Sunday, October 4, 2020


இலக்கியச் சொல் வரிசை -26
கலித்தொகை (12) வரி 18-19

''கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஒராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி."

கற்ற கல்வியாலும் பட்டறிவாலும் தானே, நல்லது கெட்டது எவையெவை என்று நன்கு  அறிந்து, உணர்ந்து  வாழ்க்கைப் பாதையில் செம்மையாகப்  பயணிப்பது நன்று. ஆயினும், அது எல்லோர்க்கும் எளிதாக இருக்காது. ஆதலால்தான், நன் மக்கள் துணைக்கொண்டால் வாழ்க்கை நலமும், பயணப்பயனும் மேலும் சிறக்கும் என்பது நம் முன்னோர் கருத்து.

நாம் தேடிக்கொள்ளும் உறவுகளில் நட்பைப்போல் சிறந்த துணை ஏதுமிருக்காது. நாம் எப்போதாவது அறியாது வழி மாறினாலும், நன் நட்பினர், விலகாது துணைநின்று நட்புறவின் செறிவில், இடித்துரைத்தும் திருத்த முற்படுவர். தீங்கேதும் நமைச் சூழும் நிலையறிந்தால் 'உடுக்கை இழந்தவன் கைபோல' உடன் ஓடிவந்து  இடுக்கண் களைவர். 

அறனறிந்து, முதிர்ந்த அறிவுடையாரைத் நற்றுணையாகக் கொண்டால் பயனாகும்.அதுவன்றித், தமக்கு மூப்பு வழங்கவிருக்கும் விளைவுகளையும், இறுதி வருமென்பதை அறியாமலும் பேதையாயிருப்பாரை உடன் துணையாகக் கொள்வது ஒரு சிறிதும் நன்மை தராதே.

நல்லறிவுடையோர் நட்பே நல்ல துணையாகும். நல்வழியறியாக் கடைப்பட்ட அறிவினர் சேர்க்கை அல்லல்தான் விளைக்கும். அறிந்து பயணிப்போம்.

*


No comments:

Post a Comment