வியாழன், 18 டிசம்பர், 2025

அறியாத பாரதி - 2: செல்லம்மா, கண்ணம்மாவானது!

 


அறியாத பாரதி - 2: 

செல்லம்மா, கண்ணம்மாவானது! 


இராஜ முத்திருளாண்டி  11 டிசம்பர் 2025,


 “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன்” எனப் புரட்சிக்கவிஞர் போற்றிய, எட்டையபுரத்துச் சுப்பிரமணிய பாரதி, இந்த பூமிப் பரப்பில், 39 ஆண்டுகளே (11-12-1882 – 11-9-1921) உயிர் வாழ்ந்த கவிச்சூரியன். தன்மீது விடாது படர்ந்து அப்பிக்கொண்டு அகலாது அடர்ந்துகிடந்த  வறுமையினூடே, “நமக்குத்தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’’ என வாட்டும் வறுமையிலும் வதங்காதுகம்பீர முழக்கமிட்ட, கவிராஜன். “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும்” எனச் செம்மாந்த கடமைப்பொறுப்பறுதி தலையேற்றுக்கொண்ட அவனது படைப்புக்காலம் (1904 முதல் 1921 வரை) பதினேழு ஆண்டுகள் மட்டுமே. இந்த மிகக்குறுகியகாலத்திற்குள் “சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; சொற்புதிது; சோதிமிக்க நவகவிதை; எந்நாளும் அழியாத மாக்கவிதை’’ என இமையப் பெருமிதங்காட்டித் தமிழ்இலக்கியப் பொன்விடியலானவன், அவன். தமிழின் துறைகள்தோறும்பல்லோர் ஏத்தும் ‘படைப்புப் பலபடைத்து’ கலங்கரை விளக்காய் நின்றொளிர்ந்தவன். குறளாய்க் குறுகிய வாழ்ந்தகால, படைப்புக்கால ஆண்டுகள் பலகடந்து இன்று வரை புகழ்ப் பெருவாழ்வில் நிலைத்திருக்கும்‘ மகா கவிஞன் பாரதி.

‘தேசிய கவி’, ‘பாட்டுக்கொரு புலவன்’, ‘ புதுமைக் கவிஞன்’ என்றெல்லாம் அவனுக்குப் பலபடப் பட்டமளித்து நின்றுகொண்டோமேயன்றி - அந்தக் மா கவிஞனைப்பற்றி இன்றுவரை முழுமையாக ஆராய்ந்து அறிந்துளோமா நாம்?

எந்தவொரு வரலாற்று நூலுக்கும் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு, நாள், இடம்; நிகழ்வுகளில் உடனிருந்தோர் விவரங்கள்; அவற்றுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை அளிக்காத - ஒரு கதைபோல, பாரதியார் வாழ்க்கையை, அதுவும் ‘முடிந்த கதையல்ல’ என அறிவித்து - வ.ரா வழங்கியது‘ பாரதி வரலாறு(1944). தொடர்புகளற்றுத் துண்டு துண்டான குறிப்புகளுடன், நெல்லை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் (1933), ஆக்கூர் அனந்தாச்சாரி (1936) ஆகியோரது படைப்புகள் நின்றன. ‘சுதேச கீதம்’ (1922) நூலின் ஒருபகுதியாக பாரதியின் பள்ளித் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்; எழுதிய ‘சரித்திரச் சுருக்கம்’, அதேநூலின் மற்றொரு பகுதியாக சர்க்கரைச் செட்டியார் எழுதிய ‘சுப்பிரமணிய பாரதியின் அரசியல் வாழ்க்கை‘  ஆங்கிலக்கட்டுரை; தனது ‘பாரதி தமிழ்’ நூலின் ஒரு கட்டுரையாக - (பாரதியார் வாழ்க்கை வரலாறு) பெ.தூரன் (1983) என்பவற்றுடன், சிதறிய சில்லறை நினைவுக் குறிப்புகளாக யதுகிரி அம்மாள் (2002) ஆகியோர் பாரதி வாழ்வின் சில செய்திகளை வழங்கினர்.

இவற்றுடன், வெவ்வேறு காலங்களில், தமக்குள் செய்திகள் அளிப்பதில் மாறுபாடுகள் உள்ளதே என்பதுணராது, பிறர் எழுதத் தாம் சொல்லும்போது, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தங்களுக்கு நினைவிற்கு வந்த - துணுக்குகள் போன்ற செய்திகளோடு - பாரதியின் மனைவி செல்லம்மாள், (பாரதியார் சரித்திரம்) மகள்கள் தங்கம்மா (பாரதியும் கவிதையும், 1947, அமரன் கதை), சகுந்தலா (என் தந்தை பாரதி) ஆகியோர், சிறு சிறு ஒளிக்கீற்றுகளாகப் பாரதிச் சூரியனின் வரலாறு குறித்த வண்ணங்களை வழங்க முற்பட்டனர்.

இந்நூல்களில் எதுவும், எல்லாமும் சேர்ந்தும் பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை நமக்கு அறியத்தரும் வகையில் உள்ளனவா என்றால், ‘இல்லை’. ஆதார ஆவணங்களோடு – மகாகவி பாரதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று இன்றுவரை உருவாகி வெளிவரவில்லை என்பதே மறுத்துச் சொல்ல முடியாத வேதனையும் உண்மையுமாகும். இதனைப் பல அறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும், பாரதிநேயர்களும் இன்றுவரை வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். தொடர்கிறது இக்குறை.

ஆகவே, இன்றுவரை அறியாத பாரதியே - நம்மால் இன்னும் முழுதாக அறியப்படாத பாரதியே - நமக்குப் பரிச்சயமாகி நிற்கிறான் என்பது முரண்தான். அவன் பிறந்து 143 ஆண்டுகளாகியும் அவலமாக நிலவுகிற நிதர்சனம் இதுதான்.

முதலில், எந்தப் புகழ்ப்பெயரால் எட்டையபுரத்துச் சுப்பிரமணியன் தன் இளமைக்காலந்தொட்டு உலகெலாம் அறியப்பட்டு வருகிறானோ அந்தப் புகழ்ப்பட்டம் - ‘பாரதி’ என்ற பட்டம் - எப்போது, யாரால், எவ்வகையில் வழங்கப்பட்டது என்பது குறித்து விவரங்கள் எவ்வகையிலும் முழுமையில்லாமல், ஆளாளுக்கு ஆதாரங்களேதுமின்றிச் சொல்லப்பட்டுள்ள செய்திகளாக உள்ளனவேதவிரத் தெளிவாக இன்றுவரை நிறுவப்படவில்லையே.

‘பாரதி’யை அறிந்துளோமா நாம்?

“பாரில் அதிசயம் பாரதி“ என வியந்தேத்திய  சுத்தானந்தபாரதி,“பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதியைவிடத் தகுதியானவர்கள் இருக்க முடியாது” என்று மதிப்பிட்டிருந்தாலும் - ‘படிப்பறிவு மிகக் குறைவாகப் பெற்றிருந்த ஓர் எளிய கிராமத்து பெண் ”– தன் ஏழு வயதில், பதினாலு வயதுப் பாரதிக்கு மனைவியாகி - 25 ஆண்டுகள் “அவன் காரியம் யாவினும் கைகொடுத்து” - வாழ்ந்த செல்லம்மாளுக்குப்பாரதி இறந்தபின்னரும்கூட, தன் கணவன் சுப்பிரமணியன் எப்போது பாரதியானான் என்ற விசயத்தில், “பால்யத்திலேயே  “பாரதிப் பட்டம்” எதிர்பாராமலேயே அவருக்குக் கிடைத்தது” என்பதற்குமேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை, பாவம். (பாரதியார் சரித்திரம்,1928)

பாரதியின் இளைய சகோதரர், பி.ஏ., எல்.டி., பட்டங்கள் பெற்று உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த  சி விஸ்வநாதன்‘ எழுதிய, ‘பாரதி அண்ட் வொர்க்ஸ்’ (1929) என்ற மெலிந்த ஆங்கிலநூலில், “ஒரு முறை 13 வயது பள்ளி சிறுவனாக அவர் இருந்த போது பாரதி ஓர் இள வயது அதிமேதை என்பதைக் கேள்விப்பட்ட தமிழ்ப் பண்டிதர் ஒருவர் அறைகூவல் ஒன்றை அவருக்கு விடுத்தார். சவால் இதுதான்: வாழை, கமுகு இரண்டையும் சிலேடையாக இணைத்து வர்ணிக்கும் செய்யுள் ஒன்றை பாரதி இயற்ற வேண்டும். பாரதிக்கோ இது மிக மிக எளிது! மின்வெட்டு போன்று திகைப்பூட்டும் வேகத்தில் பாரதி கவிதை அடிகளைப் பொழிந்தார். பண்டிதர் சிறுவனைக் கட்டித்தழுவி “பாரதி” எனும் பட்டம் உனக்கு நிச்சயமாக பொருந்துவது தான் என்று உணர்ச்சி மீதூர ஆர்த்துரைத்தார்’’ என்று எழுதிவிட்டுத் தொடர்கிறார்.

“இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர் அதில் “பாரதி” எனுமிப்பட்டத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு அவர்கள் வழங்கினர்” என்று மொட்டையாக,முழுமையான விவரங்கள் தராது எழுதிச்சென்றுள்ளார்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் பாரதியின் தம்பிவிஸ்வநாதன், செல்லம்மாளைப்போலக் கல்வியறிவு குறைந்தவரல்ல; பட்டம் பெற்ற ஆசிரியர்! தனது சொந்த மண்ணில், தன் சகோதரனுக்கு ஒரு சிறப்பான நிகழ்வில், வாழ்நாளெல்லாம் சிறப்பளித்து- வாழ்ந்த பின்னரும் விளங்கிக்கொண்டிருக்கும் - “பாரதி பட்டம்” எந்த ஆண்டு, எந்த நாளில், யார், யார் முன்னிலையில் நடந்தது என்பது பற்றிக் குறிப்பிட்டு எதுவும் விளக்கிச் சொல்லாமல், யாருக்கோ, எப்போதோ ஏதோ பூர்வகாலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததுபோல, பாரதியின் 13 வயதுக்குச் “சில ஆண்டுகளுக்கு முன்னர்” என்றும், பொத்தாம் பொதுவாக “அவரைப் போற்றியவர்களும் ஊர்வாசிகள் சிலரும்” என்றும் பட்டும்படாமல், பாரதி பட்டம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்டிருப்பது கலையா வேதனையல்லவா?.

விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ள இந்தப் பண்டிதர் நிகழ்ச்சியை மகாகவி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த, அவரது குடும்பத்துடன் தொடர்பிலிருந்த ‘சுப்ரமண்ய பாரதி சரிதம்’ (1936) எழுதிய ஆக்கூர் அனந்தாச்சாரியும் தனது நூலில் (1936) பதிவு செய்துள்ளார். அதில் அவர், அப்பண்டிதர் ‘பாரதியின் தமிழ்ப் பண்டிதர்’ என்றும், நிகழ்வு, பாரதி “ பள்ளிச் சிறுவனாயிருந்தபோது“ என்றும் குறிப்பிட்டு, பாரதி உடனே கவிசெய்து காட்டியதால் “மிகவும் சந்தோஷமடைந்து, உன்னைப் பாரதி என்று அழைக்காமல் என்னென்றழைப்பது! அதற்கு வேண்டிய சகல அம்சங்களும் உன்னிடம் சம்பூர்ணமாக இருக்கின்றன” என வாழ்த்தியதாக எழுதியுள்ளார்.

ஆனால், இதே ஆக்கூர் அனந்தாச்சாரியார் அந்நூலின் பிறிதொரு இடத்தில், பாரதி “ஏழு வயதில் கவிகளை வெகு விரைவாக யாதொரு கஷ்டமும் இன்றி இயற்றுவதைக் கண்டு தமிழ் வித்வான்கள் பெரிதும் ஆச்சரியமடைந்து ஆசி கூறினர். ஒன்பதாவது பிராயத்தில் தாமே கவி தொடுக்கவும் ஆரம்பித்தார். பெரிய புலவர் கூட்டம் இதைக் கண்டு பிரமித்தது. இவர் தமது 11 வது ஆண்டில், புலவர்கள் கூடிய பெரும் சபையினர் கொடுத்த அடிகளைக் கொண்டு கவிகளை அர்த்த புஷ்டியுள்ளனவாய் அழகுபெறப் பூர்த்தி செய்தார். படிப்பினால் மட்டும் ஒருவனுக்கு கவித்திறமை ஏற்படாது, பிறப்பிலேயே அது அமைந்திருக்க வேண்டும் என்று புலவர்கள் அறிந்து வழுவற்ற இவரது கவிகளைக் கண்டு பாரதியார் என்ற பட்டப் பெயரும் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்” என்று எழுதியுள்ளார். என்ன குழப்பம் இது ?


பாரதியின் தம்பி, பள்ளி ஆசிரியரான விஸ்வநாதனோ, அந்தத் தமிழ்ப்பண்டிதர் யாரென்பதைக்கூடக் குறிப்பிடக் காணோம். மேலும், அனந்தாச்சாரியும் தாம் குறிப்பிடும் “புலவர்கள் கூடிய பெருஞ்சபையினர்” (யார், யார், எங்கு, எந்த நாளில் நிகழ்ந்தது?என்பன குறித்த எவ்விவரங்களும் தரவில்லையே. ‘பாரதி’யை அறிய உதவவில்லையே.

தொடர்ந்து பல்லாண்டுகளாக அரிதின் முயன்று,  ‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என்ற பெருந்தொகுப்பைத் தமிழுலகிற்குக் கொடையளித்திருக்கும், மூத்த பாரதி ஆய்வாளர், சீனி.விசுவநாதன், பாரதிக்கு அப்பட்டம் கிடைத்தது பற்றி மாறுபட்ட புதுச்செய்தி தருகிறார். “1893ஆம் ஆண்டு சிறுவன் சுப்பிரமணியன் பதினோராவது வயதில் காலடி எடுத்து வைத்தான். அது போது குருகுஹதாஸப்பிள்ளை அவர்களால், சிவஞானயோகியாருக்குச் சுப்ரமணியன் அறிமுகப்படுத்தப்பட்டார். சின்னஞ்சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கைவரப்பெற்ற சுப்பிரமணியனின் திறமையை கண்டு யோகியார் மகிழ்ந்தார். சிறுவன் சுப்பிரமணியனின் கவிப்பெருக்கைப் பெரிதும் மகிழ்ந்து பாராட்டி சிவஞான யோகியார் சுவாமிகள் சிறுவனின் நாவில் கலைமகள் நடம் புரிவதைக் குறிப்பிட வேண்டி பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். யோகியார் சுவாமிகள் அளித்த பட்டமே சுப்பிரமணியன் பெயருக்கு அன்று முதல் மகுடமாக நிலைத்து விட்டது. அற்றை நாள் தொட்டுச் சுப்பிரமணியனை பாரதி என்றே பலரும் அழைக்கலாயினர்.” [கால வரிசையில் பாரதி படைப்புகள், (மகாகவி பாரதி வரலாறு), தொகுதி -1, மூன்றாம் பதிப்பு 2019, பக்.70].

சுப்பிரமணியனாக இருந்த சிறுவனுக்கு இளமையிலேயே  பாரதி பட்டம் கிடைத்தது குறித்து அவனது குடும்பஉறவுகளோ, அவனோடும் அவன் குடும்பத்தாருடன் பழகியவர்களோ, வகுப்புத் தோழரோ, சமகாலத்தவர்களோ சொல்லாத புதுச்செய்தி தரும் பிற்காலத்துப்பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன், 1882இல் பிறந்த சுப்பிரமணியனுக்கு 1893ஆம் ஆண்டில் 11 வயது என்று சொல்லியிருப்பது தவிர, சிவஞானயோகியார், சுப்பிரமணியனுக்குப் “பாரதி பட்டம்” வழங்கியத்திற்கான ஆதாரமோ, ஆவணமோ, பாரதி கவிதைகளில் உட்குறிப்போ, வேறெங்காவாவது கிடைக்கப்பெற்ற குறிப்புகளோ, மேற்கோள்களோ எதுவுமே தனது கூற்றுக்குத் துணைநிற்க, வளப்படுத்த  உடனெடுத்துவந்து வழங்கவில்லையே!

சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்குச் சற்று குறைந்த கால அளவிற்குள்ளேவாழ்ந்த ஒரு மகாகவிஞனுக்கு, அவனது பெயர் மகுடமாக விளங்கும் பாரதிப் பட்டம் எப்படி, எக்காலத்தில், யாரால் வழங்கப்பட்டது என்ற அடிப்படையான விசயத்திலேயே இத்துனை மாறுபட்ட, ஆதாரங்களற்ற,குழப்பந்தரும் கூற்றுக்களா?

குழப்பம் தவிர்க்கும் மாற்றாகச் ‘சுப்பிரமணிய பாரதி’ என்பதே எட்டையபுரம் சின்னசாமி ஐயர் தன் மகனுக்கு இட்ட பெயர் என்று ஒருமனதாகச் சொல்லிவிட்டாலென்ன என எண்ணத் துணியச்செய்யும் விரக்தியுடன், பாரதியை முழுதாக  அறிந்துளோமா நாம் என்ற வினாவும் கூட்டணி சேர்கிறதே.

செல்லம்மா, கண்ணம்மாவானது!

பாரதி குறித்த நூல்களில் மிகப்பெரும்பான்மையானவை பாரதியின் மறைவுக்குப்பின் (1921), திடீரெனக் கிளம்பிய பாரதி ஆர்வத்தில் வெளிச்சம் காண விரைந்து வந்தவையே. பாரதி விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் ஒருவராகிய தொ.மு.சி. ரகுநாதன், “பாரதி வரலாற்று ஆசிரியர்களும் பாரதி பற்றிய நூலாசிரியர்களும் கட்டுரையாளர்களும் மற்றும் பிறரும் காணத் தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட, சொல்லப்போனால் பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திரிக்கப்பட்ட திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வு” குறித்து தான் நொந்து நிற்பதைக் காட்டுகிறார். (பாரதி காலமும் கருத்தும், 1982). அவரது கவலை அற்றைநாள் முதலே ‘பாரதி’ குறித்துத் தொடர்ந்து நிலவிவரும் நிலவரத்தின் பிரதிபலிப்பே.

இத்தகு கருஞ்சூழல் கலையாத நிலையில், அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக என்ற கேள்வியின் அர்த்தம் அடர்த்தியாகிறதல்லவா?. அறிந்துளோமா பாரதியை நாம்? என்று விகசிக்கும் வினாவுக்கான காரணிகளில், ‘பாரதி பட்டம்’ ஓர் ஆரம்பக்கூறுதான்.

