகைக் குழுக்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்தையும், ஈடுபாட்டையும் நேரடிச் செயல்பாடுகளையும் ஈர்த்தன. அவற்றின் கூட்டு விளைவாகத் தற்போது - டாரின் டட்டூர் உலகறிந்த பாலஸ்தீனக் கவிஞராக, பெண்ணுரிமைப் போராளியாக, எதேச்சாதிகார எதிர்ப்பாளராக, கவிதையைப் போராட்டக் கருவியாக வடிவமைத்துக்கொண்ட புதுமை கண்டவராக, துணிச்சல்மிக்க பாலஸ்தீனப் பெண் எனும் சர்வதேச அடையாளமாக அவரை மாற்றியிருக்கிறது.


டாரின் டட்டூர் 2015 வரை அமைதியான சிறு கிராமத்து பெண் புகைப்படக்காரர் டாரின் டட்டூர், சில மாதங்களுக்கு முன் (மார்ச் 7,2024) ஒரு பேட்டியில் (International Association of Democratic Lawyers (IADL) அமைப்பின் March 2024 special issue of the International Review of Contemporary Law,), ‘’எனது கவிதைகளில் பாலஸ்தீனம் என்பது நானே; நானே பாலஸ்தீனம்  ( (Palestine in my poems is me and I am Palestine)’’ என்று நிமிர்ந்து முழங்கும் நிலையடைந்துள்ளார்.

‘நாடகன்று நிற்கும் என் சாளரம் வழியே பாடுகிறேன்’ (I Sing From the Window of Exile) என்ற கவிதைத் தொகுதிக்காக, 2023 ஆண்டிற்கான பாலஸ்தீன புத்தக விருது (The Palestine Book Awards 2023 – Creative AwardWinner); கருத்துச் சுதந்திரத்திற்காக, (Freedom of Expression) நார்வே - ஓஸ்லோ விருது (2020); அதே விசயத்திற்காக (Freedom of Expression) ஆக்ஸ்பாம் நோவிப் /பென் (OXFAM Novib/PEN) அமைப்புகள் வழங்கும் சர்வதேச விருது (2019); அநீதிக்கெதிராகத் தீரமுடன் கவிதைகளால் களமாடியதற்காக டேனிஷ் நாட்டுப் பரிசு (Danish Carl Scharenberg PrizeFor standing against injustice through herpoetry- 2017); புகழ்பெற்ற ஹிப்ரூ மொழி இணைய இதழான ‘மாயன்’ (Maayan) நிறுவியிருக்கும் ‘போரட்டங்களில் புதுமை’க்கான பரிசு (Prize for creativity in struggle-2016) என வரிசையாக டாரின் டட்டூருக்கான சர்வதேச அங்கீகாரங்கள், விருதுகள்,பரிசுகள் குவிந்துவருகின்றன.

எதற்காக நடந்ததாம் மறக்க இயலாத அந்த 2015 அக் 11 தடாலடி?

அந்தநாள் விடியுமுன் நடந்தேறிய அசாதாரண அதிரடி நிகழ்வுக்கான காரணங்கள் பல வாரங்கள் கழிந்தே - 2015 நவம்பர் 2-ல், நீதிமன்ற வழக்குப் பதியப்பட்டுத்தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அதுவரை அந்நாள் - அக் 11 - நிகழ்வுகளின் மேல் மர்மம்தான் அடர்ந்து கிடந்தது.

வாங்க... தாமதமாக உலகிற்குத் தெரியவந்த அந்தக் காரணங்களைக் காணலாம்.

முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட காரணம் டாரின் தனது முகநூல் பக்கத்தில் இட்டதொரு பதிவு. அதன் பின்புலம் இது:

நாஸரேத்தைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உயிரியல் துறைப் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த  பாலஸ்தீனியப் பெண் இஸ்ரா அபெத் (Israa Abed). அவர், அக்டோபர் 9, 2013-ல் அபுலா (Afula) என்ற ஊரின் பேருந்து நிலையத்தில், தனது ஊருக்குத் திரும்பக் காத்திருந்தபோது கையில் ஒரு சிறு கத்தி வைத்திருப்பதைக் கண்ட இஸ்ரேலியப் படைவீர்ர் ஒருவர், காரணமில்லாமல் அப்பெண்மீது சந்தேகப்பட்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், துப்பாக்கியால்  சுட்டார். காரணமேதும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த  பேருந்து நிலையத்தில் இஸ்ரா அபெத் இரத்தம் சொட்டத் தரையில் விழுந்து கிடக்கும் படங்களும் வீடியோக்களும் பல ஊடகங்களில் வெளியானதுதான். அப்படித் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கீழேகிடந்த அந்தப் பாலஸ்தீனப் பெண் இஸ்ரா அபெத்தின் படத்தை இணைத்து, ஜூலை 2014-ல்,டாரின் அவரது முகநூல் பக்கத்தில், ‘நான்தான் அடுத்த உயிர்த் தியாகி’ (“I will be the next martyr”) என்ற பொருள்பட, அராபிய மொழியில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் (status) வாசகம் ஒரு காரணம்.

இரண்டாவதாகக் குறிக்கப்பட்டாலும்,முக்கியக் காரணம் என முன்வைக்கப்பட்டது யூடியூப் (YouTube) தளத்தில், (அராபிய மொழியில்“Qawem ya sha’abi, qawemhum” என்ற தலைப்பிட்டு) ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ (“Resist My People, Resist Them”) என்று டாரின் வெளியிட்டதொரு கவிதை.

எத்தனையோ வகை ( கடத்தல் குற்றம், கொலைக் குற்றம், திருட்டுக்குற்றம் என்பனபோன்ற எண்ணற்ற வகைக்) குற்றங்கள் பற்றிய வழக்குகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கவிதைதான் டாரின் டட்டூரின் குற்றமானது (Committing the crime of poetry), விந்தையானது!

குற்றங்களெனக்  குறிப்பிடப்பட்ட முகநூல் ஸ்டேட்டஸ் பதிவாலும், முகநூல் மற்றும் யூடியூப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட (“Resist My People, Resist Them”-‘ எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ - கவிதை மூலமாகவும், டாரின் டட்டூர் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் (Inciting Violence) என்று அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு புனையப்பட்டது.

யூட்யூப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில்- பின்புலத்தில், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான (அரபு மொழிக்) கவிதையைத் தன் குரலில் டாரின் டட்டூர் வாசிக்க, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) பகுதியில் சில்வாட் (Silwad) என்ற கிராமத்தில் பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களுக்கும் மேற்குக் கரைப்பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ள (இஸ்ரேலியப்) படையினருக்கும்   -அவ்வப்போது வழக்கமாக-நடைபெறும் மோதல்களில் ஒன்றைக் காணொளிக் காட்சிகளாக விரிக்கிறது அந்த வீடியோ,

நடுநிலையாகவும், உண்மையாகவும் பார்த்தால் டாரின் டட்டூரின் அந்த (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) கவிதையில் எந்த வன்முறைத் தூண்டுதலும் இல்லை. மிகக் கடுமையானவை என்று சனநாயகக் கருத்துடையவர்களால் விமர்சிக்கப்படும்  இஸ்ரேலிய அரசுச்சட்டங்களின்படி கூட– நேரடியாகக் குற்றமாகக் கருதப்படஉரிய கருத்தோ வாசகமோ அக்கவிதையில் இல்லவே இல்லை என்பதே வெளி்ப்படை.

ஆனால், அக்கவிதை பாலஸ்தீன இளைஞர்கள் ஆக்கிரமிப்புப் படையினருடன் மோதல்மேற்கொள்ளும் வீடியோ காட்சிகளின் பின்புலத்தில் கவிஞரால் வாசிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு, அக்கவிதை தீவிரவாதத்தை முன்நிறுத்துகிறது;தீவிரவாத அமைப்பினை ஆதரிக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது. ஆதலால்,குற்றத்திற்கு முதன்மைக் காரணமான கவிதையை எழுதி, வாசித்து, வீடியோவாக வெளியிட்ட கவிஞர் டாரின் டட்டூர் ‘பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு (the security of the region) கடும் அச்சுறுத்தலாக’ உள்ளார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வழக்குப் புனைந்தனர் காவல்துறையும் அரசின் வழக்குரைஞர்களும் இணைந்து.

வழக்கமாக, இதுபோன்ற சமூக ஊடகப்பதிவுகள் தொடர்பான வழக்குகளில் யாரேனும் கைது செய்யப்பட்டால்,வழக்கு நடைபெறும் காலத்தில், வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்வரை,வீட்டுக்காவல் (House arrest with restrictions on outside movements) அனுமதிக்கப்படும். ஆனால், டாரின் டட்டூருக்கு அவ்வாறு வீட்டுக்காவல் வழங்குவதை அரசுத்தரப்பு / காவல்துறை கடுமையாக எதிர்த்து நின்று இழுத்தடித்ததால்,வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்ட அக்.11, 2015 முதல், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை கடுமையான சூழல்கள் நிலவுகிற, அப்பகுதியிலுள்ள  (Jalameh, Sharon and Damoun) மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி, மாற்றி அடைக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டுக்காவல் கேட்டு மனுச்செய்யவும், அம்மனுக்கள் மீது நடைபெறும் விசாரணைகளுக்கு ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் வரும்போது வேறு வேறு சிறைகளிலிருந்து அல்லற்பட்டுவரும் நிலை அவருக்கு ஏற்படுத்தப்பட்டது.

ஒருவழியாக ஜனவரி 14, 2016-ல் அவருக்கு நீதிமன்றத்தால்- வழக்கின் தீர்ப்புவரை- வீட்டுக்காவல் அனுமதிக்கப்பட்டது. அப்போதும் அரசுத்தரப்பு முழுமூச்சுடன் குறுக்கிட்டு, டாரின் டட்டூரை அவரது ஊரில், சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அங்கிருந்து வெகுதொலைவில், தனிமையில், செல்போன், இணைய வசதி ஏதும் இல்லாமல் ஒரு இடத்தில், காவலர் கண்காணிப்புடன், அதையும் மீறி அவர் எங்காவது சென்றால்கூட அதைக்கண்டறிய உதவ அவரது இடது காலில் ஒரு எலெக்ட்ரானிக்கருவி ஒன்றை (An electronic device attached to her ankle supervising her movements) எப்போதும் அகற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு காவல்துறையும் அரசு வழக்குரைஞரும் வற்புறுத்தியதால், நாஸரேத் நீதிமன்றம் அந்த நிபந்தனைகளை எல்லாம் விதித்தது. உடனடியாக வேறுவழியின்றி, மாற்றி மாற்றி வேறு வேறு சிறைகளில் உழலும் அவலத்திலிருந்து தற்காலிக விடுதலையாவது இருக்கட்டும் எனத் தன்மீது விதிக்கப்பட்ட  நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார் டாரின்.

சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் டெல் அவிவ்(Tel Aviv) நகருக்கருகே, கிர்யட் ஓனோ (Kiryat Ono) என்றபுறநகர்ப் பகுதியொன்றில் இன்டர்நெட் வசதியற்ற ஒரு சிறிய குடியிருப்பைத் தனது தமையன் வாடகைக்கு ஏற்பாடு செய்துதர முடிந்ததால் அங்கு மாற்றப்பட்டார் டாரின். வீட்டின் வெளியில் எப்பொழுதும் தப்பாத காவல் கண்காணிப்பு உறுதி; அவரது இடது கணுக்காலில் அகற்ற முடியாதவாறு பொருத்தப்பட்ட வேவுபார்க்கும் எலெக்ட்ரானிக் கருவி. சொந்த ஊரை, சொந்த வீட்டை, பழகிய இடங்களை விட்டு – நாடு கடத்தப்பட்டது போன்ற அந்நியமானதொரு தொலைவில் - வசதிகளற்ற ஒரு சிறிய வீட்டைவிட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாத கண்காணிப்பு; செல்போன், இணையவழியாகக்கூட வெளியுலகத் தொடர்பேதுங்கொள்ள வழியுமற்ற சூழல் – அதற்குத் தனிமைச்சிறைவாசமே இருந்திருக்கலாம் என்ற நிலை.

