விடுதலை முத்தம்மா கதை
முகப்பு:
அந்நியராதிக்கத்திலிருந்து
விரைந்து விடுதலை பெற வேண்டும் என்ற தேச விடுதலைச் சிந்தையே தலைக்கொண்டு
வாழ்ந்தவர் பாரதி. ‘ஆனந்த சுதந்திரம்’ என்பது வெறும் அரசியல் நிகழ்வாக
மட்டும் சுருங்கிவிடாமல், ‘அறிவிலோங்கியிவ் வையம் தழைக்’கப் பெண்ணடிமை என்பது
மண்போக வேண்டும் என்பதும், . ‘ஆணும்
பெண்ணும் நிகரெனக் கொள்ளும்’ பாலினச் சமத்துவமும் பாரதியின் விரிந்த சமுதாய
விடுதலைக் கனவுகளில் முதன்மையானவையாகும்.
விடுதலை பற்றிய
எண்ணமும் செயலும் இளையோர் முதியோர் எனும் பேதமேதுமில்லாது அனைவரிடமும் தணியாக்
கனலாய் வளர்ந்தோங்க வேண்டும் என்ற பாங்கிலும், பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வும் அவ்விடுதலையடைய ஊக்கமும் சிறுமிகள்,
பெண்கள் எனும் அனைவரிடமும் மலர்ந்திட
வேண்டுமெனும் கருத்திலும், கதை பலபடைத்த பாரதிக்கே கதை சொல்ல
இரண்டு சிறுமிகளை (ஸூவர்ணம், மேனகை) இச்சிறுகதையில்
உருக்கொடுத்து நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பாரதி.
இக்கதையில் அவர்
பதித்துள்ள அவரது ஐந்து வரிப் பாடல் ‘அக்கினிக் குஞ்சொன்று
கண்டேன்’ பாரதியின் அடையாளப்
பாடல்களில் ஒன்றாக ஆன்மீகம், தத்துவம், உளவியல், ,சமுதாயவிழிப்புணர்வு, ஊக்கப்படுத்தும் வகை ( motivation) என மிக
விஸ்தாரமாகப் பலராலும் பல களங்களில் எடுத்துரைக்கப்படும் பாடலாகியுள்ளதை அறிவோம். காளிதாஸன் என்ற
புனைபெயரில் பாரதி எழுதிய படைப்புகளில் இதுவும் ஒன்று.
மகாபாரதத்தில் – அர்ஜுனன், விராட
நாட்டு எல்லையில் வன்னி மரப்பொந்தில் இருந்து, தான் அஞ்ஞான
வாசத்தின்போது மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்து கௌரவர்களோடு போரிட்டு ஓட
ஒட ஒடுக்கி விரட்டினான் என்கிற இதிகாசச் செய்தியைப் பாரதி ஒருவேளை உள்வாங்கிக்
கொண்டுதானோ என்னவோ - காலங்காலமாகக், காடாக மண்டிக்கிடக்கும் பெண்ணடிமைத்தனத்தை எரிக்கக்
கிளம்பிய அக்கினிச் சிறுகீற்றை - அந்த இதிகாச பாணியிலேயே - ‘ அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்’ என்று அஞ்சாத அறிவிப்புச் செய்கிறாரோ இங்கு? வெந்து
தணியுமோ பெண்ணடிமைக் காடு?
வாங்க.... பெண்
விடுதலைக்குப் பெருநெருப்பாகப் பரவப்போகும் சிறுபொறியான முத்தம்மாவைக் காண.
*
.
நுழைவு:
விடுதலை முத்தம்மா கதை
வேணு முதலிக்கு இரண்டு பெண் குழந்தைகள்; மூத்த பெண் பெயர்
ஸூவர்ணம், இளையதன்
பெயர் மேனகை. சில தினங்களின் முன்பு நான் வேணு முதலி வீட்டுக்குப் போய் அந்தக்
குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஸூவர்ணம் எழுந்து ஓடியே போய்த் தன் அறையிலிருந்து ஒரு “சுதேச மித்தரன்” பத்திரிக்கையை எடுத்துக்
கொண்டு வந்தாள்.
“காளிதாஸரே இதில் விடுதலை வேதவல்லி யம்மை கதை எழுதியது
நீர்தானா? “ என்று என்னிடம் கேட்டாள். ‘ஆமெ’ன்றேன்.
“ஓஹோ! இதென்ன விநோதம் என்று
பத்திரிக்கையிலே போட்டு விட்டீர்! என் தோழி முத்தம்மாள்
இருக்கிறாள். அவள் கதையை போட்டாலும் ஆச்சரியமாக இருக்கும்“ என்று சொன்னாள்.
