Wednesday, December 8, 2021

 

 

வ.வே.சு. ஐயரின்

மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்.

பதிப்பு ஆண்டுக் குழப்பங்கள்- விளக்கங்கள்.

 

பேராசிரியர். இராஜ முத்திருளாண்டி

 

தொல்காப்பியத்திலேயே கதை சொல்வது (‘பொருளொடு புணர்ந்த நகைமொழி’ ) பற்றிய குறிப்புகள் உள்ளன என்ற நமது மரபுப் பெருமையின் ஊடே, பத்தொன்பதாம் நூற்றாண்டின்  இறுதிப் பகுதியில் தமிழில் புதிதாகக் கிளைத்து வளர்ந்திருக்கும்  ‘மேல் நாட்டுச் சரக்கு’ (புதுமைப்பித்தன் சொல்)  சிறுகதை என்பர். இந்த நவீன  இலக்கிய வகையான சிறுகதையின், அதன் வரலாற்றின் ‘மூல மூவர்கள்’  எனப் பாரதியார், மாதவையா, வ.வே.சு ஐயர் ஆகிய மூவரையும் தயக்கம் ஏதுமின்றி நாம் சொல்லத் தக்க காரணங்கள்  விரவிக் கிடக்கின்றன. இம்மூவருள், தமிழ்ச் சிறுகதைக் களத்தில், மொத்தம் எட்டுச் சிறுகதைகளே தம் வாழ்நாளில் எழுத வாய்த்த வ.வே.சு ஐயர் அவர்கள் அதிகம் கொண்டாடப்பட்டு வருவது ஒருவகை மரபாக வளர்ந்துவிட்டது. காலநிரலில் வைத்துப் பார்த்தாலும், படைத்தளித்துள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை, அவற்றின் உட்பொதி பொருள், வகைகள் எனபனவற்றைப் பார்த்தாலும் பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் என்பதுதான் உரிய, சரியான வரிசை.

 

ஆனால் பாரதியார், மாதவையா ஆகிய இருவருடைய சிறுகதைப் படைப்புகளையும் அவர்கள் வாழ்ந்த காலச்சூழல், பொது மற்றும் வாசக மக்களது கல்வி,வாழ் நிலைகள், சமுதாயப் போக்குகள், படைப்பாளிகளின் சிந்தைப் பாங்கு  முதலியவற்றுடன் இணைத்துக் காணாமல்,  அவர்களது படைப்புகள் ‘நவீன சிறுகதை இலக்கண வகையுள் வரவில்லை’  என ஒற்றைவரித் தேராத் தீர்ப்புகள் குவித்து -  மேனகை பெற்றுத் தந்த  தமது குழந்தையை நிர்த்தாட்சன் யமாக ஏற்றுக்கொள்ள மறுத்து விலகிச்சென்ற   விசுவாமித்திரர் போலக் - கடந்து சென்றுள்ளனர். இவ்விசயத்தில் குறிப்பிட உரியது யாதெனில் சிறுகதைக்கான வரையரை எதுவும் அந்த இலக்கிய வகை தோன்றியது முதல் இன்றுவரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதான வகையில் நிர்ணயமாகவில்லை என்பதும், முற்குறிப்பிட்டிருக்கும் மூவரது படைப்புக் காலத்தில் சிறுகதை இலக்கணமென ஏதும் தமிழில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை  என்பதும் மறுக்கப்படவியலா உண்மையாகும். ஆக, எந்த இலக்கணக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தப் படைப்பாளிகளின் எந்தெந்தப் படைப்புகளைச் சீர்தூக்கி எடையிட்டார்கள் என்பது புரியாத  புதிராக மண்டியுள்ளது.