பாரதி படைப்புகள் குறித்த சில உண்மைகளும் இவ்வாறு திரிக்கப்பட்டே நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ எனும் ஐயங்கள் விளைய வாய்பளிக்கும் ஒரு நாற்றங்காலாக – ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்றவகையில் - கவிதாபாரதியின் காதல்பாடல்களில் அவரது மனைவி செல்லம்மாவின் பெயர் ஏனோ நீக்கப்பட்டு, ‘கண்ணம்மா’ நுழைக்கப்பட்டு, நிலைத்துள்ளதே. அறிவோமா?

பாரதியின் மறைவுக்குப்பின் அவரது படைப்புகள் எழுத்துப் பிரதிகளாய் இருந்தபோதே செல்லம்மாளிடமிருந்து, அவரது மூத்த சகோதரர் அப்பாத்துரை ஐயர், பிறகு அவர் மூலம் பாரதியாரின் சகோதரர் சி. விஸ்வநாதன், பின்னர் அவரிடமிருந்து ‘தமிழறியார், தகுதியற்றார்’ எனப் பலர் கரங்களிற் சிக்கிச் சின்னாபின்னமான சோகமெல்லாம் சொல்லிமாளாது. (மேலதிகக் கவலைகளறியக் காண்க: கட்டுரையாளரின், முகப்பு, ‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’).

அறிந்துளோமா பாரதியை நாம் முழுதாக இன்றுவரை? கிளர்ந்தெழும் இவ் வினாவிற்கான மற்றொரு காரணம் பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பல கைகள் மாறியதால் ஏற்பட்ட வினை.

ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டாகப் பாரதியின் இருமகள்களுமே (தங்கம்மாள், சகுந்தலா) கவலை தெரிவித்திருக்கும் விசயம் ஒன்றுள்ளது. அதற்கு ஆவணச் சான்று தற்போதுகிடைத்துள்ளது.

இருவருமே தங்கள் தாய்மாமன் (தங்கள் தாயாரின் மூத்த சகோதரர்) அப்பாத்துரை ஐயர், பாரதியின் செல்லம்மா பாடல்களில்– குறிப்பாக, ‘நின்னையே ரதியென்று...’எனத் தொடங்கும் பாடலில் – ‘செல்லம்மா’ எனப் பாரதி தன் கையால் எழுதியிருப்பதைத்தன்னிச்சையாக அடித்துவிட்டுக் ‘கண்ணம்மா’ என அடாவடித்திருத்தம் செய்து விட்டார்.இதன்மூலம் தங்கள் தாயார் பெயர், மகாகவியான தங்கள் தந்தையாரின் கவிதைகளில் சாசுவதம் பெறுவதை அறியாத, அற்ப காரணங்களுக்காகத் தடுத்து விட்டார். மேலும் தங்கள் தந்தை ( பாரதி), அவரது மனைவிமேல் கொண்டிருந்த மாளாக்காதலை மக்களறியாமற் செய்தும் விட்டார் என்று சோகம்பாடியுள்ளார்கள். (‘பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்’, 2021’ பக்.12-14).

பாரதி தன் மனைவி செல்லம்மாள்மீது மாறா வளரன்பு கொண்டிருந்தவர் என அவரது மகள்கள் - தங்கம்மாள் சகுந்தலா– ஆகியோர் கூறும் கூற்றுக்கு ஒரு ருசிகரமானபுறச் சான்று (External evidence) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் இருந்தும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாவேந்தரின் “பட்டினி நோன்பு” என்ற ஒரு கட்டுரையில், இவ்விசயம் பற்றிய செய்தியுள்ளது.

“எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உணவை சுவைத்துச் சாப்பிடவும், நாளடைவில் வெறுப்பை உண்டாக்காமல் இருக்கவும் வேண்டி, ஒரு நாள் பட்டினியாக இருக்கப் போவதாக” பாரதியார் தன் மனைவியிடம் கூறினாராம். அக்கட்டுரையில் பாவேந்தர் மேலும் கூறியிருப்பது: ‘‘உங்கள் உடம்பிற்கு பட்டினி ஒத்துக் கொள்ளும் என்று தோன்றினால் சரி’’ என்று செல்லமா, பதில் சொன்னாராம்.. உடனே பாரதி, “காந்தி பல நாள் பட்டினி இருக்கிறார். ஒரு நாளாவது செத்ததுண்டா, செல்லம்மா? நான் ஒரே ஒரு நாள் பட்டினி இருந்தால் செத்துப் போக மாட்டேன். இன்றைக்கு நான் பட்டினி இருந்தால் நாளைக்கு எனக்கு கீரைத்தண்டு குழம்பும் மேற்படி கீரை கடைசலும் அமிர்தம்” என்று பதில் தந்தாராம். அதற்கு, செல்லம்மா, “அப்படியானால் நானும் பட்டினி இருந்து விடுகிறேன். அதற்கு காரணம் இரண்டு. ஒருநாள் செலவு மிச்சம் ஒரு நாள் சமையல் வேலை மிச்சம்” என்று எதிர்பாராத வகையில் பதில் அளித்தாராம்.

உடனிருந்த பாவேந்தர் பாரதிதாசன் அந்தச் சமயத்தில் குறுக்கிட்டு“இவ்வளவு தொல்லை ஏன்? நாள்தோறும் உண்டாலும் வெறுப்பு தராத கறிவகையைக் கண்டுபிடித்து விட்டால்...” என்றாராம். அதற்குப் பாரதி, “நாள்தோறும் உண்டாலும் தெவிட்டாத கறிவகை கிடையவே ‘கிடையாது. உண்ண உண்ணத் தெவிட்டாதது, ஞானிகட்கு – பெரியோர்கட்கு – துறவிகட்கு – கடவுள் நினைவுதான் என்பார்கள். ஆனால், எனக்குத் தெவிட்டாத ஒருத்தி செல்லம்மாள் தான்” என்று பாரதியிடம் இருந்து பதில் வந்ததாம்.

அக்காட்சியை மேலும் விவரிக்கும் பாவேந்தர் சொல்கிறார்:“அம்மா (நாணத்துடன்) விரைந்து சென்று விட்டார்கள்”. பாரதி, மாடிப்படியேறிக்கொண்டிருந்த தன் காதல் மனைவியை நோக்கி, “செல்லம்மா பட்டினித்திருநாள் எப்படி?” என்று வினா வீசினாராம். “கொடி கட்டியாயிற்று” என்று அம்மா மாடிப்படியில் இருந்து பதில் கூறினார்கள்’’ என்று இந்த நயமான காட்சியை - பாரதி தன் மனைவிமேல் கொண்டிருந்த மாளாப்பிரியத்தை - நிகழ்வில் உடனிருந்த பாவேந்தரே ஆவணப்படுத்தியுள்ளார். [இந்தச் செய்தியை,  சீனி விசுவநாதன் தொகுத்தளித்துள்ள தமிழகம் தந்த மகாகவி என்ற நூலிலும் காணலாம். மேலும் “வறுமையிற் செம்மை பாரதி’ என்ற கட்டுரையில், (மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் 1982) மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சி என் கிருஷ்ணபாரதியும், குறிப்பிட்டுள்ளார்.]

தொ.மு.சி. ரகுநாதன் (1982) கவலை தெரிவித்துள்ளபடி - பாரதியின் உண்மையான மன நிலையை உலகறியவிடாமல் - பாரதியின் படைப்புகள் ‘திரிக்கப்பட்டு, திரையிட்டு மூடப்பட்டதாக’ கிடைத்திருக்கும் சூழலில் அறிந்துளோமா பாரதியை முழுதாக நாம், இன்றுவரை?

இதோ, பாரதியேயறியாமல் அவனது ‘செல்லம்மாபாட்டு’ திரிக்கப்பட்டுள்ளதற்கான ஓர் எடுத்துக்காட்டாக ஆவணச்சான்று. (நன்றி: தமிழ் இணைய நூலகம்).


                                               


கூர்ந்த பார்வையில், இந்த ஆவணத்தில், பாடலின் தலைப்பு, செல்லம்மா பாட்டு என்றிருக்கப் பாடலில் மட்டும் ‘செல்லம்மா’ எனவருகிற மூன்று இடங்களில் அப்பெயர் அடிக்கப்பட்டு வேறு வண்ணமையில், பாரதியின் கையெழுத்துக்கு மாறுபட்ட கையெழுத்தில்  ‘கண்ணம்மா’ என மாற்றப்பட்டுள்ளதைக் காணமுடியும்.

கவிஞனின் காதல் மனங்காட்டிக் காற்றெல்லாம், காலமெல்லாம் செல்லம்மா எனப் பெயர் பரவி இனிப்பதற்குப் பதிலாகக் கண்ணம்மா அன்றோ காதுகளில் நிறைந்துளாள் இன்று?எப்பேற்பட்ட மாற்றம் இது?

ஆக, காதல் கசிய ‘’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி செல்லம்மா” எனப் பாட்டெழுதிய பாரதியே அறியாத,

’நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா” எனப் பாட வைக்கப்பட்டுள்ள பாரதியே நமக்கு இன்றுவரை பரிச்சயம்.

என்ன கொடுமை இது?

இன்னுமுள மேலும், இதுபோல்.

எடுத்து நிறுத்தலாம் அணியணியாக வருங்காலத்தே.

இனியாவது அறிய முற்படுவோமா நன்றாக, முழுமையாக, அவனை, பாரதியை?.

