இலக்கியச் சொல் வரிசை- 27
கலித்தொகை .(14) வரிகள் 14-15
கலித்தொகை .(14) வரிகள் 14-15
" செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ...''
பொருள் அவசியந்தான் மாந்தர்க்கு. ஆனால் 'பொருளை விட்டால், வேறு பொருள் இல்லை' எனும் கருத்துப் பள்ளத்தில் முயற்சியுடைய மாந்தர் விழுந்து கிடக்கக்கூடாது. பொருளின் அவசியம் மட்டுமே தலைக் கொண்டு, எவ்வாறாயினும் பொருளைத் தம்மிடம் குவித்துக் கொள்ளும் பேராசை நமை ஆட்டுவிக்கவைத்துவிடக் கூடாது.
பொருள்வரும் வழிகள் எப்போதும் அறம் விழுமியதாகப், பழி சிறிதும் விளைவிக்காததாகச்,சீரும் செம்மையும் நிறைந்ததாகவே இருக்க வேண்டும் என விரும்பினர் நம் முன்னோர். பழியெனின் உலகமே நமக்குக் கிடைக்குமெனின் ஒருபோதும் கொள்ளலர் என்பதே நம் மரபின் செழுமை.
நல்லதல்லாத - செம்மை தவறிய- வழிகளில் வரும் பொருள் ஒருபோதும் நிலைக்காது, உதவாது;மாறாகத் துன்பக் கேணியாகித் துயர் நிரப்பும் - தற்போதும் எப்போதும்- என நம்பி ஒழுகினர் நம் முன்னோர்.
பெருந்துன்பம் சூழ் நிலையிலும் தன் நிலைக்கு ஒவ்வாதன செய்யாப் பண்பே நமக்குரியதாதலால், பொருள் சேர்க்கும் முயற்சிகளில் நாம் பிறழ்நிலைகளில் இறங்கித் தாழ்ந்துவிடக் கூடாது. பிறர் அழக்கொண்ட எல்லாம் நாம் அழப்போம் என்ற தமிழ்மறையின் முழக்கம் நம் காதுகளையும் கருத்தையும் நிறைக்குமன்றோ என்றும்.
*
No comments:
Post a Comment