பாரதியாரைப் பொறுத்தவரை அவரை ஒரு ‘மகாகவி’ எனப் பலரும்  ஏற்றுப் போற்றியதால் அவரது உரைநடைப் படைப்புகளைக் குறிப்பாகச் சிறுகதை வார்ப்புகளை ஆய்வாளர்கள்  கண்டுகொள்ளவில்லை என்பது இவ்வாறான ஒருதலையான மறுப்புகளுக்கானதொரு காரணமாக அறியப்பட்டுள்ளது. இதையே சிட்டி- சிவபாதசுந்தரம்  “ தமிழ்ச் சிறுகதைப் படைப்பில் பாரதியின் பங்கு என்ன என்பதில் பலருடைய கவனமெல்லாம் கவிதையளவில் நின்றுவிட்டதால் தீவிரமாக ஆராயப்படவில்லை” என்று ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளனர். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், 1978 பக் 47). தமிழ்ச் சிறுகதையின் மூல மூவர்களுமே சமுதாய உணர்வு பொங்கத், தமது எழுத்துகளின் வழியே அடிமைப்பட்டு, விழிப்புணர்வின்றிக் கிடந்த தம் காலச் சமுதாயத்தில் பயனுறு மாற்றங்களை விளைவிக்கவே விழைந்தார்கள். அந்த நோக்கத்திற்காகவே, வேள்வித்தீ போலத் தமது எழுத்துக்களை உணர்வூட்ட வளர்த்தார்கள். ஆனால் அதையே குறையெனக் காரணங்காட்டிப், ‘பிரச்சார நெடி’ அதிகம் என்ற முத்திரை மாதவையாவின் சிறுகதைகள்மீது அழுத்தமாகக் குத்தப்பட்டு, அவரது சிறுகதைகள் அறவே ஒதுக்கப்பட்டன. இவ்விசயங்களையெல்லாம் ஆழ்ந்து, விரித்து, விவாதிக்கக் களவெளி விரிந்து கிடக்கிறது.

 

தமிழின் முதல் சிறுகதை எது? தமிழின் முதல் சிறுகதையைப் படைத்தவர் யார்? என்பதான விவாதங்களை நான் வேறிடத்தே நின்று களமாடுவதுதான்  பண்பானதாக இருக்கும். சிறந்தோரது படைப்பு களை மாதந்தோறும் வழங்கி வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க ஊக்கப்படுத்தும் அரும்பணியைச் சிறப்பாக ஆற்றிவரும் சிறுவாணி வாசகர் மையம், தனது வெளியீடாகப் பதிப்பிக்கும் வ.வே.சு. ஐயரவர்களது மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் தொகுப்பில் - இனியர் திரு. ஜி.ஆர் பிரகாஷ் அவர்களால்  விருந்தினர் இடமாகப் பேரன்புடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் சிற்றிடத்தில் – அவ்வகை விவாதங்களை நேர்மையுடன்  தவிர்க்கிறேன். அதற்கிசைய, மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பின் பதிப்பு  தொடர்பான விளக்கங்களளைப்  பதியனிட்டு   இவ்வருகையை நான் அர்த்தப்படுத்த முற்படுகிறேன்.

மாதவையா (53), வ.வே.சு ஐயர் (44), பாரதியார் (39) என்பதே இம்மூவரும் வாழ்ந்த ஆண்டு வரிசை. இவர்தம் குறுகிய வாழ்நாளில், அதனிலும் குறுகிய படைப்புக் காலமே இவர்களுக்கு வாய்த்திருக்கும். அதிலும் வ.வே.சு ஐயர் வெளிநாட்டுப் படிப்பு, வெவ்வேறிடங்களில் வழக்குரைஞர் பணி, விடுதலைப் போராட்டத் தீவிரச் செயல்பாட்டாளர் அணிச் சேர்க்கையால் தலைமறைவு வாழ்க்கை என்ற இடர்மிகு குறுக்கீடுகளிடையே மொத்தம் எட்டுச் சிறுகதைகளே படைக்கும் வாய்ப்பமைந்தது அவருக்கு. மேலும், பிற்காலத்தில் நெடிய வரலாற்றுக் கதைகள் எழுதி மக்களிடையே வீர உணர்வையும் நாட்டுப் பற்றையும் வளர்க்கும் நோக்கத்திற்கான ‘கைப்பழக்கமாகவே’ தாம் சிறுகதைகள் எழுதிவருவதாக ஐயர் தன் நண்பரொருவர்க்கெழுதிய கடித வாசகம் தெரிவிக்கிறது. ‘கைப்பழக்கத்திற்காக’ எழுதுவது என்பதால்கூட ஒருவேளை அதிக எண்ணிக்கைக் கதைகள் அவரிடமிருந்து நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்.