[வேண்டுதல் இணைந்த பின்குறிப்பு இது: பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் (1982) அப்போதைய முதல்வர் மாண்புமிகு திரு எம். ஜி. ராமச்சந்திரன், மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் தயாரித்து வெளியிடும் பணியை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், பாரதியாரின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிடும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை, நன்கு ஆராய்ந்து, ஆதாரங்களுடன் ஒரு முழுமையான வரலாற்று நூல் கொண்டு வரும் பணியைச் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் வழங்கினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகமும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் தமக்கிட்ட பாரதி நூற்றாண்டு விழாப் பணிகளை நிறைவு செய்து விட்டன.

ஆனால், சென்னை பல்கலைக்கழகம் மட்டும் பாரதியின் முழுமையான வரலாற்றை ஆய்வு செய்து தக்கதொரு நூலாக வெளிக்கொணரும் பணியைக் கடலிற் போட்டுவிட்டதுபோலும்.

1982க்குப் பிறகு யாருமே இதனை கண்டு கொண்டு இதுவரை உரிய தீர்வுக்கு வழிசெய்யவில்லையே. வழிவகை செய்ய தமிழ்நாடு அரசுக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் வேண்டுகோள். வரலாறு - பாரதி வரலாறு  - முக்கியம் அல்லவா? ]

 **

[டிச. 11 - பாரதியார் பிறந்த நாள்]

 [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

இதையும் படிக்க : அறியாத பாரதி!

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2025/Dec/11/ariyaadha-bharathi-2-how-chellamma-became-kannamma

*

ஞாயிறு, 10 நவம்பர், 2024

 

கவிதைதான் குற்றம் -5


Censor ?

வாங்க..

... ... புள்ளிகளைத் தூவியே

நூலனுமதி பெற்றாச்சு.


கவிதையில் சேர்க்க விழைந்த சொற்களை இழக்க முடியாதே !


புள்ளி வைத்த இடங்களில்  சேர்க்க வேண்டிய சொற்களை எல்லாம்   பேனாவால் எழுதி உலவ விட்டு...

11.5 ஆண்டுகள் சிறை!


சம்பிரதாயக் கைகுலுக்க லுக்கு 

99 கசையடித்  தண்டனை!


Fateme Ekhtesari பட்டபாடு..

பாருங்கள்.


https://www.dinamani.com/editorial-articles/special-stories/2024/Nov/09/fateme-ekhtesari-iran-poet-gets-prison-for-poem




ஞாயிறு, 27 அக்டோபர், 2024


ஒரு கவிதைதான்.


பரிசு?

( For the crime of Poetry)


வதைகள் ( Torture)

வாட்டும் சிறைவாசம் ( Harsh imprisonment)


Read:

https://www.facebook.com/share/p/K4Xp9p9fVYnhPR3k/

*


3

https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Oct/26/prize-for-poetry-seven-years-imprisonment-poet-artem-kamardin



2

https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Oct/19/mannaramudu-the-humanitarian-voice-of-sri-lanka-poetry-is-the-crime-2


1


https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Oct/12/poet-dareen-tatour-prision-life

சனி, 19 அக்டோபர், 2024

உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு

 முன்னோட்டம்:

-------------


இப்படி ஒரு கவிதை எழுதியவனை....

( எழுதப்பட்ட நாள்: 2019, ஏப்.22)


" மதவெறுப்புணர்வைத் தூண்டுகிறான்" 

என்ற குற்றச்சாட்டில் 

19 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டுச் சொல்லொணாத் 

துயரில் மிதக்க வைக்கப்பட்டான் என்பது ஆச்சரியப்படுத்துகிறாதா? 


நடந்ததே... நமக்கருகே.


*

உயிர்த்த ஞாயிறு அல்ல உயிர் நீத்த ஞாயிறு

--


நீயும் இறந்து பிறரையும் இறக்கச்

செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?

நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த

உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?


நீயும் செத்து பிறரையும் சாகடித்த

உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?

உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற

உனக்கு திருமறை எதற்கு?


ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை

கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்

கொல்வதென்று திருமறை சொன்னதை

நீ கற்கவில்லையோ?


பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்

புத்தாண்டையும் பயந்து சாகாமல்

கொண்டாடி மகிழ்ந்தோம் - நீ வந்து

நிமிடத்தில் உருக்குலைத்தாயே!


இ.....த் தாய் மீண்டும் விம்மி

அழுகிறாள் - நீயோ நிலையான

சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை

மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு

நெருப்பிலேற்றிநாயே!


உனக்கு சாவதில்தான் சந்தோசம்

என்றால் எங்கேயாவது மூலையில்

விழுந்து செத்திருக்கலாமே

ஏன் எம்மை இனி தினம் தினம்

செத்துப் பிழைக்க வைத்தாயே!


தற்கொலையே தவறென்று

சொன்ன இஸ்லாத்தின் பெயரால்

நீ தற்கொலையும் செய்து கொலையும்

செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்

தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?


குருதி வெள்ளத்தில் துவண்டு

கிடக்கும் உடற் சிதிலங்களில்

நீ என்ன வெற்றி கண்டாய்?

மூத்தோரையும், சிறாரையும்

யுத்தமென்றாலும் வதைப்பது

தவறாகும் எனும் அண்ணல்

வாக்கை தூக்கி வீசினாயே!


பிறமதக் கடவுளரை தூற்றாதே

தூற்றினால் அவர்கள் உன்னிறைவனை

தூ}ற்றுவர் எனச்சொன்ன வேளை நீ

தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!


யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்

அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்

செய்தாய் - நீ நிச்சயம் அனுபவிப்பாய்

அன்று நான் உனக்கெதிராய் சாட்சியளிப்பேன்.


அன்னையும் மகளும்,

தாத்தாவும் பேரனும்

ஆள் அடையாளம்

தெரியாமல் செய்து - நீயும்

அடையாளம் இழந்து

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்

குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!

இனி தினம் இங்கு சாவே!


எம்மை சாகாமல் சாகடித்த

என் தோழர்களை சிதறடித்த

உமக்கு என் சாபங்கள்

கோடி கொடு நெருப்பாய்வரும்


ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே

உலகம் போற்றும்  - புண்ணிய

விழாக் கோலம் பூணும் நாளில்

எனக்கதும் நம்பிக்கை இல்லை


ஆனால் அருமந்த உயிர்கள்

இருநூறுபேர் உயிர் நீத்த நாள்

என்று நான் நம்புவேன் - காரணம்

நம் இனத்தின் சில நரிகள்

இழைத்த இழி செயலால்

உயிர் நீத்த உறவுகளுக்கு

என் கண்ணீர் திவலைகள்.


*

சனி, 12 அக்டோபர், 2024

கவிதைதான் குற்றம்

கவிதைதான் குற்றம்

CRIME OF POETRY 
---------
இராஜ முத்திருளாண்டி
*

இன்றுடன் ( அக் 11) பத்தாண்டு. இதே நாள்,  2015ல், நள்ளிரவு கடந்து, 3.30 மணியளவில்,  எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காததொரு பொழுதில் பரம இரகசியமாக அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொரில்லாத் தாக்குதல் நிகழ்த்தப் போவதுபோல – இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பு அதிகாரிகளது (Israeli Zionist occupation authorities)  கொடுங்கரமாகச் செயல்பட்டு வரும் எல்லைக் காவல் (Border Guards) அணியினர் புடைசூழ, நாஸரேத் காவல்துறையின் ரோந்து வாகனங்கள், அந்நகரின்  அருகிலுள்ள அல் ரய்னே (Al-Reineh) என்றதொரு சிறு கிராமத்தை முற்றுகையிட்டன. அமைதி போர்த்து நின்ற ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தன அப்படைகள். இன்னும் விடியாத இரவையும், உறங்கி விழிக்காத அவ்வீட்டினர் அனைவரையும் அதிர்ந்துபோகச் செய்து வீட்டின் கதவுகளைத் தகர்த்து  அதிரடியாக நுழைந்தது எதேச்சதிகாரம். 
நுழைந்த அதிகாரம் - வழக்கமான மரபுகள் அத்தனையையும் கனத்த பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கியவாறே – தயக்கம் ஏதுமின்றி, அவ்வீட்டில் பெண்கள் உறங்கும் பகுதிக்குள்ளும் புகுந்து துழாவத் தொடங்கியது. அதிகாரச் சீருடை அணிந்திருந்த அதிகாரிகள் எவரது சீருடையிலும் அடையாளங் காட்டக்கூடிய ‘பெயர் பட்டி’ (Name Badge) காணப்படவில்லை.  அந்த அகாலத்தில், இவ்வளவு களேபரங்களை, அவ்வீட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் பிரதிநிதிகளிடம் அவ்வீட்டைச் சோதனையிடவோ, குறிப்பிட்ட யாரையாவது கைது செய்யவோ எந்த ஆவணமும் கிடையாது. யாரும் கேட்கவும் முடியாது. ஏனென்றால், அந்த வீட்டார்  பாலஸ்தீன அரேபியர்கள்.

எக்குற்றமும் செய்தறியாத அவ்வீட்டார் எவருக்கும், என்ன நடக்கிறது? இரவு கழிவதற்குள் இப்படித் தடாலடியாக நுழைந்து வீட்டிற்குள் உறங்குபவர்களைப் பதைபதைக்க வைக்கிறார்களே ஏன்? யாரைத்தேடி வந்தது அந்த அதிகாரப்படை? யாராவது அஞ்சத்தக்க தீவிரவாதியைத் தேடித் தவறான முகவரிக்கு வந்து விட்டார்களா  என்ன? என்ற சந்தேகங்களும் வினாக்களும் வார்த்தைகளாக வெளியில் வர இயலாமல் முடங்கி முட்டி நிற்பது அவர்களது முகங்களில் தெரிய, கலவரப்பட்டு உறைந்து நிற்கிறார்கள் வீட்டினர். 

