Friday, September 24, 2021

 Principles of taxation:


ஆதியில் நம் முன்னோர்:


"காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே ,

மா நிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதெனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்துகொளினே ,

கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; 

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் 

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, 

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், 

யானை புக்க புலம் போலத் 

தானும் உண்ணான், உலகமும் கெடுமே ."


-புறநானூறு: 184


யானையை விளை நிலத்தில் விட்டால்,


யானை உண்ணுவதை விடக்

காலில் மிதிபட்டே அதிக நெல் சேதமாகும்.


அதுபோல அரசன் கெடுபிடியாக அதிக வரி வசூல் செய்தால் குடிமக்கள் இடர்பட நேரிடும்;

அவர்களது நல்லெண்ணத்தை இழக்கவும் நேரிடும்; 


நியாயமான வரியை அவர்கள் உவந்து கொடுக்குமாறு 

வழிவகை செய்து வாங்கினால் அரசுக்குத் தக்க வருவாய் கிடைக்கும் என்பது இதன் உட்பொருள் என்பதறிவோம்.

*

இதோ

1826 சிந்தனை:


தாண்டவராயமுதலியார் தொகுத்த 

'கதா மஞ்சரி'

யிலிருந்து...


அதிக வரியைக் கெடுபிடியாக வாங்கி மக்களை அல்லலுறச் செய்த மன்னனுக்கு அமைச்சர் சொல்லும் அறிவுரையாக கீழ்க்கண்ட செய்திகள்:-


"உருண்டோடுகிற குண்டுகள் மேல் வைத்த பொருளும், 


குடிச் சமாதானம் இல்லாத ராஜன் தலையில் வைத்த முடியும் நில்லாது."


"... இளைத்த குடிகளுக்கு ஊக்கங்கொடுத்து,

உரிய கருவிகள் கொடுத்து, உழவு செய்து பயிரிடுவித்து விளைந்ததற்குத் தக்கதாக இறை வாங்கி,


எளியாரையும் வலியாரையும் ஒப்ப எண்ணி பெருந்தண்டனையும், அபராதமும் (விதிப்பதை) நீக்கிக் 

காப்பாற்றினால்

குடிராசியும் லாபமும் உண்டாகும்."


"...பசுந்தழைகள் போட்டு, களை களைந்து தண்ணீரிறைத்து வேலியிட்டுக் காப்பாற்றிய தோட்டக்காரனன்றோ பிறகு நல்ல பலன்களை

அனுபவிப்பான்." 


இது 2021


நம்ம நிதியமைச்சர் டாக்டர் பழனிவேல் ராஜன் 

இதையே  " taxing the rich and sparing the poor" 

எனத் தனது பட்ஜெட் உரையில் அண்மையில் குறிப்பிட்டிருந்ததையும்-


வழி வழி 

ஒரே சிந்தனை எனும் 

நூற்கோர்த்து இணைக்கலாமன்றோ?

*

No comments:

Post a Comment