அந்நிலையை மாற்ற விரும்பித் தனது சொந்த ஊரில் வீட்டுச்சிறையிருக்க அனுமதி வேண்டிப் பலமுறை நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதும் ஒவ்வொரு முறையும் அரசுத்தரப்பின் வலுவான எதிர்ப்பால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆறு மாதங்களான பின்னர் வீட்டுச்சிறைவாசத்தைச் சொந்த ஊருக்கு டாரின் மாற்றித் தொடர நீதிமன்றம் கனிந்தது. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்- ஏறத்தாழ ஏழுமாதங்களுக்குப் பிறகு- 2016, ஏப்ரல் 13ல்தான் நாஸரேத் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் நாள் கேட்பு (hearing)- ‘வாய்தா- தொடங்கியது. இதற்கிடையில் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் எனப் பென் (PEN International), ஆம்னெஸ்டி (Amnesty International) போன்ற பல அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இயக்கங்களைத் தொடங்கின.பல சமூக ஊடகங்களிலும் டாரீனை விடுதலைசெய்யக் கோரிக்கைகள் இடைவிடாது இடம்பெற்றன.

சேர்த்துப் பார்க்கும்போது, 2015 முதல் டாரின் டட்டூர் காவல் பிடியில்தான் இருக்கிறார். பலமுறை அவருக்குப் பிணை (bail) மறுக்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது கவிதையோ வேறு எந்தப்படைப்போ வெளியிடப்படக்கூடாதெனும் தடை அவர்மீது விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு செல்போன், இணையத் தொடர்புகளும் மறுக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிந்து, மே 3, 2018ல், டாரின் டட்டூர் மீது சுமத்தப்பட்ட  கவிதையின் மூலம் வன்முறையைத் தூண்டுதல்  (incitement to violence), தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்தல் (‘supporting a terrorist organization’) ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ( நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் தனியே விரிவாக எழுதத் தக்கவை.)

நீதிமன்றத்தால் 2018ல் இறுதித் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே, ஒரு கவிதைக்காகவும், இரு முகநூல் பதிவுகளுக்காகவும் 2015 அக்டோபர் முதல் சிறைவாசம், வீட்டுச் சிறைவாசம் என்பதெல்லாம் சேர்த்துத் தொடர்ந்து சிறைக்காவலில்தான் அவர் இருந்திருக்கிறார். மேல் முறையீட்டுக்குப்பின் செப்டம்பர் 28, 2018ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தான் சிறைப்பட்டிருந்த வலிகளை விடக் கூடுதலான வலியும் தண்டனையும் அதிரடிக் கைது நடந்த அக்டோபர் 2015 முதல் இறுதியாக விடுதலையான செப்டம்பர் 2018 வரை, நீதிமன்ற நிபந்தனையால், அவரது கவிதை எதுவும் வெளியிடப்படாமல், வெளியுலகம் காணாமல் தன்னோடு சேர்ந்து சிறையிருக்க நேர்ந்ததுதான் என்கிறார் இப்பெண்கவிஞர், ஒரு பேட்டியில்.

ஆனாலும் அவர் மகிழ்ந்து புன்னகைத்திருக்க இனியதொரு காரணம் நிறைந்து நிற்கிறது. 2015 முதல் 2018 வரை அவரைச் சிறைப்படுத்திய அதிகாரம், அவர் எந்தக் கவிதைக்காகச் சிறைப்படுத்தப்பட்டாரோ அந்தக் கவிதையை - (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) எதுவும் செய்யமுடியவில்லை. பதிவிடப்பட்ட நாள் முதல் அக்கவிதை இணையத்தில் வாகாக இருப்புக்கொண்டுள்ளது. லட்சக்கணக்கில் வாசகர்களால் அக்கவிதை காணப்பட்டு, வாசிக்கப்பட்டு,இணையவளத் தாராளத்தால் பதிவிறக்கமும் செய்யப்பட்டுப் பத்திரமாகியுள்ளது.

எழுத்தின் வலிமையை எவர் இழுத்துக் குறைக்க முடியும்?

ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்! கவிதைகள் வெளியிடப்படத்தானே சிறைக்காலத்தில் தடையிருந்தது?

சிறைவிடுதலை பெற்ற பின், சிறையிலும், வெளிவந்த பின்னரும் எழுதிய கவிதைகள் பல தொகுப்புகளாக இதுவரை வந்துள்ளன. அவற்றுள் சில 

The Last Invasion, Nazareth: El Wattan Books, 2010; My Threatening Poem, Arabic, Tunis: Dyar Publishing and Distribution House, 2018; Threatening Poem – Memoir of a Poet in Occupation Prisons, English Version. Scotland: Drunk Muse Press, 2020; I Sing From the Window of Exile – English and Arabic. Scotland: Drunk Muse Press, 2023.

இன்னும் வரும். எவரடைக்க முடியும் கவிதையூற்றை?

https://www.dinamani.com/tamilnadu/2025/Dec/31/new-year-2026-bring-victory-in-the-democratic-struggle-mk-stalins-greetings


[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்]

இதையும் படிக்க: சொல்லே மருந்தாகும்..!



வந்தே மாதரம் 150?

 சிறப்புக் கட்டுரைகள் 

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Nov/07/150-years-of-vande-mataram-truths-behind-our-national-song


வந்தே மாதரம் 150? 


இராஜ முத்திருளாண்டி,      07 நவம்பர் 2025



'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று (நவ. 7) தொடங்கியுள்ளன.

'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற மாதம் (அக்டோபர் 1-இல்) ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுபற்றி, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான (Plan of Action, 18 Pages)  பரிந்துரைகளை வழங்கியது. இதில் குறிப்பிட உரிய குதர்க்கமான இரண்டு அம்சங்களைச் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

2025 நவம்பர் 7 முதல் தொடங்கும் வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால நிகழ்ச்சித் திட்டத்தின் 4 கட்டங்கள் இதோ:

முதற் கட்டம்: 7-14 நவம்பர் 2025; இரண்டாவது கட்டம்: 26 ஜனவரி, 2026 (குடியரசு தினத்தைச் சுற்றி); மூன்றாவது கட்டம்: 7-15 ஆகஸ்ட், 2026 (இல்லந்தோறும், மூவண்ணக் கொடியுடன்); நான்காவது, நிறைவுக்கட்டம்: நவம்பர் 1 முதல் 7 வரை, 2026. முதற்கட்டமான (நவம்பர் 7 முதல் 14 வரையான நிகழ்ச்சித் திட்டத்தின்படி) இன்று (நவம்பர் 7-இல்), தில்லி இந்திரா காந்தி  திடலில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் தலைமை தாங்க, நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.

‘’பிரதமர் நிகழ்ச்சியின் நேரடி இணைப்பு உள்ளூர் நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது (தொலைக்காட்சி இணைப்பு எம்.ஓ.சி. சமூக கையாளுதலில் பகிரப்படும்);  குடிமக்கள், குடியிருப்புச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்கேற்புடன் 'வந்தே மாதரம்' பாடல் பொது இடங்களில் பரப்பப்படும் என்றும் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பு பாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாடும்போது பாடலின் ஆடியோ இசைக்கப்படும்; பாடல் வரிகள் திரையில் தோன்றும்; பங்கேற்பாளர்களுக்குப் பாடல்களின் அச்சுப் பிரதிகள் வழங்கப்படும்; மக்கள் நின்று பாடவேண்டும்’’ என்ற விவரங்களும் வழங்கி, வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை அணுகத் தொடர்பும் (Link) வழங்கப்பட்டுள்ளது.

அதன்படியே, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில் பொது இடங்களில் நிகழ்ச்சியுடன் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பாடப்பட்டு வருகிறது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி (ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8,1894) எழுதிய வந்தே மாதரம் பாடல், நம் நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று மிகுந்திருந்த விடுதலைப் போராளிகள் அனைவரின் தீரமுழக்க கீதமாக விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. “உண்மையில், வங்காளத்தைப் பற்றி எழுதப்பட்ட வந்தே மாதரம், பழைய, புதிய தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரிடையே அகில இந்திய செல்வாக்குப் பெற்றது. மாகாண மொழியில் எழுதப்பட்ட ஒரு பாடல், ஒரு தேசிய முழக்கமாக மாறியதற்கும் பெரும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டை உறுதிப்படுத்தும் சக்தியாக செயல்படுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் - வந்தே மாதரம் - இங்கே உள்ளது” (எஸ்.கே. போஸ் 1974). 

ஆனால், நவம்பர் 7 எவ்வகையில், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வந்தே மாதரம் உருவான நாள் எனக் கணக்கிட்டு, வந்தே மாதரம்-150 கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டன என்று தரவுகளின் மூலம் அறிய இயலவில்லை. ‘வந்தே மாதரம் 150’ என ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செயல்திட்டக் குறிப்பில் ‘வந்தே மாதரம் பின்புலம்’ (Vande Mataram: Background) என இடம்பெற்றுள்ள குறிப்புரையில், இப்பாடல், தொடர் வடிவில் வெளியிடப்பட்ட பங்கிம் சந்திரரின் நாவல் ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெற்றதாகவும் ‘வந்தே மாதரம்’ 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அக்ஷய் நவமி அன்று எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது” என்றும் (சந்தேகமாகவே) குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், “குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், வந்தே மாதரம் பாடலை முதன்முதலாக 1896 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் பாடினார். அந்த நிகழ்வின் பின்வந்த காலங்களில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை (மட்டும்) பாடுவது காங்கிரஸ் கூட்டங்களில் வழக்கமாகிவிட்டது” என்றும் தெரியப்படுத்தியுள்ளது. 


மேற்கண்ட பின்புலக்குறிப்பில் கவனிக்க உரிய இரண்டு செய்திகள்: 

  1. வந்தே மாதரம் பாடல் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது என்ற செய்தி. ஆக, வந்தே மாதரம் பாடல் எப்போது எழுதப்பட்டது என ஆதாரப்பூர்வமான, உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தரவுகள் இல்லை. 

பிறகெப்படி நவம்பர் 7, 2025, வந்தே மாதரம் 150 ஆவது ஆண்டுத் தொடக்கமாகும்? இந்த கேள்வி எழுவது நியாயமாகிறதல்லவா?

நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய கீதம் / தேசியப் பாடல் என்ற பொருள் குறித்து முதன்முதலாக, ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நவம்பர் 1951-இல் (முதற் பதிப்பு) வெளியிட்ட, நமது தேசியப் பாடல்கள் (Our National Songs) எனும் வெளியீட்டில் (அத் 1), “இரண்டு பாடல்களுள் வந்தே மாதரம் பழையது. 1882 ஆம் ஆண்டு வெளிவந்த பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம்' என்ற நாவலில் இது காணப்படுகிறது. எவ்வாறாயினும், அதன் தோற்றம் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளுக்கு முற்பட்டது. 1896 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் நமது தேசியப் பாடல்கள் பாடப்பட்டன’’ என்ற மேலோட்டமான விவரம் மட்டுமே வந்தே மாதரத்தின் தோற்றம் குறித்து அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, 1974-இல் எஸ்.கே. போஸ் எழுதி வெளியிட்ட ‘பங்கிம் சந்திர சாட்டர்ஜி’ வாழ்க்கை வரலாற்று நூலில், “அவர் இறந்து சரியாக பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளப் பிரிவினையை எதிர்த்த வலிமையான இயக்கம் வந்தே மாதரம் பாடலுக்குப் புதுச் செலாவணி அளித்தது. ஆனந்த மடம் நாவலாசிரியர் படிப்படியாக மக்களின் இதயத்தில், ‘இந்தியாவின் தேசியவாத தீர்க்கதரிசி’யின் நிலையைப் பெற ஆரம்பித்தார். ஒரு தீவிர தேசபக்தி உணர்வு வெடிப்பின் பின்னணியில்தான் சாட்டர்ஜி வந்தே மாதரத்தை எழுதினார். பாடல் எப்போது இயற்றப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் இது 1875 இன் பிற்பகுதியில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது’’ என ஜி.சி. ராய் எழுதிய வந்தே மாதரம் (வெளியீடு: ஜுகாந்தர், ஆகஸ்ட் 15, 1959) என்ற நூலொன்றைத் தனது கூற்றுக்குச் சான்று காட்டி, போஸ் தன் நூலில் குறிப்பு வைத்துள்ளார். தகவல் - ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன் குறிப்பிட்டுள்ள இரு வெளியீடுகளும் நவம்பர் 7, 1875 குறித்து எதுவும் தெளிவாகக் கூறவில்லை.

