Monday, June 20, 2022

Here you can find a Tamil Short Story written bu AMMANI AMMAL in 1913, published in VIVEKA BHODHINI March 1913 issue.


 https://acrobat.adobe.com/link/review?uri=urn:aaid:scds:US:4298d30d-1721-39e7-943b-73444d7b0ce1

Sunday, June 19, 2022

 

 டாக்டர் கங்கா ராம் (1901)- சிறுகதை

 

[ஆவண மூலம் தேடிக் கண்டு, நகல் கணினி அச்சு செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்களிப்பது  

பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி.

தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகர் திரு ஜெகன் பார்த்திபன் அவர்களுக்கு வளர் நன்றியுடன்..]

 

 

இது மிகவும் பரிதாபகரமான விபத்து. 

ஆனால் இம்மாதிரி சம்பவத்திற்கு யார் மேல் குற்றம் சொல்ல முடியும்?

 

 உண்மையாய் நடந்த சங்கதி இரண்டு பெயர்களுக்குத்தான்  தெரியும். அவர்கள் இருவரும் எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று நாம் ஊகிக்க முடியுமே அல்லாது சரியாய் அறிய முடியாது.

 

 நடந்த சங்கதி பின்வருமாறு.  

அதை அறிந்த  பிறகு யார் யார் எவ்வளவு தூரம் குற்றவாளிகள் என்று நம் பூர்ணம் இல்லா அறிவால் தீர்மானிக்க முடியுமா என்று பார்ப்போம்..

 

காலஞ்சென்ற காசிநாத் என்பவர் வெளியூர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர் அல்ல என்றாலும் உள்ளூர் ஆகிய  புனாவில் யாவராலும் நன்கு மதிக்கப்பட்டவர். எந்த வழியிலும் சரி லாபமே பிரதான பலனான வியாபாரத்தில் கூட அதிக பேராசையால்  மற்றவர்களை மோசஞ் செய்யாமலும்மற்றவர்கள் விஷயத்தை தான் கவனிக்காவிட்டால் உலகமே அசைவற்று நின்று விடும் என்று சிலர் முக்கியமாய் இவர் ரகஸியங்களை அறிய முயலுவது போல் அல்லாமல் தன் கார்யத்தையே கவனித்தும்தான் சொன்ன சொல்லைஇப்போது அணிந்து கொஞ்ச நேரத்தில் கழற்றி எறியக்கூடிய உடை போல்  எண்ணாமல்  எப்போதும் தவறாமல் நிறைவேற்றியும் இன்னும் இது போன்ற அநேக விஷயங்களில் தன் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்று சரியாய் நடந்து வந்த படியால் அவரிடத்தில் ஊரார் எல்லாருக்கும் நிரம்ப மரியாதை நம்பிக்கையும் உண்டு.

 

 இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும். மூத்த குமாரன் விசுவநாத் என்பவனுக்கு 15 வயது இரண்டாவது குமாரத்தி கமலாபாய் என்பவளுக்கு பதினோரு வயது.   இந்த சமயத்தில் காசிநாத் என்பவருக்கு உடம்பு சௌக்கியம் தப்ப, சமயத்தில் வைத்தியர்களின் சிகித்ஸையில்லாமல்தன்னிரு குழந்தைகளையும் தன் பத்நியான பிரேமாபாயையும் விட்டு விதிவசத்தால் தேக வியோகம் அடைந்தார்..தன் பையன் விசாரமற்று கையைக்கட்டி உட்கார்ந்து சாப்பிடும்படி அவ்வளவு ஆஸ்தி வைத்து விட்டு போகவில்லை.

 

 நம் கதை இதற்கு மூன்று வருஷங்களுக்கு பின்னால் நடந்த சங்கதிகளை குறிக்கிறது. 

 

விசுவநாத்க்கு 18 வயது. இவன் துர்ப்பாக்கியத்தால், இவனைக் கண்டித்து சரியான வழியில் கொண்டு வரவேண்டிய நாளில் தகப்பனார் போய்விட்டார்.  குடும்பத்தில் ஒரே பையனானதால் தாயாரிடத்தில் வெகு செல்வாக்காய் வளர்ந்து வந்தான். ஆகையால் அவன் மேல் இருந்த பிரியத்தால் உசித சமயங்களில் கடிந்து பேச தாயாருக்கு மனம் வரவில்லை. அப்படி பேசியிருந்த போதிலும் பிரயோஜனப்பட்டிருக்காது.