ஒருவழியாகப்  ‘பேர்’   பெற்றிருக்கும் எல்லைப் படையின் அதிகாரி ஒருவரின் கனத்த குரல் உடைக்கிறது அச்சூழலில் உறைந்து கிடந்த அமைதியை. அவர் உச்சரித்த பெயரைக்கேட்டு உடைந்து நொறுங்கினர் வீட்டாரனைவரும். அதிகாரி உரக்கச்சொன்ன பெயர் - யாருமே எதிர்பார்க்காத -  அக்கம் பக்கத்தில் ‘அமைதியான பெண்’ என     அறியப்பட்டிருந்த- (அப்போது) 33 வயதுள்ள, பொறியியல் பட்டதாரியான  அந்த வீட்டுப்பெண் ஒருவரது பெயர். அந்தப்பெண், டாரின் டட்டூர்(Dareen Tatour). (அந்த அரேபிய மொழிப்பெயர் டாரின் ரற்றூர் என்றும் மொழிபெயர்ப்பாகியுள்ளது.) 


வீட்டினுள்ளே, பெண்கள் உறங்கும் பகுதியில், ஏதுமறியாது- அப்போது நடப்பது எதனையும் எள்ளளவும் எதிர்பாராமல்- உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண்ணை அதிர்ச்சியுற எழுப்பி இழுத்து வருகிறார்கள் படையினர். அவரென்ன தீவிரவாதியா? ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவரா? இல்லையே. அந்தச் சமயம்வரை அவர் எந்தக் கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கூடத் தனிப்பட்ட முறையில் கலந்து பங்கேற்றதில்லை. பள்ளிக்கல்வி முடித்தவுடன் ஏற்பட்ட தன்னார்வத்தால் புகைப்படக் கலைப் (Photography) பயிற்சி பெற்றிருந்த ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில், அவர் வாழ்கின்ற நாஸரேத் மாவட்டப் பகுதிகளில் நிகழ்ந்த ஓரிரு போராட்ட நிகழ்வுகளில் புகைப்படம் எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். அதற்காகவா இத்தனையும்? ஒன்றும் புரியவில்லை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும்.
கலையாத உறக்கத்தோடு காவல்படையால் இழுத்து வரப்பட்ட அந்த வீட்டின் அமைதிப்பெண் டாரின் டட்டூரைத் தீவிரவாதியாகவே கருதிக் கைவிலங்கிட்டுக் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாத் தள்ளி ஏற்றிக்கொண்டு – வீட்டிற்குள் அவரது படுக்கை அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் முதலியவற்றுடன் - அப்பெண்ணை எங்கு, எதற்காகக் கொண்டு செல்கிறோம் என்று  (அடிப்படையாக, முறைப்படி வழங்கப்படவேண்டிய) எந்தத் தகவலுங்கூட வீட்டிலுள்ளவர்களுக்குத் தராமல், உறங்கும் ஊர் விழித்துக் கொள்ளும் முன்பே அங்கிருந்து விரைந்தன முற்றுகைப்படை வாகனங்கள். அந்த வாகனங்கள் அலைக்கழிப்பதுபோல அங்கும் இங்கும் சுற்றி நாஸரேத் காவல்நிலையத்தின் பின் ஒரு ஒதுக்குப்புறமான வாகன நிறுத்துமிடத்தில் பலமணிநேரமாக நிறுத்திவைக்கப்பட்டு அப்பெண்ணை இறங்க வைக்காமல் இடையூறு செய்தும் அவரைத் ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுக் கிண்டலுங் கேலியும் செய்து வதைப்புக்குள்ளாக்கினர். 

சரி, யார் இந்த டாரின் டட்டூர்? 


மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், அப்போது (2015ல்) அவரது ஊர், அல்லது அதிகம் போனால் அவ்வூருக்கருகிலிருந்த நாஸரேத் நகருக்கு அப்பால் அதிகம் அறியப்படாதிருந்த ஒரு பாலஸ்தீனப் பெண் கவிஞர், புகைப்படக்காரர். அவ்வளவுதான். 
ஆனால், அன்று நடைபெற்ற அதிரடிக் கைது நிகழ்வு; அதனால் அவருக்கு விளைந்த சிறைவாசக்கொடுமைகள்; சொந்த ஊருக்கப்பால், கடும் நிபந்தனைகளுடன் இருக்க விதிக்கப்பட்ட  தனிமை வீட்டுச்சிறை; தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குகள்; வழக்குகளுக்கு மூலகாரணங்களாகச் சேர்க்கப்பட்ட (மிக அசாதாரண) விசயங்கள்; ஒருதலைப்பட்ட நாஸரேத் மாவட்ட நீதிமன்ற விசாரணைகள்; விசாரணைகளின் போக்கு; நீதிமன்றத்தில் நடந்த பிற நிகழ்வுகள்; விசாரணை முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை; மேல்முறையீடு; அதன்மீதான தீர்ப்பு  முதலியன யாவும் அவர்மீது அதீத ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட உதவின. பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், கருத்துரிமைக்கான உலகளாவிய செயலமைப்புகள், சமூக ஊடகங்கள், ஆர்வத்தோடு புதிதாகச் சேரந்த ஆதரவாளர்கள் எனப் பலவகைக் குழுக்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்தையும், ஈடுபாட்டையும் நேரடிச் செயல்பாடுகளையும் ஈர்த்தன. அவற்றின் கூட்டு விளைவாகத் தற்போது -  டாரின் டட்டூர்  உலகறிந்த பாலஸ்தீனக் கவிஞராக, பெண்ணுரிமைப் போராளியாக, எதேச்சதிகார எதிர்ப்பாளராக, கவிதையைப் போராட்டக் கருவியாக வடிவமைத்துக்கொண்ட புதுமை கண்டவராக, துணிச்சல்மிக்க பாலஸ்தீனப் பெண் எனும் சர்வதேச அடையாளமாக அவரை மாற்றியிருக்கிறது. 

2015 வரை அமைதியான சிறு கிராமத்து பெண் புகைப்படக்காரர்  டாரின் டட்டூர், சில மாதங்களுக்கு முன் (மார்ச் 7,2024) ஒரு பேட்டியில் (International Association of Democratic Lawyers (IADL) அமைப்பின் March 2024 special issue of the International Review of Contemporary Law,), ‘’எனது கவிதைகளில் பாலஸ்தீனம் என்பது நானே; நானே பாலஸ்தீனம்  ( (Palestine in my poems is me and I am Palestine)’’ என்று நிமிர்ந்து முழங்கும் நிலையடைந்துள்ளார். 

‘நாடகன்று நிற்கும் என் சாளரம் வழியே பாடுகிறேன்’ (I Sing From the Window of Exile) என்ற கவிதைத் தொகுதிக்காக, 2023 ஆண்டிற்கான பாலஸ்தீன புத்தக விருது (The Palestine Book Awards 2023 – Creative Award Winner);  கருத்துச் சுதந்திரத்திற்காக, (Freedom of Expression) நார்வே-ஓஸ்லோ விருது (2020); அதே விசயத்திற்காக (Freedom of Expression)  ஆக்ஸ்பாம் நோவிப் / பென் (OXFAM Novib / PEN) அமைப்புகள் வழங்கும் சர்வதேச விருது (2019); அநீதிக்கெதிராகத் தீரமுடன் கவிதைகளால் களமாடியதற்காக டேனிஷ் நாட்டுப் பரிசு (Danish Carl Scharenberg Prize For standing against injustice through her poetry- 2017); புகழ்பெற்ற ஹிப்ரூ மொழி இணைய இதழான ‘மாயன்’ (Maayan) நிறுவியிருக்கும் ‘போரட்டங்களில் புதுமை’க்கான பரிசு (Prize for creativity in struggle- 2016) என வரிசையாக டாரின் டட்டூருக்கான சர்வதேச அங்கீகாரங்கள், விருதுகள்,பரிசுகள் குவிந்துவருகின்றன.

எதற்காக நடந்ததாம் மறக்க இயலாத அந்த 2015 அக் 11 தடாலடி? 

அந்தநாள் விடியுமுன் நடந்தேறிய அசாதாரண அதிரடி நிகழ்வுக்கான காரணங்கள் பல வாரங்கள் கழிந்தே- 2015 நவம்பர் 2ல், நீதிமன்ற வழக்குப் பதியப்பட்டுத்தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அதுவரை அந்நாள் - அக் 11 - நிகழ்வுகளின் மேல் மர்மம்தான் அடர்ந்து கிடந்தது.
வாங்க... தாமதமாக உலகிற்குத் தெரியவந்த அந்தக் காரணங்களைக் காணலாம். 

முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட காரணம் டாரின் தனது முகநூல் பக்கத்தில் இட்டதொரு பதிவு. அதன் பின்புலம் இது: 
நாஸரேத்தைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உயிரியல் துறைப் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த  பாலஸ்தீனியப் பெண் இஸ்ரா அபெத்   (Israa Abed). அவர், அக்டோபர் 9, 2013ல் அபுலா (Afula) என்ற ஊரின் பேருந்து நிலையத்தில், தனது ஊருக்குத் திரும்பக் காத்திருந்தபோது கையில் ஒரு சிறு கத்தி வைத்திருப்பதைக் கண்ட இஸ்ரேலியப் படைவீர்ர் ஒருவர், காரணமில்லாமல் அப்பெண்மீது சந்தேகப்பட்டு  எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், துப்பாக்கியால்  சுட்டார். காரணமேதும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த  பேருந்து நிலையத்தில் இஸ்ரா அபெத் இரத்தம் சொட்டத் தரையில் விழுந்து கிடக்கும் படங்களும் வீடியோக்களும் பல ஊடகங்களில் வெளியானதுதான். அப்படித் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கீழேகிடந்த அந்தப் பாலஸ்தீனப் பெண் இஸ்ரா அபெத்தின் படத்தை இணைத்து, ஜூலை 2014ல், டாரின் அவரது முகநூல் பக்கத்தில், ‘நான்தான் அடுத்த உயிர்த் தியாகி’ ( “I will be the next martyr”) என்ற பொருள்பட, அராபிய மொழியில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் (status) வாசகம் ஒரு காரணம்.