“அதென்ன கதை சொல்லு“ என்று கேட்டேன்.
“சுதேச மித்திர”னில் எழுதுவீரா? அப்படியானால் சொல்லுவேன்.
இல்லாவிட்டால் அவகாசமில்லை“ என்று ஸூவர்ணம் சொன்னாள்.
இந்த வார்த்தையை மேனகையும் ஆதரித்து பேசினாள். அந்தக் குழந்தைகளுடன் செய்துகொண்ட
உடன் பாட்டின்படி அவர்கள் சொல்லிய கதையின் சுருக்கத்தை இங்கெழுதுகிறேன்.
ஸூவர்ணம் சொல்லுகிறாள் “முத்தம்மாள்
ருதுவாகிப் பத்து வருஷம் விவாகம் நடக்காமல் வீட்டில் இருந்தாள். அவளுடைய தாயார்
இறந்து எட்டு வருஷமாகிறது. முத்தம்மா தன் தாயுடன் பிறந்த மாமனாகிய வீரப்ப
முதலியார் வீட்டிலே குடியிருந்து கொண்டு வந்தாள்.”
மேனகை சொல்லுகிறாள்: “ஏ ஸூவர்ணம், அந்த
வீரப்ப முதலியார் பராக்கிரமங்களை யெல்லாம் சொல்லு; உன்னுடைய வித்வத்தை
யெல்லாம் சரியானபடி காண்பி.”
ஸூவர்ணம் சொல்கிறாள்: “வீரப்ப முதலியார்
பராக்கிரமங்களெல்லாம் உனக்குத்தான் அதிகம் தெரியும். நீயே சொல்லு.”
மேனகை (சொல்லுகிறாள்:)
“அவருக்கு தெரியாத பாஷை கிடையாது. அவருக்கு தெரியாத
சாஸ்திரம் கிடையாது. அவருக்கு தெரியாத வியாபாரம், அவருக்கு
தெரியாத தொழில், அவருக்கு தெரியாத தந்திரம் ஒன்றுமே
கிடையாது. ராஜாக்களை யெல்லாம் பேச்சால் மயக்கி விடுவார். பூமண்டலத்துக் குழந்தைகளை
யெல்லாம் வசமாக்கி வைத்திருக்கிறார். பெரிய பெரிய வாள் கொண்டு எதிர்த்த போதிலும்,
தன்னுடைய பிரம்பினாலே பின்னென்று பின்னித் துரத்தி விடுவார்.
அவருடைய பராக்கிரமம் சொல்லி முடியாது.”
“அப்படிப்பட்ட வீரப்ப முதலியார் வீட்டில் இந்த
முத்தம்மாளும் அவளுடைய தங்கை கண்ணம்மாளும் ருதுவாயி நெடுங்காலம் விவாகமில்லாமல்
இருந்தார்கள். போன மாசம் முத்தம்மாளுக்க்கு கல்யாணம் நடந்தது. கண்ணமாளுக்கு
இன்னும் கல்யாணம் நடக்கவில்லை.”
ஸூவர்ணம் சொல்லுகிறாள்: “அவர்களுடைய குடும்பம் கெளரவமானது ஸாதாரணமாக
இருந்தால், யாரேனும் ஓரு பிள்ளையிடம் தள்ளிவிடுவார்கள்.நல்ல
மாப்பிள்ளை வரவேண்டு மென்று காத்திருந்தார்கள். காலம் வேண்டுமானாலும் கல்யாணம்
பண்ணிக் கொள்ளாமல் இருக்கலாம். பார்ப்பாரை போலன்று. ஆனால், இப்படிக்
கலியாணமில்லாமல் இருக்குங் கால முழுதும்
கூண்டுக்கிளிபோல அடைப்பட்டுக் கிடக்கவேண்டும். புருஷர் முகத்தையும் வெயிலையும், வெளி
வீதியையும் பார்க்கக் கூடாது சாஸ்திரம் அப்படி.
“முத்தம்மாளுக்கு இதற்கு முந்தியே நாலைந்து பேர் வந்து
ஜாதகம் பார்த்தார்கள். ஜாதகம் பொருந்தியிருந்தது. பிள்ளை வீட்டுகாரர்
ஸம்மதப்பட்டிருந்தார்கள். ஆனால் வீரப்ப முதலியாருக்கு ஸம்மதமில்லை.வீரப்ப
முதலியார் ஸம்மந்தப்பட்ட இடங்களில் முத்தமாளுக்கு ஸம்மத மில்லை. இருவரும் இணங்கிய
ஸமயங்களில் வேறு பெண்ணுக்கு மனம் வைத்து மாப்பிள்ளை வீட்டார் கலைந்து போனது
முண்டு.
