பாரதி கூற விழைந்த நவதந்திரம்
முதலில் பஞ்ச
தந்திரம் என்றால் என்ன? என அறிவோம்
1.மித்திர பேதம் – நட்புப் பிரித்தல்- நட்பைக் கெடுத்துப் பகை உண்டாக்குவது.
2.மித்ரலாபம் – நட்பு உண்டாக்குதல்- தங்களுக்கு இணையானவர்களுடன் கூடிப் பகை இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் அடுத்துக் கெடுத்தல்- -பகைவரை உறவுகொண்டு அவர்களைக் கெடுத்து வெல்லுதல்
4.லப்தகாணி -பெற்றதை இழக்கச் செய்தல்- கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் –ஆராயாத செயல் தவிர்த்தல்- எந்த காரியத்தையும் தீர ஆராய்ந்து விசாரணை செய்யாமல் செய்வதைத் .தவிர்த்தல்
பஞ்ச தந்திரக்கதைகளின் பொதி கருத்து : காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதே.
முன்னதாகவே ஆழ்ந்து சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்குப் பஞ்ச தந்திரக் கதைகள் முதன்மை அளிப்பதும் காணலாம்.
மேற்போக்காகக் அணுகுவோர்க்குப் பஞ்ச தந்திரக் கதைகள் 'எப்படியாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்’ என்ற selfish கருத்தை அக்கதைகள் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து படித்துப்
பார்த்தால்தான், ஒரு நெறி வழிப்பட்ட சூழ்ச்சி முறைக் மட்டுமே ஆதரிக்கப்படுவது புலப்படும். யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதும் உடனறிய உரியதாகும்.
இனி, பாரதி கூறமுற்பட்ட நவதந்திரங்கள் என்ன எனக் காண்போம்.
பஞ்ச தந்திரக் கதைகளுக்கான வரலாறு போலவே தான் கூறப்போகும் நவதந்திரக் கதைகளுக்கும் ஒரு முன்னுரை அமைத்துள்ளா் பாரதியார்.
தனது நவதந்திரக் கதைகள் முன்னுரையாகப் பாரதி சொல்வது இது:
"வேதாரண்யம் என்ற
ஊரில் விவேக சாஸ்திரி என்றொரு பிராமணன் இருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள்.
அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான
நன்செய் நிலம் அவருக்கு இருந்தது. ஆனால் பிள்ளைகள், மூவருக்கும்
விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம்
மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப்
பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய் விட்டது. பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப்
படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த சாஸ்திரத்திலும், மற்றொருவனை
வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும்
தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார். கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை
கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தாராதலால், அரைவயிற்றுக்கு
ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு
வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை
அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்: -
வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது.
விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லி விட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்? என்றார். அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர். பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசு தேவன்; இரண்டாமவன் பெயர் காளிதாஸன்; மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் "கதை" கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள். விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி "குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்" என்றார். அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:- "கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்? என்றார். ?
"அதெப்படி?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
என்று முதல் நவ தந்திரம் (பயனறிதல் தலைப்பில்) தொடர்கின்றன 8 கதைகள்.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்:-
பாரதியார் கூறும் நவம்,
ஒன்பது எனும் பொருளில் அல்ல;
புதிய - அதாவது பழைய, பஞ்ச ( ஐந்து) தந்திரங்களல்லாத- காலத்திற்கேற்ற புதிய/ நவீன தந்திரங்கள் என்ற கருத்தில் நவதந்திரக்கதைகள் எனத் தலைப்பிட்டுப்
பயனறிதல், நம்பிக்கை என்ற இரு தந்திரங்கள் மட்டுமே சொல்லிச் சொன்றுள்ளார்.
முதல் தந்திரம் பயனறிதலில் 8 கதைகளும்
இரண்டாம் தந்திரம் நம்பிக்கையில் 8 கதைகளும் படைத்தளித்துள்ளார்.
காலன் விரைந்து வந்து அவரைக் கவர்ந்து சென்றிருக்காவிட்டால் குறைந்தது மீதமுள்ள, பாரதி சொல்லிவைக்கக் கருதியிருந்த 3 புதிய தந்திரங்களுக்கு- ஒவ்வொன்றுக்கும் எட்டுக் கதைகள் எனக் - கூடுதலாக 3x8 = 24 கதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் என யூகிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
அது நிகழாதது தமிழுக்கு இழப்புதானே.
*
No comments:
Post a Comment