அடுத்ததாக, வந்தே மாதரம் (தகவல்) [Vande Mataram (Sanskrit Document Information, sanskritdocuments.org] என்ற செப்டம்பர் 11, 2017 பதிப்பில், சிவராமு(1937- ) எழுதிய "ஒரு பாடலின் கதை: பரவசம் மற்றும் வேதனை" என்ற ஆங்கில நூலிலிருந்து [1972, வெளியீட்டாளர்: சாகித்ய சிந்து; விநியோகஸ்தர்கள்: ராஷ்ட்ரோத்தான சாகித்ய, மொழி: ஆங்கிலம், பக்கங்கள்: 166] சில பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், பாடல் எப்படி இயற்றப்பட்டது? என்ற பகுதியில் 'வந்தே மாதரம்‘ ஆனந்த மடத்தில் மலர்ந்தது உண்மைதான்; ஆனால் அது ஆனந்த மடம் எழுதப்படுவதற்கு முன்பே இயற்றப்பட்டது. நாட்டின் விடுதலைக்கான இயக்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த உத்வேக நெம்புகோலாகச் செயல்பட்ட அற்புதமான பார்வையை பங்கிம் எவ்வாறு கண்டார்? அந்த பார்வையை அவர் எவ்வாறு அழியாததாக ஆக்கினார் என்பது பாடலில் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 1875 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பங்கிம் விடுமுறை எடுத்தபோது ஒரு நல்ல தருணம் வந்தது. அவர் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்குச் செல்லும் ரயிலில் ஏறினார். அப்போது பிறந்தது அப்பாடல்’’ என்ற விவரம் அறியக் கிடைக்கிறது. நவம்பர் 7 குறித்த செய்தியில்லையே!  

பாடலின் பிறப்பு குறித்த முன் குறிப்பிட்ட நூலின் அதே கருத்து, ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி முன்னுரையுடன், 1977 இல் வெளியிடப்பட்ட சாது பேராசிரியர் வி. ரங்கராஜன் எழுதிய  ‘வந்தே மாதரம்’ எனும் ஆங்கில நூலில், (வெளியீடு: சகோதரி நிவேதிதா அகாதெமி, சென்னை) கீழ்க்கண்டவாறு எதிரொலிக்கிறது. ‘’ஆனந்த மடம் பிறப்பதற்கு முன்பே வந்தே மாதரம் இயற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஒரு விடுமுறையில், கொல்கத்தா நகரில் உத்தியோகபூர்வ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பங்கிம் தனது சொந்த ஊரான கந்தலாபாடாவுக்கு ரயிலில் ஏறி வந்தபோது இது நடந்தது’’ என்ற தகவல்தான் ‘பாடலின் பிறப்பு’ (Birth of the Song) என்ற குறுந்தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.


பின்னர், வந்தே மாதரம் குறித்து விரிவாக (210 பக்கங்கள்) படைத்துள்ள அமரேந்திர லக்ஷ்மண் காட்கில், வந்தே மாதரம் (பாடல் வற்றாத பாடல்) என்ற பெயரில் எழுதி, வந்தே மாதரம் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக ஏப்ரல், 1978-இல் வந்த நூலில்  ‘’வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட சரியான தேதி சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. 1880 மற்றும் 1882-க்கு இடையில் பங்கிம் சந்திரரின் பிரபலமான நாவலான ‘ஆனந்த மடம்’, வங்க தர்ஷன் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. கடைசிப் பகுதி ஜூன் 1882 இல் முடிவுற்றதும் இந்த நாவல் 1883 ஆம் ஆண்டில் முதல் முறையாக புத்தக வடிவில் வாசகர்களைச் சென்றடைந்தது. இந்த பாடல் 1874 ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது என்று ஆராய்ச்சி நிறுவியுள்ளது. இவ்வாறு, பாடலின் பிறப்புக்கும் நாவலில் சேர்ப்பதற்கும் இடையே ஆறு வருட இடைவெளி உள்ளது’’ என்ற செய்திகளும் நமக்குக் கிடைக்கிறது. 

பிறகெப்படி நவம்பர் 7, 1875 கதை தோன்றியது? தக்க ஆதாரங்கள் ஏதும் தேடல்களுக்கு எட்டிய தொலைவில் காணோம். இறுதியாக, புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சவ்யசாச்சி பட்டாச்சார்யா, வந்தே மாதரம் பாடலின் வரலாறு குறித்து எழுதிய சிறப்பு நூலிலும் ‘’1870-களின் முற்பகுதியில் எழுதப்பட்ட அசல் பதிப்பு, சில ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது. 1881 ஆம் ஆண்டில், இது ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்டது” என்ற தரவே கிடைக்கிறது (பார்க்க: வந்தே மாதரம் ஒரு பாடலின் வாழ்க்கை வரலாறு , சவ்யசாச்சி பட்டாச்சார்யா, பெங்குயின் புக்ஸ், 2003).

வந்தே மாதரம் நவம்பர் 7, 1875 தொடர்பை யாரும் ‘கண்டா வரச் சொல்லுங்க’.

2.  ஒன்றிய அரசு பண்பாட்டுத் துறை, நவம்பர் 2025-இல் வெளியிட்டுள்ள ‘வந்தே மாதரம் 150’ செயல் திட்ட அறிவிப்பில், இந்திய அரசமைப்புச் சபை (Constituent Assembly of India) ஜனவரி 1950-இல் எடுத்து அறிவித்து, இன்று வரை நடைமுறையிலுள்ளதொரு தீர்மானத்தை ஓசையில்லாமல், மீறும் வகையில், ஒரு குதர்க்கத்தை நிகழ்த்த முற்பட்டுள்ளதை யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை என்பது மிகுந்த ஆச்சரியமே.

பங்கிம் சந்திர சாட்டர்ஜின் வந்தே மாதரம் மூலப் பாடல் ஆறு பத்திகள் / சரணங்கள் (Stanzas) கொண்டது. இந்திய விடுதலைப் போரின் உக்கிரம் உயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பில் நாட்டு மக்கள் அனைவரது ஒற்றுமையும் ஒத்துழைப்பும் எவ்வகையிலும் இடையூறுக்குள்ளாகிவிடக் கூடாது என்ற கவனமும் கவலையும் அண்ணல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் வந்தே மாதரம் பாடல் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு உடன்படா நிலையில் இருப்பதால் 1930-களில் அந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பு வலுத்து பாடலின் ஆசிரியர் கடுமையான கண்டனத்திற்குள்ளானார். அவரது ‘ஆனந்த மடம்’ மற்றும் ‘ராஜ்சான்ஹா’ நாவல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆட்சேபனைகளுக்கு அரசியலமைப்புச் சபைத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், பதிலளித்தார் "பாடல் உருவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை" என்றும், "துர்கா எந்த சிலையையும் குறிக்கவில்லை, ஆனால், தாய் நாட்டிற்கு மற்றொரு பெயர்" என்றும் கூறினார். இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதானது.

இவற்றால் வந்தே மாதரம் குறித்த சூடான சர்ச்சை நீடித்து வந்தது. வெளிப்படையாகச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன்,  அக்டோபர் 1937-இல், காங்கிரஸ் செயற்குழு இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாகக் கையிலெடுத்து, வந்தே மாதரம் பாடலின் இரண்டு சரணங்களை (Stanza) மட்டுமே பாட பரிந்துரைத்தது. இந்த முடிவை எடுக்கக் காங்கிரஸ் செயற்குழு அமைத்த கமிட்டிக்கு கவிஞர் தாகூர் அக்டோபர் 26, 1937 தேதியிட்டு நேருவுக்கு எழுதிய கடிதத்தில், பாடலின் முதல் இரண்டு சரணங்களைப் பாடுமாறு பரிந்துரைத்தார் என்பதும் குறிப்பாக அறியப்பட வேண்டும். இதுதான்- வந்தே மாதரம் பாடலி்ன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே (முழுப்பாடலும் அல்ல) - அரசியலமைப்பு சபையால் வந்தே மாதரம் பாடல் எனக் குறிப்பிடப்படுவது. 

அந்த முதல் இரண்டு பத்திகளுக்கே தேசியப் பாடல் (National Song) என்ற அங்கீகாரம். இது தெளிவாக அறிந்துகொள்ளப்பட உரியது.

(சுருக்கப்பட்ட வந்தே மாதரத்தையும் முகம்மது அலி ஜின்னா தலைமையிலிருந்த முஸ்லிம் லீக் இறுதி வரை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதுகுறித்து விரிவாகத் தற்போது இங்கு விளக்க அவசியமில்லை).

ஆனால், 1930களிலிருந்து ஜனவரி 1950-இல் தேசிய கீதம், தேசியப் பாடல் குறித்து அரசியல் அமைப்புச் சபையில், தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவிப்புச் செய்து இன்று வரை வந்தே மாதரம் பாடலைப் பொருத்து நடைமுறையில் இருப்பது அதன் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே.

அப்பட்டமாக, ஓசையில்லாமல், இதனை முற்றிலும் மீறும் வண்ணம், ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தைப் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதோடு பாடலில் தவிர்க்கப்பட்ட நான்கு பத்திகளையும் இணைத்துப் பாடத் தொடர்பும் (link) வழங்கியுள்ளதே! 

‘’சுதந்திரமாக இருப்பதற்கான விலை எப்போதும் விழிப்போடிருப்பதே’’.

கொசுறு: உலக நாடுகளில் இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட இரண்டு நாடுகள்: நியூசிலாந்து, டென்மார்க். நம் பெருமை: உலக நாடுகளிலேயே ஒரு தேசிய கீதமும் (National Anthem ஜன கண மன..), ஒரு தேசியப் பாடலும் ( National Song, வந்தே மாதரம் ) கொண்டிருக்கும் ஒரே நாடு, இந்தியா.

 வாழ்க பாரதத் திருநாடு.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

**


ஞாயிறு, 28 டிசம்பர், 2025

 சிறப்புக் கட்டுரைகள்

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Dec/27/the-challenges-faced-by-india-national-anthem-jana-gana-mana



'ஜன கண மன' சந்தித்து வரும் சவால்கள்! 


இராஜ முத்திருளாண்டி 



கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ பாடல் முதன்முதலாக, இன்றைக்கு 114 ஆண்டுகளுக்கு முன் - 27 டிசம்பர், 1911 இல் - கொல்கத்தாவில் நடைபெற்ற 26-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

பரந்த வெளியுலகில் இப்பாடல் ஒலிக்கத் தொடங்கியது முதலே, இப்பாடலுக்கான சவால்களும் உடன்பிறந்தன எனலாம். அவற்றில் முதலாவதாக - ‘காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைபோல ஒரு நிகழ்வும் இணைந்து கொண்டது. 'ஜன கண மன' முதன்முதலாகப் பொதுவெளியில் பாடப்பட்ட அதே காலத்தில் (அதே தேதியில் அல்ல) இங்கிலாந்தின் மன்னர் - இந்தியாவுக்கும் அப்போது அரசர் - ஐந்தாம் ஜார்ஜ், தில்லிக்கு வருகை தந்தார். உடனே இப்பாடல், ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகையை வாழ்த்துவதற்காகப் பாடப்பட்டது என்று அடிப்படையிலேயே தவறாகப் புரிந்துகொண்டு ஒரு குழு கிளம்பி, சர்ச்சை பூதங்களைத் தட்டி எழுப்பத் தொடங்கியது. 