இரண்டாவதாகக் குறிக்கப்பட்டாலும், முக்கியக் காரணம் என முன்வைக்கப்பட்டது யூட்யூப் (YouTube) தளத்தில், (அராபிய மொழியில் “Qawem ya sha’abi, qawemhum” என்ற தலைப்பிட்டு) ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ (“Resist My People, Resist Them”) என்று டாரின் வெளியிட்டதொரு கவிதை. 
எத்தனையோ வகை ( கடத்தல் குற்றம், கொலைக் குற்றம், திருட்டுக் குற்றம் என்பன போன்ற எண்ணற்ற வகைக்) குற்றங்கள் பற்றிய வழக்குகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கவிதைதான் டாரின் டட்டூரின் குற்றமானது (Committing the crime of poetry), விந்தையானது! 
குற்றங்களெனக்  குறிப்பிடப்பட்ட முகநூல் ஸ்டேட்டஸ் பதிவாலும், முகநூல் மற்றும் யூட்யூப் என்ற சமூக ஊடகங்களில் வெளியிட்ட (“Resist My People, Resist Them”  - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ - கவிதை மூலமாகவும், டாரின் டட்டூர் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் (Inciting Violence) என்று அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு புனையப்பட்டது.


யூட்யூப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் - பின்புலத்தில், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான (அரபு மொழிக்) கவிதையைத் தன் குரலில் டாரின் டட்டூர் வாசிக்க, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) பகுதியில் சில்வாட் (Silwad) என்ற கிராமத்தில் பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களுக்கும் மேற்குக் கரைப்பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ள (இஸ்ரேலியப்) படையினருக்கும்   - அவ்வப்போது வழக்கமாக - நடைபெறும் மோதல்களில் ஒன்றைக் காணொளிக் காட்சிகளாக விரிக்கிறது அந்த வீடியோ.

நடுநிலையாகவும், உண்மையாகவும் பார்த்தால் டாரின் டட்டூரின் அந்த (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) கவிதையில் எந்த வன்முறைத் தூண்டுதலும் இல்லை. மிகக் கடுமையானவை என்று சனநாயகக் கருத்துடையவர்களால் விமர்சிக்கப்படும்  இஸ்ரேலிய அரசுச்சட்டங்களின்படி கூட – நேரடியாகக் குற்றமாகக் கருதப்படஉரிய கருத்தோ வாசகமோ அக்கவிதையில் இல்லவே இல்லை என்பதே வெளி்ப்படை. ஆனால், அக்கவிதை பாலஸ்தீன இளைஞர்கள் ஆக்கிரமிப்புப் படையினருடன் மோதல் மேற்கொள்ளும் வீடியோ காட்சிகளின் பின்புலத்தில் கவிஞரால் வாசிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு, அக்கவிதை தீவிரவாதத்தை முன்நிறுத்துகிறது; தீவிரவாத அமைப்பினை ஆதரிக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது. ஆதலால், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான கவிதையை எழுதி, வாசித்து, வீடியோவாக வெளியிட்ட கவிஞர் டாரின் டட்டூர் ‘பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு (the security of the region) கடும் அச்சுறுத்தலாக’ உள்ளார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வழக்குப் புனைந்தனர் காவல்துறையும் அரசின் வழக்குரைஞர்களும் இணைந்து.

வழக்கமாக, இதுபோன்ற சமூக ஊடகப்  பதிவுகள் தொடர்பான வழக்குகளில் யாரேனும் கைது செய்யப்பட்டால்,  வழக்கு நடைபெறும் காலத்தில், வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்வரை, வீட்டுக்காவல் (House arrest with restrictions on outside movements) அனுமதிக்கப்படும். ஆனால், டாரின் டட்டூருக்கு அவ்வாறு வீட்டுக்காவல் வழங்குவதை அரசுத்தரப்பு / காவல்துறை கடுமையாக எதிர்த்து நின்று இழுத்தடித்ததால், வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்ட அக்11, 2015 முதல், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை  கடுமையான சூழல்கள் நிலவுகிற, அப்பகுதியிலுள்ள  (Jalameh, Sharon and Damoun)  மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி, மாற்றி அடைக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டுக்காவல் கேட்டு மனுச்செய்யவும், அம்மனுக்கள் மீது நடைபெறும் விசாரணைகளுக்கு ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் வரும்போது வேறு வேறு சிறைகளிலிருந்து அல்லற்பட்டுவரும் நிலை அவருக்கு ஏற்படுத்தப்பட்டது. 

ஒருவழியாக சனவரி14, 2016ல் அவருக்கு நீதிமன்றத்தால்- வழக்கின் தீர்ப்புவரை - வீட்டுக்காவல் அனுமதிக்கப்பட்டது. அப்போதும் அரசுத்தரப்பு முழுமூச்சுடன் குறுக்கிட்டு, டாரின் டட்டூரை அவரது ஊரில், சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அங்கிருந்து வெகுதொலைவில், தனிமையில், செல்போன், இன்டர்நெட்வசதி ஏதும் இல்லாமல் ஒரு இடத்தில், காவலர் கண்காணிப்புடன், அதையும் மீறி அவர் எங்காவது சென்றால்கூட அதைக்கண்டறிய உதவ அவரது இடது காலில் ஒரு எலெக்ட்ரானிக்கருவி ஒன்றை (An electronic device attached to her ankle supervising her movements) எப்போதும் அகற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு காவல்துறையும் அரசு வழக்குரைஞரும் வற்புறுத்தியதால், நாஸரேத் நீதிமன்றம் அந்த நிபந்தனைகளை எல்லாம் விதித்தது.  உடனடியாக வேறு வழியின்றி, மாற்றி மாற்றி வேறு வேறு சிறைகளில் உழலும் அவலத்திலிருந்து தற்காலிக விடுதலையாவது இருக்கட்டும் எனத் தன்மீது விதிக்கப்பட்ட  நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார் டாரின். 

சொந்தஊரிலிருந்து வெகு தொலைவில் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கருகே, கிர்யட் ஓனோ (Kiryat Ono) என்ற புறநகர்ப் பகுதியொன்றில் இன்டர்நெட் வசதியற்ற ஒரு சிறிய குடியிருப்பைத் தனது தமையன் வாடகைக்கு ஏற்பாடு செய்துதர முடிந்ததால் அங்கு மாற்றப்பட்டார் டாரின். வீட்டின் வெளியில் எப்பொழுதும் தப்பாத காவல் கண்காணிப்பு உறுதி; அவரது இடது கணுக்காலில் அகற்ற முடியாதவாறு பொருத்தப்பட்ட வேவுபார்க்கும் எலெக்ட்ரானிக் கருவி. சொந்த ஊரை, சொந்த வீட்டை, பழகிய இடங்களை விட்டு  நாடுகடத்தப்பட்டது போன்ற அந்நியமானதொரு தொலைவில்- வசதிகளற்ற ஒரு சிறிய வீட்டைவிட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாத கண்காணிப்பு; செல்போன், இணைய வழியாகக்கூட வெளியுலகத் தொடர்பேதுங்கொள்ள வழியுமற்ற சூழல் – அதற்குத் தனிமைச் சிறைவாசமே இருந்திருக்கலாம் என்ற நிலை.

அந்நிலையை மாற்ற விரும்பித்  தனது சொந்த ஊரில் வீட்டுச் சிறையிருக்க அனுமதி வேண்டிப் பலமுறை நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதும் ஒவ்வொரு முறையும் அரசுத்தரப்பின் வலுவான எதிர்ப்பால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆறுமாதங்களான பின்னர் வீட்டுச்சிறைவாசத்தைச் சொந்த ஊருக்கு டாரின் மாற்றித்தொடர   நீதிமன்றம் கனிந்தது. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்- ஏறத்தாழ ஏழுமாதங்களுக்குப் பிறகு- 2016, ஏப்ரல் 13ல்தான் நாஸரேத் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் நாள் கேட்பு (hearing)- ‘வாய்தா- தொடங்கியது. இதற்கிடையில் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் எனப் பென் (PEN International), ஆம்னெஸ்டி (Amnesty International) போன்ற பல அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இயக்கங்களைத் தொடங்கின. பல சமூக ஊடகங்களிலும் டாரீனை விடுதலைசெய்யக் கோரிக்கைகள் இடைவிடாது இடம்பெற்றன.  

சேர்த்துப் பார்க்கும்போது, 2015 முதல் டாரின் ட்ட்டூர் காவல் பிடியில்தான் இருக்கிறார். பலமுறை அவருக்குப் பிணை (bail) மறுக்கப்பட்டது.சனவரி 2016 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது கவிதையோ வேறு எந்தப் படைப்போ வெளியிடப்படக் கூடாதெனும் தடை அவர் மீது விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு செல்போன், இணையத் தொடர்புகளும் மறுக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிந்து, மே 3, 2018ல், டாரின் டட்டூர் மீது சுமத்தப்பட்ட  கவிதையின் மூலம் வன்முறையைத் தூண்டுதல்  (incitement to violence), தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்தல் (‘supporting a terrorist organization’) ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ( நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் தனியே விரிவாக எழுதத் தக்கவை.)

