இலக்கியச்சொல் வரிசை-31
சிறுபாணாற்றுப்படை. ( வரி-93)
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.
" ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த ...காரியும்...
கொடுப்பதன் சிறப்பைத் தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் வெளிப்படுத்திக் கொண்டே மலர்ந்திருக்கும் மரபினைத் தொடர்ந்து காண்கிறோம். அம் மரபின் சுடரைத் தொடர்ந்து ஒளிரச்செய்ய நம் முன்னோர்கள் நம்மை ஆற்றுப்படுத்த விழைவதன் அடையாளமாகவே அத்தகைய இலக்கிய வெளிப்பாடுகளை நாம் கொள்ள வேண்டும். கொடுப்பது எவ்வளவாயினும், கனிந்து உவந்து, பெறுவோர் உளங் குளிரக் கொடுத்தல் சிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கும்.
பெறும் பொருள் மட்டுமே பெறுவோர்க்கு நிறைவு தராது. ஈயப்படும் பொருளளவைவிட, அதன் மதிப்பு வரையைவிட, இன்முகத்தோடளிப்பதும், நேய ஈரந் தோய்ந்த சொல் நனைந்து கொடுப்பதும், பெறுவோர் மகிழ்வைப் பெரிது பெருக்கும் எனும் உளவியல் உண்மைக்கு உயிர் எடுத்துக் காட்டாக - 'அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் வீரன்'- வீரமுடன் ஈரமும் இணைந்திளகும் வள்ளல் மலையமான் திருமுடிக்காரி இங்கு நமக்குக் காட்டப் படுகிறான்.
மரபின் வழியோர் நாம் அறிந்தேற்க வேண்டியது யாதெனில்,
ஈவது சிறப்பு; இன்முகத்தோடும், இரவலர்பால் ஈரங்கசிந்தொழுகும் இன்சொல்லோடும் வழங்கி,' ஈத்துவக்கும்' பண்பு கொண்டு ஈதல் பன்மடங்கு சிறப்பாகும், பெறுவோர் மகிழ்வையும் பெருக்குவதால்.
ஈரங்கசியட்டும் இதழ் வழிவெளிப்போகும் மொழியில் ... எப்போதும்.
*
No comments:
Post a Comment