 

ஊரில் இருந்த அநேகம் பெரிய மனிதர்கள் இவன் தகப்பனாரி டத்திலிருந்த பிரியத்தை யுத்தேசித்து எப்போதாவது இவனுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள். இவன் அந்த வார்த்தைகளை காது கொடுத்து கேட்கிறதில்லை அடிக்கடி சொல்ல வாரம்பித்தால் அவர்களிடம் பேசுகிறதில்லை.

 

இப்படி, இவன் விஷயத்தில் வாஸ்தவமான அக்கறை இருந்திருக்கக்கூடிய தகப்பனார் இல்லாததால் இவன் வர வர “கைம்பெண்டாட்டி மகன்” ஆனான். கொஞ்சங் கொஞ்சமாக துஷ்ர்களின் ஸகவாசம் பிடிபட்டது.

 

வீட்டில் அதிக நேரம் நிற்பதில்லை. வீட்டில் இருக்கும் போதெல்லாம் தன் தாயின் பரிதாபமான பார்வையை காணும்போதெல்லாம் பழைய ஞாபகம் வந்தபடியால் தாய்மேலும் தன்மேலும் கோபங்கொண்டு சரேலென்று வெளியில் போய்விடுவான்.  இப்படி இவன் கெட்டுப் போவதை பற்றி ஊரார் தங்களுக்கு வேலை ஒழிந்து வயிறு நிறைந்த சமயங்களில் கொஞ்சம் பரிதாபத்துடன் நினைப்பதுண்டு.

 

அதைவிட அதிகமாகத்தான் அவர்கள் என்ன செய்ய முடியும்?

 

இந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் கங்கா ராம் என்பவர் புனாவுக்கு “அசிஸ்டென்டு சர்ஜன்” அதாவது ஜில்லாவுக்கு இரண்டாவது வைத்தியராக வந்து சேர்ந்தார். வயது 22 தான் என்றாலும் வைத்திய சாஸ்திரத்தில் உயர்ந்த பரிக்ஷைகளில் தேறினதால் முதலிலேயே உயர்ந்த உத்தியோகம் கிடைத்தது.

 

பிரதான வைத்தியனான  ஐரோப்பியன் வெள்ளைக்காரர்கள் தவிர மற்றவர்களுக்கு வைத்தியம் செய்வது தன் மரியாதைக்குக் குறைவு என்று நினைத்தவன் ஆகையால்,கறுப்பு மனுஷர்’   எல்லாருக்கும் கங்காராம் தான் வைத்தியம் செய்வது.

 

பொறுமையாய் புன்சிரிப்புடனே வியாதியஸ்தர்களின் குறைகளைக் கேட்டு, குறிகளால் வியாதியை சரியாய் நிர்த்தாரணம் செய்து,நல்ல மருந்துகளால் சொஸ்தம் பன்னுவதில் இவருக்குச் சமானம் ஒருவருமில்லை.. 

 

தன் லாபத்தை அதிகமாக   உத்தேசிக்காத கெட்டிக்கார    வைத்தியனைப் போல் பரோபகாரி யாருண்டு

 

எல்லோரும் இவரை யுபகாரி என்றே நினைத்து “வக்கீலிடத்திலும் வைத்தியனிடத்திலும் வந்து மடங்காத ரஹஸியம் ஏது” என்பதற்கிணங்க தங்களின் ரஹஸியமெல்லாம் இவரிடம் ஒப்புவித்து வந்தார்கள்.

 

ஒருநாள் கங்காராம் வைத்திய விஷயமாகப் பிரேமாபாயிடம் போக நேரிட்டது. அதுமுதல் அவர், முன்னால் அந்த குடும்ப விஷயமாய் சமாசாரங்கள் மற்றவர் சொல்லக்கேட்டிருந்ததாலும், ஒரு காலத்தில் நல்ல ஸ்திதியிஇருந்து இப்போது கஷ்டதசையை அடைந்தவர்கள் என்று காட்டும் அவர்கள் கௌரவ நடத்தையை தான் நேரில் கண்டதாலும் பிரேமாபாய் முதலானவர்கள் விஷயத்தில் கொஞ்சம் சிரத்தையு ள்ளவராய் அடிக்கடி அவர்களிடம் போக்குவரத்துள்ளவர் ஆனார்.