ஐயர் அவர்களது சிறுகதைகளின் ஒற்றைத் தொகுப்பான  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் பதிப்பு ஆண்டு, தொடர்புடைய பிற விவரங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் அண்மை வெள்ளம்போல எங்கும் பரவியுள்ளன. இது நாம் கொண்டாடும் ஒரு படைப்பாளி பற்றிய ஆய்வுக் குறைபாடு; உண்மை தேட முயற்சியின்மை; ‘தடங்கண்ட பாதையிலேயே’ (க.நா.சு. சொற்பிரயோகம்)  சுகப்பயணம் என்ற மோலோட்டத் தமிழ்ப் போக்குகளிள் வெளிப்பாடு என்பதன்றி வேறில்லை. இந்நிலை வருத்தமளிக்கிறது. ஏறத்தாழ இரு நூற்றாண்டுக்குள்ளான கால   வரலாறு கொண்டதுதான் தமிழ்ச் சிறுகதையின் பயணம். இக்குறுகிய காலப்பரப்பில், நாம் மிகவும் கொண்டாடும் படைப்பாளியான வ.வே.சு ஐயர் அவர்கள் குறித்து உரிய வரலாற்றுத் தரவுகளைத் தேடிக்காணாமல் வழுக்கிக் குழப்பங்கள் சூழத் தொடர்ந்து தடுமாறுகிறோம். சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத்தக்க மூலவர்களில் ஒருவரான வ. வே. சு. ஐயர் அவர்களது சிறுகதைகளின் ஒரேயொரு தொகுப்பு, அதன் பதிப்பு முதலியன குறித்து  கூர்ந்து ஆராயாத விவரங்கள் நூல்களில், கட்டுரைகளில், இணைய/ வலைத்தளங்களில் மானாவாரியாக விதைத்து விடப்பட்டுள்ளன.

எவரையும் குற்றம் சாட்டிக் குறைப்படுத்தும் எண்ணம் சிறிதுமின்றி, வரலாற்றை நேர் செய்ய, மேலும் கூர்ந்த ஆய்வுகளை வரவேற்கும் வளரெண்ணமுடன் இங்கே சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே பகிரப்படுகின்றன.இன்னுமுள.

 

·  திரு.பெ.சு.மணி (வ.வே.சு ஐயர் அரசியல்- இலக்கியப் பணிகள்,1913), ஐயரவர்களது வெளியீடுகளாகத் தந்துள்ள பட்டியலில் (பக்.139-140) மங்கையரக்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் 1916 என்று குறிப்பிட்டதோடு, விவரங்கள் ஏதும் தராமல், குளத்தங்கரை அரசமரம் கதை 1915ல் வெளிவந்துவிட்டது என்கிறார்.(பக்196). மேலும் அவர் குளத்தங்கரை அரசமரம் கதை மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் எனும் தொகுப்பு நூலின் முதற் பதிப்பில் (1917) சேர்க்கப்பட்டது என்றும் இரண்டாம் பதிப்பு 1927 என்றும் குறிப்பிட்டுள்ளார்.( பக். 198)

 