நீதிமன்றத்தால் 2018ல் இறுதித் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே, ஒரு கவிதைக்காகவும், இரு முகநூல் பதிவுகளுக்காகவும் 2015 அக்டோபர் முதல் சிறைவாசம், வீட்டுச் சிறைவாசம் என்பதெல்லாம் சேர்த்துத் தொடர்ந்து சிறைக்காவலில்தான் அவர் இருந்திருக்கிறார். மேல் முறையீட்டுக்குப்பின் செப்டம்பர் 28, 2018ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். 
தான் சிறைப்பட்டிருந்த வலிகளை விடக் கூடுதலான  வலியும் தண்டனையும் அதிரடிக் கைது நடந்த அக்டோபர் 2015 முதல் இறுதியாக விடுதலையான செப்டம்பர் 2018 வரை, நீதிமன்ற நிபந்தனையால், அவரது கவிதை எதுவும் வெளியிடப்படாமல், வெளியுலகம் காணாமல் தன்னோடு சேர்ந்து சிறையிருக்க நேர்ந்ததுதான் என்கிறார் இப்பெண் கவிஞர், ஒரு பேட்டியில். 

ஆனாலும் அவர் மகிழ்ந்து புன்னகைத்திருக்க இனியதொரு காரணம் நிறைந்து நிற்கிறது. 2015 முதல் 2018 வரை அவரைச் சிறைப்படுத்திய அதிகாரம், அவர் எந்தக் கவிதைக்காகச் சிறைப்படுத்தப்பட்டாரோ அந்தக் கவிதையை - (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’)   எதுவும் செய்ய முடியவில்லை. பதிவிடப்பட்ட நாள் முதல் அக்கவிதை இணையத்தில் வாகாக இருப்புக்கொண்டுள்ளது. லட்சக்கணக்கில் வாசகர்களால் அக்கவிதை காணப்பட்டு, வாசிக்கப்பட்டு, இணையவளத் தாராளத்தால் பதிவிறக்கமும் செய்யப்பட்டுப் பத்திரமாகியுள்ளது.
எழுத்தின் வலிமையை எவர் இழுத்துக் குறைக்க முடியும்?

ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்! அவர் கவிதைகள் வெளியிடப்படத் தானே சிறைக்காலத்தில் தடையிருந்தது?

சிறைவிடுதலை பெற்ற பின், சிறையிலும், வெளிவந்த பின்னரும் எழுதிய கவிதைகள் பல தொகுப்புகளாக இதுவரை வந்துள்ளன. அவற்றுள் சில (The Last Invasion, Nazareth: El Wattan Books, 2010; My Threatening Poem, Arabic, Tunis: Dyar Publishing and Distribution House, 2018; Threatening Poem – Memoir of a Poet in Occupation Prisons, English Version. Scotland: Drunk Muse Press, 2020; I Sing From the Window of Exile – English and Arabic. Scotland: Drunk Muse Press, 2023)

இன்னும் வரும்.

எவரடைக்க முடியும் கவிதையூற்றை?


*
இதோ Dareen Tatourஐ சிறைப்படுத்திய

அந்தக் கவிதை!


Resist My People,Resist.
-Dareen Tatour
-----------------
Resist, my people, resist them.
In Jerusalem, I dressed my wounds and breathed my sorrows
And carried the soul in my palm
For an Arab Palestine.
I will not succumb to the “peaceful solution,”
Never lower my flags
Until I evict them from my land.
I cast them aside for a coming time.

Resist, my people, resist them.
Resist the settler’s robbery
And follow the caravan of martyrs.
Shred the disgraceful constitution
Which imposed degradation and humiliation
And deterred us from restoring justice.
They burned blameless children;
As for Hadil, they sniped her in public,
Killed her in broad daylight.

Resist, my people, resist them.
Resist the colonialist’s onslaught.
Pay no mind to his agents among us
Who chain us with the peaceful illusion.
Do not fear doubtful tongues;
The truth in your heart is stronger,
As long as you resist in a land
That has lived through raids and victory.

So Ali called from his grave:
Resist, my rebellious people.
Write me as prose on the agarwood;
My remains have you as a response.
Resist, my people, resist them.
Resist, my people, resist them.

*


வெள்ளி, 23 செப்டம்பர், 2022

 

 

 

அறியாத பாரதி

இராஜ முத்திருளாண்டி

 

 

தமிழகத்தின் தென்பரப்பிலுள்ள ஒரு சிற்றூரான எட்டையபுரத்திலே  பிறந்து, ஆக்க நெருப்பாய்க் கிளம்பி, ‘மகாகவி’, ‘தேசியக் கவி’, ’தமிழ் நவயுகத்தின் வெள்ளி முளைப்பு’, ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூலபுருஷர்’, ’தமிழிலக்கியத் துறைகள் தோறும் புதுமைகள் வடித்த இலக்கியச் சிற்பி’ என எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியவனாக விகசித்து நிற்கும் பாரதி மறைந்து (1921) நாறாண்டுகள் கழிந்துவிட்டன. “பார் மீது நான் சாகாதிருப்பேன் (பாரதி- அறுபத்தாறு -6) எனப் பெருமலையன்ன அசையா நம்பிக்கையுடன் தன் வரலாறு பாடியஒரே கவிஞன் பாரதி. தான் மறைவடைய ஒரு மாதத்திற்கு முன்புகூட (ஆகஸ்ட்1921) , ஈரோடு கருங்கல்பாளையத்தில் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்றே இறுதியாகவும் உறுதிப் பிரகடனம் செய்து விட்டு வந்தான். ஆனால், மெல்ல வந்து- 1921 செப்டம்பர் 11 நள்ளிரவுகடந்து- மரணம் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டது. இருப்பினும் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற பாவேந்தரின் நம்பிக்கை முழக்கத்திற்கேற்ப, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் புகழுருவாகத் தமிழ்கூறும் உலகெலாம் வளர்ந்துகொண்டே இருக்கும் விந்தையின் பெயர்தான் சி.சுப்பிரமணிய பாரதி. இன்றவன் நினைவு நாள்.

 

அவன் வாழ்ந்த குறுகிய காலத்தில் (39ஆண்டுகள்) பாரதியைச் சரியாகவும், முழுமையாகவும் தமிழுலகில் யாரும் அறிந்து, புரிந்து, ஆதரித்துப் போற்றவில்லை என்பது  கசப்பான  உண்மை. அவன் வாழுங்காலத்தில் அவனைத் தக்கவாறு அறிந்து போற்றி ஆதரவளிக்கத் தவறி, “அலஷியம் செய்த தமிழுலகம் திடீரென்று அவர் புகழில் மோஹமுற்று” (நாவலர் சோமசுந்தர பாரதி,1954) தொடர்வது விந்தைதான். சரி, பாரதி மறைவிற்குப் பின்னாவது அவனை முழுதாக அறிந்து தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதே உண்மையான பதில்.

 

பாரதியின் மறைவிற்குப் பின் அவனது கவிதாவாழ்வின் ‘காரியம் யாவிலும்’ உடன் நின்றுழன்ற பாரதியின் மனைவி செல்லம்மாள் வழங்கிய ‘ பாரதி சரித்திரம்’ எனும் மெல்லிய நூலுக்குச் சுத்தானந்த பாரதி எழுதியுள்ள முன்னுரையில், “அங்குமிங்கும் சில குறிப்புகளைக் கேட்டே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் வரலாற்றை எழுதுகிறவர் எழுதியளித்தால் தமிழ் மரபிற்கே பெரும் பயனாகும்  என்று உண்மை சொல்லியிருக்கிறார். “ பாரதியினுடைய ஜீவியத்தின் ஆதாரத்தைக் கொண்டு ஒரே நோக்கில் பூர்த்தியாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு மதிப்புரை இன்னும் வெளிவரவில்லை.” என்று குறைப்பட்டார் கு.ப. இராஜகோபாலன் (கண்ணன் என் கவி, 1937). அன்று சுத்தானந்த பாரதி, கு.ப.ரா உள்ளிட்டோர் சொல்லிச் சென்றதே இன்றும் நிலை. ஆம், இதுவரை நமக்குக் கிடைத்துள்ள பாரதியைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பாரதி விமர்சனம், பாரதி ஆய்வுகள், பாரதி படைப்புகளின் ஆய்வுத் தொகுப்புகள் எனப் பலவும் பூர்த்தியற்ற, “அங்கொன்றும் இங்கொன்றுமான ” தகவல்களே தந்து நம்மை இன்றுவரை பாரதியை முழுமையாக அறியாத நிலையிலேயே நிறுத்தி வைத்திருக்கின்றன.