 

இதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு.

 

பதின்மூன்று வயதுள்ள  கமலாபாயயைக் கண்டது முதல் இவர் மனதில் தன் கல்யாண விஷயமாக யோசிக்கவாரம்பித்தார்.

 

சிறுவயதில் ரத்த புஷ்டியால் இயற்கையாய் ஏற்படும் சுறுசுறுப்பும் தாயார் படும் துக்கத்தைக் காண்பதால் கொஞ்ச விசனமும் கலந்த கமலா பாயின் முகம் உபாத்தியாயர் அடிக்கு பயந்து சிரமத்துடன் சிரிப்பை யடக்கும் சிறுவன் முகம் போலிருந்தது. இவள் உயர் பிறப்பையும் தாய் தமையனிடமிருக்கும் பிரியத்தையும் கண்டு சந்தோஷத்து தன்னிஷ் டத்தை பிரேமாபாயியுடம் வெளியிட்டார். அவளும் தன் அனாதையான ஸ்திதியையும், எப்படியிருந்த போதிலும் தன் பெண்ணுக்கு ஒரு புருஷனை தேடத்தானே வேண்டும் என்பதையும் யோசித்து சம்மதித்தாள்.

 

ஊராருக்கு இந்த விஷயம் தெரியமவே  கங்காராம் செய்வது நல்லது என்று மெச்சினார்கள்.

 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கல்யாணம் செய்வதாய்த் தீர்மானிக்கப்பட்டது .

 

விசுவநாத்தை நாம் மறந்து போகவில்லை..  சாப்பிடும்வேளை தவிர வீட்டிலிருப்பதில்லை என்ற வழக்கம் ஏற்பட்டு விட்டது. வீட்டுக்கு வந்த போதும் சமீபத்தில் குடித்துவிட்டு வந்தனோ என்று சந்தேகிக்க இடம் இருந்தது. கங்காராம் அவன் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு என்றாலும் எப்போதாவதுதான் இவனை அகஸ்மாத்தாய்க் காண்பது. அதைத் தவிர, கமலாபாயைத் தேடிப் போவதால் விசுவநாத் வீட்டிலில்லை என்பதே இவர் மனதில் படுவதில்லை.

 

இப்படி இருக்கையில் ஒரு நாள் டாக்டர் பட்டணத்துக்கு வெளியில் கொஞ்சதூரத்தில் ஒரு பங்களாவில் இருக்கும் ஒரு நோயாளியை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்தார். சாயங்காலம் சுமார் 8 மணி இருக்கலாம். நஷத்திர வெளிச்சமும், வலை போட்டுத் தேடவேண்டிய முனிசிபல் விளக்குகளின் வெளிச்சமும் சேர்ந்து அதிக தூரத்திலில்லாத வஸ்துக்களை எல்லாம் நன்றாக பார்க்கப் போதுமானதாக இருந்தது.

 

இப்படி இவர் போய்க் கொண்டிருக்கையில் ரஸ்தாவுக்கு சமீபத்தில் இரண்டு பெயர் வெகு உக்கிரமாய்ச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன், இவர், சமீபத்தில் வரும்போது கோபாவேசனாய், தன்னிடுப்பிலிருந்த ஒரு கத்தியை எடுத்து மற்றவனைக் குத்திவிட அவன் செத்துக் கீழே விழுந்தான். கோபவெறியில்  இன்னதென்று தெரியாமல் செய்துவிட மற்றவன் இப்போது திரிம்பி ஓடவாரம்பித்தான். அவன் திரும்பின சமயத்தில் பக்கத்திலிருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்த கங்காராம் திகைத்து நின்றார் --- அவர் பார்த்தது விசுவநாத்தின் முகம்.

 

கொஞ்ச நேரத்தில் நிதானித்துக்கொண்டு, வேண்டிய அவசர சமயத்தில் அகப்படா அருமருந்தான போலீஸ் சேவகன் கண்டுபிடுத்து அவனிடம் கொலை நடந்த சமாச்சாரத்தைச் சொல்லி வீட்டிற்குப் போய், தான் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் கலங்கியிருந்தார். 

