சும்மா வந்துவிடவில்லை
வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை!
இராஜ முத்திருளாண்டி
உலகின் மிகப்பெரிய
மக்களாட்சி நாடாக விளங்குகிறது இந்தியா. ஆங்கிலேயர்களது ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை
பெற்றுக் குடியரசான தருணத்திலேயே தகுவயதடைந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) என்ற மிக விசாலமான உரிமைப்பேற்றைத்
தன் குடிமக்களுக்கு வழங்கி, உலகையே ஆச்சர்யத்தில் திரும்பிப் பார்க்க வைத்தது
இந்தியா. தொடக்கத்தில் (1950) வாக்களிக்கத் தகுவயது 21 என்றிருந்து, 1988 முதல் வாக்களிக்கத்
தகுவயது 18 வயது நிறைவு என்றாகியுள்ளது.
இந்தியாவில் 1951-52 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல்
பொதுத் தேர்தல் வரலாறு படைத்தது. அக்காலத்தில் உலகநாடுகளின் மொத்த
மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு எண்ணிக்கையான இந்தியக்குடிமக்கள் – வயது
வந்தோர் (21 வயது) அனைவருக்குமான வாக்குரிமை என்ற அடிப்படையில் தகுதி பெற்று -
முதல் முறையாக வாக்களித்த தேர்தல் அது! அதற்குமுன் அன்னிய ஆட்சியில் எழுப்பி
நிறுத்தப்பட்ட ‘சொத்துடைமை’, ‘வரிசெலுத்திய தகுதி’ மற்றும் ‘கல்வியறிவு’ போன்ற வாக்காளர் தகுதித் தடைச்சுவர்கள் பலவும் நாட்டின்
முதல்தேர்தல் மூலம் இடித்துத் தகர்க்கப்பட்டன. சாதாரணர்கள், எந்தச் சொத்துமிலாத ஏழைகள், கல்வியறிவு எதுவுமில்லாத இந்தியக் குடிமக்களும், பரந்த நிலப்பரப்புகளைப் பரம்பரையாக ஆண்டுவந்த
மகாராஜாக்களும், உயர் பட்டங்கள் பெற்றோரும், அறிஞர்களும் சமமான ‘அரசியல்
எடை’ (Political Weightage - Vote)
கொண்ட வாக்குரிமையுள்ளவர்களே
என்ற சமத்துவப் பேருண்மை நாட்டில் நிறுவப்பட்டது.
முதல் தேர்தல் தொடங்கி, தகுவயதும் இந்தியக்குடிமகனாக இருப்பதுமே
வாக்காளராகப் போதுமான தகுதி என்றானது. ஆனால், சும்மா வந்துவிடவில்லை வயது வந்தோர்
அனைவருக்குமான வாக்குரிமை எனும் உரிமைப்பேறு, இந்தியக்குடிமக்களுக்கு!
வயது வந்தோர் அனைவருக்குமான
வாக்குரிமை நமக்குக் கிடைத்த வரலாற்றைத் தற்போதைய தேர்தல்களில் வாக்களிக்கும்
ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருப்பது அடிப்படையானது; அவசியமானது. ஆம், அத்தகைய அடிப்படை
அறிவுதான் இந்தியக்குடியரசில் நமக்குக் கிடைத்துள்ள வாக்குரிமை எனும் உரிமைப்பேறு,
எப்படியான நிலைகளைக் கடந்து, எவ்வளவு காலங்கழிந்து, நாட்டின் குடிமக்களாகிய
நமக்குக் கிடைத்துள்ளது என்ற புரிதலை அது வளர்க்கும். மதிப்பிடமுடியாத தங்கள்
வாக்குரிமையைப் பொறுப்புணர்வோடும் அறக்கடமையாகவும் ஒவ்வொருவரும் பயன்படுத்த அப்புரிதல்,ஊக்கமளிக்கும்.
வாங்க... நம்நாட்டின் வாக்குரிமை
வரலாற்றுப் பாதைகளில் விரைவாகப் பயணித்து வருவோம்.
இந்தியர்கள் ஆட்சியில்
பங்கேற்பதற்கு அடையாளமான ‘வாக்குரிமை’ 1947க்கு முன்னர், இரண்டு முதன்மையான
சட்டங்களின் மூலம் நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தது. அவை இந்திய அரசுச் சட்டம்
1919 மற்றும் இந்திய அரசுச் சட்டம் 1935. (Government of India Act
1919 & 1935). இந்த இரு சட்டங்களில் முதலாவதான 1919ஆம் ஆண்டுச்சட்டம் வாக்காளர் தகுதிகளை விரிவாக
நிர்ணயிக்கவில்லை. மாறாக, அச்சட்டத்தின் பிரிவு (section) 7, வாக்காளர் தகுதிகளை அந்தந்த மாநிலக் கவுன்சில்கள்
தீர்மானித்துக்கொள்ளவே வகைசெய்தது. இதனால் மாநிலத்திற்கு மாநிலம் வேறுவேறான,
கடுமையான தகுதிகள் நிர்ணயிப்பட்டு வாக்காளர்களது எண்ணிக்கையும் விகிதமும் மிகவும்
சுருங்கியது (3%).