உண்மையில், இந்தப் பாடல் குறித்த ஆரம்ப குற்றச்சாட்டு (மன்னர் ஜார்ஜ் வருகையுடன் தொடர்புபடுத்தியது) அக்காலத்து பிரிட்டிஷ் சார்பு பத்திரிகைகள் அளித்த பொய் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய வருகையின்போது (1911) வங்காளப் பிரிவினையை ரத்து செய்வதாக ஐந்தாம் ஜார்ஜ் அறிவித்ததை அப்பத்திரிகைகள் பெரிதுபடுத்திக் காட்ட விரும்பின. வங்காள மக்கள், மன்னரைப் புகழ்ந்து நிற்பதாகச் சித்திரம் வரைந்தன. ஐந்தாம் ஜார்ஜுக்காக ராம்புஜ் சவுத்ரி என்பவர் இயற்றிய இந்தி பாடல் ஒன்றை மறந்து / மறைத்து, எதற்காகவோ தாகூர் பெயர் ஐந்தாம் ஜார்ஜுக்கான பாடலுடன் இணைத்துப் பரப்பப்பட்டது.

நோபல் பரிசு (1913) பெற்ற கவிஞர் தாகூர் ஒரு தேசப்பற்றாளர்; ஓர் இலக்கியவாதியாக, நாட்டில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஆங்கில அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தை உதறியவர். மேலும்,பாடலை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரே இப்பாடல் ஜார்ஜ் மன்னர் வரவேற்புக்காக எழுதப்பட்டது அல்ல என்று மிக வெளிப்படையாகப் பல சந்தர்ப்பங்களில் விளக்கிச் சொன்ன பிறகும், ஒருதலையாக, ஆதாரமின்றி எழுப்பப்பட்ட இதைப் பற்றிய சர்ச்சை தற்போது வரை அடங்கி மறைவதாகவே இல்லை.  

தாகூர் முதன்முதலாக 'ஜன கண மன' பாடலைப் பாடிய 1911 காங்கிரஸ் அமர்வு முடிந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையின் மூலம் தாகூரின் சாந்திநிகேதனை "அரசாங்க அதிகாரிகளின் கல்விக்கு முற்றிலும் பொருத்தமற்ற இடம்" என்று அறிவித்தது. மேலும், தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்பும் அதிகாரிகளுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது. உண்மையில், தாகூர் பாடல், ஜார்ஜ் மன்னரைப் புகழ்ந்து பாடிய வரவேற்புப் பாடலாக இருந்திருந்தால் இப்படியா பரிசு கிடைத்திருக்கும்?

ஆரம்பம் முதலே ஜன கண மன மீது எழுந்துவரும் இந்துத்துவ குற்றச்சாட்டுகள் எதுவும் புதிதானதல்ல. தற்போது அவை புதிய தீவிரத்துடன் புழக்கத்தில் வரத் தொடங்கியுள்ளன. ‘வந்தே மாதரம்’ குறித்த அண்மைக் கரிசனங்களும் அதீத ஆர்வங்களும் அப்பாடல் தொடர்பாகப் பொது உரையாடல் களத்தில் வலிந்து புகுத்தப்பட்டுவரும் முனைப்புகளும் இவ்வகையில் இணைபவையே. இச்சூழல்மாசு தில்லியிலிருந்து பரவிக் கொண்டிருக்கும் காலத்தில், இந்தியாவின் தேசிய கீதம் எவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்டது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

கவிஞர் தாகூர் இறப்பதற்கு சற்று முன்பு 1941 ஆம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பதிலளித்தவர்கள் ஜன கண மன வலுவான "தேசிய குணாதிசயங்களை"க் கொண்டிருப்பதாக வாக்களித்தனர். வந்தே மாதரம் மற்றும் இக்பாலின் ‘சாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய பாடல்களுக்கு உயர்வானதாக ஜன கண மன நாட்டிற்கான கீதமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.  வேறு சில அளவுகோல்களில் வந்தே மாதரம் உயர்ந்ததாகக் உணரப்பட்டாலும் இப்பாடல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து - முஸ்லிம் உறவும் ஒற்றுமையும் குலைந்துவிடுமோ என்ற கவலையை உருவாக்கியது உண்மை. இதற்கிடையில் நேதாஜி போஸின் இந்திய தேசிய ராணுவம் ஜெர்மனியில் இருந்து 1942-இல் ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்து வானொலியில் ஒலிபரப்பியது. இது இந்தியாவில் ஜன கண மன பாடலுக்கான செல்வாக்கையும், ஒருமித்த மக்கள் கருத்தேற்பையும் விரிவாக்கியது. 

இந்நிகழ்வுகளால் ஜன கண மன பாடலின் ஆரம்ப காலத்தில் (1911 முதல்) பிரிட்டிஷ் சார்பு பத்திரிகைகள் வீசிய அழுக்குகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாகவே நாம் கருதலாம். ஆனாலும், 1950இல் ஜன கண மன தேசிய கீதமாகவும் (National Anthem) வந்தே மாதரம் தேசியப் பாடலாகவும் (National Song) அங்கீகரிக்கப்பட்டு அறிவிப்பான பின்னரும் தேசிய கீதத்திற்கு அவ்வப்போது உள்நாட்டு அரசியல் சவால்களும் நீதிமன்ற வழக்குகளும் காளான்களாக முளைத்துக் கொண்டே வந்துள்ளன. 

கவிஞர் தாகூர் ஜன கண மன பாடல் எழுதியது 1911-இல்; அவர் மறைந்தது 1941-இல். தேசிய கீதமாக ஜன கண மன பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது 1950-இல், தாகூர் மறைந்து 9 ஆண்டுகள் கழித்து. 

இந்திய அரசமைப்புச் சபையின் நிறைவுக் கூட்டத்தில் 24 ஜனவரி 1950 இல் - 

"நமது விவாதத்திற்கு ஒரு விஷயம் நிலுவையில் உள்ளது, அது தேசிய கீதம் பற்றிய கேள்வியாகும். ஒரு சமயத்தில் இந்த விஷயத்தைச் சபையின் முன் கொண்டு வரலாம் என்றும், தீர்மானம் மூலம் சபையால் முடிவு எடுக்கப்படும் என்றும் கருதப்பட்டது. ஆனால், ஒரு தீர்மானத்தின் மூலம் முறையான முடிவை எடுப்பதற்குப் பதிலாக, தேசிய கீதம் சம்பந்தமாக நான் ஓர் அறிக்கையை வெளியிடுவது நல்லது என்று கருதப்படுகிறது. அதன்படி நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

ஜன கண மன என்று அழைக்கப்படும் சொற்கள் மற்றும் இசை ஆகியவற்றைக் கொண்ட இசையமைப்பு இந்தியாவின் தேசிய கீதமாகும். சந்தர்ப்பம் ஏற்படும்போது அரசாங்கம் அங்கீகரிக்கும் சொற்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது; இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்காற்றிய வந்தே மாதரம் பாடல், ஜன கண மன பாடலுக்குச் சமமாக கௌரவிக்கப்படும். இது உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன்." 

என அவைத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜன கண மன தேசிய கீதமாகும் என்று, அறிவிப்புச் செய்தார். [ஆதாரம்: அரசமைப்புச் சட்டமன்ற விவாதங்கள், XII. (ஜனவரி 24, 1950)].

இந்த அறிவிற்குப் பின், அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பினர்கள் ஒவ்வொருவராகக் கையெழுத்திட்ட பிறகு, உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் கூடியிருந்த உறுப்பினர்கள் கூட்டாக 'ஜன கண மன' பாடலைப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குடியரசுத்தலைவர் தனது சம்மதத்தை தெரிவித்தார். அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் உள்பட, 'ஜன கண மன' பாடலை கோரஸில் பாடினர், அரசியலமைப்புச் சபையின் பதினைந்து பெண் உறுப்பினர்களில் ஒருவரான பூர்ணிமா பானர்ஜி தலைமையில் தேசிய கீதம் பாடுவது நடைபெற்றது. இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடலின் முறையான அறிமுகம் இது என்று கூறலாம்.

தாகூர் நூற்றாண்டு(1961) மலரில் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தும் தனது முன்னுரையில் ஜவாஹர்லால் நேரு உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கும் செய்தி ஒன்றும் நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள உரியது.

‘’கடைசியாக நான் அவரைச் சந்தித்தபோது, புதிய இந்தியாவுக்கான தேசிய கீதத்தை இயற்றித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டேன். அவர் ஓரளவே சம்மதித்தார். அந்த நேரத்தில் நமது தேசிய கீதமாகத் தற்போதுள்ள 'ஜன-கண-மன' என் மனதில் இல்லை. இந்தச் சந்திப்பையடுத்து சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். சுதந்திரம் அடைந்த பிறகு, 'ஜன கண மன' நமது தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நம் மக்கள் அனைவருக்கும் இது தொடர்ந்து ரவீந்திரநாத் தாகூரை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.’’ என்று எழுதியுள்ளார்.

நேருவோ அல்லது தாகூரோ ஜன கண மனவை தேசிய கீதமாக முன்கூட்டியே நினைத்ததில்லை என்பதை ருத்ராங்ஷு முகர்ஜி தனது நூலில் ('இந்தியாவின் பாடல்: தேசிய கீதத்தின் ஆய்வு' அலெஃப். பக்கங்கள் 96.) ஆணித்தரமாக நிறுவியுள்ளார். 

மேற்கண்ட இரு செய்திகளும், தற்போதெல்லாம் நாட்டில் 2014-க்கு முன்நடந்த நிகழ்வுகள் எதற்கெடுத்தாலும் நேருவின்மீது பழிஏற்றுவதையே வாடிக்கையாக்கி வருபவர்கள், ‘நேரு வந்தே மாதரத்தைப் புறக்கணித்து, ‘ஜன கணமன’வைத் தேசிய கீதமாக்க முன்பே தீர்மானித்து வைத்திருந்தார்’ என்று அபத்தமாகக் கூறிவரும் குற்றச்சாட்டு  இற்று வீழ உதவும் எடுத்துக்காட்டுகளாகும்.

ஜன கண மன தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள இக்காலம் வரை அக்கீதத்திற்குச் சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சில குறிப்பிட உரியவற்றைக் நாம் கண்டறிந்திருப்பது அவசியம். 

தேசிய கீதத்தில் இருந்து "சிந்து" என்ற வார்த்தையை நீக்க சஞ்சீவ் பட்னாகர் என்பவர் தாக்கல் செய்த மனு முதலில் நிராகரிக்கப்பட்டது. அம்மனுவை மீண்டும் மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2005-இல் தள்ளுபடி செய்தது. 

தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோட்டி, நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'தேசிய கீதம் ஓர் 'அழியாத கிளாசிக்' என்றும், அக்கீதத்தில் இருந்து எந்த வார்த்தையும் - ‘சிந்து’ உள்பட- நீக்கப்பட்டால் தேசிய கீதமே சிதைக்கப்பட்டதாகி விடும்’ எனக் கூறியது. நீதிபதி லஹோட்டி அமர்வு சார்பில் எழுதிய தீர்ப்பில், ‘’தேசிய கீதம் என்பது நாட்டின் நெறிமுறைகளின் பிரதிநிதித்துவம். எந்தவொரு கிளாசிக்கும் (classic), ஒருமுறை உருவாக்கப்பட்டவுடன், அழியாததாகவும் பிரிக்க முடியாததாகவும் மாறும். அதை உருவாக்கியவர்கூட அதில் மாற்றங்களைச் செய்வது விரும்பப்படாததாகவே கருதப்படும். கவிதையில் ஏதேனும் சேதம் செய்வது மாபெரும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அவமதிக்கும் செயல்’’ என்று அறிவித்தார். 

உச்ச நீதிமன்றத்தின் மே 13 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் மறுத்து, மறுஆய்வு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பட்னாகர் தாக்கல் செய்த பொது நல வழக்கை "விளம்பர நல வழக்கு" என்று கூறிய அமர்வு, "நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்ததற்காக" அவருக்கு ரூ. 10,000/- அபராதமும் விதித்தது. 

மேற்சொன்ன வழக்குபோலவே, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மலுஷ்தே தாக்கல் செய்த பொதுநல மனுவில் “1911 ஆம் ஆண்டில் கீதம் இயற்றப்பட்டபோது, 'சிந்து' இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது சிந்து நமது நாட்டின் பகுதியல்ல. எனவே, 'சிந்த்' என்ற பகுதியைக் குறிக்கும் வார்த்தைக்குப் பதிலாக 'சிந்து' என்ற நதியைக் குறிக்குமாறு மாற்றலாம் என்பது அவர் வாதம். மேலும், 'சிந்து' என்ற வார்த்தையை நீக்கி, அதற்கு பதிலாக 'காஷ்மீர்' என்று மாற்றக் கோரியும் அம்மனு வேண்டுதல் வைத்திருந்தது.