 

மறுநாள் காலை 10 மணிக்கு  பிரேமா பாய் வீட்டிற்கு இவர் போய் எப்போதும் போல் பேசிக் கொண்டிருந்தார். பிரேமா பாயும் முதல் நாள் இரவு 9 மணிக்கு விசுவநாத் அலங்கோலமாய் வீட்டிற்கு ஓடி வந்து அதுவரையில் தன்னறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை பற்றி ஏதோ நடந்திருக்க வேண்டுமென்று விசாரப்பட்டுக்கொண்டிருந்தாள். 

 

இந்த சமயத்தில், யாரோ வாசல் கதவை தட்ட, கதவு திறக்கப்பட்டு, அந்த வூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தான். அவனைக் கண்டதும் பிரேமாபாய்   யம தூதனைக் கண்டதுபோல் நடுங்கி “ஐயோ என் பையனை கூட்டிக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறாய். அவன் என்ன குற்றம் செய்தான் சொல்லு” என்றாள்.

 

இன்ஸ்பெக்டர் அசட்டுச் சிரிப்புடன் “ஒன்றுமில்லை. இரண்டு சிறிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு சீக்கிரம் வந்து விடுவான். அவனை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை” என்று தைரியம் கூறி விசுவநாத்தைக் கூப்பிடும்படி சொன்னான்.

அந்த துர்பாக்கியனும் தான் தப்பமுடியாதென்று கண்டு பயம் என்பதே மூர்த்திகரித்து பிரத்தியக்ஷமானாற்போல வந்து “நான் ஒன்றும் செய்யவில்லை. நேற்று ராத்திரி 8 மணி முதல் நான் வீட்டிலேயே இருக்கிறேன். என் தாயாருக்கு கூட தெரியும்” என்றான். இன்ஸ்பெக்டர் சிரித்துக்கொண்டு “அதிருக்கட்டும் நேத்து ராத்திரி 8 மணிக்கு எங்கே யிருந்தாய் என்று நான் கேட்கவில்லையே. இப்போது நீ என்ன சொன்னாலும் அதெல்லாம் பின்னால் விசாரணை சமயத்தில் உனக்கே விரோதமாய் முடியும். ஆகையால் வாயைத் திறவாமல் என்னுடன் வா என்று தன்னுடன் கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

 

பிரேமாபாயும் கமலாபாயும் அழவாரம்பித்தார்கள். கங்காராமோ   தனக்குத் தைரியம் இருந்தாலல்லவா மற்றவர்களுக்குத் தைரியம் சொல்லலாம்.

 

ஆகையால் ஒரு தரம் “ஒன்றும் பயமில்லை ஏன் அழுகிறீர்கள்” என்பார். இன்னொரு தரம் “எல்லாம் ஈசன் செயல்” என்பார். இப்படி சம்பந்தமில்லாமல் தாறுமாறாக உளறிட்டு தான் நேரில்போய் குற்றம் இன்னதென்று அறிந்து வருவதாய்ச் சாக்குச் சொல்லிவிட்டு இவர்கள் துக்கத்தைப் பார்க்கச் சகியாதவராய் வீடு போய்ச் சேர்ந்தார்.

 

கூலி இல்லாமல் வேலை செய்யும் கலகக்கார மஹான்களில் ஒருவர் பிரேமாபாயிடம் வந்து அவள் மகன் மேல் அநியாயமாய் கொலைக் குற்றம் சாட்டி இருப்பதாகவும், அதை ஊரார் ஒருவரும் நம்பவில்லை இருக்கும் என்றும், பிரேமாபாயைப் போன்றவருக்கு ஈசுவரன் தீங்கு விளைவிக்க மாட்டார் என்றும், இன்னும் இதுபோன்ற செலவில்லாத உபகார வார்த்தைகள் சொல்லி அனலில் புழுப்போல் துக்கத்தில் துடிக்கிற பிரேமாபாயைக் கண்டுகளித்து வீட்டிற்குப் போனார்.