விடுதலைக்களத்தில் முன்நின்ற
தலைவர்கள், ஆட்சியில் இந்தியர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமெனத் தீவிரமாக
வாதாடி வற்புறுத்தி வந்தனர். 1928 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் அரசியலமைப்பின் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்காக
உருவான அனைத்துக் கட்சி மாநாடு நியமித்த நேரு கமிட்டி, வயது வந்தோர் வாக்குரிமையை ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்தது குறிப்பிட உரியது.
முதல் வட்டமேசை மாநாட்டின் வாக்குரிமைத் துணைக்குழு, ‘வயது வந்தோரனைவருக்கும்
வாக்குரிமை என்பதுதான் இறுதியில் நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட வேண்டிய இலக்கு’ என்ற கருத்தை
வலியுறுத்தியது. 1932இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த இந்திய வாக்குரிமைக் கமிட்டி, இந்தியாவில் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக வலுவான வாதங்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டது. ஆனால் இறுதியில், ‘வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் அரசியலமைப்பைத் தொடங்குவது விரும்பத்தக்கதல்ல என்றும், இப்போதைக்கு இன்னும் எளிதில் நிர்வகிக்கக்கூடிய அடிப்படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் கூறியது அக்கமிட்டி
அறிக்கை.
வயதுவந்தோர் வாக்குரிமைக்கு
எதிராக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய
வாதங்களில் ஒன்று பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்களைச் சேர்த்து இந்தியாபோன்ற
பரந்து விரிந்த நாட்டில் தேர்தல் நடத்துவது எளிதானதல்ல. அப்பணியின் அளவும் சுமையும் மிகப்பெரிது. வயது வந்தோர் வாக்குரிமையின் கீழ் ஏற்படக்கூடிய வாக்காளர்களின் எண்ணிக்கையானது அரசு நிர்வாகம் சாதாரணமாகச் சமாளிக்கக் கூடிய அனைத்து எல்லைகளையும் கடந்ததாக இருக்கும் என்றும், அத்தகைய சுமையை ஏற்றுக்கொண்டு நிர்வகிப்பது ஒன்றிய, மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் கடுமையான நிர்வாகச்சுமை நிதிச்சுமைபோன்ற இடர்களை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் அஞ்சப்பட்டது!
வயது வந்தோர் வாக்குரிமையை எதிர்ப்பவர்கள் முன்வைத்த இரண்டாவது முக்கியமானவாதம், வாக்காளர்களின் கல்வியறிவின்மை ஆகும். படிப்பறிவேயில்லாத வாக்காளர்கள் புத்திசாலித்தனமாகவும், இரகசியமாகவும் வாக்களிக்கக் கூடிய தேர்தல் முறையைத் திறமையாக உருவாக்க முடியாவிட்டால் அத்தேர்தல் ஒரு கேலிக்கூத்தாக ஆகிவிடும் என்றனர் எதிர்ப்பாளர்கள்..
வாக்குரிமையை விரிவாக்க இந்தியத்தலைவர்கள்
வெளிப்படுத்திவந்த ஆதங்கங்களைத் தொடர்ந்து அலட்சியம்செய்துவந்த ஆங்கிலேயர்கள் பெரும்பாலும்
இந்தியமக்களின் எழுத்தறிவு விகிதக் குறைவைக் காரணங்காட்டியே வாக்குரிமை எல்லைகளை
விரிவாக்க விடாது மறுத்து வந்தனர். தங்களது ஆட்சிக்காலத்தில் வாக்களிக்கும் தகுதியைப்
பொதுவாகப் பிரிட்டிஷ்- இந்திய ஆண்களுக்கே வழங்கினர். நேரடியாகப் பெண்களுக்கு அவ்வாய்ப்பு
வழங்கப்படவில்லை என்பதும் அறிய உரியது.