இம்மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தேசிய கீதத்தில் 'சிந்து' மற்றும் 'சிந்த்' என்று எவ்வாறு பயன்படுத்தினாலும் அது சரியானதே. "இரண்டு வார்த்தைகளும் சிந்து நதி அல்லது சிந்தி சமூகத்தைக் குறிக்கின்றன’ என்று கூறியது. மேலும், தேசிய கீதம் ஒரு நாட்டின் நிலப்பரப்பைப் பொதுவாக வரையறுக்கிறதேயன்றி, அது எழுதப்பட்ட நேரத்தில் இந்தியாவின் பகுதியாக இருந்த மாநிலங்கள் அல்லது பிராந்திய பகுதிகளைப் பட்டியலிடவில்லை என்றும் வலியுறுத்தியது. கூடுதலாக, 2005 மே மாதம் உச்ச நீதிமன்றம் பட்னாகர் வழக்கில் அளித்த தீர்ப்பையும் தனது பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு  குறிப்பிட்டது. 

1953 நவம்பரில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படியே தேசிய கீதம் நாடெங்கும் பாடப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது, அதில் 'சிந்து' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. "1951 நவம்பரில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட 'எங்கள் தேசிய பாடல்' என்ற கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கீதத்திலும் 'சிந்து' என்ற வார்த்தையே குறிப்பிடப்பட்டுள்ளது" என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டது.

தேசிய கீதத்தில் இருந்து "சிந்து" என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை அந்நீதிமன்ற தலைமை நீதிபதி மோஹித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் டால்வி ஆகியோர் தள்ளுபடி செய்தனர். 

அடுத்து, மீண்டும் மகாராஷ்டிரத்தில் மற்றொரு வழக்கு. இம்முறை மாநிலப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தேசிய கீதம் தவறாக - ‘சிந்த்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘சிந்து’ என்ற வார்த்தை - அச்சாகியுள்ளது; ஆகவே, அப்புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றொரு பொது நல வழக்கு 2014 இல் தக்ஷதா ஷேட் என்பவரால். அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் மொஹ்தா மற்றும் என்.எம். ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கலானது. 

எந்த வார்த்தை சரியானது; எது பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் மத்திய அரசை கேட்டு 2015 ஜனவரியில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. 

தொடர்ந்து, 2017-இல் அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற தில்லி ஆளுங்கட்சி வழக்குரைஞர் தேசிய கீதத்திற்குத் தரப்படும் முழுமரியாதையும், தேசிய கீதத்திற்கு அவமதிப்பு செய்தால் வழங்கப்படும் தண்டனையையும் தேசியப் பாடல் விசயத்திலும் அமல்படுத்த வேண்டும் என்றொரு வழக்குத் தொடர்ந்தார். 

அவரது மனுவில், இவ்விஷயம் தொடர்பான இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51 ஏ.  'தேசிய பாடல்' என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை. ஆகவே உரிய திருத்தம் மூலம் இரு பாடல்களுக்கும் சம மரியாதை, அவமதிப்பு செய்தால் சமதண்டனை என்பது அ.ச. பிரிவில் தெளிவாக்கப்படவேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் [(2018) 2 SCC 574]

மத்திய அரசு, 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒரே அளவில்தான் உள்ளன என்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இரண்டிற்கும் சமமான மரியாதை காட்ட வேண்டும் என்றும் தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த விஷயம் 2016 ஆம் ஆண்டின் 855 ஆம் இலக்க ரிட் மனு (சிவில்) உடன் இணைக்கப்படட்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர். 

இவ்வாறு தொடர்ச்சியாக ஏதாவது காரணங்களை முன்நிறுத்தி தேசிய கீதத்திற்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் சவால்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் நிலையிலும் சவால்கள் எழுப்புவது குறைந்தபாடில்லை. குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த கல்யாண் சிங், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ள தேசிய கீதத்தை வெளிப்படையாக அவமதிக்கும் வகையில், அப்பாடல், ‘ஜார்ஜ் மன்னருக்கான வரவேற்புப் பாடல்’ என்ற பழைய கதையை அரசு நிகழ்ச்சியிலேயே அறிவித்தார். இதுபோன்ற கருத்துகளை தற்போதைய ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதும் கண்கூடு.   

தேசிய கீதமாகவுள்ள 'ஜன கண மன' இந்தியா மற்றும் அதன் மக்களின் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. ஆனால், இந்தப் பாடல் தேசிய கீதமாக்கப்பட்டபோது, ஒரே நாடு என்ற ஒற்றுமை  குலைந்து, பிரிவினையுடன் வந்த சுதந்திரத்தையே பெற்றோம். ‘சிந்து’வை பாரதத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடும் ஜன கண மன தேசிய கீதமாக மாறும்போது, ​​சிந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை என்பதும் வருத்தம்தான். 

அதேசமயத்தில், தற்போது போட்டியாளராக ஒருதரப்பினரால் தூக்கி உயர்த்தப்படும் " வந்தே மாதரம்" முழு இந்தியாவைவிட, வங்காளத்தை மட்டுமே முதன்மைப்படுத்திய பாடலாகும். அப்பாடல் ஆங்கிலேய ஆட்சியில் குடிமைப் பணியாற்றிக் கொண்டிருந்த, அந்த அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைக் கௌரவமெனக் கருதி வாழ்நாளெல்லாம் ஏற்று வைத்துக்கொண்டிருந்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின்  உணர்வுகளில் விளைந்ததாகும். வங்காளப் பிரிவினையின்போது, அதனைத் தொடர்ந்து நாட்டின் விடுதலைப் போராட்ட காலங்களில் ‘வந்தே மாதரம்’ என்ற சொற்கள் போராட்ட முழக்கச் சொற்களாயின என்பது உண்மைதான். ஆனால் முழுப் பாடலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடன்பாடானதாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதும் மறுக்க இயலாத வரலாற்று உண்மையே. 

1911 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட ஒரு பாடலில் இருந்து, சுதந்திர இந்தியாவின் நள்ளிரவு அமர்வில் பாடப்பட்டு அதற்கு முன்னரே ஐ.நா.வில் இசைக்கப்படும் வரை ஜன கண மன கண்ட அதன் படிப்படியான உயர்வுகள், அப்பாடல் பலதரப்பிலும் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. 1950 ஜனவரி 24இல் தேசிய கீதம் முறையாக அறிவிக்கப்பட்டபோது, ​​அது ஏற்கெனவே நாட்டின் தேசிய உணர்வில் பதிந்துவிட்டது. இன்று, ஜன கண மன ஒரு கவிதையாக, பாடலாக, இசைப் படைப்பாக மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயக லட்சியங்கள், அதன் அரசியலமைப்பின் ஒன்றிணைக்கும் சக்தியின் தொடர்ச்சியான நினைவூட்டலாக எழுந்து நிற்கிறது. 

ஆங்கில அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தை உதறியெறிந்த தாகூர் இயற்றிய இந்தியாவின் தேசிய கீதம் (ஜன கண மன) ஓர் ஒப்பற்ற தேசப்பற்றுள்ள கவிஞரால் உணரப்பட்ட இந்தியா குறித்த ஒரு பார்வையை, உள்ளார்ந்த பெருமிதத்தை நமக்கு வழங்கி உணர்வில் பரப்புவதாக உள்ளது என்பதை ஒவ்வொரு முறையும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒவ்வொருவரும் உணர்கிறோம்; நிறைகிறோம். 

வரலாறு அறியாப் பாங்கில், வரலாற்றுக் கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் போக்குகளின் வெளிப்பாடாக மக்கள் உணர்வுகளில் நிறைந்துள்ள தேசிய கீதத்திற்கான சவால்கள், ஊறுசெய்யும் முயற்சிகள் தொடரக் கூடாதென உளமார விழைகிறோம். 

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]


**

திங்கள், 22 டிசம்பர், 2025

 சிறப்புக் கட்டுரைகள் 

அறியாத பாரதி - 3: 

பாரதி - காந்தி சந்திப்பு; நிலவும் குழப்பங்கள்! 


இராஜ முத்திருளாண்டி 

Updated on:  22 டிசம்பர் 2025, 5:13 pm 7 min read 


வரலாற்றைப் பற்றித் தமிழகம் அதிகம் கவலைப்படுவதில்லையோ என்று எண்ணத் தோன்றும் பல நிகழ்வுகளில், பாரதியார் வாழ்க்கை வரலாறு தொடர்பான விசயங்களும் அடங்கும். ஒரு 145 ஆண்டுக் காலவரையறைக்குள் வரும் அவனது குறுகிய வாழ்க்கை மற்றும் படைப்புக்கால, வரலாற்றை - மகாகவி என்று நாம் போற்றிக் கொண்டாடிவரும் ஒருவனுடைய முழுமையான வரலாற்றை - ஆதாரப்பூர்வமாக நாம் அறிந்துகொள்ள இயலாத நிலையே இன்று வரை தொடர்ந்துவருகிறது. இதனையே, ‘அறியாத பாரதி’யே - நாம் நன்கறியாத பாரதியே - நம்மோடுலவுகிறான் என்பதை வற்றாத வருத்தங்களோடு வாய்ப்புகள் யாவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகவுள்ளது.

தனது முன் இளமைக் காலத்திலேயே ‘’பாரதி’’ பட்டம் பெற்றவன் என்று அவனைப் பொதுத்திரளாகப் புகழ்ப் பல்லக்கிலேற்றிய ‘தமிழ்கூறு நல்லுலகம்’, அவனது பின் இருபத்தெட்டாண்டுகளில் எழுத்தறிவு குறைவாக இருந்த அவனது வாழ்காலத்தில், அவனது எழுத்துகள் மூலம் ஓரளவு அறிந்திருந்தாலும், அவனைப் பெரிதாகக் கண்டுகொண்டு உரிய ஆதரவளிக்கவில்லை என்பது உண்மை.

இத்தகைய ஆதங்கம் பாரதியின் முதல் மகள், தங்கம்மா, தன் தாயார் சொல்லத் தான் எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலுக்கான முகவுரையில் (11-12-1944) வருத்தத்தோடு எதிரொலித்துள்ளது, இதோ:

“அவர் உயிரோடிருக்கும்போது, ஜனங்கள் அவரைப் பயன்படுத்திக் கொள்ளாததுபோலவே, அவர் மறைந்த பிறகும் அவரது உண்மையான வரலாறுகளை மக்கள் அறிந்துகொள்ள முடியாமலேயே இருக்கிறார்கள். அவரைப் பற்றி தவறான விஷயங்களும் கற்பனைக் குறிப்புகளும் அடிக்கடி பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் வெளிவருகின்றன. பொதுஜனங்கள் அவைகளை நம்பிவிடுகிறர்கள். ஒருவர் மேலும் நான் குறைகூறவில்லை. சரியான சரித்திரம் இதுவரை வெளிவராதபடியாலேயே இந்தத் தவறுகள் ஏற்பட்டன’’ என்கிறாள்.

மேலும் “பாரதியாரைப் பற்றிய தவறான குறிப்புகளை என் தாயார் படிக்கும்போதெல்லாம், மனம்புண்ணாகி “ஐயோ, உண்மையான செய்திகளைத் தமிழரின் காதுக்கு எட்டச் செய்வது எப்படி?" என்று ஏங்குவார்” எனத் தன் தாயாரின் கவலையையும் அம்முகவுரையில் விவரித்துள்ளார்.

“அவர் இறந்த பிறகு திடீரெனக் கிளம்பியது “பாரதி மோஹம்” எனத்  திருமதி செல்லம்மா பாரதி கலங்கிச் சொல்ல நேர்ந்த உண்மையைத்தான், பாரதியின் நண்பர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு, “பாரதியாருக்குக் கிடைத்த பிரசித்தியெல்லாம் அவர் காலஞ் சென்றபிறகுதான்” என்று, வருத்தம்தோயப் பதிவு செய்துள்ளார்.. ‘(சென்று போன நாட்கள்’ 1928 - 29.). இவரே பாரதி இறந்த (11 செப் 1921) ஆறு நாட்களுக்குள், முதன்முதலாக (17 செப் 1921) “ஶ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள்” என சுதேசமித்திரனில் எழுதி, பாரதி மறைந்தபின் விளைந்த பாரதி குறித்த எண்ணிறந்த எழுத்தணிவகுப்புகளைத் தொடக்கிவைத்தவர்.