 

விசாரணையாக இன்னும் 3 நாள் இருந்தது. இதற்கிடையே தான் தைரியம் சொல்ல முடியாவிட்டாலும் எல்லோராலும் கைவிடப்படவில்லை என்ற மனத்தேர்ச்சியாவது அவர்களுக்கு உண்டாகட்டும் என்று கங்காராம், பிரேமாபாய் வீட்டிற்குப் போய்வந்தார். எவ்வளவு வேதாந்தம் பேசினாலும், எவ்வளவு பெரிய துக்கம் நேரிட்டாலும் ஆகாரத்தைத் தள்ள முடியாதாகையால்,விசனத்தில் சரியான வேளைகளில் ஆகாரம் உட்கொள்ளாமல் நிஷ்பிரயோஜனமாய் உடம்பை கெடுத்துக்கொள்ளாமலிருக்கும்படி தானே நேரிலிருந்து அவ்வப்போது அவர்களை சாப்பிடச் செய்து வந்தார்.

 

விசாரணை நாள் வந்தது.

 

தீர்மானம் எவ்வாறு முடியும் என்று தெரிந்த போதிலும் தாங்கள் செய்ய வேண்டிய பிரயத்தனத்தில் குறை இருக்கக் கூடாது வக்கீல் ஏற்படுத்தினார்கள். வக்கீலும் தான் வாங்கிய பணம் ஜெரிக்க வேண்டுமே என்று மனப் பூர்த்தியாய்ச் சிரமப்பட்டு குற்றவாளியைப் பற்றிச் சொல்லக்கூடிய அநுகூலமான நல்ல குணங்கள் யாவற்றையும் எடுத்துக் காட்டினார்.

 

எவ்வளவு சொன்னாலும் குற்றவாளிக்கு விரோதமாய் மூன்று விஷயங்கள் இருந்தன.

 

முதலாவது கொலை நடந்த சாயந்தரம் கொல்லப்பட்டவனுக்கும் குற்றவாளிக்கும் பெரிய சண்டை நடந்ததாகவும், அப்போது குற்றவாளி பயமுறுத்தி வார்த்தை சொன்னதாகவும்,

 

இரண்டாவது கொல்லப்பட்டவன் உடம்பில் இருந்து எடுத்த கத்தி குற்றவாளியுடையது மாற்றமுடியாத ருஜு ஏற்பட்டது.

 

மூன்றாவது கங்காராம் தான் நேரில் கொலை நடந்த சமயத்தில் கண்டதாகவும், கொலைசெய்தது விசுவநாத்தான் என்றும் சாக்ஷி சொல்ல நேரிட்டது.

 

இந்த மூன்று காரணங்களைக் கொண்டும் இன்னும் ஏழுநாளில் விசுவநாத் தூக்கிலிடப்பட வேண்டியது என்று தீர்மானஞ்செய்யப்பட்டது.

 

இது தெரிந்தவுடன் புனாவில் இருக்கும் பெரிய மனிதர்களெல்லோரும் ஒன்று சேர்ந்து தண்டனை விதிக்கப்பெற்ற விசுவநாத் மரியாதை பெற்ற குடும்பத்தை சேர்ந்தவனென்றும், கெட்ட சகவாசத்தினால் இப்பரிதாபமான நிலைமைக்கு வந்தவன் என்றும், இக்கொலை செய்ததில் அவனுக்கு லாபம் ஒன்றும் இல்லாததால் கோப வெறியில் செய்துவிட்டான் என்றும் அதனால் மரண தண்டனையை தயவுடன் மாற்றி வேறுவித தண்டனை விதிக்க வேண்டும் என்றும், தண்டனை நிறைவேற ஒரு வாரம்தான் இருப்பதால் பதில் கூடிய  சீக்கிரம் எழுத வேண்டுமென்றும் எல்லாரும் கையெழுத்துப் போட்டு சர்க்காருக்கு ஒருமனு எழுதிக்கொண்டார்கள் .

 

இது இப்படி இருக்க, ஜெயிலிலிருந்த விசுவநாத்துக்கும் பிரேமா பாயிக்கும் சமாச்சாரப் போக்குவரவு கங்காராம் மூலமாக நடந்தது.   இவர் ஐரோப்பிய வைத்தியனுக்கு பதிலாய் ஜெயில் கைதிகளின் சௌக்கியத்தை பாதுகாப்பதற்காக தினம் 3 தடவை போவதுண்டு. 