வயது 21 என்ற அடிப்படையுடன், கூடுதலாகச்
சொத்துடைமை; அரசுக்கு வரிசெலுத்தும் அளவு அடிப்படை; கல்வித்தகுதிகள்; வருமானவரி செலுத்தும்
அளவு அடிப்படை எனப் பலவகையான ‘தகுதிக்
குறுக்கிகள்’ மூலம் வாக்காளர்களது எண்ணிக்கையை மிகவும் சுருக்கிவைத்தனர். அதுவுங்கூட பிரிட்டிஷ் இந்தியா முழுவதிலும்
ஒரே மாதிரியான வாக்காளர் தகுதிகள் வரையறுக்கப்படவில்லை. மெட்ராஸ், பாம்பே,
பஞ்சாப், அஸ்ஸாம் என இருந்த பல்வேறு மாநிலங்களுக்கிடையே (Provinces) வேறுபட்ட கல்வித்தகுதிகள், சொத்துத்தகுதிகள் என மிகமிகக்
கலவையான வாக்காளர் தகுதிகள்
வரையறுக்கப்பட்டிருந்தன. (பார்க்க: ஆறாவது
அட்டவணை, இந்திய அரசுச் சட்டம் 1935, Sixth Schedule of the
Government of India Act 1935)
எடுத்துக்காட்டாக, வாக்காளராகப்
பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த பல்வேறு தகுதிகளில் குறிப்பாகக் கல்வித்தகுதி பற்றி மட்டுமே பார்த்தோமானால்
எவ்வளவு மாறுபாடுகளுடன் அத்தகுதி
நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பதை மேற்குறிப்பிட்ட ஆறாவது அட்டவணையிலிருந்து (
பாகம்2) நாம் அறியமுடியும்.
- ·சென்னை மாகாண வாக்காளருக்கான கல்வித்தகுதி; வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், எழுத்தறிவுள்ளராக அறிவிக்கப்படும் தகு நிலையில் (proved to be literate) இருக்கவேண்டும். (பாகம் 2 .பிரிவு 6)
- · பாம்பே மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்.: வரையறுககப்பட்ட பிற தகுதிகளுடன் பாம்பே பல்கலைக்கழக மெட்ரிகுலேஷன், பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச்சம்மான தகுதி அவசியம், (பகுதி 3)
- · பெங்கால் மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், ஆரம்பக்கல்விக்குமேல் தேர்வு பெற்றிருக்கவேண்டும். (பகுதி 4)
- · பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன் ஆரம்பக்கல்வி தேறியிருக்கவேண்டும். (பகுதி 6)
- · பீகார் மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், மெட்ரிகுலேஷன் தேர்ச்சி. (பகுதி 7)
- · பீரார் (Berar) மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், நாக்பூர் பல்கலைக்கழகப் படிப்புக்குரிய சேர்க்கைத் தகுதி பெற்றிருக்கவேண்டும். (பகுதி 8)
- · அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், நடுநிலைப்பள்ளிப் படிப்புத் தேர்ச்சி. (பகுதி 9)
- · வடமேற்கு மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள் வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், நடுநிலைப்பள்ளிப்படிப்புத் தேர்ச்சி. (கிராமப்புறத் தொகுதிகளில் 4 ஆவது வகுப்பு தேறியிருந்தால் போதும்.).(பகுதி 10)
- · சிந்து மாநிலத்தில் வாக்காளராகக் கல்வித்தகுதிகள்: வரையறுக்கப்பட்ட பிற தகுதிகளுடன், பாம்பே பல்கலைக்கழக மெட்ரிகுலேசன் தேர்வு பெற்றிருக்கவேண்டும். (பகுதி 12)
கல்வித்தகுதிகளில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவில் சொத்துடமை அளவு,
வரிசெலுத்திய அளவு,, குடியிருப்புத் தகுதி போன்ற பிற வாக்காளர் தகுதிக்
கூறுகளிலும் மாநிலத்திற்கு மாநிலம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன என்பதை மறவாது
மனதிற்கொள்ள வேண்டும்.
மிகப் பொதுவாக என்னென்ன தகுதிகள்
நிர்ணயிக்கப்பட்டிருந்தன எனச் சுருக்கமாக அறிவோம். இதோ:
· குடியிருப்புத்
தகுதி: ‘’எவரும் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் முந்தைய நிதியாண்டில்
120 நாட்களுக்குத் தொடர்ந்து ஒருவீட்டில்
வசித்திராவிட்டால் அவர் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. தற்சமயத்தில்
அவர் அந்த வீட்டில் தினமும் வழக்கமாகத் தூங்குபவராக இல்லாவிட்டாலும், அவருக்கு
வேறு வீடுகள் இருந்தாலும், முதலில் குறிப்பிட்ட வீட்டிற்கு எப்போதாவது வருவார்
என்று உறுதியாக இருந்தால் அவர் அவ்வீடுள்ள பகுதியில் வாக்காளராகத் தொடரலாம். (பிரிவு
1).