“இங்கனம் மாப்பிள்ளைகள் பொருந்தாமல் முத்தம்மா
காத்துக்கொண்டு, அறைக்குள் அடைந்து கிடக்கும்போது, சென்ற இரண்டு வருஷங்களின் முன்பு வேதபுரத்தில் பெண் விடுதலைக் கக்ஷி
உண்டாயிற்று. எங்கள் தகப்பனார் (வேணு
முதலியார்) தான் அந்தக் கக்ஷியை
ஆரம்பித்து விட்டார். உடனே அந்தக் கக்ஷியை பிராமணரிலும் முதலிமாரிலும் பல பெண்கள்
அங்கிகாரம் செய்துகொண்டார்கள். அவர்களில் முத்தம்மா ஒருத்தி.
“அவள் தனது மாமன் வீரப்ப முதலியாரிடம் தனக்கு விடுதலை
வேண்டுமென்று கேட்டாள். அவரோ எப்பொழுதுமே விடுதலையில் பிரிய முள்ளவர். எதிலும்
விடுதலையே சரியென்று சொல்லும் வழக்கமுடையவர். ஹிந்துக்களைப்போல் இராமல் தாம் ஸகல
அம்சங்களிலும் ஐரோப்பியாக மாறிப் போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர். அவருடைய
கொள்கை விடுதலை யாகையால் அவரிடம் முத்தம்மா தனக்கு விடுதலை வேண்டுமென்று கேட்டபோது, ‘அப்படியே கொடுத்தேன். அறைக்குள்
அடைந்திருக்க வேண்டாம். இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் ஸஞ்சரிக்கலாம்.
எல்லோருடனும் பேசலாம்’ என்று உத்தரவு கொடுத்து
விட்டார். வீரப்ப முதலியார் பத்தினிக்கு மீனாக்ஷி என்று பெயர். அந்த மீனாக்ஷி
யம்மைக்கு முத்தம்மா விடுதலை பெறுவதில் ஸம்மத மில்லை.
“ஐயோ, இதென்னடா கொடுமை. தாய்
தகப்பனரில்லாமல் நம்மைச் சார்ந்திருக்கிற பெண்கள். அவர்களுடைய அம்மாவும், அப்பாவும் இருந்தால் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று நாம் சும்மா
இருந்து விடலாம். இப்பொழுது ஊரார் நம்மைக் குற்றஞ் சொல்லுவார்கள். ஏற்கனவே
நம்முடைய விரோதிகள் நாம் எப்பொழது கால் நழுவப் போகிறோ மென்று காத்துக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கண்முன்னே இந்தப் பெண் ஒரு பக்கம் நம்மைக் கேலி
பண்ணுகிறாள்.விடுதலையாம்! விடுதலை! அவர் என்னவோ உத்தரவு
கொடுத்தாராம்! நான் நாற்பது வயது ஸத்ரீ.
அவரிடம் கேளாமல் ஒரு ரூபாய்க்குப் பயறு வாங்கினால், அவருக்கு காலாக்நிபோலக் கோபம்
வந்துவிடுகிறது. என் இஷ்டப்படி இந்த வீட்டில் ஒரு காரியமும் நடக்கவில்லை.
பெரிய பெண்களுக்கு விடுதலை கிடைத்த பிறகன்றோ சிறு பெண்களுக்குக்
கிடைக்கவேண்டும்’ என்று பலவிதமாகக் கூவி
முத்தம்மாளைச் சாஸ்திரப்படி இருட்டிலேயே வைத்து மினாக்ஷி யம்மை காப்பாற்றிக்கொண்டு
வந்தாள். அவளுடைய வாரத்தைப்படியே நடந்தது.
“மீனாக்ஷியம்மை எப்படி யெல்லாம் சொன்ன போதிலும்
குடும்ப விஷங்களில் வீரப்ப முதலியார் மினாக்ஷி யம்மை சொற்படியே நடநத்து
வந்தபடியால், முத்தம்மாளுடைய விடுதலைக்குக் கெடுதலை
நேரிட்டது. முத்தம்மா முணுமுணுத்து சொல்ல முடியாது. எப்பொழுது போனாலும் பெண்
விடுதலைப் பாட்டுப் பாடுவாள். எப்பொழுதும் அதே பேச்சு; அதே தியானம்.