·       இரு திரு சிட்டி- சிவபாத சுந்தரம் ( தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், 1978) “ புதுச்சேரியில் அவர் அமைத்த கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் 1917 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற தலைப்பில்  ஐந்து கதைகள் மாத்திரம் அடங்கிய ஒருதொகுப்பை வெளியிட்டார்...... .... ...ஐயர் மறைந்த பின்னர் 1927இல் ஐயரின் மனைவி சார்பாக, திருவல்லிக்கேணி ( சுதந்திரச்சங்கு)  எஸ்.கணேசனால் இரண்டாம் பதிப்பொன்று வெளியிடப்பட்டது.” (பக் 55)

 

 

·        சோ.சிவபாத சுந்தரம்  தனது கட்டுரையில் (தமிழில் சிறுகதை,1977) 1917ல் வெளிவந்த வ.வே.சு ஐயரது சிறுகதைத் தொகுப்புதான் தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்றறிவிப்புச் செய்தார். ஆனால் அவரே நிலை மாறித், (1982) தன் கருத்தை மாற்றிக்கொண்டு, வ.வே.சு ஐயருக்கு முன்பே ‘ வியக்கத்தக்க உத்திகளுடன் புத்தம் புதிய சிறுகதையைப் படைத்த பெருமை பாரதியாரைச்சேரும் என்ற உண்மையை உணர்வார்கள் என்பது என் முடிபு’ என நின்றார்.

 

·        முனைவர் கோ.கேசவன் ( தமிழ்ச் சிறுகதைகளில் வடிவம், 1988 பக் 28-29) “ இவர் 1915-1917இல்  எழுதி 1920 களின் பிற்பகுதியில் வெளியான மங்கையர்க்கரசியின் காதல் என்ற தொகுதியில் எட்டுக்கதைகள் இருக்கின்றன என்று பட்டும் படாமலும் கால நிர்ணயம் செய்திருக்கிறார்.

 

·       ஆசிரியர் பெயரில்லாமல் (தேர்ந்த சிறுகதைகள், யாழ்ப்பாணம் ஶ்ரீசுப்பிரமணிய புத்தகசாலை, இரண்டாம் பதிப்பு, 2002) இலங்கையிலிருந்து வந்துள்ள நூலில் ‘வ.வே.சு....1915க்கும் 1917க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழில் சிறுகதைகள் எழுதினார்.... அவையே மங்கையர்க்கரசியின் காதல் என்ற தொகுப்பாக 1925ல் வெளிவந்தன. இதில் அவர் எழுதிய எட்டுச் சிறுகதைகள் அடங்கி இருந்தன.அதில் ஒன்றுதான் குளத்தங்கரை அரசமரம் என்று கதைக்கப்பட்டுள்ளது.

 

இணைய தளங்களிலோ  எண்ணற்ற வேறுபாடான கருத்துகள்.

 

o   முனைவர் இரா.பிரேமா ( வரலாற்று நோக்கில் சிறுகதை வளர்ச்சி,www.tamilvu.org) “ வ.வே.சு ஐயர் 1912 ஆம் ஆண்டு கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார்.. ......குளத்தங்கரை அரசமரம் ...... ....கதை 1913 ஆண்டு விவேகபோதினி இதழில் வெளிவந்தது.’’ என்று பாடம் எழுதியுள்ளார்.

 

o   முனைவர் ரேவதி (revathytamil123.blogspot..com, அக்டோபர் 2020) “குளத்தங்கரை அரசமரம் சொன்னகதை விவேக போதினி  என்ற மாத  இதழில்  1915 செப்டம்பர் அக்டோபர் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது  எனப் புதுக்கதை எழுதியுள்ளார்.  இக்கூற்றின் முற்பகுதி உண்மையும் பிற்பகுதிக் கலப்பால் நீர்த்துவிடுகிறது.

 

o   Tamilstories_sakthi.blogspot.com/ 2010/01 “வ.வே.சு. ஐயர் 1912 ஆம் ஆண்டு கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய ஐந்து கதைகள் கொண்ட தொகுதியை வெளியிட்டார். .......(குளத்தங்கரை அரசமரம்) கதை 1913 ஆம் ஆண்டு விவேகபோதினி இதழில் வெளிவந்தது “ எனக்குறிப்பிடுவதால்  கதை பிறந்த காலத்திற்கு முன்பே கதைவெளியான ஆண்டைக் கணித்துள்ளதாகக் கொள்ளவேண்டியுள்ளது.