·
வரி செலுத்தியதால் தகுதிகள்
மெட்ராஸ் மோட்டார் வாகன வரி விதிப்பு சட்டங்கள் 1931
படி முழு ஆண்டுக்கு வரி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது
இரண்டு அரையாண்டுகளுக்கு ஒரு நகராட்சியில் அல்லது உள்ளாட்சிஅமைப்பில்
அல்லது ஒரு கண்ட்டோன்மென்ட் நிர்வாகத்தில் தொழில் வரி செலுத்தி இருக்க
வேண்டும். அல்லது
ஒரு நகராட்சியிலோ கண்ட்டோன்மென்ட் நிர்வாகத்திலோ சொத்து
வரி கட்டியிருக்க வேண்டும்.
நகராட்சி சட்டங்களின்படி வீட்டு வரி முழு இரண்டு
ஆண்டுகளுக்கு கட்டியிருக்க வேண்டும் மேலும் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சொத்து வரி
அல்லது வீட்டு வரி கட்டி ஒரு முழு ஆண்டு அங்கு குடியிருப்பவராக இருந்திருக்க
வேண்டும் அல்லது
வருமான வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். (பிரிவு 2)
·
சொத்து முதலிய
தகுதிகள். (பிரிவு 3)
சொத்துகளின் அடிப்படையில் ஒருவர் வாக்காளராகப் பதிவு
செய்யப்படலாம் 1908 ஆம் ஆண்டு மெட்ராஸ் எஸ்டேட் நிலச்சட்டத்தின்படி
நில உரிமையாளராகவோ, இனாம்தாராகவோ, ரயத்வாரி பட்டாதாரியாக அல்லது தானே விவசாயம்
செய்யும் விவசாயியாகவோ இருக்க வேண்டும். அரசுக்குரிய தரைவாடகை
செலுத்தியிருக்கவேண்டும்.
பலருடன் கூட்டுப்பட்டாதாரியாக இருந்தால், ஒவ்வொரு 500
ரூபாய் வரிக்கும் கூட்டுப்பட்டாதாரிகளில் ஒருவர் வாக்காளராகலாம். (அதாவது வரி ரூ
500 என்றால் 1 வாக்காளர்; வரி, ரூ 1000 செலுத்தப்பட்டால் 2 வாக்காளர் கூட்டுப்பட்டாதாரிகளில்
இருந்து.)
சொத்து முதலிய தகுதிகளுள்ள மைனர்களின் கார்டியனுக்கு
வாக்காளர் தகுதி உண்டு. (பிரிவு 5).
மாட்சிமைதங்கிய மன்னரின்
சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள்
இராணுவத்தினர் வாக்காளர் தகுதியைப் பெறுவர். (பிரிவு 7)
·
பெண்களுக்குக் கூடுதல் தகுதிகள் (தடைகள்?)
மேற்கண்டபடி வாக்காளராகத்
தகுதியுள்ள ஆண்களின் மனைவியர் வாக்காளராகலாம். அதாவது, கணவர் வாக்காளராகத்
தகுதியிருந்தால் அவ்வாறானவரின் மனைவியாக இருக்கும்வரை பெண்களுக்கு
வாக்காளர் தகுதியுண்டு. இதன்மூலம் பெண்களுக்குச் சுயதகுதி இல்லை என்பதே அப்போதைய நிலை
என்பது உணரப்பட உரியது..
பென்சன்பெறும்
விதவைகள் வாக்காளராக இருக்கலாம் (பிரிவு 8)..
பகுதி 1, பிரிவு 10ன்படி
பெண்களுக்கான வாக்குரிமை அவர்களது கணவர் தகுதியைப் பொறுத்தது. தங்களுடைய கணவர்
இறப்பதற்கு முன் அவரது தகுதியால் ஏற்கனவே வாக்காளராகத் தகுதி பெற்றவர்கள், அவர்கள்
மீண்டும் மறுமணம் செய்யாமல் இருந்தால் அல்லது வேறு வகைகளில் தகுதி
இழப்புக்கு உள்ளாகாமல் இருந்தால், தொடர்ந்து வாக்காளராக இருக்கலாம்.
ஒரு கணவருக்கு ஒன்றுக்கு
மேல் மனைவியர் இருந்தால் யாராவது ஒருவர்தான் வாக்காளராகத் தகுதியாக முடியும்.