பாரதி மறைந்த பின் ‘பலரும் பாரதி மீது‘ ஆச்சர்யப் பூச்சொரிந்து ஆராதனைகள் செய்தனர்; ஆனந்தமாயினர்’. ஆனால், ஆழ்ந்த ஆய்வுகளோ, ஆவண ஆதாரங்களோ அவசியமாகப்படவில்லை பலருக்கும். பாரதி குறித்த கற்பனைச் சவாரிகளே விற்பனையாயின. ஆளாளுக்குப் பாரதி சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், வரலாற்று நூல்கள் என்றும் வண்ண வண்ணமாய் விரித்தனர். ஆனால், உருப்படியாகப் பாரதியின் ‘வாழ்வில் நிகழ்ந்த அதிமுக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் - அவனது செயல்கள் விளக்கம் பெறும்படி, அவற்றின் சிறப்புத் தெளிவாகப் புலப்படும்படி, பாரதியின் பண்பு மிளிரும்படி - உண்மைக்கும் காலக் குறிப்புகளுக்கும் உதிரா முதன்மையளித்து - கோவைப்படுத்தி, பாரதியின் முழுமையான வரலாற்றை நயம்பட யாரும் படைத்தளிக்க முன்வரவில்லை. அவனது புகழ் வாழ்வை, நம்பத் தகுந்த ஆதார, ஆவணங்களோடு வெளிக்கொண்டுவந்து நிலைப்படுத்தத் தக்கவற்றைச் செய்யவில்லை தமிழுலகு இன்று வரை.

இந்த அவல நிலையைப் பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன், “பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணை கொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணை கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிசெய்து கொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை” என்று (வரலாற்று நூலுக்கு ஒரு வரலாறு, 2019, பக்.18) தெளிவுறப் பதிவு செய்துள்ளார்.

பாரதியோடு பழகி அவனது வரலாற்றை 1944 இல் ‘கதைபோல்’ எழுதிய வ. ராமசாமி (வ.ரா), “பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் 'துக்கடாக்களை நண்பர்கள் பலர் சேர்ந்து திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது'' எனத் தனது இயலாமையை இறக்கிவைத்தார். ஆனால், பாரதியைத் தெரிந்தவர்களுடன் சேர்ந்து விவரங்கள் சேகரிப்பதில் ஆரம்பக் காலங்களிலேயே மண்டிக்கிடந்த இடர்ப்பாடுகளை எடுத்துக்காட்டுவது போல தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.) கூறியுள்ளது அறிய உரியதாகிறது.

“பாரதியாரை நேராக அறிந்தவர்களில் பெரும்பாலோர் ஒருவர் சொல்வதை ஒருவர் உண்மையல்ல என்கிறார்கள்... ஒவ்வொருவரும் பாரதிக்குப் பூஜாரி தாம்தான் என்பது போல் பேசுகிறார்கள்” (புதுமைக் கவிஞர் பாரதியார், அல்லயன்ஸ், மூன்றாம் பதிப்பு, 1948) என தி.ஜ.ர. அன்றே (1948) பாரதியை நன்கறிந்தோர் ‘கூடித்தொழில் செய்ய’ வாய்ப்புகள் வறண்டிருந்த நிலையை வெளிப்படுத்தினார். “அவருடைய வாழ்க்கை வரலாற்றை விஸ்தாரமாக, ஆதார பூர்வமாக எழுத வேண்டும்‌.... இந்தச்‌ சிறிய புஸ்தகம்‌ ஏதும்‌ சாதித்துவிட்டதாக நான்‌ பாத்தியம்‌ கொண்டாடவில்லை. இது ஒரு சிறிய ஜீவிய சரித்திரம்‌; அவ்வளவே” எனவும் தனது சிறு நூல் குறித்து அடக்கம் காட்டியிருந்தார், அவர்.

பாரதி இறந்து (1921) பல ஆண்டுகள் பின்,1935, செப்டம்பர் மாதம்11 ஆம் தேதி,சென்னை ஜெனரல் பாட்டர்ஸ் ரோடிலே உள்ள காங்கிரஸ் மாளிகையிலே 'பாரதி தினம்' கொண்டாடப்பட்டது குறித்ததொரு செய்தியை"சுதந்திரச் சங்கு" பத்திரிகையின் உதவியாசிரியராக இருந்த சக்தி சுப்பிரமணியன் விவரமாகக் குறிப்பிடுவதிலிருந்து, தமிழகத்தில் பாரதியின் நிலை பெரிதாக எதுவும் மாற்றம் பெறவில்லையோ என்றே நினைக்க வைக்கிறது.

“அந்தப் பாரதி தின நிகழ்வில் (1935 செப் 11) வைக்க பாரதியார் படம் கிடைக்கவில்லை. அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - பாரதியை நன்கு அறிந்தவரான,நேரில் அவருடன் பழகிய - "சுதேசமித்திரன்" ஆசிரியர். சி. ஆர். சீனிவாசன், பாரதியாரைப் பற்றி, பாரதியின் தோற்றம் எப்படியிருந்தது என்று எல்லாருக்கும் எடுத்துக் கூறினார். இன்னொருவர் ஹரிஹர சர்மா என்பவர். பாரதி பிரசுராலயத்தின் சார்பிலே பாரதி நூல்களை வெளியிட்டு வந்தவர். அவரும் கூட்டத்தில் பேசினார் அன்றைய கூட்டத்தில் எல்லாரும் வலியுறுத்திய விஷயம் ஒன்றே. அதாவது, பாரதியாரைப் பற்றிய உண்மையான தகவல் கொண்ட நூல் ஒன்று வெளிவர வேண்டும் என்பதே." [மகாகவி பாரதியார் (புதுமைக் கண்ணோட்டம்), சக்திதாசன் சுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, முதற்பதிப்பு: டிசம்பர் 1980]

இதுதான், கவிஞன் மறைந்து 14 ஆண்டுகள் கடந்த பின்னரும், ‘பாரதி மோஹம்’ கொண்டிருந்த மக்களிடையே இருந்த நிலைக்கு ஓர் அவல எடுத்துக்காட்டு.

பாரதி விடுதலைப் போராட்ட காலக் கவிஞன். தனது 25 வயதிலேயே சென்னையிலிருந்து அணி திரட்டிக்கொண்டு சூரத் காங்கிரஸ் (1907) மாநாட்டிற்குச் சென்றவன். “தாம் சென்னையிலிருந்து பிரயாணப்பட்டது முதல் மறுபடியும் சென்னைவந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோர்வையாகத் தொகுத்து ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டு.“எங்கள் காங்கிரஸ் யாத்திரை” என்று ஒரு புஸ்தகமாகவும் இரண்டணா விலையில் பிரசுரம் செய்து” மக்களிடையே விடுதலையுணர்வைத் தூண்ட முயன்றவன்.(‘சென்று போன நாட்கள்’ 1928-29).

காந்தியை நேரில் சந்திக்காமலே - காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே - அவரது முயற்சிகள், உத்திகளின் உண்மையான ஆதரவாளராக இருந்தவன் பாரதி. காந்தியைக் காணாமலே

வியாழன், 18 டிசம்பர், 2025

அறியாத பாரதி - 2: செல்லம்மா, கண்ணம்மாவானது!

 


அறியாத பாரதி - 2: 

செல்லம்மா, கண்ணம்மாவானது! 


இராஜ முத்திருளாண்டி  11 டிசம்பர் 2025,


 “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்” எனப் புரட்சிக்கவிஞர் போற்றிய, எட்டையபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, இந்த பூமிப் பரப்பில், 39 ஆண்டுகளே (11-12-1882 – 11-9-1921) உயிர் வாழ்ந்த கவிச்சூரியன். தன்மீது விடாது படர்ந்து அப்பிக்கொண்டு அகலாது அடர்ந்துகிடந்த  வறுமையினூடே, “நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’’ என வாட்டும் வறுமையிலும் வதங்காதுகம்பீர முழக்கமிட்ட, கவிராஜன். “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும்” எனச் செம்மாந்த கடமைப்பொறுப்பறுதி தலையேற்றுக்கொண்ட அவனது படைப்புக்காலம் (1904 முதல் 1921 வரை) பதினேழு ஆண்டுகள் மட்டுமே. இந்த மிகக்குறுகியகாலத்திற்குள் “சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; சொற்புதிது; சோதிமிக்க நவகவிதை; எந்நாளும் அழியாத மாக்கவிதை’’ என இமையப் பெருமிதங்காட்டித் தமிழ்இலக்கியப் பொன்விடியலானவன், அவன். தமிழின் துறைகள்தோறும்பல்லோர் ஏத்தும் ‘படைப்புப் பலபடைத்து’ கலங்கரை விளக்காய் நின்றொளிர்ந்தவன். குறளாய்க் குறுகிய வாழ்ந்தகால, படைப்புக்கால ஆண்டுகள் பலகடந்து இன்று வரை புகழ்ப் பெருவாழ்வில் நிலைத்திருக்கும்‘ மகா கவிஞன் பாரதி.

‘தேசிய கவி’, ‘பாட்டுக்கொரு புலவன்’, ‘ புதுமைக் கவிஞன்’ என்றெல்லாம் அவனுக்குப் பலபடப் பட்டமளித்து நின்றுகொண்டோமேயன்றி - அந்தக் மா கவிஞனைப்பற்றி இன்றுவரை முழுமையாக ஆராய்ந்து அறிந்துளோமா நாம்?

எந்தவொரு வரலாற்று நூலுக்கும் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு, நாள், இடம்; நிகழ்வுகளில் உடனிருந்தோர் விவரங்கள்; அவற்றுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை அளிக்காத - ஒரு கதைபோல, பாரதியார் வாழ்க்கையை, அதுவும் ‘முடிந்த கதையல்ல’ என அறிவித்து - வ.ரா வழங்கியது‘ பாரதி வரலாறு(1944). தொடர்புகளற்றுத் துண்டு துண்டான குறிப்புகளுடன், நெல்லை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் (1933), ஆக்கூர் அனந்தாச்சாரி (1936) ஆகியோரது படைப்புகள் நின்றன. ‘சுதேச கீதம்’ (1922) நூலின் ஒருபகுதியாக பாரதியின் பள்ளித் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்; எழுதிய ‘சரித்திரச் சுருக்கம்’, அதேநூலின் மற்றொரு பகுதியாக சர்க்கரைச் செட்டியார் எழுதிய ‘சுப்பிரமணிய பாரதியின் அரசியல் வாழ்க்கை‘  ஆங்கிலக்கட்டுரை; தனது ‘பாரதி தமிழ்’ நூலின் ஒரு கட்டுரையாக - (பாரதியார் வாழ்க்கை வரலாறு) பெ.தூரன் (1983) என்பவற்றுடன், சிதறிய சில்லறை நினைவுக் குறிப்புகளாக யதுகிரி அம்மாள் (2002) ஆகியோர் பாரதி வாழ்வின் சில செய்திகளை வழங்கினர்.

இவற்றுடன், வெவ்வேறு காலங்களில், தமக்குள் செய்திகள் அளிப்பதில் மாறுபாடுகள் உள்ளதே என்பதுணராது, பிறர் எழுதத் தாம் சொல்லும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தங்களுக்கு நினைவிற்கு வந்த - துணுக்குகள் போன்ற செய்திகளோடு - பாரதியின் மனைவி செல்லம்மாள், (பாரதியார் சரித்திரம்) மகள்கள் தங்கம்மா (பாரதியும் கவிதையும், 1947, அமரன் கதை), சகுந்தலா (என் தந்தை பாரதி) ஆகியோர், சிறு சிறு ஒளிக்கீற்றுகளாகப் பாரதிச் சூரியனின் வரலாறு குறித்த வண்ணங்களை வழங்க முற்பட்டனர்.