 

o   Ayanulagam.wordpress.com 12/72007&13/7/2007 வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் முதன் முதலில் அறிமுகம் விவேக போதினியில்” அம்மணி அம்மாள் பெயரில் என்ற அபூர்வ விவரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

 

o   Siliconshelf.wordpress.com மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பு 1917இல் வெளிவந்தது. ஆனால் குளத்தங்கரை அரசமரம் சிறுகதை ஏதோ ஒரு பத்திரிகையில் 1915 ல் வெளிவந்திருக்கிறது எனும் நுட்பத் தகவல் வழங்குகிறது.

 

o   Aekanthan.wordpress.com/ 2017/14-12-2017தமிழின் முதல் சிறுகதை ....  ..... ...வ.வே.சு ஐயரால் எழுதப்பட்டது.அவருடைய மேலும் சில கதைகளுடன் ஒரு சிறு தொகுதியாக அவரால் 1910ல்வெளியிடப்பட்டது. “  எனக் குழந்தை பிறக்கு முன்னே பெயர்வைத்துப் பள்ளியிலும் சேர்த்த விந்தை காட்டியுள்ளார்கள்.

 

இடக் குறுகல் காரணமாக இன்னும் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளை அடுக்குவதை விடுத்துப் பொதுப்படையாகப் பார்த்தால் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் தொகுப்பு வெளியான ஆண்டு  1910 முதல்  1912 ,1915, 1917, 1920, 1925 எனத் தோன்றியபடியெல்லாம் பலவாறாக ஆண்டு மைல்கல் நட்டு வருவதைக் காண முடிகிறது. இன்னும் தேடினால் எடுத்துக் காட்டியுள்ளவற்றைக் காட்டிலும் விநோதத் தகவல்களில் இடறும் நிகழ்வுகள் நமக்கு ஏற்படும் என்பது நிச்சயம்.

 

சரி, இத்தொகுப்பு குறித்து இதுவரை ஆய்ந்து, ஆதாரங்கள் கையிருப்பில் கொண்டு, அறியக்கூடிய  மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் என்ற தொகுப்பு குறித்து உண்மை விவரங்களை அறிந்து கொள்வோம்.

·       மங்கையர்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் என்ற தொகுப்பு ஐந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக,  பதிப்பு ஆண்டு குறிப்பிடப்படாமல், புதுச்சேரி கம்ப நிலையப்  பிரசுரம்  என வெளிவந்துள்ளது. .இந்நூல் எப்போது வெளியிடப்பட்டு இருக்கலாம் என்பது இப்போது வரை யூகங்களின்  அடிப்படையாகவே நிர்ணயிக்கப்பட்ட வேண்டியதாக இருக்கிறது.

·        யூகங்களின் அடிப்படையில் ஆண்டு நிர்ணயம் செய்யும் அவசியம் நிலைபெறும்போது நுட்பமான காரணிகளைக் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.  கீழ்வரும் தரவுகளைத் துணைக் கொண்டு நாம் மேற்செல்லலாம்.

 

