முன்னோட்டம்:
-------------
இப்படி ஒரு கவிதை எழுதியவனை....
( எழுதப்பட்ட நாள்: 2019, ஏப்.22)
" மதவெறுப்புணர்வைத் தூண்டுகிறான்"
என்ற குற்றச்சாட்டில்
19 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டுச் சொல்லொணாத்
துயரில் மிதக்க வைக்கப்பட்டான் என்பது ஆச்சரியப்படுத்துகிறாதா?
நடந்ததே... நமக்கருகே.
*
உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு
--
நீயும் இறந்து பிறரையும் இறக்கச்
செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?
நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த
உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?
நீயும் செத்து பிறரையும் சாகடித்த
உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?
உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற
உனக்கு திருமறை எதற்கு?
ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை
கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்
கொல்வதென்று திருமறை சொன்னதை
நீ கற்கவில்லையோ?
பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்
புத்தாண்டையும் பயந்து சாகாமல்
கொண்டாடி மகிழ்ந்தோம் - நீ வந்து
நிமிடத்தில் உருக்குலைத்தாயே!
இ.....த் தாய் மீண்டும் விம்மி
அழுகிறாள் - நீயோ நிலையான
சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை
மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு
நெருப்பிலேற்றிநாயே!
உனக்கு சாவதில்தான் சந்தோசம்
என்றால் எங்கேயாவது மூலையில்
விழுந்து செத்திருக்கலாமே
ஏன் எம்மை இனி தினம் தினம்
செத்துப் பிழைக்க வைத்தாயே!
தற்கொலையே தவறென்று
சொன்ன இஸ்லாத்தின் பெயரால்
நீ தற்கொலையும் செய்து கொலையும்
செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்
தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?
குருதி வெள்ளத்தில் துவண்டு
கிடக்கும் உடற் சிதிலங்களில்
நீ என்ன வெற்றி கண்டாய்?
மூத்தோரையும், சிறாரையும்
யுத்தமென்றாலும் வதைப்பது
தவறாகும் எனும் அண்ணல்
வாக்கை தூக்கி வீசினாயே!
பிறமதக் கடவுளரை தூற்றாதே
தூற்றினால் அவர்கள் உன்னிறைவனை
தூ}ற்றுவர் எனச்சொன்ன வேளை நீ
தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!
யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்
அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்
செய்தாய் - நீ நிச்சயம் அனுபவிப்பாய்
அன்று நான் உனக்கெதிராய் சாட்சியளிப்பேன்.
அன்னையும் மகளும்,
தாத்தாவும் பேரனும்
ஆள் அடையாளம்
தெரியாமல் செய்து - நீயும்
அடையாளம் இழந்து
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!
இனி தினம் இங்கு சாவே!
எம்மை சாகாமல் சாகடித்த
என் தோழர்களை சிதறடித்த
உமக்கு என் சாபங்கள்
கோடி கொடு நெருப்பாய்வரும்
ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே
உலகம் போற்றும் - புண்ணிய
விழாக் கோலம் பூணும் நாளில்
எனக்கதும் நம்பிக்கை இல்லை
ஆனால் அருமந்த உயிர்கள்
இருநூறுபேர் உயிர் நீத்த நாள்
என்று நான் நம்புவேன் - காரணம்
நம் இனத்தின் சில நரிகள்
இழைத்த இழி செயலால்
உயிர் நீத்த உறவுகளுக்கு
என் கண்ணீர் திவலைகள்.
*
No comments:
Post a Comment