இந்நூல்களில் எதுவும், எல்லாமும் சேர்ந்தும் பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை நமக்கு அறியத்தரும் வகையில் உள்ளனவா என்றால், ‘இல்லை’. ஆதார ஆவணங்களோடு – மகாகவி பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று இன்றுவரை உருவாகி வெளிவரவில்லை என்பதே மறுத்துச் சொல்ல முடியாத வேதனையும் உண்மையுமாகும். இதனைப் பல அறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், பாரதிநேயர்களும் இன்றுவரை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். தொடர்கிறது இக்குறை.

ஆகவே, இன்றுவரை அறியாத பாரதியே - நம்மால் இன்னும் முழுதாக அறியப்படாத பாரதியே - நமக்குப் பரிச்சயமாகி நிற்கிறான் என்பது முரண்தான். அவன் பிறந்து 143 ஆண்டுகளாகியும் அவலமாக நிலவுகிற நிதர்சனம் இதுதான்.

முதலில், எந்தப் புகழ்ப்பெயரால் எட்டையபுரத்துச் சுப்பிரமணியன் தன் இளமைக்காலந்தொட்டு உலகெலாம் அறியப்பட்டு வருகிறானோ அந்தப் புகழ்ப்பட்டம் - ‘பாரதி’ என்ற பட்டம் - எப்போது, யாரால், எவ்வகையில் வழங்கப்பட்டது என்பது குறித்து விவரங்கள் எவ்வகையிலும் முழுமையில்லாமல், ஆளாளுக்கு ஆதாரங்களேதுமின்றிச் சொல்லப்பட்டுள்ள செய்திகளாக உள்ளனவேதவிரத் தெளிவாக இன்றுவரை நிறுவப்படவில்லையே.

‘பாரதி’யை அறிந்துளோமா நாம்?

“பாரில் அதிசயம் பாரதி“ என வியந்தேத்திய  சுத்தானந்தபாரதி,“பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதியைவிடத் தகுதியானவர்கள் இருக்க முடியாது” என்று மதிப்பிட்டிருந்தாலும் - ‘படிப்பறிவு மிகக் குறைவாகப் பெற்றிருந்த ஓர் எளிய கிராமத்து பெண் ”– தன் ஏழு வயதில், பதினாலு வயதுப் பாரதிக்கு மனைவியாகி - 25 ஆண்டுகள் “அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” - வாழ்ந்த செல்லம்மாளுக்குப்பாரதி இறந்தபின்னரும்கூட, தன் கணவன் சுப்பிரமணியன் எப்போது பாரதியானான் என்ற விசயத்தில், “பால்யத்திலேயே  “பாரதிப் பட்டம்” எதிர்பாராமலேயே அவருக்குக் கிடைத்தது” என்பதற்குமேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை, பாவம். (பாரதியார் சரித்திரம்,1928)

பாரதியின் இளைய சகோதரர், பி.ஏ., எல்.டி., பட்டங்கள் பெற்று உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த  சி விஸ்வநாதன்‘ எழுதிய, ‘பாரதி அண்ட் வொர்க்ஸ்’ (1929) என்ற மெலிந்த ஆங்கிலநூலில், “ஒரு முறை 13 வயது பள்ளி சிறுவனாக அவர் இருந்த போது பாரதி ஓர் இள வயது அதிமேதை என்பதைக் கேள்விப்பட்ட தமிழ்ப் பண்டிதர் ஒருவர் அறைகூவல் ஒன்றை அவருக்கு விடுத்தார். சவால் இதுதான்: வாழை, கமுகு இரண்டையும் சிலேடையாக இணைத்து வர்ணிக்கும் செய்யுள் ஒன்றை பாரதி இயற்ற வேண்டும். பாரதிக்கோ இது மிக மிக எளிது! மின்வெட்டு போன்று திகைப்பூட்டும் வேகத்தில் பாரதி கவிதை அடிகளைப் பொழிந்தார். பண்டிதர் சிறுவனைக் கட்டித்தழுவி “பாரதி” எனும் பட்டம் உனக்கு நிச்சயமாக பொருந்துவது தான் என்று உணர்ச்சி மீதூர ஆர்த்துரைத்தார்’’ என்று எழுதிவிட்டுத் தொடர்கிறார்.

“இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர் அதில் “பாரதி” எனுமிப்பட்டத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு அவர்கள் வழங்கினர்” என்று மொட்டையாக,முழுமையான விவரங்கள் தராது எழுதிச்சென்றுள்ளார்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் பாரதியின் தம்பிவிஸ்வநாதன், செல்லம்மாளைப்போலக் கல்வியறிவு குறைந்தவரல்ல; பட்டம் பெற்ற ஆசிரியர்! தனது சொந்த மண்ணில், தன் சகோதரனுக்கு ஒரு சிறப்பான நிகழ்வில், வாழ்நாளெல்லாம் சிறப்பளித்து- வாழ்ந்த பின்னரும் விளங்கிக்கொண்டிருக்கும் - “பாரதி பட்டம்” எந்த ஆண்டு, எந்த நாளில், யார், யார் முன்னிலையில் நடந்தது என்பது பற்றிக் குறிப்பிட்டு எதுவும் விளக்கிச் சொல்லாமல், யாருக்கோ, எப்போதோ ஏதோ பூர்வகாலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததுபோல, பாரதியின் 13 வயதுக்குச் “சில ஆண்டுகளுக்கு முன்னர்” என்றும், பொத்தாம் பொதுவாக “அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும்” என்றும் பட்டும்படாமல், பாரதி பட்டம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டிருப்பது கலையா வேதனையல்லவா?.

விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ள இந்தப் பண்டிதர் நிகழ்ச்சியை மகாகவி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த, அவரது குடும்பத்துடன் தொடர்பிலிருந்த ‘சுப்ரமண்ய பாரதி சரிதம்’ (1936) எழுதிய ஆக்கூர் அனந்தாச்சாரியும் தனது நூலில் (1936) பதிவு செய்துள்ளார். அதில் அவர், அப்பண்டிதர் ‘பாரதியின் தமிழ்ப் பண்டிதர்’ என்றும், நிகழ்வு, பாரதி “ பள்ளிச் சிறுவனாயிருந்தபோது“ என்றும் குறிப்பிட்டு, பாரதி உடனே கவிசெய்து காட்டியதால் “மிகவும் சந்தோஷமடைந்து, உன்னைப் பாரதி என்று அழைக்காமல் என்னென்றழைப்பது! அதற்கு வேண்டிய சகல அம்சங்களும் உன்னிடம் சம்பூர்ணமாக இருக்கின்றன” என வாழ்த்தியதாக எழுதியுள்ளார்.

ஆனால், இதே ஆக்கூர் அனந்தாச்சாரியார் அந்நூலின் பிறிதொரு இடத்தில், பாரதி “ஏழு வயதில் கவிகளை வெகு விரைவாக யாதொரு கஷ்டமும் இன்றி இயற்றுவதைக் கண்டு தமிழ் வித்வான்கள் பெரிதும் ஆச்சரியமடைந்து ஆசி கூறினர். ஒன்பதாவது பிராயத்தில் தாமே கவி தொடுக்கவும் ஆரம்பித்தார். பெரிய புலவர் கூட்டம் இதைக் கண்டு பிரமித்தது. இவர் தமது 11 வது ஆண்டில், புலவர்கள் கூடிய பெரும் சபையினர் கொடுத்த அடிகளைக் கொண்டு கவிகளை அர்த்த புஷ்டியுள்ளனவாய் அழகுபெறப் பூர்த்தி செய்தார். படிப்பினால் மட்டும் ஒருவனுக்கு கவித்திறமை ஏற்படாது, பிறப்பிலேயே அது அமைந்திருக்க வேண்டும் என்று புலவர்கள் அறிந்து வழுவற்ற இவரது கவிகளைக் கண்டு பாரதியார் என்ற பட்டப் பெயரும் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்” என்று எழுதியுள்ளார். என்ன குழப்பம் இது ?


பாரதியின் தம்பி, பள்ளி ஆசிரியரான விஸ்வநாதனோ, அந்தத் தமிழ்ப்பண்டிதர் யாரென்பதைக்கூடக் குறிப்பிடக் காணோம். மேலும், அனந்தாச்சாரியும் தாம் குறிப்பிடும் “புலவர்கள் கூடிய பெருஞ்சபையினர்” (யார், யார், எங்கு, எந்த நாளில் நிகழ்ந்தது?என்பன குறித்த எவ்விவரங்களும் தரவில்லையே. ‘பாரதி’யை அறிய உதவவில்லையே.

தொடர்ந்து பல்லாண்டுகளாக அரிதின் முயன்று,  ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பெருந்தொகுப்பைத் தமிழுலகிற்குக் கொடையளித்திருக்கும், மூத்த பாரதி ஆய்வாளர், சீனி.விசுவநாதன், பாரதிக்கு அப்பட்டம் கிடைத்தது பற்றி மாறுபட்ட புதுச்செய்தி தருகிறார். “1893ஆம் ஆண்டு சிறுவன் சுப்பிரமணியன் பதினோராவது வயதில் காலடி எடுத்து வைத்தான். அது போது குருகுஹதாஸப்பிள்ளை அவர்களால், சிவஞானயோகியாருக்குச் சுப்ரமணியன் அறிமுகப்படுத்தப்பட்டார். சின்னஞ்சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கைவரப்பெற்ற சுப்பிரமணியனின் திறமையை கண்டு யோகியார் மகிழ்ந்தார். சிறுவன் சுப்பிரமணியனின் கவிப்பெருக்கைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டி சிவஞான யோகியார் சுவாமிகள் சிறுவனின் நாவில் கலைமகள் நடம் புரிவதைக் குறிப்பிட வேண்டி பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். யோகியார் சுவாமிகள் அளித்த பட்டமே சுப்பிரமணியன் பெயருக்கு அன்று முதல் மகுடமாக நிலைத்து விட்டது. அற்றை நாள் தொட்டுச் சுப்பிரமணியனை பாரதி என்றே பலரும் அழைக்கலாயினர்.” [கால வரிசையில் பாரதி படைப்புகள், (மகாகவி பாரதி வரலாறு), தொகுதி -1, மூன்றாம் பதிப்பு 2019, பக்.70].

சுப்பிரமணியனாக இருந்த சிறுவனுக்கு இளமையிலேயே  பாரதி பட்டம் கிடைத்தது குறித்து அவனது குடும்பஉறவுகளோ, அவனோடும் அவன் குடும்பத்தாருடன் பழகியவர்களோ, வகுப்புத் தோழரோ, சமகாலத்தவர்களோ சொல்லாத புதுச்செய்தி தரும் பிற்காலத்துப்பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன், 1882இல் பிறந்த சுப்பிரமணியனுக்கு 1893ஆம் ஆண்டில் 11 வயது என்று சொல்லியிருப்பது தவிர, சிவஞானயோகியார், சுப்பிரமணியனுக்குப் “பாரதி பட்டம்” வழங்கியத்திற்கான ஆதாரமோ, ஆவணமோ, பாரதி கவிதைகளில் உட்குறிப்போ, வேறெங்காவாவது கிடைக்கப்பெற்ற குறிப்புகளோ, மேற்கோள்களோ எதுவுமே தனது கூற்றுக்குத் துணைநிற்க, வளப்படுத்த  உடனெடுத்துவந்து வழங்கவில்லையே!

சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்குச் சற்று குறைந்த கால அளவிற்குள்ளேவாழ்ந்த ஒரு மகாகவிஞனுக்கு, அவனது பெயர் மகுடமாக விளங்கும் பாரதிப் பட்டம் எப்படி, எக்காலத்தில், யாரால் வழங்கப்பட்டது என்ற அடிப்படையான விசயத்திலேயே இத்துனை மாறுபட்ட, ஆதாரங்களற்ற,குழப்பந்தரும் கூற்றுக்களா?

குழப்பம் தவிர்க்கும் மாற்றாகச் ‘சுப்பிரமணிய பாரதி’ என்பதே எட்டையபுரம் சின்னசாமி ஐயர் தன் மகனுக்கு இட்ட பெயர் என்று ஒருமனதாகச் சொல்லிவிட்டாலென்ன என எண்ணத் துணியச்செய்யும் விரக்தியுடன், பாரதியை முழுதாக  அறிந்துளோமா நாம் என்ற வினாவும் கூட்டணி சேர்கிறதே.