-    வ வே சு ஐயர் அவர்களது காலத்தில் வெளியிடப்பட்ட

முதல் தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் மட்டுமே இருந்தன அவற்றுள் குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதையும் ஒன்றாகும். இக்கதை முதலில் 1915 செப்டம்பர்- அக்டோபர் ஆகிய இரு மாத  விவேக போதினி இதழ்களில், இரு பகுதிகளாக ஸூ.பாக்கியலக்ஷுமி அம்மாள் என்பவர் பெயரில் வெளிவந்துள்ளது. இந்த பாக்கியலட்சுமி அம்மாள் ஐயரின் மனைவி பெயர் என்று சொல்லப்பட்டாலும்  இப்பெயரில் ஐயரவர்கள் இக்கதைக்கு முன்னும் பின்னும் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிட உரியதாகும்.  (1915 இல் ஸூ.பாக்கியலக்ஷுமி பெயரில் வெளிவந்த கதையைப்  பின்னர் தன் தொகுப்பில் ஐந்தாவது, கடைசிக் கதையாக ஐயரவர்கள் இணைத்துள்ளார் ஆனால் அதை முன்னரே தன் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் விவேக போதினி இதழில் வெளிவந்தது என்ற குறிப்பினை இத்தொகுப்பின் முன்னுரையில் அல்லது வேறு எங்கும்  ஐயர் அவர்கள் குறிப்பிடவில்லை.) ஆக குளத்தங்கரை அரசமரம் கதை விவேகபோதினியில்  1915இல் வெளியிடப்பட்டுள்ளதால் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள் தொகுப்பு  1915 க்கு பிறகு தான் உறுதியாக வெளிவந்திருக்க வேண்டும்.

 

-     அடுத்ததாகப் பலர் இத்தொகுப்பு 1917இல் வெளிவந்திருக்கிறது என்று  எந்த ஆதாரங்களும் இன்றிக்  குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள் இணையதளங்களிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் பலர் இந்த ஆண்டைக்  குறிப்பிடுகிறார்கள். ஆனால் தொகுப்பு நூலில், முதற் பக்க ஆசிரியர் பெயர் குறிப்பு உள்ள பக்கத்தில் “இவை சந்திரகுப்தன் சரித்திர ஆசிரியர் வெ. சுப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை”  என்ற குறிப்பு காணப்படுகிறது. இதனடிப்படையில்  பார்த்தால்,  இத்தொகுப்பு சந்திரகுப்தன் சரித்திரம் வெளியான 1918 பிறகுதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதானே உண்மை.  பலர் பலவாறு பல ஆண்டுகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இத்தகைய தரவுகளை யாரும் கவனித்து   நேர் செல்லவில்லை  என்பது புலனாகிறது.

-    தமிழகத்தின் சிறந்த ஆவண நூலகமான ரோஜா முத்தையா நூலகத்தில் (RMRL)வ.வே.சு. ஐயரவர்களது  படைப்பான மங்கையர்க்கரசியின் காதல் இரு பதிப்புகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ( RMRL Shelf Mark 007835 & RMRL Shelf Mark 057244,009645) இவற்றுள் எண் 007835 உள்ளது  108 பக்கம், ஐந்து சிறுகதைகள் கொண்டது., கம்ப நிலையம் புதுச்சேரி வெளியீடு. பதிப்பு ஆண்டு நூலில் இல்லாததால், நூலகத்தார் கால நிர்ணயப்படி 1920 எனத் தங்கள் பதிவில் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள்.  பிற இரண்டும் ஆண்டு 1927 நூலில் உள்ளது. எட்டுக்கதைகள் கொண்ட இரண்டாம் பதிப்பு பதிப்பாளர் சென்னை எஸ். கணேசன்.

 

இவற்றின் அடிப்படையில் பார்த்தோமானால் தமிழ்ச் சிறுகதையுலகில் பெரிதும் கவனத்தைக் கவர்ந்திருக்கும் வ.வே.சு. ஐயரவர்களது சிறகதைகளின் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் முதற் பதிப்பு உறுதியாக 1918 அல்லது அதற்குப்பின்னரே ( ஐயர் 1924இல் இறப்பதற்கு முன்) வெளியாகி இருக்க முடியும்.  எந்த ஆய்வும் முற்றுப்புள்ளி பெறுவதில்லை என்பதே தோய்ந்த ஆய்வுக் கோட்பாடு. எனவே இப்பொருள் குறித்து, இந்நிலையிலிருந்து இன்னும் தேடலாம். தேடுவோம்.