 

இப்போது விசுவநாத் ஜெயிலில் இருப்பதால் தனக்கு ஒழிந்த வேளைகளில் அவனை அடிக்கடி போய் பார்த்து வந்தார்.

 

ஒரு பக்கத்தில் அவனுக்கு தைரியம் சொல்லவும் அதற்குப் பிறகு அவனிடமிருந்து சில பிரியமான வார்த்தைகளை பிரேமாபாயிக்குக் கொண்டுபோய் அவர்கள் விசனத்தையாற்றவும்தான்  இவருக்கு பொழுது சரியாயிருந்தது.

 

சர்க்காரிடமிருந்து மன்னிப்பு பத்திரம் இன்று வரும், நாளை வரும் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். முக்கியமாய் கங்காராம் அதே நினைவாகத் சரியாய் தூங்குறதுகூட இல்லை. அவர் இவ்வளவு விசாரப்பட முக்கியமாய் ஒரு காரணம் உண்டு. தூக்கிலிடப்பட்ட கொலைகாரனின்  தங்கையை கல்யாணம் செய்து கொண்டதாகத் தனக்கு அபகீர்த்தி வருமே என்று விசாரம் மேலிட்டது.

 

 இப்படியாக ஆறு நாள் ஓடி விட்டது.

 

சர்க்காரிடம் இருந்து பதில் வரவில்லை ஏழாவது நாள் ராத்திரி இரா முழுவதும் தான் விசுவநாத்திடம் இருக்கப்போவதாகப் பிரேமாபாயிடம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போனார்.

அங்கே விஸ்வநாத் ஜ்வரம் கண்டது போல் தபித்துக் கொண்டிருந்தான். “ஐயோ என்னை ஒரே தரமாய்க் கொன்று விட்டாலும் நல்லது. இப்படி காக்க வைப்பது ஒரு நிமிஷம் ஒரு யுகமாக தோன்றுகிறது.என்தாயாருக்குதவாமல் நான் போய்விட்டேன். என்னுடைய பழைய கெட்ட வழிகளெல்லாம் இப்போதுதான் தெரிகிறது. இனிமேல் இது மாதிரி நடக்க மாட்டேன். ஆனால் என் நடத்தையச் சீர்திருத்தி சரியான வழியில் நடக்க என்னை கொல்லாமல் விட்டால ல்லவா நல்லது” என்று பல விதமாய்ப் துக்கித்துக் கொண்டிருந்தான்.

 

கங்காராம் வந்தவுடன், தன் தக்கங்களை மறந்துவிட்டு,தன்தாயார், தங்கை இவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்று கவலையுடன் விசாரித்து மறுநாள் காலை 7 மணிக்கு தன்னைத் தூக்கிலிடப் போகிற வரையில் தன்னிடத்தில் இருந்து, பிறகு தன் தாயிடம் போய் அவள் வார்த்தைகளை கேட்காததால் இந்த ஸ்திதிக்குத் தான் வந்து அவளுடைய வயது காலத்தில் அவளுக்கு துக்கத்தை உண்டாக்கின தற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகத் தன் தாயிடம் சொல்லவும் கங்காராமை வேண்டிக்கொண்டான்.

 

இவ்வாறு இரவும் கழிந்தது.

 

காலை 6 மணிக்கு காவல்காரர்கள் கைதியைக் கொலைக்களத்துக்குக் கூட்டிக்கொண்டுபோக வந்தார்கள்.

 

கைதியின் அறையின் சமீபத்தில் வந்ததும் அறைக்குள் “ஐயோ” என்ற சத்தங் கேட்டு உள்ளே போய்ப் பார்க்க, கங்காராம் தன் மடியின்மீது  விசுவநாத்தின் தலையை வைத்துக்கொண்டு சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கக் கண்டார்கள். பக்கத்தில் போய் உடம்பின் மேல் கையை வைத்துப் பார்க்க விசுவநாத் செத்துப் போய்விட்டதாக அறிந்தார்கள்.

 

கங்காராம்  அவர்களைப் பார்த்து “இனிமேல் நாம் என்ன செய்வது? துக்கத்தால் மனம் உடைந்து இறந்து போய்விட்டான். உங்களை விடப் பெரிய அதிகாரி தண்டனை விதித்து விட்டார்” என்று  சொல்லிப் புறப்பட்டார்.