“இப்படியிருக்கையில், போன மாஸம்
அவளுக்கு விவாகமாய் விட்டது. மாப்பிள்ளை செங்கற்பட்டு வியாபாரியின் மகன்.
வேதபுரத்தில் ஒரு வியாபார ஸ்தலத்தில் குமாஸ்தாவாக இருக்கிறான்.
“கல்யாணமானது முதல் முத்தம்மா விடுதலைக்குள்ளே ஒரே
பாய்ச்சலாகப் பாய்ந்து விட்டாள். அவள் புருஷனும் ஸம்மதப் பட்டிருக்கிறான்.
ஜாதிக்கார ரெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு மூக்கின் மேலே விரலை வைக்கிறார்கள்.
முத்தம்மா தனியே வண்டி போட்டுக் கொண்டு ஊரெல்லாம் இஷ்டப்படி சுற்றுகிறாள். பொதுக்
கூட்டம் ஒன்றுக்குக்கூடத் தவறுவதில்லை. ஸாயங்காலம் ஆறு மணியானவுடன் வண்டி
போட்டுக்கொண்டு தன் புருஷன் வேலை செய்யும் வியாபார ஸ்தலத்துக்ப் போகிறாள்.
அங்கிருந்து புருஷனை யிட்டுக் கொண்டு கடற்கரையிலே வண்டி யோட்டுகிறாள்.
“ஐரோப்பியர் வீட்டிலே போய் விருந்து சாப்பிடுகிறாள்.
தன் புருஷனையும் சில ஸமயங்களில் அழைத்துக்கொண்டு போகிறாள்.
“தனது தங்கையாகிய கண்ணம்மாளையும் சீக்கீரம் மாமன்
வீட்டிலிருந்து வெளிபடுத்தித் தன் புருஷனுடைய ஸ்நேஹிதனாகிய ஒரு பஞ்சாபி
வியாபாரிக்குக் கல்யாணம் செய்துக் கொடுக்கப் போவதாகச் சொல்லுகிறாள். பைஸைக்கிள்
பழகிக் கொண்டிருக்கிறாள். நாளுக்கு முன்பு கவர்னர் வீட்டு விருந்துக்குத் தன்னுடைய
தங்கையை மீனாக்ஷி யம்மையிடம் சொல்லாமல் அழைத்துக்கொண்டு போய் வந்தாள். இந்த ஒரு
மாஸத்துக்குள் இத்தனை மாறுபட்டது ஆச்சிரியத்திலும் ஆச்சர்ய மல்லவா?
“நான் ஒரு நாள் அவளை உம்முடைய வீட்டுக்கு வரச்
சொல்லுகிறேன். பத்திரிக்கைகாரென்று சொன்னால் அவசியம் வந்து பார்ப்பாள். அப்பொழுது
நீரே பார்த்து இவள் தமிழச்சியா, வெள்ளைக்காரச்சியா என்று
ஆச்சர்யபடுவீர்கள்...”
இங்கனம் ஸூவர்ணம் சொல்லியவுடன், மேனகை “அவளை நானே
உமது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்றாள்.
எனக்கு இதிலெல்லாம் அதிக ஆச்சர்ய மொன்றும் தோன்றவில்லை யாயினும், மேற்படி
குழந்தைகளைத் திருப்தி செய்யும் பொருட்டாக, ‘அப்படியே அழைத்துக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்புகையில் அவர்களுடைய பிதாவாகிய வேணு முதலி
சிரித்துக்கொண்டு எதிரே வந்தான்.
“என்ன முதலியாரே, குழந்தைகளுக்கு
விடுதலைப் பைத்தியம் ஏறிப்போயிருக்கிறதே!” என்று கேட்டேன்.
வேணு முதலி பாடுகிறான்:
“அக்கினிக்
குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு -- தழல்
வீரத்தில் குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ?”
தத்தரிகிட தத்தரிகிட
தித்தோம்.
“இந்தப் பித்தன் பாட்டை எவன் கேட்டுக் கொண்டிருப்பான்!” என்று நகைத்து விட்டு
வேணு முதலியிடம் விடை கொண்டு எனது வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
* * *
இந்தச் சிறுகதையைக் வலைத்தள வளங்களில் தேடிக் கணினியில் பதிவிறக்கி பதிவிட ஏதுவான word வடிவில் அமைத்துத் தந்த முனைவர் கார்த்தீபன் ஹரிகிருஷ்ணனுக்கு மகிழ்வுடன் இங்கே நன்றி பதியனிடுகிறேன்.
No comments:
Post a Comment