 

பாரதியின் மறைவுக்குப்பின், செல்லம்மாள் பாரதியைத் தொடர்ந்து பாரதியின் இரு மகள்கள் தங்கம்மாள் (1947) , சகுந்தலா ஆகியோர் தம் தந்தையார் குறித்து ஆர்வமுடன் பதிப்பிக்கச் செய்த சிறு வெளியீடுகள் முழுமையற்றவையாகவும் “அங்குமிங்குமான சில குறிப்புகளைத் தருவதாக இருந்தனவேயொழிய, விவரமான  வரலாறு எனும் வகையில் உறுதியான ஆண்டுக் குறிப்புகளோ, ஆவண ஆதரவுகளோ இல்லாமல்தான் வந்தன. அவ்வெளியீடுகள் - ‘உடன் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள தனிப்பட்ட தத்தமது நினைவுகளைக் கிளறி வடித்த, உணர்வு வெளிப்பாடு’ என்ற வகையில் - வரலாற்று வளமின்றி வற்றிக் கிடக்கின்றன. மேலும், பாரதி வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளைக் காட்டும்போது மூவரது விவரிப்புகளிலும் ஒருமை மாறுபடுவதும் காணமுடிகிறது. பாரதியின் குடும்பத்து மூவரது படைப்புகளும் வெவ்வேறு கால இடைவெளிகளில், பெரும்பாலும் அவரவர்கள் சொல்ல வேறு வேறு நபர்களால் எழுதப்பட்டதாகவே அறிகிறோம். பாரதியின் மிக இளம் வயது  மகள்கள் பாரதியைத் தந்தை என்பதைத் தாண்டி, அம்மகாகவியின் பிற பன்முகப் பரிமானங்களை அவரவர் வயதில் முழுதுணர்ந்திருக்கும் வாய்ப்புகளும் குறைவே. இன்னும் சொல்வதானால், இளையமகள் சகுந்தலாவின் ஏழுவயதுவரை தலைமகள் தங்கம்மாள் (வயது 12), காசியில், செல்லம்மாள் பாரதியின் மூத்த சகோதரி வீட்டில் வளர்ந்து வந்தவர்.சகுந்தலாவே  சொல்கிறார்: “தன் தந்தையாருடன்”கூட வசிக்கும் பாக்கியம் பெருமை” தங்கம்மாளுக்குக் “கிடைத்தது இரண்டு வருஷம் மட்டும்தான்...என் தந்தைக்கும் அவளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு அத்துடன் அற்றுப் போயிற்று ” என்று. (என் தந்தை, பக் 87; 89) இக்காரணங்களாலும் குறைபாடுகள் விளைந்திருக்கலாம்.

 

நெல்லை ஏ,வி.சுப்பிரமணிய ஐயர் (1933), பாரதி சரிதம் தந்த ஆக்கூர் அனந்தாச்சாரி (1936), ஆகியோர் சிறு சிறு ஒளிக்கீற்றுகளாய்ப் பாரதி வரலாறு குறித்த செய்திகளை வழங்க முற்பட்டனர். முதலில் விரிவாக எழுதப்பட்ட பாரதி வரலாறு எனப் பலராலும் மேற்கோள்களாக எடுத்தாண்டுவரும் பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் பல தந்துள்ள வ.ரா., (மகாகவி பாரதியார்,1944) தனது நூலின் முதற் பதிப்பு முன்னுரையிலேயே, நான் இப்பொழுது எழுதியிருக்கும் கதை பாரதியார் சம்பந்தமாக முடிந்த கதையல்ல” என்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். வரலாற்று நூலுக்குத் தேவையான - நிகழ்வுகளின் ஆண்டு/நாள்/இடம், உடனிருந்தோர் விவரங்கள்  அதிகம் அளிக்காத காரணத்தால், ‘வரலாறு’ எனக் குறிப்பிடத் துணியாமல்’  கதை’ அதிலும் ‘முடிவுறாக்கதை’ எனப் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் பாரதி மறைந்து 23ஆண்டுகள் கழிந்து எழுதித் தந்துள்ள அந்த நூலில், “லட்சணமாகக் கொடுக்க முடியாத ஒன்றை அவலட்சணத்தோடு கூடிய உருவத்தில் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. எனவே அனேக சங்கதிகளை நான் சொல்லாமல் விட்டுவிடவேண்டியதாயிற்று” என வருத்தமும் வெளிப்படுத்தியுள்ளார்.  கூடுதலாக, “இன்னும் சில வருஷங்களுக்குள்ளேனும் பாரதியாரைப் பற்றி விரிவாக எழுத முடியும் என்ற நம்பிக்கையோடு இந்தப்புத்தகத்தைச் சுருக்கி விட்டேன்என்றும் கைவிரித்து விடுகிறார்.அவரும் பாரதியாரைப் பற்றி அதற்குப்பின் விரிவாக எழுதவில்லை. வேறு எவரும்கூட முழுமையாகப் பாரதியார் வரலாறு எழுத முன்வரவில்லை.

 

உஸ்மானியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தலைவராயிருந்த ப.மீ.சுந்தரம் (பாரதியார் வரலாறும் கவிதையும்,1954);  “பாரதியாரின் ஜீவியத்தில் ஒரு பகுதியை இவரெழுதத் தகுதியுடையார்’ எனப் பாரதியின் ‘மனைவியார் கருதியதற்கிணங்க’  பாரதியின் பள்ளித் தோழர் சோமசுந்தர பாரதியும், பாரதிக்கு நண்பரான சர்க்கரைச் செட்டியாரும் இணைந்து வழங்கிய (பாரதியார் சரித்திரம், 1955),  ஆகிய படைப்புகளும் பாரதி வரலாற்றின் ஒரு சில பகுதிகளையே காட்ட முடிந்தது. இவ்வாறு, பாரதி வரலாறு எழுதப் புகுந்த ஆரம்ப காலத்து ஆர்வலர்கள் அனைவருமே எழுத மறந்த, எழுத விடுபட்ட வரலாற்றுத் தகவல்களைக் கண்ட தொ.மு.சி. ரகுநாதன்(பாரதி காலமும் கருத்தும், 1982), கொதித்து “பாரதி வரலாற்றாசிரியர்களும், பாரதி பற்றிய நூலாசிரியர்களும் ...காணத்தவறிவிட்ட அல்லது கண்ணை மூடிக்கொண்டுவிட்ட ,...சொல்லப்போனால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட, பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின்” செய்திகள் பல இருப்பதாக அதிரடி காட்டினார்.

 

நாம் போற்றும் ஒரு மகாகவிஞனை, பன்முகப் படைப்பாளியைத், துறைதோறும் புதுமைகள் செய்த முன்னத்தி ஏராக நிற்கும் பாரதியை முழுமையாக நாமறிந்து கொள்ள முடியாத நிலையே அவனிறந்து நூறாண்டுகள் கடந்தும் தொடரும் இந்த அவலம், நமது அலட்சியம், மெத்தனம் ஆகியவற்றுக்கான வலுத்த சான்றாகும். தொடரும் இத்தகைய அலட்சியம் மெத்தனம் ஆகியவற்றுக்கு மற்றொரு சான்றாகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகம் தனக்களித்த கடமையை மறந்து நிற்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

பாரதியின் நூற்றாண்டு விழா (1982) நடைபெறும்போது அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் நூற்றாண்டு விழாக்குழு பாரதியின் முழுமையான ஆதாரங்களுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் கடமை தமிழகப் பல்கலைக் கழகங்களின் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. பாரதியின் படைப்புகளைச் சீர்படத்தொகுத்துச் செம்பதிப்பாக வெளிக்கொணரும் கடமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டது. அதற்கேற்ப அப்பணியின் ஒரு பகுதியாக பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு 1987இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளிக்கொணரப்பட்டுள்ளது.  பாரதி நூற்றாண்டு விழாமலரைப் பதிப்பிக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - விழாமலர் என்பதால் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படத்தக்க நுண்மாண் நுழைபுலங் காட்டும் வகைக் கட்டுரைகளில்லையாயினும் பல நிலையிலுள்ளோர்  பாரதியைப் பார்த்த, பார்க்கும் பார்வைகளின் தொகுப்பாகக் கருதும் வகைக் கனம் கொண்டதாக, 476 பக்கங்கள் கொண்ட-  மகாகவி பாரதி நூற்றாண்டு விழாமலர் (1982) ஒன்றைக் வெளிக் கொண்டுவந்தது. ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட கடமை இன்றுவரை -ஆளின்றி மிதக்கும் படகுபோல- கரைசேராமலே மிதக்கிறது.

பாரதி நினைவு நூற்றாண்டைச் (2021) சிறப்பான முன்னெடுப்புகளுடன் தொடங்கி மேற்கொண்டுவரும்  தற்போதைய தமிழக அரசு இவ்விசயத்தை மீண்டும் தூசிதட்டிக் கையிலெடுத்துக், கொடுத்த கடமையை நிறைவேற்றச் சென்னைப் பல்கலைக் கழகத்தை முடுக்கி விட்டுத் அவசியப்படும் உதவிகளும் வழங்கவேண்டும். பல்கலைக்  கழகத்தால் அது இயலாதெனத் தெரியவந்தால், தமிழக வரலாறு எழுதப்படக் குழு அமைத்ததுபோல, பாரதி வரலாறு படைத்தளிக்கும் பணிக்கு – தக்கார், தகவுடையார்,பாரதி ஆய்வில் தோய்ந்திருப்பார் தேர்ந்து - ஒரு அறிஞர் குழு அமைத்துக் காலவரையரை சுட்டி அப்பொறுப்பைச் செயல்படுத்த உரியன செய்யலாம்.  இம்முயற்சி பாரதி நினைவு நூற்றாண்டு தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுஅர்த்தப்படுத்துவதாக இருக்கும். ‘தமிழிலக்கிய மறுமலர்ச்சியின் மூல மூர்த்தி’ (கு.ப.இரா,1937) பாரதியை-  நாமின்னும் முழுமையாக அறியாத பாரதியை - அறிந்து போற்ற  உதவும்.

 

**