இலக்கியச்சொல் வரிசை--32
கலித்தொகை-11
கலித்தொகை-11
" துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு..."
கடும் வெய்யில். அங்கே ( கானகத்தில்) குடிக்கக் காணப்பட்ட நீர் சிறிதளவே. அதையும் யானையின் சிறு கன்றுகள் அறியாது கால்வைத்துக் கலக்கி விடுகின்றன.குடும்பக்கூட்டத்துத் தலைமை கொண்டுள்ள ஆண் யானை, தனக்குத் தாகமிருந்தாலும், முதலில் தன் துணை- பெண் யானை-யைக் குடிக்கச் செய்த பின்னரே, நீர் எஞ்சியிருந்தால் தானுமருந்தித் தாகம் தீர்த்துக்கொள்ளும் - பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு- எனும் அன்புக் காட்சிபடமென நம் கண்முன் விரிகிறது.
இதேபோல, நெகிழ்த்தும் ஒரு இலக்கியக் காட்சியை நாம்ஐந்திணை ஐம்பது’ என்ற நூலில் மாறன் பொறையனார் எழுதிய பாடலிலும் காணலாம்.
( பாடல்:
சுனைவாய்ச் சிறு நீரை எய்தாது என்று எண்ணிய
பிணைமான் இனிது உண்ண வேண்டி, கலைமான் தன்கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி)
இங்கும் நீர் இருப்பது மிகக் குறைந்த அளவே.ஆண் மான் முன், பெண்மான் பின்.'நீயருந்து' எனும் பாங்கில் பெண் மான் நிற்கத், தன்இணை அருந்த, ஆண் மான் குடிப்பதுபோல் (கள்ளம்)பாசாங்கு செய்கிறதாம்..(பிணைமான் இனிது உண்ண வேண்டி, கலைமான் தன் கள்ளத்தின் ஊச்சும்..)
கானகத்து விலங்குகளின் இந்த அன்புக் காட்சிகளைக் காட்டி அவனிக்கு நம் முன்னோர்கள் சொல்வதென்ன?
தன் தேவையிருப்பினும், தனைச் சார்ந்து உடனிருப்போர் தேவைகள் நிறைவேறத் தியாகம் புரியவும் ஆயத்தமான துணையாயிருக்க வேண்டும்; உயிர்ப்பாதியென இணைகாக்கும் பண்பு வளர வேண்டும் என்பனவெல்லாம், மான் இணையை, யானைக் குடும்பத்தை முன்வத்து, நமக்குச் சொல்லப் படுவதாகவே நாம் கருத்திலேற்றுக் கடுஞ் சூழல்களிலும் சுற்றம் புரக்கும் பண்பும், பற்றாக்குறை நேர்வுகளிலும் பகிர்ந்துண்ணும் எண்ணமும் வளர்த்திருப்போம்.
*
No comments:
Post a Comment