செல்லம்மா, கண்ணம்மாவானது!

பாரதி குறித்த நூல்களில் மிகப்பெரும்பான்மையானவை பாரதியின் மறைவுக்குப்பின் (1921), திடீரெனக் கிளம்பிய பாரதி ஆர்வத்தில் வெளிச்சம் காண விரைந்து வந்தவையே. பாரதி விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் ஒருவராகிய தொ.மு.சி. ரகுநாதன், “பாரதி வரலாற்று ஆசிரியர்களும் பாரதி பற்றிய நூலாசிரியர்களும் கட்டுரையாளர்களும் மற்றும் பிறரும் காணத் தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட, சொல்லப்போனால் பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திரிக்கப்பட்ட திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வு” குறித்து தான் நொந்து நிற்பதைக் காட்டுகிறார். (பாரதி காலமும் கருத்தும், 1982). அவரது கவலை அற்றைநாள் முதலே ‘பாரதி’ குறித்துத் தொடர்ந்து நிலவிவரும் நிலவரத்தின் பிரதிபலிப்பே.

இத்தகு கருஞ்சூழல் கலையாத நிலையில், அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக என்ற கேள்வியின் அர்த்தம் அடர்த்தியாகிறதல்லவா?. அறிந்துளோமா பாரதியை நாம்? என்று விகசிக்கும் வினாவுக்கான காரணிகளில், ‘பாரதி பட்டம்’ ஓர் ஆரம்பக்கூறுதான்.

பாரதி படைப்புகள் குறித்த சில உண்மைகளும் இவ்வாறு திரிக்கப்பட்டே நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ எனும் ஐயங்கள் விளைய வாய்பளிக்கும் ஒரு நாற்றங்காலாக – ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்றவகையில் - கவிதாபாரதியின் காதல்பாடல்களில் அவரது மனைவி செல்லம்மாவின் பெயர் ஏனோ நீக்கப்பட்டு, ‘கண்ணம்மா’ நுழைக்கப்பட்டு, நிலைத்துள்ளதே. அறிவோமா?

பாரதியின் மறைவுக்குப்பின் அவரது படைப்புகள் எழுத்துப் பிரதிகளாய் இருந்தபோதே செல்லம்மாளிடமிருந்து, அவரது மூத்த சகோதரர் அப்பாத்துரை ஐயர், பிறகு அவர் மூலம் பாரதியாரின் சகோதரர் சி. விஸ்வநாதன், பின்னர் அவரிடமிருந்து ‘தமிழறியார், தகுதியற்றார்’ எனப் பலர் கரங்களிற் சிக்கிச் சின்னாபின்னமான சோகமெல்லாம் சொல்லிமாளாது. (மேலதிகக் கவலைகளறியக் காண்க: கட்டுரையாளரின், முகப்பு, ‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’).

அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக இன்றுவரை? கிளர்ந்தெழும் இவ் வினாவிற்கான மற்றொரு காரணம் பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பல கைகள் மாறியதால் ஏற்பட்ட வினை.

ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டாகப் பாரதியின் இருமகள்களுமே (தங்கம்மாள், சகுந்தலா) கவலை தெரிவித்திருக்கும் விசயம் ஒன்றுள்ளது. அதற்கு ஆவணச் சான்று தற்போதுகிடைத்துள்ளது.

இருவருமே தங்கள் தாய்மாமன் (தங்கள் தாயாரின் மூத்த சகோதரர்) அப்பாத்துரை ஐயர், பாரதியின் செல்லம்மா பாடல்களில்– குறிப்பாக, ‘நின்னையே ரதியென்று...’எனத் தொடங்கும் பாடலில் – ‘செல்லம்மா’ எனப் பாரதி தன் கையால் எழுதியிருப்பதைத்தன்னிச்சையாக அடித்துவிட்டுக் ‘கண்ணம்மா’ என அடாவடித்திருத்தம் செய்து விட்டார்.இதன்மூலம் தங்கள் தாயார் பெயர், மகாகவியான தங்கள் தந்தையாரின் கவிதைகளில் சாசுவதம் பெறுவதை அறியாத, அற்ப காரணங்களுக்காகத் தடுத்து விட்டார். மேலும் தங்கள் தந்தை ( பாரதி), அவரது மனைவிமேல் கொண்டிருந்த மாளாக்காதலை மக்களறியாமற் செய்தும் விட்டார் என்று சோகம்பாடியுள்ளார்கள். (‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’ பக்.12-14).

பாரதி தன் மனைவி செல்லம்மாள்மீது மாறா வளரன்பு கொண்டிருந்தவர் என அவரது மகள்கள் - தங்கம்மாள் சகுந்தலா– ஆகியோர் கூறும் கூற்றுக்கு ஒரு ருசிகரமானபுறச் சான்று (External evidence) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்தும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாவேந்தரின் “பட்டினி நோன்பு” என்ற ஒரு கட்டுரையில், இவ்விசயம் பற்றிய செய்தியுள்ளது.

“எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உணவை சுவைத்துச் சாப்பிடவும், நாளடைவில் வெறுப்பை உண்டாக்காமல் இருக்கவும் வேண்டி, ஒரு நாள் பட்டினியாக இருக்கப் போவதாக” பாரதியார் தன் மனைவியிடம் கூறினாராம். அக்கட்டுரையில் பாவேந்தர் மேலும் கூறியிருப்பது: ‘‘உங்கள் உடம்பிற்கு பட்டினி ஒத்துக் கொள்ளும் என்று தோன்றினால் சரி’’ என்று செல்லமா, பதில் சொன்னாராம்.. உடனே பாரதி, “காந்தி பல நாள் பட்டினி இருக்கிறார். ஒரு நாளாவது செத்ததுண்டா, செல்லம்மா? நான் ஒரே ஒரு நாள் பட்டினி இருந்தால் செத்துப் போக மாட்டேன். இன்றைக்கு நான் பட்டினி இருந்தால் நாளைக்கு எனக்கு கீரைத்தண்டு குழம்பும் மேற்படி கீரை கடைசலும் அமிர்தம்” என்று பதில் தந்தாராம். அதற்கு, செல்லம்மா, “அப்படியானால் நானும் பட்டினி இருந்து விடுகிறேன். அதற்கு காரணம் இரண்டு. ஒருநாள் செலவு மிச்சம் ஒரு நாள் சமையல் வேலை மிச்சம்” என்று எதிர்பாராத வகையில் பதில் அளித்தாராம்.

உடனிருந்த பாவேந்தர் பாரதிதாசன் அந்தச் சமயத்தில் குறுக்கிட்டு“இவ்வளவு தொல்லை ஏன்? நாள்தோறும் உண்டாலும் வெறுப்பு தராத கறிவகையைக் கண்டுபிடித்து விட்டால்...” என்றாராம். அதற்குப் பாரதி, “நாள்தோறும் உண்டாலும் தெவிட்டாத கறிவகை கிடையவே ‘கிடையாது. உண்ண உண்ணத் தெவிட்டாதது, ஞானிகட்கு – பெரியோர்கட்கு – துறவிகட்கு – கடவுள் நினைவுதான் என்பார்கள். ஆனால், எனக்குத் தெவிட்டாத ஒருத்தி செல்லம்மாள் தான்” என்று பாரதியிடம் இருந்து பதில் வந்ததாம்.

அக்காட்சியை மேலும் விவரிக்கும் பாவேந்தர் சொல்கிறார்:“அம்மா (நாணத்துடன்) விரைந்து சென்று விட்டார்கள்”. பாரதி, மாடிப்படியேறிக்கொண்டிருந்த தன் காதல் மனைவியை நோக்கி, “செல்லம்மா பட்டினித்திருநாள் எப்படி?” என்று வினா வீசினாராம். “கொடி கட்டியாயிற்று” என்று அம்மா மாடிப்படியில் இருந்து பதில் கூறினார்கள்’’ என்று இந்த நயமான காட்சியை - பாரதி தன் மனைவிமேல் கொண்டிருந்த மாளாப்பிரியத்தை - நிகழ்வில் உடனிருந்த பாவேந்தரே ஆவணப்படுத்தியுள்ளார். [இந்தச் செய்தியை,  சீனி விசுவநாதன் தொகுத்தளித்துள்ள தமிழகம் தந்த மகாகவி என்ற நூலிலும் காணலாம். மேலும் “வறுமையிற் செம்மை பாரதி’ என்ற கட்டுரையில், (மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் 1982) மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சி என் கிருஷ்ணபாரதியும், குறிப்பிட்டுள்ளார்.]

தொ.மு.சி. ரகுநாதன் (1982) கவலை தெரிவித்துள்ளபடி - பாரதியின் உண்மையான மன நிலையை உலகறியவிடாமல் - பாரதியின் படைப்புகள் ‘திரிக்கப்பட்டு, திரையிட்டு மூடப்பட்டதாக’ கிடைத்திருக்கும் சூழலில் அறிந்துளோமா பாரதியை முழுதாக நாம், இன்றுவரை?

இதோ, பாரதியேயறியாமல் அவனது ‘செல்லம்மாபாட்டு’ திரிக்கப்பட்டுள்ளதற்கான ஓர் எடுத்துக்காட்டாக ஆவணச்சான்று. (நன்றி: தமிழ் இணைய நூலகம்).


                                               


கூர்ந்த பார்வையில், இந்த ஆவணத்தில், பாடலின் தலைப்பு, செல்லம்மா பாட்டு என்றிருக்கப் பாடலில் மட்டும் ‘செல்லம்மா’ எனவருகிற மூன்று இடங்களில் அப்பெயர் அடிக்கப்பட்டு வேறு வண்ணமையில், பாரதியின் கையெழுத்துக்கு மாறுபட்ட கையெழுத்தில்  ‘கண்ணம்மா’ என மாற்றப்பட்டுள்ளதைக் காணமுடியும்.

கவிஞனின் காதல் மனங்காட்டிக் காற்றெல்லாம், காலமெல்லாம் செல்லம்மா எனப் பெயர் பரவி இனிப்பதற்குப் பதிலாகக் கண்ணம்மா அன்றோ காதுகளில் நிறைந்துளாள் இன்று?எப்பேற்பட்ட மாற்றம் இது?

ஆக, காதல் கசிய ‘’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி செல்லம்மா” எனப் பாட்டெழுதிய பாரதியே அறியாத,

’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” எனப் பாட வைக்கப்பட்டுள்ள பாரதியே நமக்கு இன்றுவரை பரிச்சயம்.

என்ன கொடுமை இது?

இன்னுமுள மேலும், இதுபோல்.

எடுத்து நிறுத்தலாம் அணியணியாக வருங்காலத்தே.

இனியாவது அறிய முற்படுவோமா நன்றாக, முழுமையாக, அவனை, பாரதியை?.

[வேண்டுதல் இணைந்த பின்குறிப்பு இது: பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் (1982) அப்போதைய முதல்வர் மாண்புமிகு திரு எம். ஜி. ராமச்சந்திரன், மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் தயாரித்து வெளியிடும் பணியை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், பாரதியாரின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிடும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை, நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன் ஒரு முழுமையான வரலாற்று நூல் கொண்டு வரும் பணியைச் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் வழங்கினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் தமக்கிட்ட பாரதி நூற்றாண்டு விழாப் பணிகளை நிறைவு செய்து விட்டன.

ஆனால், சென்னை பல்கலைக்கழகம் மட்டும் பாரதியின் முழுமையான வரலாற்றை ஆய்வு செய்து தக்கதொரு நூலாக வெளிக்கொணரும் பணியைக் கடலிற் போட்டுவிட்டதுபோலும்.

1982க்குப் பிறகு யாருமே இதனை கண்டு கொண்டு இதுவரை உரிய தீர்வுக்கு வழிசெய்யவில்லையே. வழிவகை செய்ய தமிழ்நாடு அரசுக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் வேண்டுகோள். வரலாறு - பாரதி வரலாறு  - முக்கியம் அல்லவா? ]

 **

[டிச. 11 - பாரதியார் பிறந்த நாள்]

 [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

இதையும் படிக்க : அறியாத பாரதி!

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Dec/11/ariyaadha-bharathi-2-how-chellamma-became-kannamma

*