 

அதே சமயத்தில் வெளியே ஒரு ஆரவாரம் உண்டாயிற்று. இவர் ஜெயிலை விட்டு வெளியேறுமுன் ஒரு சேவகன் வியர்த்துப் பெருமூச்சுவிடும் குதிரையிலிருந்து இறங்கி “விசுவநாத்தின் மன்னிப்பு பத்திரத்தை இதோ கொண்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான்.

 

இதனைக் கேட்டதும் கங்காரம் ஒன்றும் தோன்றாது கண்கள் சிவந்து குடிவெறியன் போல் தள்ளாடிக் கொண்டு  வெளியே புறப்பட்டார். “ஐயோ பாவம் விஸ்வநாத் செத்த பிறகு இந்த மன்னிப்பு பத்திரம் வந்ததே” என்று டாக்டருக்கு நிரம்ப வருத்தம். அதையும் தவிர, நேற்று ராத்திரி தூங்கவே இல்லை அதனால் இவர் பைத்தியம் பிடித்தவர் போல் இருக்கிறார்” என்று எல்லோரும் பரிதாபத்துடன் சொல்லி அவருக்கு வழிவிட மரியாதையாய் ஒருபக்கம் ஒதுங்கி நின்றார்கள்.

 

கங்காரமோ அதே சமயத்தில் தள்ளாடிக்கொண்டே  தன் வீட்டிற்ககுப் போய் அவசரமாய் பிரயாணம் புறப்பட வேண்டியவர் போல்,  கையில் கொஞ்சம் பணமும் இரண்டு உடுப்புகள் இவற்றையெடுத்துக் கொண்டு பிரேமாபாய் வீட்டிற்கு வந்தார். வந்ததும் கமலாபாயைத் தான் தனியாய் இரண்டு நிமிஷத்துக்கு பார்க்கவேணுமாம் என்று வேலைக்காரி மூலம் சமாச்சாரம் சொல்லி அனுப்பினார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கமலாபாயும் வந்தாள். அவளும்  ராத்திரி முழுவதும் தூங்கவில்லையெ ன்று தோன்றிற்று. கங்காராமைக் கண்டதும் அவர் திருதிருவென்று விழிப்பதை பார்த்துக் கொஞ்சம் பயந்து ” என்ன சமாச்சாரம் “என்று கேட்டாள்.

 

அதற்கு அவர் வெகு தூரம் ஓடிக் களைத்தவன்வ மூச்சு தாங்காமல் பேசுவதுபோல் திணறிக் கொண்டே “ இன்றைக்கு—காலை 6:30 மணிக்கு—விஸ்வநாத்தின்-- மன்னிப்பு பத்திரம் வந்தது.ஆனால்-- ஆறு மணிக்கு அவன் செத்துப் போய்விட்டான். தூக்கிலிட்டார்கள்--என்று அவமான பெயர்-- வரக் கூடாதேயென்று-- நான் தான் அவனுக்கு – 5 3/4மணிக்கு-- விஷம் கொடுத்துக் கொன்று விட்டேன்-- --“  என்று வெகு ஹீனஸ்வரத்துடன் சொன்னார். இந்த பயங்கரமான ஸமாசாரம் இன்னதென்று கமலாபாய் மனதில் பூர்ணமாய் கிரஹிக்குக்குமுன் கங்காராம் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் விட்டார்

 

அதற்குப் பிறகு கங்காரம் என்று ஒருவராவது  பெயர் கேட்டதே இல்லை. 



-     என். வி. இராகவன்.

(விவேக சிந்தாமணி,  செப்டம்பர் 1901 - பக்கம் 147-152)

-     

 

 

 

 

(அசலுக்குச் சரியான,அட்சர சுத்தமான நகல். எழுத்துச் சீர்திருத்தம் வருமுன்னிருந்த எழுத்துக்களைப் தற்போது பதிவிட இயலவில்லை. மற்றபடி( , . — உள்பட ) எல்லாம் மூலத்தில் உள்ளபடியே.- இராஜ முத்திருளாண்டி, சூன் 20212022)

 

 

**