Friday, October 2, 2020

 இலக்கியச் சொல் வரிசை - 24

கலித்தொகை (9) வரி 15-16


" சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என் செய்யம்?"


மலையிற் பிறக்கும் சந்தனத்தால் மலைக்கேதும் பயனுண்டாவெனி்ல், இல்லை என்பதே பதிலாகும்; அதுபோலவே யாழின் நரம்புகளிலிருந்து தவழும் இசையால் யாழுக்கேதும் பயனில்லை என்பதே உண்மையாக இருக்கும். சிறந்த வெண்முத்து, கடலிற் பிறப்பினும் அணிபவர்க்குப் பெருமை தருவதாக உள்ளதேயன்றித் தன்பிறப்பிடமான கடலுக்கு அதன் பயன் ஏதுமில்லை. (அதுபோல்தான் பருவ வயதுப் பெண்மகவும் பிறந்த இடத்தைச் சிறப்பிப்பதை விட, மனையறம் புகுமிடத்திற்கே சிறப்பு சேர்க்கும் பாங்கினளாக இருப்பள் என்பது பாடலிற் சொல்லப்படுவது.)

இவ்வாறே இயற்கையின் கூறுகளான மரம்,மழை,ஆறு எனப் பலவும்  உலகோர்க்குப் பயன் பரப்பும் வளங்களாகவே விரிகின்றன; தமது பிறப்பிடங்களுக்குப்  பயனாகும் எண்ணமேதுமின்றி இவை பொதுப் பயன்  கூட்டுகின்றன.

ஆயினும், உலகவாழ்வில் மாந்தர்க்குத் தன்னைத், தன் குடும்பத்தை,  தன்குடியைச்,சுற்றத்தைத் தக்கவாறு  பேணுங் கடமையுள்ளது என்பது நிதர்சனம். இக்காரணத்தால், தான், தன்வீடு, தன்பெண்டு எனச் சுயநலமியாகச் சுருங்கி ஒடுங்கிவிடலாகாது. 

உலகுபுரக்கும் பணியில் பங்காற்றுங் கடமையும் இணைந்தேயுள்ளது நமக்கு என்பது பதிவின் விழைவு.தன் கடமையும் பொதுக்கடமையும் இருகண் எனக்கொள்வோம். 
இனிதாக்குவோம் இவ்வுலகை.

*


No comments:

Post a Comment