 

பின் குறிப்பு ( சற்றே நீளமானது) :-

 

வ.வே.சு ஐயரது படைப்புகள்  பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலும் நூல்கள் கட்டுரைகள்  எழுதியுள்ள  பலர் 1913 1915 1918 என தத்தமக்குத் தோன்றியது போல மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பு நூல் வெளியிட்ட ஆண்டினைக் கணித்துள்ளார்கள் எந்த அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

 

 இக்கட்டுரையை நிறைவு செய்யும் தருணத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழகப் பொதுத்தேர்வாணயத்தின்  குரூப் 2  தேர்வுகளுக்கு உதவும் நல்ல நோக்கத்துடன் தயாரித்து இணையதளத்தில் உலவ விட்டிருக்கும் 8 பக்கத் தகவலைக் காண நேர்ந்தது. ஒரு பக்கத்தில் வ வே சு ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையை 1913இல் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் .இதை உண்மை என்று நம்பிப் போட்டித் தேர்வுகளில் விடையளிக்கும்  மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

இதுபோலவே பல்கலைக்கழகங்களில் இணையதளம் மூலமாக அளிக்கப்படும் பாடக் கோப்புகளில் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் பதிப்பித்த ஆண்டு குறித்து தவறான தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன.வலைத்தளங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் இணையதளம் புகுந்து எவரும் எது வேண்டுமானாலும் பதிவிட்டுச்  செல்லலாம் என்ற வரம்பற்ற சுதந்திரம்  ஆராயாத, தவறான,  மற்றவர் சொன்ன தகவல்களையே வீசிச் செல்லும் போக்கினை வளர்த்து இருக்கிறது. தகவல்கள் தேடி இணையதளங்களை அணுகுவோர் உண்மையற்ற தகவல்களைப்  பெரும் அவலம் அதிகமாகி வருகிறது. . மந்தை மனநிலையில், சாய்கிற பக்கமே சாயும் போக்கில் மற்றவர் சொன்ன கருத்துக்களை ஆராயாமல் தத்து எடுத்துக்கொண்டு, தனது கருத்துகளைப் போலவே பலரும் இணையதளங்களில் பதிவிட்டுச் செல்கின்றனர். இத்தகைய போக்கு அறிவு வளர்ச்சிக்கு தடைக் கல்லாகும் எமது ஆதங்கம்.

*

 

2 comments:

  1. மிக அருமையான ஆய்வு! இது போன்ற ஆய்வுகளுக்கு அரசு தக்க உதவி செய்ய வேண்டும். ஆய்வாளரை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும். இரண்டும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. தமிழ் தமிழ் என்று கூச்சல் போட்டுப் பயனில்லை. ஆர்வமுள்ளவர் உரிய முறையில் இது போல ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு நடுநிலையுடன் நின்று ஆராய்ந்தால் தமிழ் எப்படி வளரும், எண்ணிப் பார்க்கலாம்! தஞ்சை கல்லூரி பேராசிரியை மாயச்சதுரம் அமைப்பது பற்றி சரஸ்வதி மஹால் ஓலைச் சுவடியைப் பார்த்து ஆராய்ந்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இவரைப் பற்றி யாருமே அறியவில்லை. தமிழை வளர்ப்போம்; நாளும் வளர்ப்போம்.பேரா இராஜ முத்திருளாண்டி அவர்களுக்கு எனது பாராட்டுகள்! ச.நாகராஜன்

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு அன்பிற்கு மகிழ்வும் நன்றியும்.

    நடுநிலையோடு நின்று கூறப்படும் கருத்துக்கள் 'ஒரு பால் கோடி' நிற்போரால் ஏற்கத் தயக்கங்கள் இருக்கின்றன.

    நமக்கு பற்றிய கவலையில்லை.

    தாங்கள் இத்தளம் வருகை புரிந்தமை, கருத்திட்ட மை எமக்கும் பெரும் உற்சாகம் தருநிழல்.

    ReplyDelete