மத அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்ததையும் மறக்க முடியாதே! அவற்றில்
அந்தந்த மதத்தினர் மட்டுமே வாக்காளர்கள். தகுதியுள்ள பிற மதத்தினருக்கு அந்தத்தொகுதிகளில்
வாக்குரிமையே இல்லை என்பது விநோதம்! பகுதி
1, பிரிவு 5ன்படி,
‘சீக்கியர்களுக்கான தொகுதியிலோ முகமதியர்களுக்கான தொகுதியிலோ ஆங்கிலோ-இந்தியர்களுக்கான
தொகுதியிலோ அல்லது இந்திய கிறிஸ்தவர்களுக்கான தொகுதியிலோ அந்தந்த மதத்தைச்
சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியாது.’
இப்படி இடியாப்பச் சிக்கலான வாக்காளர் தகுதி
வரையறைகள் இருந்ததால் 1919 முதல் மொத்த மக்கள்தொகையில் 3 சதவீதம்பேர்
மட்டுமே வாக்காளர்களாக இருந்தனர். 1935 ஆண்டுச் சட்டப்படி அந்தச் சதவீதம் உயர்ந்து
சுமார் 14% ஆனது. அதற்குமேல் ஒருபோதும் அது உயரவேயில்லை.
இந்திய மக்களின் எழுத்தறிவுக்குறைவைச்
சுட்டிக்காட்டித்தானே எவ்வளவோ காலமாக வாக்காளர் தகுதி விரிவாக்கத்தை ஆங்கிலேய அரசு
மறுத்து வந்தது. வயதுவந்தோர் வாக்குரிமைக்கு எதிரான வாதங்களை, அத்தகைய
விரிவான வாக்குரிமையை நிர்வகிப்பதிலுள்ள வலிமையான சிரமங்களை நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கும் போது இந்திய அரசியலமைப்பு சபை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மகத்துவமான மக்களாட்சியின் உண்மையான உணர்வு மேலெழும்பி விளங்கிய
இந்திய அரசியல் நிர்ணயசபை வயது வந்தோருக்கான வாக்குரிமைக் கோட்பாட்டைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டது என்பதை வாக்குரிமை
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பதிவு செய்ய வேண்டுமன்றோ?
அரசியலமைப்பு நிர்ணய சபை
வகுத்த வயது வந்தோருக்கான வாக்குரிமைக் கோட்பாட்டுப் பெரும்பாதையில் - ஒரு அசுரப்பெருந்தாவலில் (giant leap),முதல் பொதுத்தேர்தல் (1951-52) நடைபெற்றது. முதல்பொதுத்
தேர்தலின்போது, நாட்டில் எழுத்தறிவு விகிதம்: ஆண்கள் 27.16% பெண்கள் 8.86% மட்டுமே
என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்!
‘மிகப்பெரிய எண்ணிக்கையுள்ள - 17,32,13,635 தகுவயதடைந்த வாக்காளர்கள் - தங்கள் விருப்பத்தை (Vote) அதிசுதந்திரமாகப்
பதிவு செய்ய ஏதுவாக 1,94,084 வாக்குச்சாவடிகள், அதில்
27,527 பெண்களுக்கு மட்டும்,
அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முந்திய வாக்காளர்பட்டியல் தயாரிப்பு,
வாக்குப்பெட்டிகள் தயாரிப்புச் செலவு
முதலியவற்றுடன் சேர்த்து மொத்த செலவு சுமார்10 கோடி 45 லட்சம். முதல்
பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு உற்சாகம் தருவதாக அமையவில்லை (51.15%) என்பது
குறையே. (தேர்தல் ஆணைய அறிக்கை,1955,ப.133-136) இருப்பினும்
தகுவயதடைந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை எனும் இராஜபாட்டையின்தொடக்கம் அது.
முதல் தேர்தல் ஆணையர் திரு.சுகுமார்
சென், ஐ.சி.எஸ் மிகுதிறமையுடன் வெகுசுமுகமாக நடத்திய முதல் தேர்தல் சந்தேக
மூட்டைகளைச் சுமந்து அலைந்து கொண்டிருந்த உள்நாட்டினர், வெளிநாட்டினர் அனைவரது சந்தேகங்களையும் முற்றாகத் தீர்த்துவைக்கும்
வகையில் நடைபெற்றதைக் குறிப்பிட்டுரைக்க வேண்டும்.
வாராது வந்த மாமணிபோல் வந்திருக்கும் வயதுவந்தோர்
அனைவருக்குமான வாக்குரிமையைப் போற்றிப் பாதுகாப்போம்.
எப்போதும் வாக்குரிமையைத் தப்பாது மிகச் சரியாகப்
பயன்படுத்துவோம்.
சிறிதும் தவறாமல் வாக்களித்து, மக்களாட்சிக்.கடமையாற்றுவோம்!
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக